Thursday, September 4, 2014

நரகம், I, 32 - ஜோர்ஜ் லூயி போர்ஹே




                                                         
வைகறையின் அரை-வெளிச்சத்திலிருந்து மாலையின் அரை-வெளிச்சம் வரை, ஒரு சிறுத்தையின் கண்கள், பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில், சில மரப்பலகைகள், வேறுசில செங்குத்தான இரும்புக் கம்பிகள், வேறுசில மாறுபட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், ஒரு வெற்றுச் சுவர், ஒருவேளை உலர் இலைகளால் குப்பையானதொரு கல் சாக்கடை இவற்றை பார்த்திருக்கும்.  அச்சிறுத்தை அறிந்திருக்கவில்லை, அறியவும் முடியாது, அது காதல் மற்றும் கொடூரத்திற்காக, மற்றும் ஊணைக் கிழிக்கும் கொதிக்கும் வேட்கைக்காக மற்றும் மானின் மணம் நிரம்பிய ஒரு தென்றலுக்காக ஏங்குகிறதென, ஆனால் என்னவோ அதனுள், மூச்சுத்திணறியும், கிளர்ந்து ஊளையிட்டுக் கொண்டும் இருந்த அதனிடம், கடவுள் ஒரு கனவில் பேசினார்: நீ இந்தச் சிறையில் வாழ்ந்து மடிவாய் என்பதால் நானறிந்த ஒரு மனிதன் குறிப்பிட்ட எண்ணிக்கையாலான தடவைகள் உன்னைப் பார்த்து, எப்போதும் உன்னை மறக்காமல் உன் உருவத்தையும் குறியீட்டையும் ஒரு கவிதையில் வைக்க, அது பிரபஞ்ச நெசவுப்பாவில் அதற்கான சரியான இடைத்தைப் பெறும். நீ அடைபட்டதால் வேதனை அடைந்தாய், ஆனாலும் அக்கவிதைக்கான ஒரு சொல்லை நீ வழங்கியிருக்கிறாய். கனவில், அந்த விலங்கின் கரடுமுரடான புரிதலை கடவுள் ஒளிரச் செய்ய, காரணங்களை கிரகித்து அதன் விதியை அவ்விலங்கு ஏற்றாலும் அது விழித்தபோது, இந்த உலகின் இயந்திரம் ஒரு காட்டுத்தனமான மிருகத்தின் எளிமைக்கு மட்டுமீறிய சிக்கலாக இருப்பதால் வல்லமைமிக்கவொரு அறியாமையும், தெளிவில்லாத விரக்தியும் மட்டுமே அதனுள் இருந்தது.


வருடங்களுக்குப் பிறகு, வேறெந்த மனிதனையும் போலவே நியாயமற்ற வகையிலும், தனித்தும் தாந்தே ரவென்னாவில் சாகக் கிடந்தார். கடவுள் ஒரு கனவில், அவரது வாழ்வின், பணியின் நோக்கத்தைக் குறித்து சொன்னார்; தாந்தே, அதிர்ச்சியடைந்து, கடைசியாக அவர் யாரென்றும், என்னவாக இருந்தாரென்றும் கற்றதுடன் அவரது வாழ்வின் கசப்பையும் ஆசிர்வதித்தார். உலகின் இயந்திரம் மனிதர்களின் எளிமைக்கு மட்டுமீறிய சிக்கலுடையது என்பதால், எப்போதுமே மீட்க முடியாத அல்லது தொலைவிலிருந்தும் கண்டுணர முடியாத முடிவற்ற ஒன்றை பெற்று அதனை தொலைத்ததாகவே புராணீகத்தில்* இருக்கிறது.    *Legend








1 comment:

ஜீவ கரிகாலன் said...

//உலகின் இயந்திரம் ஒரு காட்டுத்தனமான மிருகத்தின் எளிமைக்கு மட்டுமீறிய சிக்கலாக இருப்பதால் //
//உலகின் இயந்திரம் மனிதர்களின் எளிமைக்கு மட்டுமீறிய சிக்கலுடையது என்பதால்,//
மனிதன் = உலகம் = மிருகம்... சமமாகவும் சமமில்லாமலும்... மிக்க நன்றி நண்பா.. தயவுசெய்து தொடருங்கள்