எளியோர் இட்ட அமுதம் : அஞ்ஞாடி
வரலாற்று நீக்கம் அறிவுப் புலத்திலும், வாழ்வியல்
தளத்திலும் நிகழத்துவங்கி குறைந்தபடசம் 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. பொருட்களின் பெருக்கத்தை
நுகர்வு தீர்க்க முனைய, வரலாறு விரல் இடுக்கின் வழி தீர்ந்து போய்விட்ட புகைச்சுருளென
மறைந்து போய்விட்டது. வரலாற்றாசிரியன் நெடுங்காலங்களில் விருப்புள்ளவனாய் இருக்க நுகர்வும்
தொழில்நுட்பமும் உருவாக்கிய சமூகம் உடனடி விடுதலையை iPhone திரைகளில் தெறித்து மறையும்
எலெக்ட்ரானிக் லிபிகளில், பிம்பங்களில் அடைகிறது. துப்பறியும் கதைகளுக்கு இணையாகவே
சுவாரசிய எழுத்து வரலாற்றைப் பிரதியாக்கியதின் மீதும் சலிப்பு மீந்திருக்கிறது. வரலாற்றாசிரியர்கள் அதிகாரத்தின் பணித்தலுக்குட்பட்டு
அதன் மொழியிலேயே நிறுவனங்கள், பாடப்புத்தகங்களில் கட்டமைத்துவிட்டதின் சொல்லப்படாத
மீதம் அல்லது எதிர் மீதம் சமூகத்தின் ஒவ்வொரு பரணிலும் ஏடென ஒளிந்திருக்கிறது.
வரலாற்றுப் பிரதிகளை தீவிர இலக்கிய ஆசிரியர்கள்
அந்த ஏடுகளில் தேர்ந்து எழுதிப்பார்க்கும் காலம்.
வரலாற்றை வீரசாகசங்களின் அரங்காக மாற்றி வைத்திருந்த இடத்திலிருந்து தீவிர இலக்கிய
ஆசிரியன் அதனை வெளியே அழைத்து வந்துவிட்டான்.
அந்த அரங்குகளில் மல்லுக்கட்டுவதெல்லாம் நேற்றின் குப்பைகளின் கிழிந்து பறக்கும்
பக்கங்கள். அதன் பக்கங்களில் ஒட்டியிருந்த மை கரைந்து எழும் துர்நாற்றத்திலிருந்து
வரலாற்றை மீட்டெடுத்து பின்னெழுந்த கோட்பாடுகள், அரசியல் கருத்தாக்கங்களின் அடிப்படைகளைக்
கொண்டு எழுதிப்பார்த்தல், நாவல் பிரதிகளில் புனைவை வைத்து வரலாறேன்பதே அதிகாரத்தின்
புனைவாகவும் இருக்கலாம் என்கிற வாசிப்பை விரிவாக வழங்குகிற பிரதிகள் தேர்ந்த வடிவமைப்பில்
வெளிவரும் காலத்தில் அஞ்ஞாடி நாவலும் ஒரு பிரதி.
தூரமும், இயக்கமும் உருவாக்கும் “நிலத்தில்” இடம்பெயர்தல்
தவிர்க்க முடியாததாக ஆகும்போது அதன் கூறுகள் பண்பாட்டு நடவடிக்கைகளாக மாறிவிடுகின்றன.
எடுத்துச் செல்ல முடியாத நிலம்தான் பண்பாட்டில் பிரதிபலிக்கிறது. அஞ்ஞாடி நாவலின் நிலம் அதனோடு பிணைந்து நிற்கும்
இயற்கையின் பண்புகள், சமூக படிஅடுக்குகள் காலனியாதிக்கக் காலத்தின் நிறுவனங்கள், நடவடிக்கைகளோடு
விரிந்து யதார்த்தவாத மொழியில் துலங்குகிறது.
வரலாற்றின்
தேவை அதன் மீள வாசித்தலிலும் உள்ளது. அதிகாரம்
அறிவியலைக் கொண்டோ, தத்துவத்தைக் கொண்டோ நிறுவ முடியாததை வரலாற்றால் நிறுவுகிறது.
மறு உற்பத்தியில் அனைத்துமே நகல்களாக மாறும்போது வரலாற்றை இலக்கியபூர்வமாக அணுகும்
பிரதிகளின் இடம்மாறி நின்று வெறொன்றாக அறியும் பார்வையால் வரலாறு கட்டமைக்கும் உண்மையென்பதே
கூட நகல்களால் உற்பத்தி செய்யப்படும் பொதுமையாக இருக்கலாம் என்கின்றன. வரலாற்றை எழுதும்
பிரதிகளின் பொதுமையாகவும் இதுவே உள்ளது.
நாவல்,
மொழியாலான உருக்கள் காலத்தினூடாக நகர்ந்து பிரதியுனுள்ளாக உலவிடும் மியூசியம். அஞ்ஞாடி மியூசியத்தின் படிகளாக மொழியும், அதன் நுட்பங்களும்,
மனித வாழ்வு இயங்கும் நிலமும், இயற்கையோடும் அவர்களுக்குள்ளும் நிகழ்த்தும் போராட்டங்களும்,
அரசு நிறுவனங்களாக அமைந்து உள்ளே அழைத்துச் செல்கின்றன.
மியூசியம்=அருங்காட்சியகம்
-> அரும் = பழமை, அரிதான, “காட்சி” = பார்வையிடலுக்கானது, கட்புலன் தொடர்புடைய
“அகம்”=கட்டிடம், இடம் (குறிப்பாக மூடுண்ட).
மியூசியங்கள்
கலாச்சார, அறிவியல், துறைசார், முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை காட்சிப்படுத்துவதன்
மூலம் மனிதக் கூட்டத்தின் நகர்வின் முக்கிய அம்சங்களை, அழிந்து போனவையின் மாதிரிகளை
அல்லது அதன் மிச்சங்களை நினைவூட்டலுக்காக ஓரிடத்தில்
தொகுத்து வைக்கப்படுபவை. மரணத்திற்கு பின்பு மட்டுமல்ல பிறப்பிற்கு முன்பும் இருப்பு
இருக்கவேண்டிய தேவை மனிதனுக்கு. பிறப்பிற்கு முன்பிருக்கும் இருப்பே வரலாறாக கிடக்கிறது. தனிமனிதன் தனக்கு முன்பு வாழ்ந்து கடந்து போனவர்களோடு
தொடர்பு கொள்ள வரலாறும் ஒரு வழி. மியூசியம்
“புதையல் வேட்டை” விளையாடுகிறவர்களுக்கு வழியில் கிடைக்கும் குறிப்புகளாக வரலாற்ற அறிதலுக்கு
பொருட்களை காட்சிப்படுத்தி துணை செய்கின்றது.
தொழிநுட்ப
உச்சங்கள் நேர்ந்து மெய்நிகர் உலகெனும் இணைஉலகு வரை வந்து விட்ட நூற்றாண்டில் உடல்
முதலாக அனைத்துமே உபரியாகக் கிடைக்கின்றன.
அஞ்ஞாடி நாவலின் காலம் ”அரிதான”வைகளால் நிரம்பியது. கலிங்கலில் இருந்து ஆண்டியும், கருப்பியும் திருவண்ணாமலை
செல்வதே வாழ்நாள் நிகழ்வுகளில் ஒன்று. அரிசி
உணவே கூட அரிதானது. அனைத்தும் அரிதாக இருக்கையில்
சேகரித்தல் என்பது முக்கியமானதாகி விடுகிறது.
அதனால் தான் மண்டையிடிக்கு சரியான வைத்தியம் மாரியிடம் “சேகாரமாயிருந்தது”. வாழ்வதே இப்படி நிலம், விவசாயம், மருத்துவ வழிமுறைகளை
சேகரித்து அறிதல். இயற்கையோடு போராடுவதற்கே
(நாவலில் விவரிக்கப்படும் தாது வருடப் பஞ்சம்) வாழ்நாள் முழுக்கப் போய்விடுகிறது. அஞ்ஞாடி
இம்மாதிரி அரிதானவைகளைச் சேகரித்து மியூசியமாக்கியிருக்கிறது. ஸ்கிரீன் மற்றும் மானிட்டர்களில்
அசைவுறும் உலகினைத் தாண்டிச்சென்று பார்க்கிற
பயணம் அஞ்ஞாடியை வாசிப்பது. ஒருவகையில் இயல் உலகோடு தொடர்பை புதிப்பித்துக் கொள்ளுதல்.
இயலுலகின் அரசியல் தேவைகளுக்கான பிரதியியல்
நியாயங்களை யாதார்த்தவாத மொழியில் திரும்ப வழங்குதல்.
2
அஞ்ஞாடி
நாவலில் இரு அடுக்குகள் உண்டு. ஒன்று கலிங்கலில்
படர்ந்து கிராமியச் சமூகத்தின் வாழ்வை, சேகாரங்களைப் பேசுவது மற்றொன்று சிவகாசியில்
படர்ந்து சாதியத்தின் தோற்றுவாய் (காளியின் 5 பிள்ளைகள் திணைகளாதல்) முதலாக அதன் இயக்கம்
(dynamics) வரையிலும் பல தளங்களில் விவாதிப்பது. அதிகார அமைப்புகளில் மிகப் பழையதும்,
தொடர்ந்து வீரியமாக இருப்பதுமான சாதியம்தான்
அஞ்ஞாடியின் Kernel. . சாதியம் உடலை எப்படி கட்டுப்படுத்துகிறது, (வேலம்மாவிடம்
ஆண்டாள் சொல்வாள், “ஒன்னப் போல் ஒரு சாதியில பொறந்திருந்தா ஊரறிய இனியொரு மனுசனத் தொண
தேடிகிட்டு ஒரு ஆம்பளப் புள்ளையப் பெத்துக்கிட்டு நிம்மதியா இருக்கலாமே……பாழாப்போன
ஒடம்பு பாடாப் படுத்துதேடி…..…ஆண்டாளின் மருமகன் சாணி சகதியுடன் அள்ளிப்போடும் கழிவாய்
கழியும் அவளது வாதை), பொதுவெளியை சாதிவாரியாக பங்கிட்டுக் கொடுக்கிறது (கோயில், தெருக்கள்
உட்பட உதா. திருவண்ணாமலை, சிவகாசி கோயில் பகுதிகள்). ஒன்றில் சுதந்திரமாக இயங்கும் உடல் இன்னொரு வெளியில்
ஒடுக்கப்படுகிறது.
இவ்விரு அடுக்களும் நேர்த்தியாக அடுக்கப்பட்டு
இரு வாசிப்பிற்கான சாத்தியங்களைத் தருகிறது. கலிங்கலில் ஊற்றெடுப்பது இலக்கியப் பிரதியாகவும்,
சிவகாசியில் உதிரமாக வழிவது வரலாற்றின் பிரதியாகவும் பிரிகிறது.
இலக்கியப் பிரதியில் ”நிலத்தை” அதன் எண்ணற்ற உள்ளிருப்புகளோடு
வழங்கும் பூமணி, தொழில்நுட்பம் கழித்துவிட்ட ஒரு நூற்றாண்டை கண் முன்னே மறுபார்வைக்கு
விரிக்கிறார்.
பேறுகாலத்தில் பயன்படுத்த விளக்கெண்ணை தயாரிப்பது
முதலாக (பக்.933), உடல்நலிவுறும் மாரியைத் தேற்ற தேடித்தரும் உணவுகள் (மந்தி, பழந்தின்னி
வெளவால், புறாக்கறி, முள்ளெலி, உடும்பு), செட்டியார் மூலத்திற்கு செய்யும் மருத்துவம்
(மூலத்தை வாயில் கவ்வி இழுப்பது – நாவல் பிரதியிலிருந்து மேலெழுந்து வரும் உச்சங்களில்
ஒன்று) ஒரு மருத்துவக் களஞ்சியத்தின் அளவிற்கு ஒப்பானது. மாத்திரைகளின் உபரியான காலத்தில்
நம்ப முடியாதவையாக மாறிவிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளின் விரிவை அஞ்ஞாடி நாவலில்
பார்க்க முடியும்.
கருப்பியிடம் தானியம் வாங்கிப் போக வரும் பொலிப்பாட்டுக்காரன்,
தம்பட்டக் காளைக்காரன், தப்புக்காரன், பீதாம்பர வித்தைகாரன், காலவைரவன், நாழிமணிக்காரர்கள்
(பக். 360), மேலும் ராஜாக்கள், அமைச்சர்கள், திவான்கள், மாஜிஸ்ட்ரேட்கள், துரைமார்,
சூப்பரிண்டுகள், கான்ஸ்டபிள்கள் என நாவலில் உலவும் உருக்கள் இயல் சமூகத்தை பிரதியில்
உருவாக்கிக் காட்டுகிறார்கள்.
விவசாய வேலைகளின் நுட்பங்கள், ”மேழிமூட்டில் சுள்ளாணி
குச்சைப் பிடுங்கி ஓட்டை வழியாக நிலத்தை நேர்பார்ப்பதிலிருந்து” (பக். 878) அடுக்கடுக்காக
விவரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. விவசாய வேலைகளுக்கு உதவும் கரிச்சான் முதலாக
பறவைகளை விவரித்தல் (கல்பொறுக்கி, வானம்பாடி, ஊமாங்காடை, கழலைக் குருவிகள், கரிச்சான்
– பக். 925-26) இப்படி முடியும் : கோழியை விட குருவிதான் சரியான நேரத்திற்கு உசுப்பிவிடும்.
ஆண்பன்றியை சலவன் எனவும் பெண்பன்றியை மட்டம் எனப் பிரித்து திரண்ட பீசம் அருத்து அடுப்புச்
சாம்பல் தடவி கருவ முள்ளால் குத்தி விடுதல், மட்டம் ஈன்றபின் கறிக்கு உதவாது போகுமென்பதால்
மந்தையில் மேய விடாமல் வளர்த்தல் போன்ற நுட்பங்களின் தொகுப்பாக நாவலில் வாசிப்பிற்கு
இடைஞ்சல் இல்லாமல் பட்டியலாகின்றன. அங்கே பட்டியல்
தெரிவதில்லை. அதுவே அஞ்ஞாடியின் வசீகரமாக இருக்கிறது. The infinity of Listகளின் (Umberto Eco) காலத்தில்
பட்டியலின்றி ஒரு பிரதியை எழுதுவதே ஆசிரியனின் சவாலாக இருக்கிறது.
இயல் உலகை அவதானித்தல், பிரதியில் ஆவணமாக்குதல்
மேலும் அதனை கலையாக்குதல் மூன்றும் ஆசிரியனுக்கான சவால்.
நாவலில் இருவிதமான வர்ணனைகளைக் காணமுடியும்.
Descriptive narration மற்றும் Epical narration. Descriptive narration என்பதற்கு
ஆண்டி, மாரியிலிருந்து, கோயிந்தன் சாமியார் வரையிலுமான கருப்பி வயிற்று “பிள்ளைத்துத்தியாக”
பெருகும் பன்னிருந்த வாழ்வுகளை விவரிப்பதென கொள்ளலாம்.
நாவல் முழுதும் வன்முறையை கலையாக்கும் சாத்தியத்தியமும்
இந்த Descriptive narrationஆல் நிகழ்கிறது. பனைமரத்தில் அண்ணனும் தம்பியும் வெட்டிக் கொண்டு
“சாவுத் துடிப்பில் மணல் சிதற” (பக். 174) ஓய்வதில் வெளிப்படும் வன்முறையை விவரித்தல்,
தாதுவருட பஞ்சத்தை விவரிக்கும் பகுதிகளில் விரிந்து, சிவகாசி கலவரத்தை விவரிப்பதில்
உச்சத்தை அடைகிறது. இதில் தாதுவருடப் பஞ்சம்
மற்றும் சிவகாசி கலவரத்தின் வன்முறையை விவரித்தலை ஒரு Grand Narration எனலாம். தாதுவருடப் பஞ்சகாலத்தில் கிணறு வெட்டப்போகும் ஊர்க்குடும்பன்
வேட்டில் சிக்கி உடல் சிதறி கிணற்றூசியில் தொங்கும் ஒரு குடலாக மிஞ்சுவான்.(பக்.230). பஞ்சத்தின் வன்முறையை பூமணி இதைவிட சிறப்பாகச் சொல்லியிருக்க
முடியாது. வன்முறையை விவரித்தலில் ஒரு குடல்
கண்முன்னே தொங்கிக் கொண்டேயிருக்கிறது நாவல் முழுதும்.
கொள்ளையன் கருத்தையன் கிணற்றில் குளிப்பதைப் பார்த்து
வீரம்மா கிறங்கி அவனை மணமுடிக்க, பிள்ளையற்றவன் கன்னியில் பேயாகி கோடாங்கி கேட்கும்
கேள்விக்கு பதிலாக கொல்லப்பட்டதைச் சொல்லும் பகுதி ஒரு இதிகாச வர்ணனைக்கு நிகரானது
(9999epical narration). அஞ்ஞாடி நாவலில் கலை வெளிப்படும் பகுதி இதுதான். ஒரு இதிகாசத்திற்கு உரித்தான அலங்காரங்கள் நிரம்பிய பகுதி. நம்பமுடியாத காதல், சாகச வாழ்க்கை அதன் ஒழுங்கு
மற்றும் துயரார்ந்த முடிவு. இதனாலேயே ஒரு குறுந்தெய்வமாக மாறுதல். தொன்மங்கள் உருவாக
மூலகாரணங்களாக விளங்கும் காரணிகள் அனைத்தும் பொருந்திப் போவதால் அப்படி அழைக்க முடிகிறது.
பூமணி மேற்சொன்ன மூன்று சவால்களையும் சரியாக எதிர்கொள்கிறார்.
மொழிதான் புனைவின் சாத்தியங்களை விரிவாக்குவது. மொழி படியாத புனைவு அட்டைகத்தியின் கூராக நின்றுவிடுகிறது.
அஞ்ஞாடி நாவலின் இலக்கிய அடுக்கு வட்டார வழக்கின் வழமையால் ததும்புகிறது. வட்டார வழக்கே
கூட நிறுவனங்கள் (பாடப்புத்தகங்கள் உட்பட) தாங்கிப் பிடிக்கும் மொழிக்கு இணையாக மக்கள்
வழங்கும் பங்களிப்பாகவும் ஏடுகள் மறுத்தவொன்றாகவும் இருக்கையில் இயல்பாகவே இலக்கிய
ஆசிரியன் அதனை மெருகூட்டி ஜொலிக்க வைக்கிறான்.
வட்டார வழக்கை ஏட்டு மொழி நாகரிகம் வென்றுவிட்ட காலத்தில் மீளக் கூறுதலின் வழி
ஏட்டு மொழி உருவாக்கிய இடைவெளிகளில் ஆங்கிலத்தையும் சரிவரக் கலக்கத் தெரியாத தலைமுறைக்கு
தன் பங்களிப்பாக பிரதியில் வழங்குகிறார் தருகிறார் பூமணி. மொழியின் சாத்தியங்களை கவிதை விரிவாக்குகிறது என்றால்
புனைவு அதற்கான அடிப்படைகளை உருவாக்கிறது.
ஆனாலும் கவிதையுமே கூட செவ்வியல் பிரதிகள் உருவாக்கிய மொழியில் எழுதப்படும்போது
வட்டார வழக்கின்மூலம் மொழியின் செழுமைகளைக் காப்பாற்றித் தரும் பொறுப்பு யதார்த்தவாthaத்தின்
இன்னுமே தொடரும் பங்களிப்பாக இருக்கிறது.
19ம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில் தென் தமிழகம்
பல்வேறு சமூக மாற்றங்கள் நிகழுமிடமாக இருந்திருக்கிறது. குறிப்பாக சாணார் எனும் நாடார் சமூகத்தின் எழுச்சி.
பனை வாழ்வளித்த சமூகம். விளைவித்தல்ல, விளைந்து நிற்பதை ஒழுங்குபடுத்தி பெருகிய சமூகம்.
திருவிதாங்கூர் ஒடுக்கி பனையால் எழும்பி நகரங்களை உருவாக்கிய சமூகம் (சிவகாசி, அருப்புக்கோட்டை,
தூத்துக்குடி பெருநகராகுதல், விருதுப்பட்டி விருதுநகரானது). நாவலின் மையமாக விளங்கும்
சிவகாசி கலவரம் இதுவரையிலும் தமிழ் வரலாற்றுப் புலத்தில் புனைவாகவோ, அ-புனைவாகவோ பேசப்பட்டதில்லை.
வரலாற்றை மீட்டத்தருதல் அரசியல் தொடர்புடையது.
வெளிப்படுத்தப்படாத வரலாற்றை பூமணி அஞ்ஞாடியின் வழி வெளிச்சத்திற்கும் வாசிப்பிற்கும்
கொண்டு வருகிறார். அதன் மூலம் அவர் முன்வைக்கும் அரசியல் சாதிய அதிகாரத்தையும் அதனுள்
ஒளிந்திருக்கும் வன்முறையையும் தோற்றப்படுத்துதல்.
சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுபட நாடார்கள்
எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் (விதவைகளுக்கு மறுதிருமணம் மறுத்தல், அசைவத்தை தவிர்த்தல்
போன்ற மேல்நிலையாக்க முயற்சிகள் உட்பட) அந்நிலப் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தும்
சாதியினர் (தேவர் மற்றும் இதர சாதியினர்) எதிர்நடவடிக்கைகள் மூலம் தடுத்துக் கொண்டே
இருந்திருக்கின்றனர். காலனிய நீதிமன்றக் கூடாரங்களில்
வழக்குப் போடுதல், மதம் மாறுதல், தெருவில் போராடுதல் உட்பட அனைத்து முயற்சிகளையும்
ஆதிக்கம் செலுத்த முனையும் சமூகங்கள் ஒடுக்கவே பார்க்கின்றன. அந்தப் பிரதேசம் முழுக்க
சிவகாசியில் துவங்கி தென்காசி வரை தொடர் கொள்ளைகளாலும், கொலைகளாலும் சாதிய ஆதிக்க உணர்வுகள்
செயலாற்றியிருக்கின்றன. கிட்டத்தட்ட
Crusaderகள் ஜெருசலேம் வரையிலும் புரிந்தவற்றிற்கு ஒப்பானது இது. போப் திரட்டிய Crusaderகளின் படைகள் சிலுவைகளை வாட்களாக
மாற்றி நடந்த நிலத்தின் உதிரக் கோடுகள் சிவகாசி சாதிச் சண்டைக்கு ஏறக்குறைய இணையாக
வேறொரு நிலத்தின் வரலாற்றில் முன்பிருப்பவை. சிவகாசிச் சண்டைக்கு எந்தப் போப்பும் தேவையில்லாததே
இந்த நிலத்தின் விசித்தரக் கூறு. நாய்க்கன், வெள்ளாளன், செட்டி, பணிக்கன், அம்பட்டையன்,
கொறவர்கள் (பக்.745) Crusaderகளாக உதிரக்கோடுகள் கிழிக்கின்றனர். நாட்குறித்த கொள்ளை அஞ்ஞாடி வரைபடத்தில் ஒவ்வொரு
கீறலிலும் வேறுவேறு சாதியினர் இதுவரை சொல்லப்படாத வர்ணத்தவரும் பதுங்கியிருந்து துப்பு
வெட்டி வேட்டைக்குக் கிளம்பிய ராத்திரியில் ஒவ்வொரு கையிலும் சாக்கும் உலக்கையும்,
வேல்கம்பும். கயத்தாறு பக்கம் இலந்தைகுளத்தில்
மறவரும், சக்கிலியரும் சேர்ந்து நாடார் வீடுகளை கொள்ளையடித்தார்களென மேலதிகத் தகவல்கள்
சிவகாசிக் கொள்ளையின் வரைபடத்தில் பலநிறக் குறிப்பான்களாக தலை உயர்த்தி நிற்கின்றன.
மதம் மாறினாலும் விடுதலை கிட்டுவதில்லை. வைகுண்டசாமியின்
ஓட்டு viiட்டானுக்கு எதிராகக் கிளம்பிய துவையல் பந்தி. உதிரத்தை ஒயினாக மாற்றிய ஏசுவை நோக்கிச் சென்று
வடக்கில் ஒர் இடத்தை தேடினர் தட்சிண மாற நாடார்கள்.
”வேதனையை உண்டாக்கும் ஜாதி வேற்றுமையை விட்டு
மறை ஓதியபடி எல்லாரும் உத்தம கிறிஸ்
புத்தியாய் நடந்து வாருங்கள்” எனப்பாடித் திரிந்த
மேசையாபுரம் இமானுவேல் மரியன் உபதேசியார் குஷ்ட நீர் கசிந்து தடம் பதிந்த வேதாகம நூலோடு
சாக, தூக்கிப் போட்டவர்கள் வேதச்சக்கிலியர்கள்.
மதம்மாறுதல் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாக நடக்கிறது. சகோதரிகள் ஏற்பாடு செய்யும் இரகசிய பிரார்த்தனை
கூட்டங்களுக்குச் செல்லும் பெண்கள், தொடர்ந்து தன் குரலால் வடநெல்லை வரைக்கும் கிறித்துவின்
பெருமையை பரப்பும் உபதேசியார், மக்களோடே துயருரும் பாதிரிகளைத் தொடர்ந்து இயேசுவும்
மேரியுமேகூட நாவலில் வந்து விடுகின்றனர். ஆனாலும் நாடார்களுக்கு விடுதலையில்லை. ஒடுக்கப்பட்ட
சாதிய சமூகம் பொருளாதாரத்தாலும் இதர அரசியல் நடவடிக்கைகளாலும் படியடுக்கில் முன்னகர்ந்து
போனதை அஞ்ஞாடி சாதியத்தின் மூல ஆதரங்களையும் சேர்த்து விவரிக்கிறது.
மரபான யதார்த்தவாதம் முன்வைக்கும் இயல்உலகு வரைபடம்
கொண்டறியும் குறியீட்டு உலகாக மாறிவிட்டது.
அஞ்ஞாடியின் புனைவு வரலாற்றின் வரைபடைத்தை நிலத்தின் உதிரநிறக் கீறல்களால் வரைந்து
காட்டுகிறது.
கழுவேறிய சமணர்களின் கபாலம் கழுகுமலை கொண்ட்டாட்டத்தில்
ஒட்டு நாக்கைத் தொங்க விட்டு, ஆட்டுக் குடல் மாலையணிந்தவர்களின் ஈட்டிகளில் பொய்த்தலையாகத்
தோல் போர்த்தி நிற்கிறது கழுகாசல மூர்த்தியின்
கோயிலுக்கு முன். அந்தக் குறியீட்டின் பின்
ஒளிந்து நிற்கும் சமணர்கள் காளியின் பேய்கள் உண்டு முடித்த சதைக் கூளங்கள் நீங்கி பிரதியில்
உதிரம் தெறிக்கும் இடங்களில் சாட்சியங்களாக உலவுகின்றனர்.
கழுகுமலைச் சமணர்கள் எவ்வுயிர்க்கும் செந்தன்மை
கொண்டு மயிற்பீலியால் தூற்று நடந்த பாதரட்சைகள் இல்லாத கால்கள், எடுக்கப்படாத மலைப்பாறை
அமுத அகல்களில் மழைநீரும் இருக்கலாம், எளியோர் இட்ட அமுதாகவும் இருக்கலாம். அஞ்ஞாடி,
அகால இழப்பின் அற்புதமென மியூசியத்தில் பூசப்பட்ட வரலாற்று மண்ணில் உயிர்த்து இருண்ட
கருவறைகளின் வெற்றிடத்தில் சிறியதின் ஆவிகளைப் பார்த்தபடி இருக்கிறது.
14.10.2012
2.55 காலை.