Wednesday, July 17, 2013

நுணிகி அறிந்த மனம் - மா. அரங்கநாதன் சிறுகதைகள்


                                 
     மரபைக் குறித்த பலவகையான கேள்விகளை கோட்பாடுகள் உருவாக்கிவிட்டன.  யாருடைய மரபு? என்கிற கேள்வி எது மரபு என்பதை விடவும் முக்கியமானது.  தமிழ்ச்சிறுகதைகளுக்கு வ.வே.சு ஐயர், பாரதி துவங்கி வரலாறு உண்டு. அந்த வரலாற்றில் சில மரபுகள்.  புதுமைப்பித்தன், மெளனி, அசோகமித்ரன், சுந்தர ராமசாமி, கி.ரா என கிளைகள் பிரித்து நிற்கிற மரபு. சி.சு.செல்லப்பாவும், க.நா.சுவும் ஒர் ஒழுங்கில் மரபை தரம்பிரித்து ஒழுகச் செய்தவர்கள்.

     சமூக வாழ்வை, தனிமனித சிக்கல்களைச் சொல்லுதல், மனச்சித்திரங்கள், தொன்மங்கள் இதிகாசங்களை மீளுருவாக்கம் செய்தல், மொழியின் ஓசைகளைக் கொண்டு சித்திரங்களை உருவாக்குதல் பின்னெழுந்து வந்த தலித் எழுத்து என சிறுகதைகள் புழங்கும் மொழியில் மா.அரங்கநாதனின் எண்பது கதைகள்.

     வடிவத்தின் முக்கியத்துவத்தை பலகாலம் இலக்கிய ஆசான்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.  சிறுகதை வடிவத்திற்கு இலக்கணமே உருவாகிவிட்டது.  மா. அரங்கநாதனின் சிறுகதைகளின் வடிவம் சிக்கலற்றதும், பெரிய அளவில் பரிட்சார்த்த முயற்சிகளும் இல்லாமல் இருக்கின்றன.

தத்துவம்:

     எண்பது கதைகளில் குமரி வட்டாரத்திலிருந்து நேரடியாக சென்னைக்கு வருபவர்கள் அதிகம். இந்த எல்லையை உலக அளவில் விரிவாக்க வேண்டுமானால் பெரும்பாலும் அமெரிக்கா, ஒரு கதையில் இலண்டனும் கதைகள் நடக்கும் புவிப்பிராந்தியங்கள், தமிழ்கூறும் நல்லுலகின் நிலவியல் எல்லை. 

     பெருநெறிகள் சமணத்திலும் பெளத்ததிலும் துவங்கி, சைவமாகவும் வைணவமாகவும் விளங்குகிற தமிழ்ச்சமூகம்.  சிறுமரபுகள் குறித்த பேச்சு இதுவரையிலும் அரசியல் தொடர்புடையதாக இருக்கிறது தத்துவ பின்பலமின்றி.  தமிழ்ச்சமூகம் சிறுகதைகளை நவீனத்துவக் கூறுகள் சமூகத்தில் மாற்றங்களை உண்டுபண்ணிய காலத்தில் எழதியது. பெரும் மாற்றங்கள் இச்சமூகத்தில் நிகழ்ந்த காலமும் அதுதான். அதுவரையிலும் நிலைபெற்றிருந்த சிந்தனை மரபுகள், வாழ்வியல் ஒழுங்குகளில் மாற்றங்கள் கடந்த நூற்றாண்டின் நம்ப முடியாத வேகத்தோடே நிகழ்ந்தன.

     சைவம், வைணவ பெருநெறிகள் குறிப்பிடத்தகுந்த வரலாற்றுக் காலம் வரையிலும் (இன்றும் கூட பொதுப்புலத்தில், நெகிழ்ந்த அளவில்) தத்துவத் தளத்தில் ஆதிக்கம் செலுத்தியவை. இவ்விரண்டு தத்துவச் சிந்தனைகளில் இருந்து கிறித்துவம், நவீனத்துவம், காலனியாதிக்கம் உருவாக்கிய நிறுவனங்களால் தமிழ்ச்சமூகம் பலவித மாற்றங்களை உளவாக்கிக் கொண்டது. புராட்டஸ்டண்ட் கிறித்துவம், இயந்திரமயமாதல், காலனிய நிறுவனங்கள் (கல்லூரிப் படிப்பு, நீதிமன்றம், போலீஸ்துறை, அரசு அலுவல் படிநிலைகள், மாவட்ட நிர்வாகம்) ஆகியவை பெருமளவில் தமிழர்களை நவீனத்துவத்திற்குத் தள்ளிய காலத்தில் ஏறக்குறைய ரொமாண்டிசிச அல்லது மறுமலர்ச்சிகால சிந்தனை அளவிற்கு திராவிட இயக்கம், பிராமணியச் சிந்தனை நீக்கம் முதலாக சாதி ஒழிப்பு, தனிமனிதனை அளவாகக் கொண்ட சுயமரியாதை, பெண்விடுதலை போன்ற இலட்சியவாதங்களை முன்வைத்து முற்றாக மரபு நீக்கம் செய்தே உருப்பெற்றது.  அதன்பிறகு தமிழ்ச்சமூகம் பல்வேறு சிந்தனைகளின் வண்ணங்களால் தீற்றப்பட்ட ஓவியமானது.

     மா. அரங்கநாதனின் கதைகள் சைவத்தை அதன் வாழ்வியல் ஒழுங்குகளோடு மாத்திரமல்லாமல் தத்துவத்தளத்திலும் அணுகிப்பார்ப்பவை. ”வீடுபேற்”றில் முத்துக்கறுப்பனிடமிருந்து “சிவா” என்கிற பழகிப்போன சொல்லாக வெளிப்படுவதிலிருந்து, “விடுதலைப் போரில் அப்பரின் பங்கி’ல் ”சிவம்னா புதுசா வர்ற வெளிச்சம் மாமா – அது தானா வரதால எப்படியிருக்கும்னு சொல்லமுடியாது. சொல்ல முடிஞ்சா அது புதுசு ஆகாது” என்கிற வாக்கியத்தில் சைவத்தத்துவ விசாரணை அழுத்தமாகப் புலப்பட்டு  பின்பு “துக்கிரி” கதையில் முதலும் முடிவும் அற்ற ஒளியாக திருவண்ணாமலை கிரியில் திடமாக நிற்கிறது.

 ”காலக்கோடு” கதையில் கடிகாரம், ஆடைகளோடு நடராசர் படம்போட்ட பிசிக்ஸ் புத்தகத்தை கரையில் விட்டு கடல் நோக்கி “கண்டுபிடித்துவிட்டேன்” என ஓடும் அவன் செய்கைக்கு “வாகனம் கோயில் சேரும்வரை ஆட்டம்தான் தில்லையம்பலம் சிவசிதம்பரோம் அப்படின்னு” சைவ விளக்கம் கிடைக்கும். இப்பிரபஞ்சத்தின் அசைவுகள் அனைத்துமே நடராசனின் ஆட்டம்தான் என்பது சைவத்தில் தோய்ந்தவர்கள் அறிவியலுக்குள்ளும் காண்பதே.

     ”பார்த்தல்”, ”வெளியேறுதல்” இரண்டும் மா.அரங்கநாதன் கதைகளில் இடம் தொடர்புடைய உருக்கள்.  இவற்றிற்கும் சைவநெறிக்கும் உள்ள தொடர்பை பார்த்தல், தெளிதல், அதுவாகவே ஆதல் என்பதோடுச் சேர்த்துப் பேசமுடியுமெனத் தோன்றுகிறது.

 வெளியேறுதல் இடம்பெயர்தல் மட்டுமல்ல, இடத்தினால் நிலைபெற்றுவிட்ட பண்பாட்டில் நிலவும் மாறுதல்களும்தான்.  சிறுகதைகளில் கிராமங்களைப் பேசும் கதைகள் கோயிலின்றி இருப்பதில்லை. நகரங்களில் சினிமா.  இரண்டுமே பார்த்தல்தான்.

“மீதி” கதையில் மாமியார் ஆக்ரமித்துக் கொண்ட வீட்டிலிருந்து தற்காலிக வெளியேற்றத்திற்கு முத்துக்கறுப்பன் பயன்படுத்தும் இடம் சினிமா அரங்கு. ”அசலம்” கதையில் மருமகளிடமிருந்து கிடைக்கும் முணுமுணுப்பை மதிக்காத முத்துக்கறுப்பன் எண்பது வயதில் இரண்டு மைல் நடையையும் பொருட்படுத்தாது அணுகும் இடம் ஆவுடையார் கோயில். ”நல்லது கெட்டது என்ற நோக்கில் அல்லாமல் அவ்வாறாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது” (பக்.140) என சினிமாப் பார்த்தல் குறித்து சொல்லப்படுவது அது சினிமாவைப் பார்த்தல் தாண்டியும் பொருள் நீட்சி உடையதெனவும் கொள்ள இடமுண்டு.  மெய் காணுதல் கூட “ஏதாவது தோன்றாதாவென எதுவுமில்லாததைப்” பார்த்தல்தான் (மெய்கண்டார் நிலையம், தாங்கல்).

கற்பதென்பதே பார்ப்பதுதான்.  “பார்ப்பது படிப்பது போலத் தெரியும்.  ஒருவேளை பார்த்ததைத்தான் அந்தப் புத்தகத்தில் படிக்கிறார் போலும்” (பக். 149).  இந்தப் பார்த்தல்தான் “மகத்தான் ஜலதாரை” கதையில் யானைகளின் களியாட்டைப் பார்த்த ஒரு கிழவன் “பட்டினத்து சாமி” கதையில் திருவையாற்றில் இரண்டு யானைகளைப் பார்த்து “கண்டறியாதன கண்டேன்” என்ற அப்பராக வெளிப்படுகிறார்.  வெளியேறுதல் குறித்த சித்திரம்; “வீடுபேறு” கதையில் முத்துக்கறுப்பன் சொல்லும் “எல்லாம் நல்லாத்தான் இருக்கு. எங்கே போனாலும் நல்லாவேயிருக்கும். எங்காவது போய் அப்படியே எங்க போனோம்னு தெரியாமலேயே போயி திரும்பி வராமலேயிருந்துட்டா இன்னும் நல்லாயிருக்கும்” வாசகத்தில் கச்சிதமாகத் துலங்கும்.

ஒரு பார்வையில் வேதங்களைக் குறித்து ஒவ்வாமையை வெளிப்படுத்துவதாக ”ஒரு பிற்பகல் நேரம்” கதையில் நடேச சாஸ்திரியைக் குறித்து ”வேதங்கள் காற்றிலிருந்து மூக்கால் இழுக்கப்படுவதன் முன்னர், தென்னாட்டில் மனிதனே கிடையாது என்ற நம்பிக்கையுடன் வாழ்பவர்” எனவும் இன்னொரு கதையில் வேதம் என்பது கரியமிலவாயு எனவும் சொல்லப்பட்டிருக்கும்.  இது ஒரு வகையில் சைவத்திற்கு வெளியே வேதக் கலாச்சாரத்தை வைக்க மா. அரங்கநாதன் முயற்சித்துள்ளார் என்பது வரை யோசிக்கமுடிகிற வாய்ப்பைத் தருகிறது.

சைவத்திற்கு அடுத்த அளவில் பேசப்பட்டிருக்கும் நெறிகள் கெளமாரம் மற்றும் அம்மன் வழிபாடு.  தமிச்சமூகத்தின் ஆதிக்கடவுள் ஒரு இனக்குழுத் தலைவனான முருகன்.  முருகவழிபாடு இந்தச் சமூகத்தின் பழமைக்கு இன்னுமொரு சான்றாக விளங்குவது. வேதச் சாயலோ, பிராமணக் கலாச்சார பின்புலமோ இல்லாத கடவுள் என்றாலும் சைவத்தோடு கொண்டு சேர்த்ததும் நிகழவே செய்தது. கச்சிப்பேடு, செட்டி வளாகம் கதைகள் முருகவழிபாட்டை மையமாகக் கொண்டு கிட்டத்தட்ட முருகன் நிகழ்த்தும் அதிசயங்களின் கதைகளாக இருக்கின்றன.  அதுவும் கச்சிப்பேட்டு முருகன் ஒரு முக்கோண உறவின் இழப்பையும், ஏமாற்றத்தையும் ஆற்றுப்படுத்த வந்தவன். செட்டி வாளாகத்தில் மயில்வேறு முருகன்வேறாக இல்லாதுபோதல் விவாதிக்கப்படுகிறது.

மரங்கள், பறவைகள் வழிபாட்டோடு தொடர்புடையவையாகவும் இருக்கின்றன. “ரோபோ” கதையில் வேப்ப மரத்தடியிலும், நாகமரத்தடியிலும் அமைதியாக நின்ற தெய்வங்களைப் பேணுவோர் எத்தனை குடும்பங்களாக இருந்தனரோ அத்தனை மரத்தடி தெய்வங்களுமாக இருந்த இடங்களில் “திரிசூலம்” கதையின் டாக்டர். ஐராவதம், “மரங்களையெல்லாம் காணல்லே. நீலமலையில் கூட காணமுடியல்லே. இந்த மரங்களையெல்லாம் எங்கே? எங்கே போச்சு?” எனத் தேடுகிறார். தென்னை பல கதைகளில் பேசப்படுகிறது. பனை என்கிற தலைப்புடைய கதை பனைமரம் குறித்த பல்வேறு தோற்றங்களை நம்பிக்கைகளின் சாயல்களோடு குறியீடாக்குகிறது. மரங்கள் பல்லுயிர்க்கு மட்டுமின்றி பேய்களுக்கும் அவையே இருப்பிடம் (பாதைத் திருப்பத்தில் வேப்பமரம் நிற்பதால் மாலை நேரம் வந்துவிட்டால் ஆள் நடமாட்டமும் குறைவு (பக் 250)). மரங்களும், பறவைகளும் இல்லாமல் மனிதன் உயிர்வாழ்ந்ததில்லை (செட்டி வளாகம்) எனச் சொல்லும் தாத்தாவிடம் இக்காலம் மரங்களையும், பறவைகளும் நீங்கிய இடங்களில் கான்கிரீட்டுகளால் பதிலளிக்கும்.  மரபும் அதனோடு நீங்கும்.

     அனைத்தையும் சிவமாகவே பார்த்தல் என்பதே சைவத்தின் அடிநாதம் என்றால் ”உறவு” கதையில் “டீக்கடையை சந்தோசமாப் பாத்து அங்கேயிருக்க முடியலைன்னா இம்மலையை நான் ரொம்ப நிம்மதியாப் பாத்தது எல்லாம் உண்மையா இருக்க முடியுமா….இருக்கிற நாலு சுவத்தைப் பார்க்க முடியாதவன் கைலாசத்தையா சரியாப் பாக்க முடியும்” என முத்துக்கறுப்பனிடம் சொல்லும் பெரியவர் வழி மா. அரங்கநாதன் அதை சிறப்பாகவே சொல்லியிருக்கிறார். 

சாதியம்:

     பாரதியாரின் (பு.பி) “கோபாலய்யங்காரின் மனைவி” துவங்கி இன்றுவரையிலும் சமூகம் குறித்து எழுதுவதே தமிழில் சிறுகதை எழுதுபவர்களுக்கு பிரதானமாக சாதியம் குறித்து எழுதுதல்தான். ”முத்துக்கறுப்பன் எண்பது” தொகுப்பில் சாதிகுறித்த கதைகளில் சிறப்பானவையாக சுட்ட முடிபவை :
1.   அசலம்
2.   மண்டேலாவை நேசிக்கிறேன்
3.   மனத்துக்கண்
4.   பெருநகர்த்தடம்
5.   மீட்சி
6.   மூடு

ஆவுடையப்பர் கோயிலில் இராமனோடு நடக்கும் உரையாடல்
சைவமும், வைணவமும் சேரியில் இருத்தியிருக்கும் மக்களுக்கு நெடுங்காலமாகச் செய்ததென்ன என வினவுகிறது. அசலம் சாதிய அமைப்பில் தத்துவம் சக்தியற்றுப் போகும் இடத்தைப் பேசுகிறது.  “மூவாயிரம் வருசமா அன்பு ஒசந்ததுன்னு சொல்லிகிட்டு சொமை மொமைக்க பின்வாங்கினா நாகரிகம் என்னான்னு எனக்குத் தெரியலை” என்கிற இராமன் இருக்கும் இடத்திற்கு (வைணவம்) ஆவுடையப்பர் வருவதில்லை (சைவம்).  இருவரும் ஒரு நாளும் சேரிப்பக்கம் போனதில்லை.  தத்துவங்களும், சித்தாந்தங்களும் படித்தாலும் ஜே.கே புத்தகத்தில் மறைந்திருக்கும் செய்தித்தாள் துண்டில் அரிஜன சங்கத் தலைவரான தனது அப்பாவின் புகைப்படத்தைப் பார்த்ததும், அதற்கு முந்தின பத்தியில் “டியர், டேக் மீ டு பெட்” என்று சொல்லவும் தயாராகவிருந்த பெண், தன் மனத்தில் இன்னுமே சாதியம் ஒட்டியிருக்கிறதென்று மனத்துக்கண் மாசோடு வெளியேறுகிறாள்.
    
    ”மீட்சி”யில் சிவானாண்டி படும் அவமானம் தாங்காமல் கிராமத்திலிருந்து வெளியேறும் முத்துக்கறுப்பன் “மனத்துக்கண்” கதையில் அவரது மகனுடைய தத்துவப் புத்தகத்தில் செய்தித்தாள் புகைப்படமாக மாறியிருப்பது மா. அரங்கநாதன் கதைகளின் விசேசங்களில் ஒன்று.  ஒரு சிந்தனையின், அமைப்பின் தொடர்ச்சியை பல கதைகளுக்கு ஊடாக இழையவிடுவதின் மூலம் நாவல் வாசிக்கும் அனுபவத்தை சிறுகதை தொகுப்பில் ஏற்படுத்திவிடுகிறார்.

சாதி பிறழ்தல் என்பது கிராமத்திலிருந்து, குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறியவர்களுக்கு நேர்கிறது.  பெருநகர்த்தடத்து முத்துக்கறுப்பன் பிள்ளையாக இருந்தாலும் கைவண்டி இழுப்பவனாக, அதன் அடியிலேயே இரவைக் கழித்து கிட்டத்தட்ட தெருவாழ்க்கை வாழ்பவனாகிறான்.  அவன் மணம் செய்த பெண்ணிடம் முப்பது வருடங்கள் என்ன சாதியெனக் கேட்காமலேயே வாழ்ந்து மறைகிறான். அவன் தெரிந்துகொள்ள விரும்பாத போதே அவள் எப்படிப்பட்ட சாதியென்று தெரிந்துவிடுகிறது. பரமசிவம் பிள்ளை முத்துக்கறுப்பனை சூலத்தில் தள்ளிவிடுகிறார். அவருடைய பேரன் தாத்தாவைத் தேடி வருகையில் பரமசிவத்தின் அம்மா உடைக்கும் இரகசியத்தின் ஊடாக ஊரை விட்டு வெளியேறின முத்துக்கறுப்பனின் தந்தை பார்பராகிறார் (கதை: மூடு).

திராவிட இயக்க அரசியல் சித்தாந்தமான சாதி ஒழிப்பை விடுத்து (ஒரு வகையில் சித்தர்களிடமிருந்தும்) காந்தி, பாரதி போன்றோர் சாதி வேற்றுமைகள் நீங்கிய ஒரு அமைப்பை தங்கள் மதத்திற்குள்ளாக உருவாக்க முனைந்தனர். மா. அரங்கநாதனின் கதைகளிலும் இவர்களின் கருத்தியல் போக்கே சாதியம் குறித்த கேள்விக்கு விடையாகக் கிடைக்கிறது எனலாம். மேலும் சேரிவாழ் மக்களின் மீதான “அன்பே” அதற்கான பதிலாகவும், அவர்மீது அன்பைச் செலுத்துவதே ஏற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பெனவும் வலியுறுத்துவதாக கதைகளின் வழி அறிய முடியும்.

எலி மற்றும் ஓர் இறங்கற் கூட்டம் கதைகளில் திருவல்லிக்கேணி பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஒட்டி நிகழும் இந்துக்கள் மற்றும் முகம்மதியர்களுக்கு இடையிலான பதட்டம் பேசப்பட்டிருக்கும். அதிலும் குறிப்பாக எலி என்கிற கதையில் ஓய்வு பெற்றவர் வீட்டு எலியாக விரியும் சிந்தனைகள் வன்முறை குறித்த புரிதலை திருவல்லிக்கேணியில் அடையும். தமிழ்ச்சமூகத்தின் மதக்கலவரங்கள் குறித்து மறைவாக எழுதப்பட்ட வரிகள் இவை. மா. அரங்கநாதன் கதைகளில் வெளிப்படுத்தும் அர்த்தங்களை விடவும் அவற்றின் உள்ளே ஒளித்துவைக்கும் விசயங்களில் வெளிப்படையான அர்த்தங்களுக்கு வேறொரு காட்சிக்கோணத்தை உண்டாக்கிவிடுகிறார்.  இதுகாறும் வலியுறுத்தப்பட்ட சிறுகதை இலக்கணத்திற்கு ஒட்டியே இவை அமைகின்றன.

சினிமா:
     தமிழ்ச்சமூகம் தொழில்மயமாவதற்கு முன்பே சினிமாமயமாகிவிட்டது. மா. அரங்கநாதனின் முத்துக் கறுப்பன் – அதுவும் தமிழ்த் திரைப்படங்கள் அல்லாமல் ஹாலிவுட் மற்றும் பெர்க்மன் போன்றவர்களின் படங்களால் ஈர்க்கப்பட்டவன்.

      அலுப்பு, மீதி ஆகிய கதைகள் சினிமாப் பார்த்தலை தப்பித்தலுக்கு உரிய விசயமாகப் பேசுவதோடு கதையின் காலத்தைக் குறிக்கவும் சினிமாவைப் பயன்படுத்துகிறார் மா. அரங்கநாதன் (வீடுபேறு).  சினிமாக் கதாபாத்திரங்கள், கதைகள், அவற்றின் போக்குகளின் வழி சமூகத்தில் உருவாக்கப்படும் அற மதிப்பீடுகள் குறித்து ஆழமாகப் பேசும் கதை ”மாறுதல்”.  முத்துக்கறுப்பனுக்கு சீட்டாட்டமும், குடிப்பழக்கமும் இல்லை அவன் பெற்றோரைக் காத்தல், பெரியோரை மதித்தல் போன்ற விழுமியங்களை சினிமாவிலிருந்தே உருவாக்கிக் கொள்கிறான். கல்வி பெறமுடியாதவர்களிடையே புத்தகங்கள் உருவாக்க முடியாத அறவுணர்ச்சிகளை, மதிப்பீடுகளை சினிமா உருவாக்கி விடுகிறது என்பதற்கு இக்கதை உதாரணம். 

     மர்லின் மன்றோ, கிர்கோரி பெக் போன்ற ஹாலிவுட் நடிகர்களும், பெர்க்மன் போன்ற இயக்குநர்களும் முத்துக்கறுப்பன்கள் மற்றும் பிறரின் சினிமாப் பார்த்தலை வடிவமைத்ததால் தமிழ்த்திரைப்படங்கள் குறித்த குறிப்புகள் ரஞ்சனோடும், பிறிதொரு கதையில் நடனமங்கையின் பின்பக்கத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் அரசனைக் குறித்த விமர்சனத்தோடும் தமிழ் சினிமாவை நிராகரிக்கிற தொனியில் தெரிகின்றன.

     கோவிலோடு தவிர்க்கமுடியாமல் ஆகிவிட்ட சினிமாவும் தமிழ்ச்சமூகத்தில் பெரும் ஆதிக்கத்தை செலுத்துகிறது. மா. அரங்கநாதன் அவரது கதைகளில் சினிமாவின் தாக்கத்தை தனித்துப் பேச வேண்டிய அளவில் எழுதிச்செல்கிறார்.

மேலும் சில கதைகள்:

     எண்பது கதைகளில் சிறுவர்கள் எவற்றில் எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கே இருக்கும் இடத்தை விட்டு, குடும்பங்களை விட்டு ஓடிப் போய்விடுகின்றனர். தொலைவிலுணர்தல், மீட்சி, பெருநகர்த்தடம் போன்ற கதைகளில் வெளியேறும் சிறுவர்கள் வழியாக கதைகள் நகர்கின்றன.  வீட்டையும், குடும்பத்தையும் நீங்கும் சிறுவர்கள் பலகதைகளில் எழுதப்பட்டுள்ளது மா. அரங்கநாதன் கதைகளுக்கே உரிய Attributeகளில் ஒன்று. இடம் நீங்குதல் இங்கும் தனியாகக் குறிப்பிட வேண்டியதாகிறது.  சிறுவர்களின் உலகம் குறைவாகவே விவரிக்கப்பட்டிருந்தாலும் “மீட்சி” கதையின் ஆற்று வெள்ளத்தைக் கூட பார்க்க வரமால் போன சிறுவர்களைக் குறித்து பேசும்போது அவர்களது இயங்கு வெளி குறித்த அபாரமான சித்தரம் கிடைத்துவிடுகிறது.
  
     மகத்தான ஜலதாரை இனக்குழு சமூகம், அதன் தலைமை உருவாக்கம் ஆகிய வாசிப்புகளுக்கான சாத்தியத்தை உருவாக்கித் தருகிறது.  முதற்தீ எரிந்த காட்டில் வழிபாட்டு முறைகள் உருவானவிதம் குறித்து (பக். 222) பேசப்படுவதோடு முதற்சொன்ன கதையையும் இணைத்து வாசிக்க புது அர்த்தங்கள் தென்படும்.

     சித்தி, மைலாப்பூர் ஆகியவை பிடிபட சிரமமாகத் தெரிந்தாலும் கதைகள் என்ற அளவில் பலவேறு அர்த்தங்களைச் சாத்தியப்படுத்தும் வடிவத்தையும், பொருளையும் கொண்டவை.  மோனலிசாவும் கருப்புக்குட்டியும், ஜேம்ஸ்டீனும், செண்பகராமன் புதூர்க்காரரும் ஆகிய கதைகளும் விரிவாகப் பேசுவதற்கானவை.  தாயிழந்த சிறுமியையும், அவளது தாத்தா பாட்டியைப் பேசும் ”முன்றில்” இழப்பின் துயரத்தை அதன் இருட்தன்மையோடு வாசிப்பவர்களுக்கு கடத்துகிறது.

     பெண்கள் அம்மாக்களாகவே பெரும்பாலான கதைகளில் வருகின்றனர். சிவகாமியின் சரிதத்தில் வரும் பெண் மனோன்மணியத்தின், “எவர்தாம் முன் அணைந்தாரென இதுகாறும் அறியோம்” என்கிற வரிகளை தனக்குப் பிடித்தமான பகுதியெனச் சொல்வது முத்துக்கறுப்பனின் வாழ்வையே மாற்றிவிடுகிறது.

           எண்பது கதைகளில் வெவ்வேறு பருவத்தில் வேறுவேறு முத்துக்கறுப்பன்கள் தெரிந்தாலும் தொகுப்பாக வாசிக்கையில் கதைகள் பேசும் பொருள்களுக்கு இடையே இருக்கும் தொடர்ச்சியால் எண்பது முத்துக்கறுப்பன்களும் ஒருவர்தான் எனத் தோன்றச் செய்கிறது. இவ்வகையில் தத்துவத்தின் வழி வாழ்வையும், மனத்தையும் நுணிகிப் பார்த்த மா.அரங்கநாதன் தமிழ்ச்சிறுகதை வாசகர்களுக்கு அளிக்கும் பிரதியியல் உலகம் ஒருவகையில் பெருநெறியொன்றின் கூர்ந்து கவனிக்கத்தக்க சித்திரங்கள்.  


தமிழ்ச்சமூகத்தின் சைவநெறி ஒழுங்கு + சாதிப்பிரிவினை மறுகட்டமைப்பு – திராவிட இயக்க இலட்சியவாதம் + அயல் சினிமா என மா.அரங்கநாதனின் கதைகளைக் குறித்த சமன்பாட்டை உருவாக்கிவிட முடியும் என நம்பத்தோன்றுகிறது.