இருள் திரவம்
எல்லாமே சவப்பெட்டியாக மாறிட்டிருக்கு. அதுவும் உயிரோட வெச்சு புதைக்கற சவப்பெட்டி
எதெல்லாம்?
உதாரணமா நீங்க லிஃப்ட்ல போகும்போது, நீங்க மட்டும், கரண்ட் போய் நின்னு போச்சுன்னா நீங்க என்ன நிலைமையில இருக்கறதா சொல்ல முடியும்? இந்த லிஃப்ட், அது கொடூரமான ஒரு கான்செப்ட். மெட்டல் கதவை வெச்சு மூடி., நீங்க புதைக்கப்படற மாதிரிதானே, வெர்ட்டிகல் பரி்யல் கொஞ்ச நேரத்துக்கு.
ம். அப்பறம்.
கட்டடத்துக்கு வெளியே கண்ணாடியால செஞ்ச லிஃப்ட் எவ்வளவு ஆசுவாசமானது. நின்னுபோனா கூட கண்ணாடியைத் தாண்டி உலகம் இருக்குங்கறத பார்த்துக்க முடியும்.
ஏன் பயப்படணும். உலகம் முழுக்க எவ்வளவு பேர் தினமும் நீங்க சொன்ன மாதிரி வெர்ட்டிகல் பரியல் ஆகறாங்க. அவங்க பயப்படலயே. இந்த பயம் எல்லாருக்கும் இருந்தா இந்நேரம் எல்லா லிஃப்ட்டும் கண்ணாடில செஞ்சு கட்டடத்துக்கு வெளியேதான் வெச்சிருப்பாங்க. வேற மாதிரி யோசிச்சா எம்பயர் ஸ்டேட் கட்டடத்துல வெளியே லிஃப்ட் வெச்சிருந்தா என்ன மாதிரி இருந்திருக்கும். உயரத்துக்கு பயப்படறவங்க அதிகம் இருப்பாங்க இல்லையா?
அவ்வளவு உயரத்துக்கு கட்டடம் கட்டணுமா? .
ஏன் கூடாதா?
உயரமான கட்டடங்கள் எல்லாம் பெருமையடுச்சுக்கறதுக்கு தானே கட்டறாங்க. சொல்லப்போனா எல்லாத்தையும் வடிவமைக்கிறவங்க அதப் பயன்படுத்தறவங்க இல்லதானே?
டாக்டர் சார்லஸ் ஸிஸ்டர் கொணர்ந்து கொடுத்த காஃபியைக் குடிக்கத் துவங்கினார். சர்க்கரை வியாதிக்கான மாத்திரையை பிரித்துக் கொடுத்தாள் ஸிஸ்டர். மேஜையின் மேல் வைக்கச் சொன்னார். அவர் முதுகின் பின்னே இருந்த சுவற்றில் பிராய்டின் படம். பிராய்டுக்கு வலப் பக்கத்தில் ஏதோ புரியாத ஓவியத்தின் கருநீல வண்ணம் வெள்ளைச் சுவற்றில் அப்பியதைப் போல் ஒட்டிக் கிடந்தது. மாத்திரையை அவர் விழுங்க ஸிஸ்டர் நகர்ந்தாள். கழுத்தைத் தாண்டி கீழே போகாத தலைமயிர் பிசிறு பிசிறாகப் பிரிந்திருந்தது. குண்டு முதுகும் பச்சை நிறச் சேலையும் அசைந்து நகர, டாக்டரைப் பார்த்தான்.
தனியா லிஃப்ட்ல எப்பவாவது மாட்டீட்டீங்களா?
ஆமா டாக்டர், ஒரு தடவை மாட்டியிருக்கேன்.
அதுக்கு முன்னாடி பயம் இருந்ததா?
சரியா சொல்ல முடியல. முன்னாடியே பயம் இருக்கறதாலதானே மாட்னதுக்கு அப்புறமா அது எனக்குத் தெரிஞ்சிருக்கும். என்னோட பயம் என்னோடது இல்லதானே டாக்டர். ஆதில மனுசன் பயந்ததுக்கு எல்லாமே நானும் பயப்படறேன் தானே. பாம்பு, இரத்தம் வர்றது, புது மனுசங்க. அதென்ன டிபார்ட்மெண்ட் டாக்டர்?
எவல்யூசன் சைக்காலஜி
தொடர்ச்சிதான் பெரிய பிரச்சனை. தொடர்ச்சி இல்லைனா எப்பவுமே புதுசா இருக்கலாம்
புதுசா இருக்க ஆசைப்படறீங்களா?
உடனே இதுக்கு ஆமான்னு சொல்ல முடியாட்டியும் தொடர்ச்சியில்லாம இருக்க ஆசைப்படறேன்.
பொறுப்பேத்துகறதுலிருந்து தப்பிச்சுக்கவா? ஏதாவது உங்களால தாங்கிக்க முடியாத அளவுக்கு தப்பு செஞ்சிட்டீங்களா?
ஒவ்வொரு தப்பும் செய்யும் போதுதான் அந்தளவு தப்ப நம்மலால செய்ய முடியும்னே தெரியுது டாக்டர்.
நம்ம பாஸ்ட் பிளசென்டா இருந்தா தொடர்ச்சி இல்லாம இருக்க ஆசைப்படுவீங்களா?
தொடர்ச்சி இல்லாம இருக்கறதுக்கு ஆசைப்படாட்டியும் கடந்த காலத்திலயே இருக்கறதுக்கு ஆசைப்படுவோம்னு தோணுது. பாஸ்ட்னு ஒண்ணுமே இல்லனா பொறுப்பேத்துக்கறது இருக்காது இல்லையா தப்பே செஞ்சிருந்தாலும்.
பிலாசபிகல். சோ வாட் ட்ரபிள்ஸ் யூ?
ஐ மேக் மை ஓன் ட்ரபிள்ஸ். ஐ’ம் த டிசைனர் ஆஃப் மை ட்ரபிள்ஸ். லைக் டிசைனர்ஸ் ஆஃப் டெத் மெஷின்.
யாரது?
ராஜபக்சே, பிரபாகரன், இந்தியா, சீனா, காபல்நிகோவ்,
“டிசைனர்ஸ் ஆஃப் டெத் மெஷின்.”
டாக்டர் ஒரு முறை அவன் சொன்னதை திரும்பச் சொல்லிக் கொண்டார். எதிரில் சுவற்றில் தொங்கிய கடிகாரத்திலும் தன்னுடைய கைக்கடிகாரத்திலும் நேரம் பார்த்தார். அவன் திரும்பி சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான். காலம் நகர்ந்து செல்ல பனிரெண்டிற்கு பக்கத்திலும் ஒன்பதுக்கும் முட்கள் பாதை போட்டிருந்தன. முணுமுணுப்பாக “கடிகாரம் என்பது முடிவில்லாத வட்டப்பாதை. வட்டப்பாதையில் சுழல்வதால் காலமும் முடிவில்லாதது” எனச் சொல்லிக் கொண்டான்.
”டைம் என்ன?”
அவன் செல்போனை எடுத்துப் பார்த்து ”12.05” என்றான்.
”என்னோட வாட்சுல 11.55”.
”ஏன் டாக்டர் நான் 12.05ல இருக்கேன். நீங்க 11.55ல. ஒரே இடத்துல ஒரே தேதில இருக்கற நாம இரண்டு பேரும் வேறவேற காலத்துல இருக்கோமில்லையா?”
”ஸோ மிஸ்டர்...” டாக்டர் ஃபைலைப் பிரித்தார். மஞ்சள் வண்ண அது இரண்டாய் பிளந்தது.
“ரகுநந்தன்”
தாமதமாக எழுந்துகொள்ளலாம் என்பதால் இரவு வெகு நேரம் படித்துவிட்டு தூங்கியதால் கண் எரிச்சலோடு யோசித்ததை விடவும் தாமதமாகத்தான் எழுந்தான். கடிகாரத்தைப் பார்த்தான்.
7.35.
ஏன் எழுந்ததும் நேரம் பார்க்கறோம் காலச் சிந்தனை இல்லாத ஒண்ணுமே செய்ய முடியாதா பீயிங் இஸ் பெயின்ஃபுல் இன்னிக்கி தினமணி படிக்கணுமா டாக்டரைப் பார்க்கறது சேகருக்கு சொல்லலாமா ரயில் சத்தம் தூரத்துல கேட்குது. பவர் டூ த பீப்பிள். இப்படி பாட்டுப் பாடுன ஜான் லென்னான் ஏன் அமெரிக்கா போகணும் பின்ன சோவியத் ரஷ்யாவுக்கா போயிருக்க முடியும் எத உருவாக்கணும் பவர்ஃபுல் மக்களையா இல்ல பவர்ஃபுல் அரசுகளையா அமெரிக்க மக்கள் அப்படியா இருக்காங்க கன்ஃபூசன் கன்ஃபூசியஸ் ஜென் புத்தம் அந்த புத்த பிட்சுவிடம் இதக் கேட்டிருக்கலாம் வாட் கைன்ட் ஆஃப் எகானாமிக் ஏக்டிவிட்டி புத்திசம் அக்செப்ட்ஸ் மகாயானம் ஒரு பதிலும் ஹீனயானம் ஒரு பதிலும் சொல்லியிருக்கும் சாக்கிய முனி புத்தா பேரே நல்லாருக்கு அந்த வெள்ளாக்கார பிட்சுகிட்ட கேட்டிருக்கலாம் ஹவ் யூ எவெர் ஹட் செக்ஸ் நிறுத்து அவேக் மை டியர் மேன் பத்து நாளாத் தீராத துக்கம் நந்திக்கடல் நடந்திருக்கவே கூடாது ஏன் தினமும் ஒரு நந்திக்கடல் ஆஃப்ரிக்காவுல நடக்குது நான் வளர்த்த பூனை சாகறதும் எங்கயோ ஒரு பூனை சாகறதும் ஒண்ணா? ட்ரீம் ப்ரேக்கர்ஸ் புடுங்கி பெரிய இங்கிலீஸ்ல சொன்னா எவ்வளவு ஸ்டைலா இ்ருக்கு இங்கிலீஸ் இஸ் டேடிவ் யார் அந்த இளவேனில் சுப்பையா கூகிள்ல பார்க்கணும் ரொம்ப நாளா சொல்லிகிட்டிருக்கே சோம்பேறி எல்லா இன்பர்மேஷனும் கார்ப்பரேட் கண்ட்ரோல்ல ஃபக்கிங் பாஸ்டர்ட்ஸ் நான் வளர்த்த பூனை சாகறதும் யாரோ வளர்த்த பூனை சாகறதும் ஒண்ணான்னு கேட்டுட்டு எப்படி அதிகாரத்த ஃபக்கிங் பாஸ்டர்ட்ஸ்னு சொல்லணும் எல்லாமே போலித்தனம் ஆனா நெஜமான துயரம் 1400 புலிகள்தான் இந்தி்யாவுல இருக்கு கடைசிப் புலி செத்தா நாமளும் செத்தரணும் இப்ப வயசு இருபத்தி ஆறு வருசத்துக்கு அம்பது புலின்னா 1400ங்கறது நெம்பர்ல யோசிக்கறமா இல்ல லெட்டர்லயா ஸ்ட்ரோக் வராம எப்படிப் பார்த்துக்கறது ஸ்டாப் மாஸ்டர்பேட்டிங் எழுதி வெச்சது இருக்கா பர்ஸ்ல பத்து கட்டளைகள் கேன் யூ ரிமம்பர் தோஸ் 1. டோண்ட் ஸ்பெண்ட் டூ மச் 2. நெவர் யூஸ் கிரெடிட் கார்ட்ஸ் 3. ஷெட்யூல் யுவர் டைம் 4. ஸ்டாப் மாஸ்டர்பேட்டிங் 5. மிங்கிள் வித் பீப்பிள் அப்புறம் ம்கூம் ஞாபகம் வரலயே பாதிரியார்கிட்ட ஒருத்தன் போனானாம் பாதிரி நான் தப்பு பண்ணீட்டேன் யாரு ஜான்சியா இல்ல திரவிய மேரியா இல்ல செல்வராணியா இல்ல பின்ன யாருப்பா நான் தப்பே செய்யல பாதிரி அப்புறம் எதுக்கு பாவ மன்னிப்புக்கு வரணும் அட்ரஸ் தெருஞ்சிக்க இது மத நிந்தனையா நிந்தனை சமஸ்கிருதமா தமிழா மு அருணாச்சலம் வையாபுரிப் பிள்ளை நோம் சோம்ஸ்கி பேசாம அண்ணாமலை யுனிவர்சிட்டில லிங்விஸ்டிக்ஸ் படிக்கலாமா மொழி என்பது ஒரு செளகர்யம் அந்த செளகர்யம் மரங்களுக்கு இல்லாததுனால் வெட்டுப்படும் போது வலியைச் சொல்ல முடியல உருப்புகள் வளர்ச்சி சம்பந்தப்பட்டதில்லையா மொழி டெவலப்மெண்ட் ஆஃப் ஆர்கன்ஸ் மனுசங்க செத்தா என்ன ஐநூறு கோடிப் பேரு செத்தா என்ன நஷ்டம் பூமி நல்லாருக்கணும்னா மனுசன் இருக்கக் கூடாது மனுசன் தானே பூமியோட பிரதிநிதி இந்த ஹயரார்க்கி சரியா பரிணாமவாதத்தை இன்னொரு தடவை படி ரிச்சர்ட் டாக்கின்ஸ் சொன்னதா கார்த்திக் சொன்னத கன்ஃபார்ம் செய்யணும் வாட் ஹி செட் ஏசுவ ஆபிரகாமிலிருந்து வர்ற வாரிசுகளோட சேர்க்கறது என்ன நியாயம் ஏன்னா ஏசு ஜோசப்புக்கும் மேரிக்கும் பொறக்கலியே அப்புறம் எப்படி இந்த வரிசையில் சேர்க்கறது வேணும்னா மேரியோட பாரம்பரியத்தில சேர்க்கலாம் மூளைச்சோர்வு உடற்சோர்வு அஞ்சால் அலுப்பு மருந்து இல்லன்னா ரெவிட்டால் ரெவிட்டால் அமேரிக்காவுல தடை செய்யப்பட்டதாமே கன்ஃபார்ம் பண்ணு போதும்பா இன்பர்மேஷனுக்குள்ள போகாதே அது ஒரு குவாக்மைர் இத ஒண்ண நல்லா சொல்றடா அடிக்கடி நிறுத்து மேன் இவ்வளவு பிரஸ்ட்ரேஷன் அதுக்குத்தானே டாக்டர்கிட்ட போறே என்ன சொல்லலாம் எப்படி தொடங்கலாம்
“எல்லாமே சவப்பெட்டியா மாறிகிட்டிருக்கு… “
டோக்கன் நெம்பர் வாங்கிக் கொண்டு அமரும்போது எதிரே இருந்த சிவப்புத் தாவணி போட்டிருந்த பெண் எச்சில் ஒழுக்கினாள். பக்கத்திலிருப்பது அவள் அக்காவாக இருக்கலாம் துடைத்து விட்டாள். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பம் ஞாபகம் வந்தது. அதில் இரு பெண்கள். ஒருத்தி மற்றவளை விட உயரம் குறைவு. அதோட அர்த்தம் அவர்கள் சகோதரிகளா? உயரம் குறைக்கறது ஒண்ணு போதுமா சகோதரிகள்னு காட்ட?. அங்கிருந்த நோட்டீஸ் ஒன்றை எடுத்து பின்பக்கம் அவன் இதை எழுத ஆரம்பித்தான்.
ஆறடி உயரத்தில் முதல் பெண்ணைப் பெறும் ஒருவர் பெண்ணுக்கு ஒரு அடி குறைத்தால் சமமான உயரம் உடைய இரு பெண்களைப் பெற எத்தனையாவது பெண் வரை பெற்றெடுக்க வேண்டும்?
கணிதத்தின் அடிப்படையில் சிற்பத்திலும் ஓவியத்திலும் சாத்தியமாகும் இதற்கான விடையை வரைந்து பார்த்தான்.
பின்பு நோட்டீஸைப் மடித்து சட்டைபையில் வைத்துக் கொண்டான். என் சட்டைப்பையில் தூங்கும் விடையை வேறொருவர் அடைய என்ன செய்ய வேண்டும். கேள்வியைக் கேட்க வேண்டும். என்னுடன் பேச முடியாத வேறொருவர் எப்படி அடைய முடியும்? எழுத வேண்டும். அப்படியானல் நாம் எழுதி வைக்க வேண்டியது விடைகளை அல்ல கேள்விகளை.
“சார் உங்க டீடெயில்ஸ இந்த ஃபைல்ல எழுதுங்க இதுதான் பர்ஸ்ட் டைம் இல்லையா?” ஸிஸ்டர் கேட்டாள்
அந்த ஸிஸ்டரிடம் இப்படிக் கேட்கலாமா? ஸிஸ்டர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்ல ஏகபாதர்னு ஒரு சிற்பம் இருக்கு ஒரே ஒரு காலிருக்கற சிலை. ஒண்ணு தெரியுமா சியாபோட்னு ஒரு உருவத்தை மிலன்ல இருக்கற பிரைவேட் மியூசத்துல இருந்து உம்பர்த்தோ ஈகோ அவரோட புக்குல போட்டிருக்காரு. சியோபோடும் ஒரு கால் மட்டுமே இருக்கற மனுசன். எட்டாம் நூற்றண்டுல யாரோ கற்பனை செஞ்சு எழுதின இந்த உருவத்தை பதினஞ்சாம் நூற்றாண்டுல வரஞ்சு வெச்சிருக்காங்க. மதுரை கோயில் சிற்பங்கள எந்த நூற்றாண்டுல யாரு செதுக்கினது? யாரு ஏகபாதர எந்த நூற்றாண்டுல கற்பனை பண்ணது? எனக்கு எப்படி ரெண்டும் பார்க்கக் கெடச்சிருக்கு?
சார், சார் ஃபைலை வாங்குங்க. நீட்டிட்டே இருக்கேன்ல. அவனை உலுக்கி எழுப்புவது போல சொன்னாள்.
நான் இங்க திரும்ப வரக்கூடாதுன்னு ஆசைப்படுங்க
இங்க வர்ற யாரும் திரும்ப வரக்கூடாதுன்னுதான் ஆசைப்படறோம். ஆனா மனநிலை சரியில்லாம போறதுங்கறது சில பேருக்கு இங்க வந்ததுக்கு அப்புறமாக்கூட ஆகுது. நல்லாத்தான் இருக்காங்க அப்புறமா டாக்டர்கிட்ட கேட்டா ஏதோ வியாதி பேர் சொல்லுவாரு.
பெயரிடுதல் மூலாமா வியாதியா மாத்தாறாங்க
என்ன சொன்னீங்க? சீக்கிரமா ஃபில் அப் பண்ணுங்க சார்.
ஃபைலைக் கொடுத்துவிட்டு அவள் நகர்ந்தாள், “இங்க வர்ற ஒருத்தன் பேசறதும் புரியறதில்லை”
டாக்டர். சார்லஸ் உள்ளேயிருக்கிறார். ரகுநந்தன் அவன் செல்போனை எடுத்து நேரம் பார்த்தான்.
10.25am
“ஸிஸ்டர் எனக்கு முன்னாடி எவ்வளவு பேர் இருக்காங்க?”
“நாலு பேர் சார்”
“நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரலாமா?”
“தாராளமா. ஆனா ரொம்ப நேரம் எடுத்துக்காதீங்க”
“எவ்வளவு நேரம் எடுத்துக்கலாம்னு நீங்களே சொல்லுங்களேன்”
“அடப் போய்ட்டு வாங்க சார்” ஸிஸ்டர் சலித்துக் கொண்டாள்.
மீன்கள் பாதை திறந்து நீந்திக் கொண்டிருக்கின்றன. கண்ணாடித் தொட்டிகள் தோறும் நீருக்குள்ளாக அலைகளை எழுப்பி அளந்து தீராத தூரங்களை கடந்து கொண்டிருக்கின்றன. முன்பே ஒரு முறை இங்கே வந்து மீன்களின் முன்னே நின்றிருப்பது போல ரகுநந்தனின் ஞாபகம் ஒரு கணம் பிசகியது. டெ ஜா வு? அந்தத் தொட்டியில் அதுவரை இல்லாத தங்க நிற மீன் ஒன்று கண்ணாடிச் சுவற்றில் கண் பதித்து அவனைப் பார்த்தது. மீன்களுக்குள்ளும் அவதாரங்கள் முளைக்க அவன் அதன் ஒரு பக்கக் கண்ணைப் பார்த்தான். அதன் இருட்பாதையில் மீனின் மூளைக்குள் செல்லும் நரம்புகளின் பின்னலில் அவன் பிம்பம் சென்று சேர்ந்த இடத்தில் எழுந்தன போரில் புதையுண்ட பிணங்கள். அவன் பிம்பத்தை தனக்குள் அடைத்த மீன் நீரில் சுற்றிவர எங்கும் அவன் கண்டான் போரில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் தங்கள் எலும்புகளை உருவி ஆயுதங்கள் செய்து கொண்டிருப்பதை.
வெள்ளை, கருப்பு, பழுப்பு நிறப் பிணங்களின் உடலெங்கும் மாற்றமின்றி ஒட்டிக் கிடந்தது இரத்தச் சிவப்பு. பிம்பத்திற்கு மயக்கம் வருவது போல் ஆனது. பரிணாமவாத மனோதத்துவம் பிம்பத்திற்கும் பொருந்துமாவென யோசித்து நகர அகிரா குரோசவாவின் “ட்ரீம்ஸ்” கொம்பு முளைத்த பேய்கள் வலி தாளாமல் ஓலம் எழுப்பிக் கொண்டிருக்க அவைகளின் வலி மறக்க “சிட்டி ஆஃப் காடின்” சிறுவர்கள் போதை மருந்துப் பொட்டலங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள் துப்பாக்கி ரவைகள் துளைத்த உடல்களோடு. சாக்ரடீஸின் அழியா நெருப்பு, நிலத்தின் வாசலில் எரிந்து நிலத்தின் மேலே நடப்பவற்றின் நிழலை வாசற் சுவற்றில் காட்ட போரிடும் நிழல்கள் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கின்றன. பூமத்திய ரேகையின் கீழே நாற்பதாயிரம் பிணங்கள் புதிதாய் சேர அவைகளின் எலும்பில் கலந்திருந்த பாஸ்பரஸை போருக்குப் தயாராகும் பிணங்கள் பிரித்தெடுக்க விரைகின்றன. ராஜ்காட் மைதானத்தில் புதைக்கப்பட்ட பிணம் எழுந்து சொல்கிறது பிம்பத்திடம்,
“இங்கேயும் போர் நிகழ என்னைச் சுட்டு அமைதியாக்குவது யார்?”
உடலைத் திருப்பி இன்னொரு பக்கக் கண்ணின் வழியே மீன் பிம்பத்தை வெளிவிட கண்ணாடிக்கு அப்பால் ரகுநந்தன் தங்க நிற மீனின் கண்ணை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு நகர்கிறான்.
எச்சில் ஒழுக்கிக் கொண்டிருந்த பெண்ணும் அவளுடன் வந்தவர்களும் உள்ளே போயிருக்க வேண்டும்.
“ஸிஸ்டர் இன்னும் எத்தனை பேர் இருக்காங்க?”
“அவர் போனதுக்கு அப்புறமா நீங்கதான்”. அந்த முதியவரை கைகாட்டினாள். அவருடன் வந்திருந்த இளைஞனுக்கு அருகில் அமர்ந்தான். அந்த இளைஞன் அணிந்திருந்த பெரிய டயல் கடிகாரம் 10.40 காட்டியதை பார்த்தான். போன தடவை போல அரசியலும் தத்துவமும் பேசி நேரத்தை வீணாக்காமல் தன்னுடைய பிரச்சனையை சரியாக சொல்லி விட வேண்டுமென நினைத்துக் கொண்டான்.
எல்லாமே சவப்பெட்டியா மாறிகிட்டிருக்கு, அதுவும் உயிரோட வெச்சுப் புதைக்கிற சவப்பெட்டி
எதெல்லாம்?
கட்டடத்துக்கு வெளியே கண்ணாடியால செஞ்ச லிஃப்ட் எவ்வளவு ஆசுவாசமானது. நின்னுபோனா கூட கண்ணாடியைத் தாண்டி உலகம் இருக்குங்கறத பார்த்துக்க முடியும்.
என்ன சொல்ல வர்றீங்க?
எவல்யூசன் சைக்காலஜி”
வாட்?
ரகுநந்தன் ஒரு முறை ஆழ மூச்சிழுத்து விட்டுக் கொண்டு,
லிஸன் டாக்டர், எல்லா மன நோய் மருத்துவர்களும் செய்வது நீங்கள் பேசுவதை வெறுமனே கேட்டுக் கொண்டிருப்பது – ஓஷோ. என்னால ஒரு விசயத்தை கோர்வையா சொல்ல முடியல கோர்வையா யோசிக்க முடியல. என்னென்னவோ தொடர்ச்சி இல்லாம யோசிக்கிறேன். செய்யறேன். ஒரு நிமிசம் தீவிரமா வேலை செய்துகிட்டிருக்கேன். மறு நிமிசம் கிளம்பி சினிமாவுக்குப் போறேன். பாதியிலேயே எந்திரிச்சு போய் புத்தகம் வாங்கறேன். அப்புறமா கிளம்பி கடைசி தடவைன்னு சொல்லிட்டே ஐஸ்கிரீம் சாப்படறேன். கூகுள், விக்கிபீடியா, யூ டியூப், ஃபேஸ்புக்னு….. இன்டெர்நெட்ல தொலைஞ்சு போறேன். என்னோட மூளை நரம்புகளை பிரிண்ட், விசுவல் இன்டெர்நெட் மீடியாக்களோட இணைச்சுட்டாங்க டாக்டர், அலை அலையா தகவல்கள் வந்து குவியுது. எல்லாத்தையும் தெரிஞ்சுக்க ஆசப்பட்டு இதுவரைக்கும் நாசா எத்தனை ராக்கெட்டுகளை விட்டிருக்கான்னு தெரியலன்னா கூட அறிவு குறஞ்சுட்டதா நெனைக்கிறேன். பொறக்கும்போதே குழந்தைங்க என்ஜினியராவோ டாக்டராவோ பொறந்துட்டா நல்லதுன்னு நினைக்கிறாங்க டாக்டர். அம்மா அப்பாவுக்கு அடுத்த வார்த்தை இங்க்லீஷ் ஆல்பபெட் சொல்லலன்னா குழந்தை முட்டாளா பொறந்துட்டதா வருத்தபடறாங்க. இங்க்லீஷ் இஸ் ஈட்டிங் எவ்ரி அதர் லாங்குவேஜ்.
இதெல்லாம் உங்களை தொந்தரவு பண்ணுதா?
சரியா சொல்லத் தெரியலை டாக்டர் எதெல்லாம் என்ன தொந்தரவு பண்ணுதுன்னு. சம்டைம்ஸ் நான் நினைக்கிறத சொல்ல முடியலன்னா உளற ஆரம்பிச்சுர்றேன்.
எப்படி?
உதாரணத்துக்கு என் பாஸ்கிட்ட பேசிட்டிருப்பேன். அவர் எதாவது கேள்வி கேப்பாரு. அதுக்கு என்னால பதில் தெரிஞ்சாலும் இங்க்லீஷ்ல தெளிவ சொல்ல முடியாது. சுத்தியும் ஃபாரின் லாங்குவேஜ் பேசறவங்க இருக்கும் போது சரியா நினைச்சத சொல்ல முடியலன்னா அங்க மனசுக்குள்ள உளறிக்குவேன். சில சமயம் யாருமில்லாதப்போ கூட.
என்ன மாதிரி? உங்களுக்கு நீங்களாவே பேசுவீங்களா?
இல்லை டாக்டர் ஒலி எழுப்பறது. உதாரணத்திற்கு டிரிர்ரியோ டிரிர் டும்பா தடும் கிஜ்ஜியாலே இந்த மாதிரி. கைவிடப்படறது டாக்டர் தனிமையில அதுவும் இருட்டுல.
ம்.அப்பறம்
எல்லா அரசாங்கங்களும் இருட்டறைகளை கட்டறாங்க. அங்க அரசாங்கத்த எதிர்க்கறவங்க போடப்படறாங்க
நீங்க அந்த மாதிரி ஏதாவது இருட்டறையில அடைபட்டீங்களா?
இல்லை டாக்டர். “ரேஜிங் புல்”ல ராபர்ட் டி நீரோவை அடைப்பாங்களே. ஸோ பெயின் ஃபுல் டாக்டர். கான்ஸன்ரேஷன் காம்ப், குலாக், அபு காரிப் என்னால தாங்க முடியல டாக்டர்.
உங்களை யாராவது சித்ரவதை பண்றதா கற்பனை பண்றீங்களா?
தகவல்கள் டாக்டர். தகவல்கள்தான் என்ன டார்ச்சர் பண்ணுது. இருட்டறைன்னு ஒரு தகவல் போதுமே பயம் உண்டாக்க. மீடியாவுல இருக்கற எல்லா இன்ஃபர்மேஷனும் சேர்ந்து ஒரு விர்ச்சுவல் வேர்ல்ட் உருவாக்கிக்கிட்டு இருக்கு. அதுல உலவுற ஒரு தகவல், ஒரு வீடியோ போதுமே உங்கள பயமுறுத்த.
டாக்டர் சார்லஸ் மேஜை டிராவைத் திறந்து ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அதில் 43ம் பக்கத்தை எடுத்து அவனைப் படிக்கச் சொல்லிவிட்டு ஸிஸ்டர் கொணர்ந்து கொடுத்த காஃபியைக் குடிக்கத் துவங்கினார். சர்க்கரை வியாதிக்கான மாத்திரையை பிரித்துக் கொடுத்தாள் ஸிஸ்டர். மேஜையின் மேல் வைக்கச் சொன்னார். அவர் முதுகின் பின்னே இருந்த சுவற்றில் ஏசு, பிறை, கிருஷ்ணன், புத்தா படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அவர் மாத்திரையை விழுங்கவே ஸிஸ்டர் நகர்ந்தாள். புத்தகத்திலிருந்து கண் எடுத்து அவள் முதுகைப் பார்த்தான், குதிரை வால் கொண்டை போட்டிருந்தாள். வால் முதுகுத் தண்டை பிடித்து இடை வரை இறங்கியிருந்தது.
“போதும்” என்று சொல்லிவிட்டு ஃபைலைப் பிரித்தார். மஞ்சள் நிற அது இரண்டாய் பிளந்தது.
ரகுநந்தன் பின்னால் திரும்பிப் பார்த்தான் வெற்றுச் சுவர் நீல வண்ணத்தில் இருந்தது. செல்போனை எடுத்து நேரம் பார்த்தான்.
11.15
“நீங்க ஆங்சைட்டி அதாவது மிகைப் பதட்டத்தோட ஆரம்ப ஸ்டேஜ்ல இருக்கீங்க.” டாக்டர் மேலும் தொடர்ந்தார்.
ஸிஸ்டர் கழிப்பறையிலிருந்து வெளியே வந்து வளையத்தில் தொங்கிக் கொண்டிருந்த துண்டில் கை துடைத்துவிட்டு அமர்ந்தாள். அந்தப் பெரியவரைப் பார்த்தாள். அவருக்கு அருகே இருந்த இளைஞனைப் பார்த்தாள். ரகுநந்தன் இல்லை.
“ஏங்க இங்கிருந்தவர் எங்கே?”. இளைஞனைக் கேட்டாள்.
“அவர் எந்திரிச்சுப் போயிட்டார்”.
ஸிஸ்டர் கடிகாரத்தைப் பார்த்தாள்
11.10
கண்களை திறக்க முடியாத அளவுக்கு அழுத்தம். உடல் முழுக்கவும் இருள் பரவி இருக்கிறது. கபாலத்திற்கும் மூளைக்கும் இடையே, மூச்சுக் குழல், உணவுக் குழல், வயிறு, விரைப்பைகளுக்கு உள்ளே எங்கும் இருளே பரவிக் கிடக்கிறது. மூளையில் திரவம் சுரந்து கபாலம் முழுக்க நிரம்புகிறது. இதயம் வேகமாய் அடித்துக் கொள்கிறது.
இருட்ல இருக்கோம். அதுவும் கண்ணைக் கட்டி. எந்திரிச்சுப் போகவும் முடியாது. எல்லாரும் என்னை மறந்துட்டாங்க,. இப்படி ஒருத்தன் இங்க இருக்கறது எல்லாரும் மறந்துட்டு அவங்க வேலையைப் பார்க்கறாங்க. நாள், வாரம், மாசம். வருசம், நூற்றாண்டுன்னு உலகம் போயிடும். நான் இங்கயே இருட்லயே இருக்க வேண்டியதுதானா?. ஹெல்ப் ஹெல்ப் இந்த வார்த்தை மற்றவற்றை தாண்டி நகர வாய் மூடிக் கிடக்கிறது. வெள்ளைத் துணியில் முகம் போர்த்தப்பட்டிருக்கிறது. பயம் பரவி மூச்சு முட்டுகிறது. எப்படியாவது எந்திரிச்சு ஓடு. இங்க இருக்காதே. இருட்ல மாட்டிக்காதே. அபுகாரிப்ல ஓயாத வெளிச்சம். வெளிச்சத்துக்குள்ளயே முழுச்சும் தூங்கிட்டும் தூக்கம் வராமையும் மனசு குழம்பி, முகத்தை மூடி வெச்சிருக்காங்க கண்ணே திறக்க முடியாது இருட்டைத் தவிரவும் எதுவும் பார்க்க முடியாது ரேஜிங் புல்ல வர்ற மாதிரி. அப்படியே இருட்டுல போட்டுட்டு இனி வருவாங்களா தெரியாது இருட்டுல இருக்கியா? இங்க வந்து மாட்டிகிட்டியா? இன்னும் கொஞ்ச நேரத்துல பைத்தியம் புடுச்சுரும் எந்திரி இங்கதானே அந்த சுவிட்ச். வலது கையை உயர்த்தி கார்ட்போட் சுவற்றில் தேட சுவிட்ச் தட்டுப்பட்டது. ஏன் இவ்வளவு நேரம் ஆகுது. சுவிட்சு அமுத்தியும் யாரும் வரலியே. நெஜமாவே விட்டுட்டு போயிட்டாங்காளா நல்லா யோசிச்சுப் பாரு உனக்கு ஒண்ணும் ஆயிடலே இங்க நீ ஃபேசியல் பண்றதுக்காக படுத்துட்டு இருக்கே கண்ணுக்கு பஞ்சு வெச்சு கிரீம் மேலே போட்டுட்டு அதுக்கு மேலே ஈரத்து துணி போட்டுட்டு போயிருக்கான். இருபதே நிமிசம்தான் இப்ப எவ்வளவு நிமிசம் முடிஞ்சிருக்கும் இல்ல அவன் வரமாட்டான் இப்படியே போட்டுட்டு போயிட்டான் அபுகாரிப் குலாக் இருட்டறை பூம்பத்துல இடுபாடுகள்ள சிக்கிகிட்டு உயிரோட அஞ்சு நாள் ஆறு நாள் இருக்கறது அதே பயம் யாரும் வரவே இல்லைனா இருட்டறையில் என்ன செய்யறது. இன்னொரு முறை சுவிட்சை அழுத்தினான்.
கதவு திறந்து, “என்ன ஆச்சு சார்”
நிம்மதியாக உணர்ந்து “விஜய் இது வேண்டாம்பா எடுத்துறு ஒரே இருட்டா பயமா இருக்கு”
“ரகு சார், இன்னும் பத்து நிமிசம் கூட முடியல இப்பவே எடுத்தா யூஸ் இல்ல சார்”
“பரவாயில்லப்பா எடுத்துறு பயமா இருக்கு”
“என்ன சார் பயம். எத்தனை பேர் போட்டுகிட்டு அரை மணி நேரம் கூட இருக்காங்க.” அவன் துணியை எடுத்து கிரீமை துடைக்கத் துவங்கினான்.
கண்கள் அகலாமாய்த் திறந்து வெளிச்சத்தை விழுங்கிக் கொண்டன. ஆனாலும் மூளையில் சுரந்த அந்த திரவம் இன்னும் கசிந்து கொண்டியிருக்கிறது. வேகமாய் வெளியே வந்தான். அன்று நாள் முழுக்க அவனால் எங்கும் தனியாக இருக்க முடியவில்லை. அறையிலிருந்து கிளம்பி சினிமாவுக்குப் போனான். பாதியிலே எழுந்து புத்தகக் கடைக்குச் சென்றான். புத்தகங்களை வாங்கிக் கொண்டு கடைசி தடவை என்று சொல்லி ஐஸ்கிரீம். அறையில் வந்து படுக்கவும் மூளையில் திரவம் மீண்டும் சுரக்க ஆரம்பித்தது. டாக்டரைப் பார்க்கலாம். சேகர் சொன்னானே டாக்டர் சார்லஸ் நாளைக்கு பார்க்கலாம் லேட்டா எந்திரிச்சா போதும் கொஞ்சம் படிக்கலாம் அருகிலிருந்த புத்தகத்தை எடுத்தான் திரவம் கபாலத்துள்ளாக கசியத் துவங்கியது. நாளைக்கு டாக்டரைப் பார்க்கணும் எப்படி தொடங்கலாம்
“எல்லாமே சவப்பெட்டியா மாறிகிட்டிருக்கு, அதுவும் உயிரோட வெச்சு புதைக்கிற சவப்பெட்டி”
“எதெல்லாம்” டாக்டர் சார்லஸ் கேட்டார். அவர் முதுகின் பின்னிருந்த சுவற்றில் முட்களில்லாத கடிகாரம் தொங்கிக் கொண்டிருந்தது. அதில் ஆறிலிருந்து பனிரெண்டை நோக்கி ஃலிப்ட் உயரத் துவங்கியது.
No comments:
Post a Comment