Tuesday, December 24, 2013


                                                                ”பைத்திய ருசி”  - சிறுகதைகள் குறித்து
                                                                                                                                               
கணேசகுமாரனின் “பைத்திய ருசி” சிறுகதை தொகுப்பில் 9ம் பக்கத்தில் இருந்து 94ம் பக்கம் வரையிலும் உலவும் மனிதர்கள் இந்த உலகால் ரோகத்தின் காரணமாக நிராகரிக்கப்பட்டவர்கள்.  அழகின் மினுமினுப்பை இவ்வுலகு அசிங்கத்தால் குறைக்கிறது. நிராகரிக்கப்படும் அசிங்கம் அதன் இருண்மையை பரப்பி ஒளியின் மீது கருமையைப் பூசுகிறது. இந்தத் தொகுப்பின் கதைகளின் வழியாக சொல்லபட்டவை(வர்கள்) அந்த இருண்மையின் குரல்கள்.  மீட்சியின்றி அதனுள் சிக்குண்டுவிட்ட மனிதர்களின் விசும்பல்களும், சமூகத்திற்கு மிக வலிமையானதொரு அறிவிப்பாகவே நிகழும் தற்கொலைகளும் நிரம்பியது.

உடல் மற்றும் மனதின் ரோகங்களால் நேரும் சிக்கல்களை, ஏமாற்றங்களை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் உடலின் ரோகத்திற்கு தீர்வாக தற்கொலையையும், மனதின் ரோகத்திற்கு பைத்தியத்தையும் அடைகின்றனர். மனதின் ரோகத்தை உடல் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு உடலின் வலிகளை, அழகின்மையை மனம் தாங்கிக் கொள்வதில்லை. “காமத்தின் நிறம் வெள்ளையில்” லுயூகோடெர்மா பரவும் தயாளனை பவானி விலக்க இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் அவனுக்கு இணையாக தன் கணவனது ஓரினச் சேர்க்கையின் காரணமாக (அதனால்தான் என அறியாமலேயே) விலக்கப்படும் பானுமதியும் இந்த “விலக்கப்படுவதால்” என்பதால் மாத்திரமே மரணித்திடம் ஆறுதல் தேடி புகுந்தவர்கள்.  இருவருக்கும் வாழ்வில் இதைத்தவிர ஏதொரு சிக்கலும் இருப்பதாக கதையில் தெரிவதில்லை. அவர்களால் தங்களுக்கே உரிமையான ஓர் உடல் அவர்களின் உடலுக்குச் செய்யும் அநீதியை தாங்க முடியாமல் மரணிக்கின்றனர்.
  
“ஏவல்”, “சிக்னல்”, “பைத்திய ருசி” ஆகிய கதைகள் மூன்றும் மனதின் ரோகத்தை பேசுபவை. “நான் பேசுவதை யாராவது கேட்டிருந்தா இந்த நிலைமை வந்திருக்காது” என “ஏவல்” கதையில் வரும் ஒரு வாக்கியத்திற்கு பதிலாக “சிறிதும் ஓய்வின்றி ஒரு துரோகத்தினை உலகுக்கு அறிவித்துக் கொண்டிருக்கும் உதடுகளை சந்திக்கும் போதெல்லாம் உங்கள் செவி கேட்காமல் போகிறது” எனும் “பைத்திய ருசி”யின் வாக்கியம் அமைகிறது (இதன் context வேறாக இருப்பினும் பொருத்திப் பார்க்கலாம்).

எப்போதுமே நாம் கேட்க விரும்புகின்றவை அல்லாமல் வேறெவற்றையும் கேட்க மறுக்கிறோம். அதைப் போலவே காதுள்ளவர்கள் எல்லோருமே கேட்கக் கூடியவர்களும் அல்ல.

ஓரினச் சேர்க்கை, லுயூகோடெர்மா, வலிப்பு, “டிரின்னிடஸ்”, “பிரீஃப் சைக்கோசிஸ், ஏவல், புற்றுநோய் என கதைகளில் விரியும் நோய்மைக்கு பலியாகும் உடல்களோடு, அணு உலைகள், வேதி ஆலைகள், போர்களால் சிதைக்கப்படும் உடல்கள் இணைகின்றன. 

பீத்தோவனின் ”இசை” அவனது செவிப்புலன் திறன் இழந்த பிறகும் பொங்கிப் பெருகிய அவனது வெள்ளம். இதை ஒரு சிறுகதை என்பதை விட சிறப்பாக சொல்லப்பட்டதொரு குறு வாழ்க்கை வரலாறு என சொல்லலாம். பீத்தோவனது கட்டுப்பாடு மிக்க தந்தையின் -, மொசார்ட் எனும் மேதையைக் கடந்து செல்லும் பெருவிருப்போடு - பிரம்படிகள் காலில் விழ பியானோக்களில் விரல்கள் மிதந்த சிறுவனோடு எதை துணை நின்றதோ அதுவே அவனது கேட்கும் திறன் அவனை விட்டு நீங்கிய பிறகும் துணையாக இருந்தது. தயாளனுக்கும், பானுமதிக்கும், ”அழுகிய புத்தனிடம் சொன்ன” கதைகளில் வரும் பெண்களுக்கும் ஒரு வயலின் துணை இல்லாமல் போனதே தற்கொலைக்குக் காரணம்.
ஒரு பிரிவினால்  உச்சமுடிவுகளுக்குப் போகாத ரகுநந்தனும், புவனாவும் தற்கொலை செய்யாமல், மனம் குழம்பாமல் போன அளவிற்கு மற்றவர்கள் வண்ணத்துப்பூச்சியை அறுக்கப் பழகியவர்கள் அல்ல.

“அக்காக்களின் கதையும்”, ”மார்ச் 3”, ”தேவதைக்கு வாழ்க்கைப்பட்டவன்”, ”தந்தூரி கசானா 400 ரூபாய்” ஆகிய கதைகள் அவற்றின் வடிவத்தினாலோ, உள்ளடக்கத்தினாலோ வழமையானவை என்பதால் கவனத்தை ஈர்க்கவில்லை.

இக்கதைகள் சிறுகதைகள் எனும் வடிவத்தின் இலக்கணங்களை கடந்தவை. பெரும்பாலான கதைகள் Biographical தன்மையோடு இருக்கின்றன.  ஒரு பெரிய கேன்வாஸில் சம்பவங்களின் துணையோடு சொல்ல வேண்டியவற்றை சில பக்கங்களில் சொல்ல முனைந்தவை இக்கதைகள். அதனாலேயே சிறுகதை வடிவத்தினுள் நில்லாமல் வெளியே நிற்கின்றன. இக்கதைகளின் இலக்கியத் தகுதி குறித்து இப்போது பேச முடியாது.

இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த கதையாக இருப்பது “சிக்னல்”. சமிக்ஞையைக் கடக்கும் கோழிதான் மனம். தவறான ஒரு முன்னகர்வில் விபத்திற்குள்ளாகி இயல்பு நிலையைக் கடந்து பைத்தியத்திற்குள் நுழைந்து திரும்ப வராது.

ஒரு தந்தை அவனது குழந்தையை கையில் வாங்கிய மறுகணம் அக்குழந்தையின் முதுகுப்பக்கம் முளைத்திருந்த பெரிய கட்டியைத் தொட்டதுமே “ஊறிய தந்தைமையின் அமுதம் சட்டென உள் சுருங்கி அருவருப்படைந்து” (பக். 39) பின்னகர்வதே இவ்வுலகின் இயல்பென நாம் அறிந்தவர்கள்.

”சாமிகளே” இல்லாத உலகின் (ஏவல்) சிக்கல்களுக்கு தீர்வாக நவீன மருத்துவத்தின் மாத்திரைகளும், தற்கொலைகளும் அமைகின்றன. நிறுவனங்கள், அறிவியல், தொழில்நுட்பம், போர் இயந்திரங்கள் அனைத்தும் இவ்வுலகை ஒரு பைத்திய விடுதியாக மாற்றுவதை எழுதிய கணேசகுமாரன் வடிவத்தின் மீதும் கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பான கதைகள் எழுதிவிட முடியும். 

எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கிய வாசகன் காண விரும்புவது அசிங்கமானவற்றிடம் இருந்து கூட பிறக்கும் அழகே.


Wednesday, July 17, 2013

நுணிகி அறிந்த மனம் - மா. அரங்கநாதன் சிறுகதைகள்


                                 
     மரபைக் குறித்த பலவகையான கேள்விகளை கோட்பாடுகள் உருவாக்கிவிட்டன.  யாருடைய மரபு? என்கிற கேள்வி எது மரபு என்பதை விடவும் முக்கியமானது.  தமிழ்ச்சிறுகதைகளுக்கு வ.வே.சு ஐயர், பாரதி துவங்கி வரலாறு உண்டு. அந்த வரலாற்றில் சில மரபுகள்.  புதுமைப்பித்தன், மெளனி, அசோகமித்ரன், சுந்தர ராமசாமி, கி.ரா என கிளைகள் பிரித்து நிற்கிற மரபு. சி.சு.செல்லப்பாவும், க.நா.சுவும் ஒர் ஒழுங்கில் மரபை தரம்பிரித்து ஒழுகச் செய்தவர்கள்.

     சமூக வாழ்வை, தனிமனித சிக்கல்களைச் சொல்லுதல், மனச்சித்திரங்கள், தொன்மங்கள் இதிகாசங்களை மீளுருவாக்கம் செய்தல், மொழியின் ஓசைகளைக் கொண்டு சித்திரங்களை உருவாக்குதல் பின்னெழுந்து வந்த தலித் எழுத்து என சிறுகதைகள் புழங்கும் மொழியில் மா.அரங்கநாதனின் எண்பது கதைகள்.

     வடிவத்தின் முக்கியத்துவத்தை பலகாலம் இலக்கிய ஆசான்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.  சிறுகதை வடிவத்திற்கு இலக்கணமே உருவாகிவிட்டது.  மா. அரங்கநாதனின் சிறுகதைகளின் வடிவம் சிக்கலற்றதும், பெரிய அளவில் பரிட்சார்த்த முயற்சிகளும் இல்லாமல் இருக்கின்றன.

தத்துவம்:

     எண்பது கதைகளில் குமரி வட்டாரத்திலிருந்து நேரடியாக சென்னைக்கு வருபவர்கள் அதிகம். இந்த எல்லையை உலக அளவில் விரிவாக்க வேண்டுமானால் பெரும்பாலும் அமெரிக்கா, ஒரு கதையில் இலண்டனும் கதைகள் நடக்கும் புவிப்பிராந்தியங்கள், தமிழ்கூறும் நல்லுலகின் நிலவியல் எல்லை. 

     பெருநெறிகள் சமணத்திலும் பெளத்ததிலும் துவங்கி, சைவமாகவும் வைணவமாகவும் விளங்குகிற தமிழ்ச்சமூகம்.  சிறுமரபுகள் குறித்த பேச்சு இதுவரையிலும் அரசியல் தொடர்புடையதாக இருக்கிறது தத்துவ பின்பலமின்றி.  தமிழ்ச்சமூகம் சிறுகதைகளை நவீனத்துவக் கூறுகள் சமூகத்தில் மாற்றங்களை உண்டுபண்ணிய காலத்தில் எழதியது. பெரும் மாற்றங்கள் இச்சமூகத்தில் நிகழ்ந்த காலமும் அதுதான். அதுவரையிலும் நிலைபெற்றிருந்த சிந்தனை மரபுகள், வாழ்வியல் ஒழுங்குகளில் மாற்றங்கள் கடந்த நூற்றாண்டின் நம்ப முடியாத வேகத்தோடே நிகழ்ந்தன.

     சைவம், வைணவ பெருநெறிகள் குறிப்பிடத்தகுந்த வரலாற்றுக் காலம் வரையிலும் (இன்றும் கூட பொதுப்புலத்தில், நெகிழ்ந்த அளவில்) தத்துவத் தளத்தில் ஆதிக்கம் செலுத்தியவை. இவ்விரண்டு தத்துவச் சிந்தனைகளில் இருந்து கிறித்துவம், நவீனத்துவம், காலனியாதிக்கம் உருவாக்கிய நிறுவனங்களால் தமிழ்ச்சமூகம் பலவித மாற்றங்களை உளவாக்கிக் கொண்டது. புராட்டஸ்டண்ட் கிறித்துவம், இயந்திரமயமாதல், காலனிய நிறுவனங்கள் (கல்லூரிப் படிப்பு, நீதிமன்றம், போலீஸ்துறை, அரசு அலுவல் படிநிலைகள், மாவட்ட நிர்வாகம்) ஆகியவை பெருமளவில் தமிழர்களை நவீனத்துவத்திற்குத் தள்ளிய காலத்தில் ஏறக்குறைய ரொமாண்டிசிச அல்லது மறுமலர்ச்சிகால சிந்தனை அளவிற்கு திராவிட இயக்கம், பிராமணியச் சிந்தனை நீக்கம் முதலாக சாதி ஒழிப்பு, தனிமனிதனை அளவாகக் கொண்ட சுயமரியாதை, பெண்விடுதலை போன்ற இலட்சியவாதங்களை முன்வைத்து முற்றாக மரபு நீக்கம் செய்தே உருப்பெற்றது.  அதன்பிறகு தமிழ்ச்சமூகம் பல்வேறு சிந்தனைகளின் வண்ணங்களால் தீற்றப்பட்ட ஓவியமானது.

     மா. அரங்கநாதனின் கதைகள் சைவத்தை அதன் வாழ்வியல் ஒழுங்குகளோடு மாத்திரமல்லாமல் தத்துவத்தளத்திலும் அணுகிப்பார்ப்பவை. ”வீடுபேற்”றில் முத்துக்கறுப்பனிடமிருந்து “சிவா” என்கிற பழகிப்போன சொல்லாக வெளிப்படுவதிலிருந்து, “விடுதலைப் போரில் அப்பரின் பங்கி’ல் ”சிவம்னா புதுசா வர்ற வெளிச்சம் மாமா – அது தானா வரதால எப்படியிருக்கும்னு சொல்லமுடியாது. சொல்ல முடிஞ்சா அது புதுசு ஆகாது” என்கிற வாக்கியத்தில் சைவத்தத்துவ விசாரணை அழுத்தமாகப் புலப்பட்டு  பின்பு “துக்கிரி” கதையில் முதலும் முடிவும் அற்ற ஒளியாக திருவண்ணாமலை கிரியில் திடமாக நிற்கிறது.

 ”காலக்கோடு” கதையில் கடிகாரம், ஆடைகளோடு நடராசர் படம்போட்ட பிசிக்ஸ் புத்தகத்தை கரையில் விட்டு கடல் நோக்கி “கண்டுபிடித்துவிட்டேன்” என ஓடும் அவன் செய்கைக்கு “வாகனம் கோயில் சேரும்வரை ஆட்டம்தான் தில்லையம்பலம் சிவசிதம்பரோம் அப்படின்னு” சைவ விளக்கம் கிடைக்கும். இப்பிரபஞ்சத்தின் அசைவுகள் அனைத்துமே நடராசனின் ஆட்டம்தான் என்பது சைவத்தில் தோய்ந்தவர்கள் அறிவியலுக்குள்ளும் காண்பதே.

     ”பார்த்தல்”, ”வெளியேறுதல்” இரண்டும் மா.அரங்கநாதன் கதைகளில் இடம் தொடர்புடைய உருக்கள்.  இவற்றிற்கும் சைவநெறிக்கும் உள்ள தொடர்பை பார்த்தல், தெளிதல், அதுவாகவே ஆதல் என்பதோடுச் சேர்த்துப் பேசமுடியுமெனத் தோன்றுகிறது.

 வெளியேறுதல் இடம்பெயர்தல் மட்டுமல்ல, இடத்தினால் நிலைபெற்றுவிட்ட பண்பாட்டில் நிலவும் மாறுதல்களும்தான்.  சிறுகதைகளில் கிராமங்களைப் பேசும் கதைகள் கோயிலின்றி இருப்பதில்லை. நகரங்களில் சினிமா.  இரண்டுமே பார்த்தல்தான்.

“மீதி” கதையில் மாமியார் ஆக்ரமித்துக் கொண்ட வீட்டிலிருந்து தற்காலிக வெளியேற்றத்திற்கு முத்துக்கறுப்பன் பயன்படுத்தும் இடம் சினிமா அரங்கு. ”அசலம்” கதையில் மருமகளிடமிருந்து கிடைக்கும் முணுமுணுப்பை மதிக்காத முத்துக்கறுப்பன் எண்பது வயதில் இரண்டு மைல் நடையையும் பொருட்படுத்தாது அணுகும் இடம் ஆவுடையார் கோயில். ”நல்லது கெட்டது என்ற நோக்கில் அல்லாமல் அவ்வாறாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது” (பக்.140) என சினிமாப் பார்த்தல் குறித்து சொல்லப்படுவது அது சினிமாவைப் பார்த்தல் தாண்டியும் பொருள் நீட்சி உடையதெனவும் கொள்ள இடமுண்டு.  மெய் காணுதல் கூட “ஏதாவது தோன்றாதாவென எதுவுமில்லாததைப்” பார்த்தல்தான் (மெய்கண்டார் நிலையம், தாங்கல்).

கற்பதென்பதே பார்ப்பதுதான்.  “பார்ப்பது படிப்பது போலத் தெரியும்.  ஒருவேளை பார்த்ததைத்தான் அந்தப் புத்தகத்தில் படிக்கிறார் போலும்” (பக். 149).  இந்தப் பார்த்தல்தான் “மகத்தான் ஜலதாரை” கதையில் யானைகளின் களியாட்டைப் பார்த்த ஒரு கிழவன் “பட்டினத்து சாமி” கதையில் திருவையாற்றில் இரண்டு யானைகளைப் பார்த்து “கண்டறியாதன கண்டேன்” என்ற அப்பராக வெளிப்படுகிறார்.  வெளியேறுதல் குறித்த சித்திரம்; “வீடுபேறு” கதையில் முத்துக்கறுப்பன் சொல்லும் “எல்லாம் நல்லாத்தான் இருக்கு. எங்கே போனாலும் நல்லாவேயிருக்கும். எங்காவது போய் அப்படியே எங்க போனோம்னு தெரியாமலேயே போயி திரும்பி வராமலேயிருந்துட்டா இன்னும் நல்லாயிருக்கும்” வாசகத்தில் கச்சிதமாகத் துலங்கும்.

ஒரு பார்வையில் வேதங்களைக் குறித்து ஒவ்வாமையை வெளிப்படுத்துவதாக ”ஒரு பிற்பகல் நேரம்” கதையில் நடேச சாஸ்திரியைக் குறித்து ”வேதங்கள் காற்றிலிருந்து மூக்கால் இழுக்கப்படுவதன் முன்னர், தென்னாட்டில் மனிதனே கிடையாது என்ற நம்பிக்கையுடன் வாழ்பவர்” எனவும் இன்னொரு கதையில் வேதம் என்பது கரியமிலவாயு எனவும் சொல்லப்பட்டிருக்கும்.  இது ஒரு வகையில் சைவத்திற்கு வெளியே வேதக் கலாச்சாரத்தை வைக்க மா. அரங்கநாதன் முயற்சித்துள்ளார் என்பது வரை யோசிக்கமுடிகிற வாய்ப்பைத் தருகிறது.

சைவத்திற்கு அடுத்த அளவில் பேசப்பட்டிருக்கும் நெறிகள் கெளமாரம் மற்றும் அம்மன் வழிபாடு.  தமிச்சமூகத்தின் ஆதிக்கடவுள் ஒரு இனக்குழுத் தலைவனான முருகன்.  முருகவழிபாடு இந்தச் சமூகத்தின் பழமைக்கு இன்னுமொரு சான்றாக விளங்குவது. வேதச் சாயலோ, பிராமணக் கலாச்சார பின்புலமோ இல்லாத கடவுள் என்றாலும் சைவத்தோடு கொண்டு சேர்த்ததும் நிகழவே செய்தது. கச்சிப்பேடு, செட்டி வளாகம் கதைகள் முருகவழிபாட்டை மையமாகக் கொண்டு கிட்டத்தட்ட முருகன் நிகழ்த்தும் அதிசயங்களின் கதைகளாக இருக்கின்றன.  அதுவும் கச்சிப்பேட்டு முருகன் ஒரு முக்கோண உறவின் இழப்பையும், ஏமாற்றத்தையும் ஆற்றுப்படுத்த வந்தவன். செட்டி வாளாகத்தில் மயில்வேறு முருகன்வேறாக இல்லாதுபோதல் விவாதிக்கப்படுகிறது.

மரங்கள், பறவைகள் வழிபாட்டோடு தொடர்புடையவையாகவும் இருக்கின்றன. “ரோபோ” கதையில் வேப்ப மரத்தடியிலும், நாகமரத்தடியிலும் அமைதியாக நின்ற தெய்வங்களைப் பேணுவோர் எத்தனை குடும்பங்களாக இருந்தனரோ அத்தனை மரத்தடி தெய்வங்களுமாக இருந்த இடங்களில் “திரிசூலம்” கதையின் டாக்டர். ஐராவதம், “மரங்களையெல்லாம் காணல்லே. நீலமலையில் கூட காணமுடியல்லே. இந்த மரங்களையெல்லாம் எங்கே? எங்கே போச்சு?” எனத் தேடுகிறார். தென்னை பல கதைகளில் பேசப்படுகிறது. பனை என்கிற தலைப்புடைய கதை பனைமரம் குறித்த பல்வேறு தோற்றங்களை நம்பிக்கைகளின் சாயல்களோடு குறியீடாக்குகிறது. மரங்கள் பல்லுயிர்க்கு மட்டுமின்றி பேய்களுக்கும் அவையே இருப்பிடம் (பாதைத் திருப்பத்தில் வேப்பமரம் நிற்பதால் மாலை நேரம் வந்துவிட்டால் ஆள் நடமாட்டமும் குறைவு (பக் 250)). மரங்களும், பறவைகளும் இல்லாமல் மனிதன் உயிர்வாழ்ந்ததில்லை (செட்டி வளாகம்) எனச் சொல்லும் தாத்தாவிடம் இக்காலம் மரங்களையும், பறவைகளும் நீங்கிய இடங்களில் கான்கிரீட்டுகளால் பதிலளிக்கும்.  மரபும் அதனோடு நீங்கும்.

     அனைத்தையும் சிவமாகவே பார்த்தல் என்பதே சைவத்தின் அடிநாதம் என்றால் ”உறவு” கதையில் “டீக்கடையை சந்தோசமாப் பாத்து அங்கேயிருக்க முடியலைன்னா இம்மலையை நான் ரொம்ப நிம்மதியாப் பாத்தது எல்லாம் உண்மையா இருக்க முடியுமா….இருக்கிற நாலு சுவத்தைப் பார்க்க முடியாதவன் கைலாசத்தையா சரியாப் பாக்க முடியும்” என முத்துக்கறுப்பனிடம் சொல்லும் பெரியவர் வழி மா. அரங்கநாதன் அதை சிறப்பாகவே சொல்லியிருக்கிறார். 

சாதியம்:

     பாரதியாரின் (பு.பி) “கோபாலய்யங்காரின் மனைவி” துவங்கி இன்றுவரையிலும் சமூகம் குறித்து எழுதுவதே தமிழில் சிறுகதை எழுதுபவர்களுக்கு பிரதானமாக சாதியம் குறித்து எழுதுதல்தான். ”முத்துக்கறுப்பன் எண்பது” தொகுப்பில் சாதிகுறித்த கதைகளில் சிறப்பானவையாக சுட்ட முடிபவை :
1.   அசலம்
2.   மண்டேலாவை நேசிக்கிறேன்
3.   மனத்துக்கண்
4.   பெருநகர்த்தடம்
5.   மீட்சி
6.   மூடு

ஆவுடையப்பர் கோயிலில் இராமனோடு நடக்கும் உரையாடல்
சைவமும், வைணவமும் சேரியில் இருத்தியிருக்கும் மக்களுக்கு நெடுங்காலமாகச் செய்ததென்ன என வினவுகிறது. அசலம் சாதிய அமைப்பில் தத்துவம் சக்தியற்றுப் போகும் இடத்தைப் பேசுகிறது.  “மூவாயிரம் வருசமா அன்பு ஒசந்ததுன்னு சொல்லிகிட்டு சொமை மொமைக்க பின்வாங்கினா நாகரிகம் என்னான்னு எனக்குத் தெரியலை” என்கிற இராமன் இருக்கும் இடத்திற்கு (வைணவம்) ஆவுடையப்பர் வருவதில்லை (சைவம்).  இருவரும் ஒரு நாளும் சேரிப்பக்கம் போனதில்லை.  தத்துவங்களும், சித்தாந்தங்களும் படித்தாலும் ஜே.கே புத்தகத்தில் மறைந்திருக்கும் செய்தித்தாள் துண்டில் அரிஜன சங்கத் தலைவரான தனது அப்பாவின் புகைப்படத்தைப் பார்த்ததும், அதற்கு முந்தின பத்தியில் “டியர், டேக் மீ டு பெட்” என்று சொல்லவும் தயாராகவிருந்த பெண், தன் மனத்தில் இன்னுமே சாதியம் ஒட்டியிருக்கிறதென்று மனத்துக்கண் மாசோடு வெளியேறுகிறாள்.
    
    ”மீட்சி”யில் சிவானாண்டி படும் அவமானம் தாங்காமல் கிராமத்திலிருந்து வெளியேறும் முத்துக்கறுப்பன் “மனத்துக்கண்” கதையில் அவரது மகனுடைய தத்துவப் புத்தகத்தில் செய்தித்தாள் புகைப்படமாக மாறியிருப்பது மா. அரங்கநாதன் கதைகளின் விசேசங்களில் ஒன்று.  ஒரு சிந்தனையின், அமைப்பின் தொடர்ச்சியை பல கதைகளுக்கு ஊடாக இழையவிடுவதின் மூலம் நாவல் வாசிக்கும் அனுபவத்தை சிறுகதை தொகுப்பில் ஏற்படுத்திவிடுகிறார்.

சாதி பிறழ்தல் என்பது கிராமத்திலிருந்து, குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறியவர்களுக்கு நேர்கிறது.  பெருநகர்த்தடத்து முத்துக்கறுப்பன் பிள்ளையாக இருந்தாலும் கைவண்டி இழுப்பவனாக, அதன் அடியிலேயே இரவைக் கழித்து கிட்டத்தட்ட தெருவாழ்க்கை வாழ்பவனாகிறான்.  அவன் மணம் செய்த பெண்ணிடம் முப்பது வருடங்கள் என்ன சாதியெனக் கேட்காமலேயே வாழ்ந்து மறைகிறான். அவன் தெரிந்துகொள்ள விரும்பாத போதே அவள் எப்படிப்பட்ட சாதியென்று தெரிந்துவிடுகிறது. பரமசிவம் பிள்ளை முத்துக்கறுப்பனை சூலத்தில் தள்ளிவிடுகிறார். அவருடைய பேரன் தாத்தாவைத் தேடி வருகையில் பரமசிவத்தின் அம்மா உடைக்கும் இரகசியத்தின் ஊடாக ஊரை விட்டு வெளியேறின முத்துக்கறுப்பனின் தந்தை பார்பராகிறார் (கதை: மூடு).

திராவிட இயக்க அரசியல் சித்தாந்தமான சாதி ஒழிப்பை விடுத்து (ஒரு வகையில் சித்தர்களிடமிருந்தும்) காந்தி, பாரதி போன்றோர் சாதி வேற்றுமைகள் நீங்கிய ஒரு அமைப்பை தங்கள் மதத்திற்குள்ளாக உருவாக்க முனைந்தனர். மா. அரங்கநாதனின் கதைகளிலும் இவர்களின் கருத்தியல் போக்கே சாதியம் குறித்த கேள்விக்கு விடையாகக் கிடைக்கிறது எனலாம். மேலும் சேரிவாழ் மக்களின் மீதான “அன்பே” அதற்கான பதிலாகவும், அவர்மீது அன்பைச் செலுத்துவதே ஏற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பெனவும் வலியுறுத்துவதாக கதைகளின் வழி அறிய முடியும்.

எலி மற்றும் ஓர் இறங்கற் கூட்டம் கதைகளில் திருவல்லிக்கேணி பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஒட்டி நிகழும் இந்துக்கள் மற்றும் முகம்மதியர்களுக்கு இடையிலான பதட்டம் பேசப்பட்டிருக்கும். அதிலும் குறிப்பாக எலி என்கிற கதையில் ஓய்வு பெற்றவர் வீட்டு எலியாக விரியும் சிந்தனைகள் வன்முறை குறித்த புரிதலை திருவல்லிக்கேணியில் அடையும். தமிழ்ச்சமூகத்தின் மதக்கலவரங்கள் குறித்து மறைவாக எழுதப்பட்ட வரிகள் இவை. மா. அரங்கநாதன் கதைகளில் வெளிப்படுத்தும் அர்த்தங்களை விடவும் அவற்றின் உள்ளே ஒளித்துவைக்கும் விசயங்களில் வெளிப்படையான அர்த்தங்களுக்கு வேறொரு காட்சிக்கோணத்தை உண்டாக்கிவிடுகிறார்.  இதுகாறும் வலியுறுத்தப்பட்ட சிறுகதை இலக்கணத்திற்கு ஒட்டியே இவை அமைகின்றன.

சினிமா:
     தமிழ்ச்சமூகம் தொழில்மயமாவதற்கு முன்பே சினிமாமயமாகிவிட்டது. மா. அரங்கநாதனின் முத்துக் கறுப்பன் – அதுவும் தமிழ்த் திரைப்படங்கள் அல்லாமல் ஹாலிவுட் மற்றும் பெர்க்மன் போன்றவர்களின் படங்களால் ஈர்க்கப்பட்டவன்.

      அலுப்பு, மீதி ஆகிய கதைகள் சினிமாப் பார்த்தலை தப்பித்தலுக்கு உரிய விசயமாகப் பேசுவதோடு கதையின் காலத்தைக் குறிக்கவும் சினிமாவைப் பயன்படுத்துகிறார் மா. அரங்கநாதன் (வீடுபேறு).  சினிமாக் கதாபாத்திரங்கள், கதைகள், அவற்றின் போக்குகளின் வழி சமூகத்தில் உருவாக்கப்படும் அற மதிப்பீடுகள் குறித்து ஆழமாகப் பேசும் கதை ”மாறுதல்”.  முத்துக்கறுப்பனுக்கு சீட்டாட்டமும், குடிப்பழக்கமும் இல்லை அவன் பெற்றோரைக் காத்தல், பெரியோரை மதித்தல் போன்ற விழுமியங்களை சினிமாவிலிருந்தே உருவாக்கிக் கொள்கிறான். கல்வி பெறமுடியாதவர்களிடையே புத்தகங்கள் உருவாக்க முடியாத அறவுணர்ச்சிகளை, மதிப்பீடுகளை சினிமா உருவாக்கி விடுகிறது என்பதற்கு இக்கதை உதாரணம். 

     மர்லின் மன்றோ, கிர்கோரி பெக் போன்ற ஹாலிவுட் நடிகர்களும், பெர்க்மன் போன்ற இயக்குநர்களும் முத்துக்கறுப்பன்கள் மற்றும் பிறரின் சினிமாப் பார்த்தலை வடிவமைத்ததால் தமிழ்த்திரைப்படங்கள் குறித்த குறிப்புகள் ரஞ்சனோடும், பிறிதொரு கதையில் நடனமங்கையின் பின்பக்கத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் அரசனைக் குறித்த விமர்சனத்தோடும் தமிழ் சினிமாவை நிராகரிக்கிற தொனியில் தெரிகின்றன.

     கோவிலோடு தவிர்க்கமுடியாமல் ஆகிவிட்ட சினிமாவும் தமிழ்ச்சமூகத்தில் பெரும் ஆதிக்கத்தை செலுத்துகிறது. மா. அரங்கநாதன் அவரது கதைகளில் சினிமாவின் தாக்கத்தை தனித்துப் பேச வேண்டிய அளவில் எழுதிச்செல்கிறார்.

மேலும் சில கதைகள்:

     எண்பது கதைகளில் சிறுவர்கள் எவற்றில் எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கே இருக்கும் இடத்தை விட்டு, குடும்பங்களை விட்டு ஓடிப் போய்விடுகின்றனர். தொலைவிலுணர்தல், மீட்சி, பெருநகர்த்தடம் போன்ற கதைகளில் வெளியேறும் சிறுவர்கள் வழியாக கதைகள் நகர்கின்றன.  வீட்டையும், குடும்பத்தையும் நீங்கும் சிறுவர்கள் பலகதைகளில் எழுதப்பட்டுள்ளது மா. அரங்கநாதன் கதைகளுக்கே உரிய Attributeகளில் ஒன்று. இடம் நீங்குதல் இங்கும் தனியாகக் குறிப்பிட வேண்டியதாகிறது.  சிறுவர்களின் உலகம் குறைவாகவே விவரிக்கப்பட்டிருந்தாலும் “மீட்சி” கதையின் ஆற்று வெள்ளத்தைக் கூட பார்க்க வரமால் போன சிறுவர்களைக் குறித்து பேசும்போது அவர்களது இயங்கு வெளி குறித்த அபாரமான சித்தரம் கிடைத்துவிடுகிறது.
  
     மகத்தான ஜலதாரை இனக்குழு சமூகம், அதன் தலைமை உருவாக்கம் ஆகிய வாசிப்புகளுக்கான சாத்தியத்தை உருவாக்கித் தருகிறது.  முதற்தீ எரிந்த காட்டில் வழிபாட்டு முறைகள் உருவானவிதம் குறித்து (பக். 222) பேசப்படுவதோடு முதற்சொன்ன கதையையும் இணைத்து வாசிக்க புது அர்த்தங்கள் தென்படும்.

     சித்தி, மைலாப்பூர் ஆகியவை பிடிபட சிரமமாகத் தெரிந்தாலும் கதைகள் என்ற அளவில் பலவேறு அர்த்தங்களைச் சாத்தியப்படுத்தும் வடிவத்தையும், பொருளையும் கொண்டவை.  மோனலிசாவும் கருப்புக்குட்டியும், ஜேம்ஸ்டீனும், செண்பகராமன் புதூர்க்காரரும் ஆகிய கதைகளும் விரிவாகப் பேசுவதற்கானவை.  தாயிழந்த சிறுமியையும், அவளது தாத்தா பாட்டியைப் பேசும் ”முன்றில்” இழப்பின் துயரத்தை அதன் இருட்தன்மையோடு வாசிப்பவர்களுக்கு கடத்துகிறது.

     பெண்கள் அம்மாக்களாகவே பெரும்பாலான கதைகளில் வருகின்றனர். சிவகாமியின் சரிதத்தில் வரும் பெண் மனோன்மணியத்தின், “எவர்தாம் முன் அணைந்தாரென இதுகாறும் அறியோம்” என்கிற வரிகளை தனக்குப் பிடித்தமான பகுதியெனச் சொல்வது முத்துக்கறுப்பனின் வாழ்வையே மாற்றிவிடுகிறது.

           எண்பது கதைகளில் வெவ்வேறு பருவத்தில் வேறுவேறு முத்துக்கறுப்பன்கள் தெரிந்தாலும் தொகுப்பாக வாசிக்கையில் கதைகள் பேசும் பொருள்களுக்கு இடையே இருக்கும் தொடர்ச்சியால் எண்பது முத்துக்கறுப்பன்களும் ஒருவர்தான் எனத் தோன்றச் செய்கிறது. இவ்வகையில் தத்துவத்தின் வழி வாழ்வையும், மனத்தையும் நுணிகிப் பார்த்த மா.அரங்கநாதன் தமிழ்ச்சிறுகதை வாசகர்களுக்கு அளிக்கும் பிரதியியல் உலகம் ஒருவகையில் பெருநெறியொன்றின் கூர்ந்து கவனிக்கத்தக்க சித்திரங்கள்.  


தமிழ்ச்சமூகத்தின் சைவநெறி ஒழுங்கு + சாதிப்பிரிவினை மறுகட்டமைப்பு – திராவிட இயக்க இலட்சியவாதம் + அயல் சினிமா என மா.அரங்கநாதனின் கதைகளைக் குறித்த சமன்பாட்டை உருவாக்கிவிட முடியும் என நம்பத்தோன்றுகிறது. 

Monday, May 6, 2013

பின்-நவீனத்துவம் (குறிப்புகளின் தொகுப்பு)சார்லஸ் ஜென்க்ஸ் (Charles Jencks): பின்–நவீனத்துவத்தின் 10 குணாம்சங்கள்
1.   பன்மைத்துவம்
2.   இணக்கமற்ற இணக்கம் அல்லது இசைவற்ற இசைவு (disharmonious harmony), மாறுபடுகிற அழகியல், எதிர்நிலைகள், புதிர்த்தன்மை
3.   பெருநகர வாழ்வுப் பண்புகள்
4.   பொருட்களுக்கு மனிதப் பண்புகளை உருவாக்குதல் (anthropomorphic)
5.   நிகழ்காலம் கடந்தகாலத்தின் இடையிலான உறவை தோற்றப்படுத்துதல் (Display)
6.   மோஸ்தர்களின் முரண்பாடுகள் வழியாக இரட்டை-சங்கேதம் (Double-Code)
7.   பொருள்(Meaning), பொருளை நிலைநிறுத்துவதற்கான ஆழ்ந்த விருப்பம்
8.   ஒரே நேரத்தில் பல்லர்த்தங்கள் பலதோற்றங்கள் பல்மதிப்பீடுகள் (Multivalent)
9.   பாரம்பரியத்தை நகைமுரணாக மறுவியாக்கியானித்தல் (Reinterpret)
10. இல்லாத மையத்திற்கு திரும்புதலுக்கான ஆழ்ந்த விருப்பம்

பின்-நவீனத்துவம் என்றால்?

லியோடார்ட்:
பெருங்கதையாடல்கள் குறித்த அவநம்பிக்கை, சந்தேகம் (Sceptic to the grand narratives)

ஜேம்ஸன்:
பின்னை-முதலீட்டியத்தின் (Late Capitalism) புதிய, குழப்பமூட்டுகிற மேடுபள்ளங்களைக் குறித்த எல்லைக்கோடுகளின் வரைபட உருவாக்கத்தோடு உட்படுத்திக்கொள்வது.

பூத்ரியார்:
நம்மால் செயலற்று சரணடைய மட்டுமே முடிகிற நுகர்விய அதியதார்த்த (Consumerist Hyperreal) ஊடகப்பரப்பில் அல்லது உளப்பரப்பெங்கும் நிகழ்கிற அல்ட்ரா-தொழில்நுட்ப பிம்பங்களின் பெருக்கம்.
சைபர்பங்க்:
பன்னாட்டு நிறுவனங்களாலும் அவற்றின் தரவுகளாலும் அதிகாரம் செலுத்தப்படுகிற உலகம்.
சார்லஸ் ஜென்க்ஸ்:
நவீனத்துவத்துவம் + வேறுசில(வற்றைக்) குறித்த கலைவெளிப்பாட்டு பிரதிநித்துவத்தை உட்படுத்தும் இரட்டை-சங்கேதம்.
உம்பர்த்தோ ஈகோ:
முற்றிலும் அழிக்கபட முடியாத கடந்தகாலத்தை, அப்படி அழிக்கப்பட்டால் அது மெளனத்திற்கு வழிநடத்தும் என்பதால், குற்றங்குறை சொல்லாமல் அணுகுவதற்கு பதிலாக நகைமுரணாக மீள்பார்வையிடுதலை உள்ளடக்கிய பின்-நவீனத்துவத்தின் நவீனத்துவத்திற்கான பதில்
பின்–நவீனத்துவத்தின் கருதுகோள்கள்:
1.   சுருங்கிக் கொண்டிருக்கும் உலகம்
2.   ஆதிக்கம் செலுத்துகிற ஒற்றை உலகப்பார்வையின்மை
3.   ஆளும் பன்மைத்துவம் (Pluralism rules)
4.   ஒரே கலாச்சாரத்தில் முழங்கைகளை தேய்த்துக் கொள்ளும் பாரம்பரிய, நவீனத்துவ, பின்-நவீனத்துவ மனப்போக்குகள்
பின்-நவீனத்துவ பங்களிப்பாளர்கள்:
1.   இஹாப் ஹசன்
2.   லியோடார்ட்
3.   சார்லஸ் ஜென்க்ஸ்
4.   பூத்ரியார்
5.   டெல்யூஸ்-கட்டாரி
6.   தெரிதா
7.   ஃபூக்கோ
8.   ஜேம்ஸன்
9.   பாலசுப்ரமணியன் பொன்ராஜ் J
10. டேவிட் ஹார்வி
Saturday, March 16, 2013
                     எளியோர் இட்ட அமுதம் : அஞ்ஞாடி
                                                
     வரலாற்று நீக்கம் அறிவுப் புலத்திலும், வாழ்வியல் தளத்திலும் நிகழத்துவங்கி குறைந்தபடசம் 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. பொருட்களின் பெருக்கத்தை நுகர்வு தீர்க்க முனைய, வரலாறு விரல் இடுக்கின் வழி தீர்ந்து போய்விட்ட புகைச்சுருளென மறைந்து போய்விட்டது. வரலாற்றாசிரியன் நெடுங்காலங்களில் விருப்புள்ளவனாய் இருக்க நுகர்வும் தொழில்நுட்பமும் உருவாக்கிய சமூகம் உடனடி விடுதலையை iPhone திரைகளில் தெறித்து மறையும் எலெக்ட்ரானிக் லிபிகளில், பிம்பங்களில் அடைகிறது. துப்பறியும் கதைகளுக்கு இணையாகவே சுவாரசிய எழுத்து வரலாற்றைப் பிரதியாக்கியதின் மீதும் சலிப்பு மீந்திருக்கிறது.  வரலாற்றாசிரியர்கள் அதிகாரத்தின் பணித்தலுக்குட்பட்டு அதன் மொழியிலேயே நிறுவனங்கள், பாடப்புத்தகங்களில் கட்டமைத்துவிட்டதின் சொல்லப்படாத மீதம் அல்லது எதிர் மீதம் சமூகத்தின் ஒவ்வொரு பரணிலும் ஏடென ஒளிந்திருக்கிறது.

     வரலாற்றுப் பிரதிகளை தீவிர இலக்கிய ஆசிரியர்கள் அந்த ஏடுகளில் தேர்ந்து எழுதிப்பார்க்கும் காலம்.  வரலாற்றை வீரசாகசங்களின் அரங்காக மாற்றி வைத்திருந்த இடத்திலிருந்து தீவிர இலக்கிய ஆசிரியன் அதனை வெளியே அழைத்து வந்துவிட்டான்.  அந்த அரங்குகளில் மல்லுக்கட்டுவதெல்லாம் நேற்றின் குப்பைகளின் கிழிந்து பறக்கும் பக்கங்கள். அதன் பக்கங்களில் ஒட்டியிருந்த மை கரைந்து எழும் துர்நாற்றத்திலிருந்து வரலாற்றை மீட்டெடுத்து பின்னெழுந்த கோட்பாடுகள், அரசியல் கருத்தாக்கங்களின் அடிப்படைகளைக் கொண்டு எழுதிப்பார்த்தல், நாவல் பிரதிகளில் புனைவை வைத்து வரலாறேன்பதே அதிகாரத்தின் புனைவாகவும் இருக்கலாம் என்கிற வாசிப்பை விரிவாக வழங்குகிற பிரதிகள் தேர்ந்த வடிவமைப்பில் வெளிவரும் காலத்தில் அஞ்ஞாடி நாவலும் ஒரு பிரதி. 

     தூரமும், இயக்கமும் உருவாக்கும் “நிலத்தில்” இடம்பெயர்தல் தவிர்க்க முடியாததாக ஆகும்போது அதன் கூறுகள் பண்பாட்டு நடவடிக்கைகளாக மாறிவிடுகின்றன. எடுத்துச் செல்ல முடியாத நிலம்தான் பண்பாட்டில் பிரதிபலிக்கிறது.   அஞ்ஞாடி நாவலின் நிலம் அதனோடு பிணைந்து நிற்கும் இயற்கையின் பண்புகள், சமூக படிஅடுக்குகள் காலனியாதிக்கக் காலத்தின் நிறுவனங்கள், நடவடிக்கைகளோடு விரிந்து யதார்த்தவாத மொழியில் துலங்குகிறது.

     வரலாற்றின் தேவை அதன் மீள வாசித்தலிலும் உள்ளது. அதிகாரம்  அறிவியலைக் கொண்டோ, தத்துவத்தைக் கொண்டோ நிறுவ முடியாததை வரலாற்றால் நிறுவுகிறது. மறு உற்பத்தியில் அனைத்துமே நகல்களாக மாறும்போது வரலாற்றை இலக்கியபூர்வமாக அணுகும் பிரதிகளின் இடம்மாறி நின்று வெறொன்றாக அறியும் பார்வையால் வரலாறு கட்டமைக்கும் உண்மையென்பதே கூட நகல்களால் உற்பத்தி செய்யப்படும் பொதுமையாக இருக்கலாம் என்கின்றன. வரலாற்றை எழுதும் பிரதிகளின் பொதுமையாகவும் இதுவே உள்ளது. 

     நாவல், மொழியாலான உருக்கள் காலத்தினூடாக நகர்ந்து பிரதியுனுள்ளாக உலவிடும் மியூசியம்.  அஞ்ஞாடி மியூசியத்தின் படிகளாக மொழியும், அதன் நுட்பங்களும், மனித வாழ்வு இயங்கும் நிலமும், இயற்கையோடும் அவர்களுக்குள்ளும் நிகழ்த்தும் போராட்டங்களும், அரசு நிறுவனங்களாக அமைந்து உள்ளே அழைத்துச் செல்கின்றன.

     மியூசியம்=அருங்காட்சியகம் -> அரும் = பழமை, அரிதான, “காட்சி” = பார்வையிடலுக்கானது, கட்புலன் தொடர்புடைய “அகம்”=கட்டிடம், இடம் (குறிப்பாக மூடுண்ட).


     மியூசியங்கள் கலாச்சார, அறிவியல், துறைசார், முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை காட்சிப்படுத்துவதன் மூலம் மனிதக் கூட்டத்தின் நகர்வின் முக்கிய அம்சங்களை, அழிந்து போனவையின் மாதிரிகளை அல்லது அதன்  மிச்சங்களை நினைவூட்டலுக்காக ஓரிடத்தில் தொகுத்து வைக்கப்படுபவை. மரணத்திற்கு பின்பு மட்டுமல்ல பிறப்பிற்கு முன்பும் இருப்பு இருக்கவேண்டிய தேவை மனிதனுக்கு. பிறப்பிற்கு முன்பிருக்கும் இருப்பே வரலாறாக கிடக்கிறது.  தனிமனிதன் தனக்கு முன்பு வாழ்ந்து கடந்து போனவர்களோடு தொடர்பு கொள்ள வரலாறும் ஒரு வழி.  மியூசியம் “புதையல் வேட்டை” விளையாடுகிறவர்களுக்கு வழியில் கிடைக்கும் குறிப்புகளாக வரலாற்ற அறிதலுக்கு பொருட்களை காட்சிப்படுத்தி துணை செய்கின்றது.

     தொழிநுட்ப உச்சங்கள் நேர்ந்து மெய்நிகர் உலகெனும் இணைஉலகு வரை வந்து விட்ட நூற்றாண்டில் உடல் முதலாக அனைத்துமே உபரியாகக் கிடைக்கின்றன.  அஞ்ஞாடி நாவலின் காலம் ”அரிதான”வைகளால் நிரம்பியது.  கலிங்கலில் இருந்து ஆண்டியும், கருப்பியும் திருவண்ணாமலை செல்வதே வாழ்நாள் நிகழ்வுகளில் ஒன்று.  அரிசி உணவே கூட அரிதானது.  அனைத்தும் அரிதாக இருக்கையில் சேகரித்தல் என்பது முக்கியமானதாகி விடுகிறது.  அதனால் தான் மண்டையிடிக்கு சரியான வைத்தியம் மாரியிடம் “சேகாரமாயிருந்தது”.  வாழ்வதே இப்படி நிலம், விவசாயம், மருத்துவ வழிமுறைகளை சேகரித்து அறிதல்.  இயற்கையோடு போராடுவதற்கே (நாவலில் விவரிக்கப்படும் தாது வருடப் பஞ்சம்) வாழ்நாள் முழுக்கப் போய்விடுகிறது. அஞ்ஞாடி இம்மாதிரி அரிதானவைகளைச் சேகரித்து மியூசியமாக்கியிருக்கிறது. ஸ்கிரீன் மற்றும் மானிட்டர்களில்  அசைவுறும் உலகினைத் தாண்டிச்சென்று பார்க்கிற பயணம் அஞ்ஞாடியை வாசிப்பது. ஒருவகையில் இயல் உலகோடு தொடர்பை புதிப்பித்துக் கொள்ளுதல்.  இயலுலகின் அரசியல் தேவைகளுக்கான பிரதியியல் நியாயங்களை யாதார்த்தவாத மொழியில் திரும்ப வழங்குதல்.        
                
                           2
     அஞ்ஞாடி நாவலில் இரு அடுக்குகள் உண்டு.  ஒன்று கலிங்கலில் படர்ந்து கிராமியச் சமூகத்தின் வாழ்வை, சேகாரங்களைப் பேசுவது மற்றொன்று சிவகாசியில் படர்ந்து சாதியத்தின் தோற்றுவாய் (காளியின் 5 பிள்ளைகள் திணைகளாதல்) முதலாக அதன் இயக்கம் (dynamics) வரையிலும் பல தளங்களில் விவாதிப்பது. அதிகார அமைப்புகளில் மிகப் பழையதும், தொடர்ந்து வீரியமாக இருப்பதுமான சாதியம்தான் அஞ்ஞாடியின் Kernel.  .  சாதியம் உடலை எப்படி கட்டுப்படுத்துகிறது, (வேலம்மாவிடம் ஆண்டாள் சொல்வாள், “ஒன்னப் போல் ஒரு சாதியில பொறந்திருந்தா ஊரறிய இனியொரு மனுசனத் தொண தேடிகிட்டு ஒரு ஆம்பளப் புள்ளையப் பெத்துக்கிட்டு நிம்மதியா இருக்கலாமே……பாழாப்போன ஒடம்பு பாடாப் படுத்துதேடி…..…ஆண்டாளின் மருமகன் சாணி சகதியுடன் அள்ளிப்போடும் கழிவாய் கழியும் அவளது வாதை), பொதுவெளியை சாதிவாரியாக பங்கிட்டுக் கொடுக்கிறது (கோயில், தெருக்கள் உட்பட உதா. திருவண்ணாமலை, சிவகாசி கோயில் பகுதிகள்).  ஒன்றில் சுதந்திரமாக இயங்கும் உடல் இன்னொரு வெளியில் ஒடுக்கப்படுகிறது.

     இவ்விரு அடுக்களும் நேர்த்தியாக அடுக்கப்பட்டு இரு வாசிப்பிற்கான சாத்தியங்களைத் தருகிறது. கலிங்கலில் ஊற்றெடுப்பது இலக்கியப் பிரதியாகவும், சிவகாசியில் உதிரமாக வழிவது வரலாற்றின் பிரதியாகவும் பிரிகிறது.

     இலக்கியப் பிரதியில் ”நிலத்தை” அதன் எண்ணற்ற உள்ளிருப்புகளோடு வழங்கும் பூமணி, தொழில்நுட்பம் கழித்துவிட்ட ஒரு நூற்றாண்டை கண் முன்னே மறுபார்வைக்கு விரிக்கிறார்.

     பேறுகாலத்தில் பயன்படுத்த விளக்கெண்ணை தயாரிப்பது முதலாக (பக்.933), உடல்நலிவுறும் மாரியைத் தேற்ற தேடித்தரும் உணவுகள் (மந்தி, பழந்தின்னி வெளவால், புறாக்கறி, முள்ளெலி, உடும்பு), செட்டியார் மூலத்திற்கு செய்யும் மருத்துவம் (மூலத்தை வாயில் கவ்வி இழுப்பது – நாவல் பிரதியிலிருந்து மேலெழுந்து வரும் உச்சங்களில் ஒன்று) ஒரு மருத்துவக் களஞ்சியத்தின் அளவிற்கு ஒப்பானது. மாத்திரைகளின் உபரியான காலத்தில் நம்ப முடியாதவையாக மாறிவிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளின் விரிவை அஞ்ஞாடி நாவலில் பார்க்க முடியும்.

     கருப்பியிடம் தானியம் வாங்கிப் போக வரும் பொலிப்பாட்டுக்காரன், தம்பட்டக் காளைக்காரன், தப்புக்காரன், பீதாம்பர வித்தைகாரன், காலவைரவன், நாழிமணிக்காரர்கள் (பக். 360), மேலும் ராஜாக்கள், அமைச்சர்கள், திவான்கள், மாஜிஸ்ட்ரேட்கள், துரைமார், சூப்பரிண்டுகள், கான்ஸ்டபிள்கள் என நாவலில் உலவும் உருக்கள் இயல் சமூகத்தை பிரதியில் உருவாக்கிக் காட்டுகிறார்கள்.

     விவசாய வேலைகளின் நுட்பங்கள், ”மேழிமூட்டில் சுள்ளாணி குச்சைப் பிடுங்கி ஓட்டை வழியாக நிலத்தை நேர்பார்ப்பதிலிருந்து” (பக். 878) அடுக்கடுக்காக விவரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. விவசாய வேலைகளுக்கு உதவும் கரிச்சான் முதலாக பறவைகளை விவரித்தல் (கல்பொறுக்கி, வானம்பாடி, ஊமாங்காடை, கழலைக் குருவிகள், கரிச்சான் – பக். 925-26) இப்படி முடியும் : கோழியை விட குருவிதான் சரியான நேரத்திற்கு உசுப்பிவிடும். ஆண்பன்றியை சலவன் எனவும் பெண்பன்றியை மட்டம் எனப் பிரித்து திரண்ட பீசம் அருத்து அடுப்புச் சாம்பல் தடவி கருவ முள்ளால் குத்தி விடுதல், மட்டம் ஈன்றபின் கறிக்கு உதவாது போகுமென்பதால் மந்தையில் மேய விடாமல் வளர்த்தல் போன்ற நுட்பங்களின் தொகுப்பாக நாவலில் வாசிப்பிற்கு இடைஞ்சல் இல்லாமல் பட்டியலாகின்றன.  அங்கே பட்டியல் தெரிவதில்லை. அதுவே அஞ்ஞாடியின் வசீகரமாக இருக்கிறது.  The infinity of Listகளின் (Umberto Eco) காலத்தில் பட்டியலின்றி ஒரு பிரதியை எழுதுவதே ஆசிரியனின் சவாலாக இருக்கிறது.

     இயல் உலகை அவதானித்தல், பிரதியில் ஆவணமாக்குதல் மேலும் அதனை கலையாக்குதல் மூன்றும் ஆசிரியனுக்கான சவால்.

     நாவலில் இருவிதமான வர்ணனைகளைக் காணமுடியும். Descriptive narration மற்றும் Epical narration. Descriptive narration என்பதற்கு ஆண்டி, மாரியிலிருந்து, கோயிந்தன் சாமியார் வரையிலுமான கருப்பி வயிற்று “பிள்ளைத்துத்தியாக” பெருகும் பன்னிருந்த வாழ்வுகளை விவரிப்பதென கொள்ளலாம்.                            

     நாவல் முழுதும் வன்முறையை கலையாக்கும் சாத்தியத்தியமும் இந்த Descriptive narrationஆல் நிகழ்கிறது.  பனைமரத்தில் அண்ணனும் தம்பியும் வெட்டிக் கொண்டு “சாவுத் துடிப்பில் மணல் சிதற” (பக். 174) ஓய்வதில் வெளிப்படும் வன்முறையை விவரித்தல், தாதுவருட பஞ்சத்தை விவரிக்கும் பகுதிகளில் விரிந்து, சிவகாசி கலவரத்தை விவரிப்பதில் உச்சத்தை அடைகிறது.  இதில் தாதுவருடப் பஞ்சம் மற்றும் சிவகாசி கலவரத்தின் வன்முறையை விவரித்தலை ஒரு Grand Narration எனலாம்.  தாதுவருடப் பஞ்சகாலத்தில் கிணறு வெட்டப்போகும் ஊர்க்குடும்பன் வேட்டில் சிக்கி உடல் சிதறி கிணற்றூசியில் தொங்கும் ஒரு குடலாக மிஞ்சுவான்.(பக்.230).  பஞ்சத்தின் வன்முறையை பூமணி இதைவிட சிறப்பாகச் சொல்லியிருக்க முடியாது.  வன்முறையை விவரித்தலில் ஒரு குடல் கண்முன்னே தொங்கிக் கொண்டேயிருக்கிறது நாவல் முழுதும்.

     கொள்ளையன் கருத்தையன் கிணற்றில் குளிப்பதைப் பார்த்து வீரம்மா கிறங்கி அவனை மணமுடிக்க, பிள்ளையற்றவன் கன்னியில் பேயாகி கோடாங்கி கேட்கும் கேள்விக்கு பதிலாக கொல்லப்பட்டதைச் சொல்லும் பகுதி ஒரு இதிகாச வர்ணனைக்கு நிகரானது (9999epical narration). அஞ்ஞாடி நாவலில் கலை வெளிப்படும் பகுதி இதுதான்.  ஒரு இதிகாசத்திற்கு உரித்தான அலங்காரங்கள்  நிரம்பிய பகுதி.  நம்பமுடியாத காதல், சாகச வாழ்க்கை அதன் ஒழுங்கு மற்றும் துயரார்ந்த முடிவு. இதனாலேயே ஒரு குறுந்தெய்வமாக மாறுதல். தொன்மங்கள் உருவாக மூலகாரணங்களாக விளங்கும் காரணிகள் அனைத்தும் பொருந்திப் போவதால் அப்படி அழைக்க முடிகிறது. 

     பூமணி மேற்சொன்ன மூன்று சவால்களையும் சரியாக எதிர்கொள்கிறார்.

     மொழிதான் புனைவின் சாத்தியங்களை விரிவாக்குவது.  மொழி படியாத புனைவு அட்டைகத்தியின் கூராக நின்றுவிடுகிறது. அஞ்ஞாடி நாவலின் இலக்கிய அடுக்கு வட்டார வழக்கின் வழமையால் ததும்புகிறது. வட்டார வழக்கே கூட நிறுவனங்கள் (பாடப்புத்தகங்கள் உட்பட) தாங்கிப் பிடிக்கும் மொழிக்கு இணையாக மக்கள் வழங்கும் பங்களிப்பாகவும் ஏடுகள் மறுத்தவொன்றாகவும் இருக்கையில் இயல்பாகவே இலக்கிய ஆசிரியன் அதனை மெருகூட்டி ஜொலிக்க வைக்கிறான்.  வட்டார வழக்கை ஏட்டு மொழி நாகரிகம் வென்றுவிட்ட காலத்தில் மீளக் கூறுதலின் வழி ஏட்டு மொழி உருவாக்கிய இடைவெளிகளில் ஆங்கிலத்தையும் சரிவரக் கலக்கத் தெரியாத தலைமுறைக்கு தன் பங்களிப்பாக பிரதியில் வழங்குகிறார் தருகிறார் பூமணி.  மொழியின் சாத்தியங்களை கவிதை விரிவாக்குகிறது என்றால் புனைவு அதற்கான அடிப்படைகளை உருவாக்கிறது.  ஆனாலும் கவிதையுமே கூட செவ்வியல் பிரதிகள் உருவாக்கிய மொழியில் எழுதப்படும்போது வட்டார வழக்கின்மூலம் மொழியின் செழுமைகளைக் காப்பாற்றித் தரும் பொறுப்பு யதார்த்தவாthaத்தின் இன்னுமே தொடரும் பங்களிப்பாக இருக்கிறது.  

     19ம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில் தென் தமிழகம் பல்வேறு சமூக மாற்றங்கள் நிகழுமிடமாக இருந்திருக்கிறது.  குறிப்பாக சாணார் எனும் நாடார் சமூகத்தின் எழுச்சி. பனை வாழ்வளித்த சமூகம். விளைவித்தல்ல, விளைந்து நிற்பதை ஒழுங்குபடுத்தி பெருகிய சமூகம். திருவிதாங்கூர் ஒடுக்கி பனையால் எழும்பி நகரங்களை உருவாக்கிய சமூகம் (சிவகாசி, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி பெருநகராகுதல், விருதுப்பட்டி விருதுநகரானது). நாவலின் மையமாக விளங்கும் சிவகாசி கலவரம் இதுவரையிலும் தமிழ் வரலாற்றுப் புலத்தில் புனைவாகவோ, அ-புனைவாகவோ பேசப்பட்டதில்லை. 
  
     வரலாற்றை மீட்டத்தருதல் அரசியல் தொடர்புடையது. வெளிப்படுத்தப்படாத வரலாற்றை பூமணி அஞ்ஞாடியின் வழி வெளிச்சத்திற்கும் வாசிப்பிற்கும் கொண்டு வருகிறார். அதன் மூலம் அவர் முன்வைக்கும் அரசியல் சாதிய அதிகாரத்தையும் அதனுள் ஒளிந்திருக்கும் வன்முறையையும் தோற்றப்படுத்துதல். 

     சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுபட நாடார்கள் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் (விதவைகளுக்கு மறுதிருமணம் மறுத்தல், அசைவத்தை தவிர்த்தல் போன்ற மேல்நிலையாக்க முயற்சிகள் உட்பட) அந்நிலப் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தும் சாதியினர் (தேவர் மற்றும் இதர சாதியினர்) எதிர்நடவடிக்கைகள் மூலம் தடுத்துக் கொண்டே இருந்திருக்கின்றனர்.  காலனிய நீதிமன்றக் கூடாரங்களில் வழக்குப் போடுதல், மதம் மாறுதல், தெருவில் போராடுதல் உட்பட அனைத்து முயற்சிகளையும் ஆதிக்கம் செலுத்த முனையும் சமூகங்கள் ஒடுக்கவே பார்க்கின்றன. அந்தப் பிரதேசம் முழுக்க சிவகாசியில் துவங்கி தென்காசி வரை தொடர் கொள்ளைகளாலும், கொலைகளாலும் சாதிய ஆதிக்க உணர்வுகள் செயலாற்றியிருக்கின்றன.  கிட்டத்தட்ட Crusaderகள் ஜெருசலேம் வரையிலும் புரிந்தவற்றிற்கு ஒப்பானது இது.  போப் திரட்டிய Crusaderகளின் படைகள் சிலுவைகளை வாட்களாக மாற்றி நடந்த நிலத்தின் உதிரக் கோடுகள் சிவகாசி சாதிச் சண்டைக்கு ஏறக்குறைய இணையாக வேறொரு நிலத்தின் வரலாற்றில் முன்பிருப்பவை. சிவகாசிச் சண்டைக்கு எந்தப் போப்பும் தேவையில்லாததே இந்த நிலத்தின் விசித்தரக் கூறு. நாய்க்கன், வெள்ளாளன், செட்டி, பணிக்கன், அம்பட்டையன், கொறவர்கள் (பக்.745) Crusaderகளாக உதிரக்கோடுகள் கிழிக்கின்றனர்.  நாட்குறித்த கொள்ளை அஞ்ஞாடி வரைபடத்தில் ஒவ்வொரு கீறலிலும் வேறுவேறு சாதியினர் இதுவரை சொல்லப்படாத வர்ணத்தவரும் பதுங்கியிருந்து துப்பு வெட்டி வேட்டைக்குக் கிளம்பிய ராத்திரியில் ஒவ்வொரு கையிலும் சாக்கும் உலக்கையும், வேல்கம்பும்.  கயத்தாறு பக்கம் இலந்தைகுளத்தில் மறவரும், சக்கிலியரும் சேர்ந்து நாடார் வீடுகளை கொள்ளையடித்தார்களென மேலதிகத் தகவல்கள் சிவகாசிக் கொள்ளையின் வரைபடத்தில் பலநிறக் குறிப்பான்களாக தலை உயர்த்தி நிற்கின்றன.

     மதம் மாறினாலும் விடுதலை கிட்டுவதில்லை. வைகுண்டசாமியின் ஓட்டு viiட்டானுக்கு எதிராகக் கிளம்பிய துவையல் பந்தி.  உதிரத்தை ஒயினாக மாற்றிய ஏசுவை நோக்கிச் சென்று வடக்கில் ஒர் இடத்தை தேடினர் தட்சிண மாற நாடார்கள்.

     ”வேதனையை உண்டாக்கும் ஜாதி வேற்றுமையை விட்டு
     மறை ஓதியபடி எல்லாரும் உத்தம கிறிஸ்
     புத்தியாய் நடந்து வாருங்கள்” எனப்பாடித் திரிந்த மேசையாபுரம் இமானுவேல் மரியன் உபதேசியார் குஷ்ட நீர் கசிந்து தடம் பதிந்த வேதாகம நூலோடு சாக, தூக்கிப் போட்டவர்கள் வேதச்சக்கிலியர்கள்.

     மதம்மாறுதல் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாக நடக்கிறது.  சகோதரிகள் ஏற்பாடு செய்யும் இரகசிய பிரார்த்தனை கூட்டங்களுக்குச் செல்லும் பெண்கள், தொடர்ந்து தன் குரலால் வடநெல்லை வரைக்கும் கிறித்துவின் பெருமையை பரப்பும் உபதேசியார், மக்களோடே துயருரும் பாதிரிகளைத் தொடர்ந்து இயேசுவும் மேரியுமேகூட நாவலில் வந்து விடுகின்றனர். ஆனாலும் நாடார்களுக்கு விடுதலையில்லை. ஒடுக்கப்பட்ட சாதிய சமூகம் பொருளாதாரத்தாலும் இதர அரசியல் நடவடிக்கைகளாலும் படியடுக்கில் முன்னகர்ந்து போனதை அஞ்ஞாடி சாதியத்தின் மூல ஆதரங்களையும் சேர்த்து விவரிக்கிறது.

      மரபான யதார்த்தவாதம் முன்வைக்கும் இயல்உலகு வரைபடம் கொண்டறியும் குறியீட்டு உலகாக மாறிவிட்டது.  அஞ்ஞாடியின் புனைவு வரலாற்றின் வரைபடைத்தை நிலத்தின் உதிரநிறக் கீறல்களால் வரைந்து காட்டுகிறது.
                        
     கழுவேறிய சமணர்களின் கபாலம் கழுகுமலை கொண்ட்டாட்டத்தில் ஒட்டு நாக்கைத் தொங்க விட்டு, ஆட்டுக் குடல் மாலையணிந்தவர்களின் ஈட்டிகளில் பொய்த்தலையாகத் தோல் போர்த்தி நிற்கிறது கழுகாசல  மூர்த்தியின் கோயிலுக்கு முன்.  அந்தக் குறியீட்டின் பின் ஒளிந்து நிற்கும் சமணர்கள் காளியின் பேய்கள் உண்டு முடித்த சதைக் கூளங்கள் நீங்கி பிரதியில் உதிரம் தெறிக்கும் இடங்களில் சாட்சியங்களாக உலவுகின்றனர்.

     கழுகுமலைச் சமணர்கள் எவ்வுயிர்க்கும் செந்தன்மை கொண்டு மயிற்பீலியால் தூற்று நடந்த பாதரட்சைகள் இல்லாத கால்கள், எடுக்கப்படாத மலைப்பாறை அமுத அகல்களில் மழைநீரும் இருக்கலாம், எளியோர் இட்ட அமுதாகவும் இருக்கலாம். அஞ்ஞாடி, அகால இழப்பின் அற்புதமென மியூசியத்தில் பூசப்பட்ட வரலாற்று மண்ணில் உயிர்த்து இருண்ட கருவறைகளின் வெற்றிடத்தில் சிறியதின் ஆவிகளைப் பார்த்தபடி இருக்கிறது.

                                                           14.10.2012
                                                           2.55 காலை.    
                                                                                                                                               
      
     

Saturday, February 16, 2013

பொருட்கள் மதிப்பு வாழ்வு - 1

தனிமனிதன் தன்னுடைய இருப்பின் சாராமையை (independence) தனித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக சமூகத்தின் நிலையான அதிகாரங்கள், வரலாற்று பாரம்பரியம், புறக் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் தொழில்நுட்பங்களுக்கு எதிரான முயற்சிகளில் இருந்துதான் நவீன வாழ்க்கையின் ஆழமான பிரச்சனைகள் வழிகின்றன என்கிறார் சிம்மெல்.  ஆதிமனிதன் தன்னுடைய மெய் இருப்பிற்காக இயற்கையோடு நிகழ்த்திய போராட்டங்களின் நவீன வடிவத்தை இவ்வெதிர்ப்பு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. வரலாற்று ரீதியாகவே அரசியல், மதம், அறம், பொருளாதாரம் இவற்றோடு உருவாகிவிட்ட பிணைப்பிலிருந்து சுதந்திரத்திற்கான, மனிதனர்கள் அனைவரிலும் சமமாக இருந்த அசல் இயல்பான மதிப்பீடுகள் தடையின்றி முன்னேறுவதற்காக 18ம் நூற்றாண்டு அழைப்பு விடுத்திருக்க; 19ம் நூற்றாண்டு, மனிதனின் சுதந்திரத்திற்கு கூடுதலாக அவனை தனிச்சிறப்பு (unique) மிக்கவனாக, இன்றியமையாதவனாக ஆக்கும் அவனுடைய தனித்துவம் (வேலைப் பங்கீடோடு தொடர்புடையது) மற்றும் அவனுடைய சாதனைகளோடு ஆனால் அதே சமயம் மற்றவர்களின் பதில் நடவடிக்கைகளோடு மேலும் சார்ந்திருத்தலை வளர்த்தது.

மனிதர்கள் பொருட்களை உண்டாக்கி மதிப்பை (value) தோற்றுவித்து பிறகு அவற்றிடமிருந்து ஒரு தள்ளியிருத்தலை உருவாக்கி பின்பு அந்த தூரத்தை கடக்க முயற்சி செய்கின்றனர். அருகிலிருக்கும் பொருட்களும், அடைவதற்கு மிக தூரத்திலிருக்கும் பொருட்களும் மதிப்பிருப்பதாக கருதப்படுவதில்லை.  பற்றாக்குறை, நேரம், தியாகம் மற்றும் அவற்றை அடைவதற்கான நெருக்கடிகளும் மதிப்பை உருவாக்கும் கூடுதல் காரணங்கள்.

நகர வாழ்க்கை வேலைப் பங்கீட்டிற்கும் நிதிமயப்படுத்தலுக்கும் வழி வகுக்கிறது.  நிதிசார் பரிவர்த்தனைகள் அதிகமாக ஒரு தனிமனிதன் என்பவன் யார்? என்பதிலுருந்து அவனால் என்ன செய்ய முடியும்? என்பதாக மாற்றம் நிகழ்கிறது.  (சிம்மெல்)

அறிவொளிக்கால, ரொமாண்டிசிச, நவீனத்துவ பின்நவீனத்துவ காலம் வரைக்குமான சித்திரங்களை சிம்மெலின் இவ்வாக்கியங்கள் வழங்குகின்றன.

நவீனத்துவ காலம் பொருட்களின் மறு உருவாக்கத்தின் வழியாக அடையாளப் படுத்தப்பட்டதென்றால் பின் நவீனத்துவ காலத்தில் அப்படி மறு உருவாக்கப் பெற்ற பொருட்களின் பெருக்கத்தை அதன் மதிப்பை குறுகிய காலத்தில் துய்த்து ஒன்றுமில்லாமல் ஆக்குவதாக உள்ளது.
இக்காலத்தில் நவீனத்துவத்தின் என்ன? எது? என்பதை அனைத்தும் மற்றும் எத்தனையாக? மாற்றியிருக்கிறது.

பொருட்களின் நீண்ட கால வாழ்வு  மதிப்பு மிக்கதாக இருந்தது போய் குறுகிய கால இருப்பே அதன் மதிப்பை கூட்டுவதாக உள்ளது.  காலத்தின் வேகத்தை இந்த குறுகிய காலமே தாக்குப் பிடிக்கும் மதிப்பின் வழியாக அதிகரித்திருக்கிறோம்.   ஒளி அளவு வேகத்தின் மூலம் காலத்தை நீட்டிக்க முடியும் என்கிற ஐன்ஸ்டீனிய விதிக்கு எதிராக இருக்கும் நீண்ட காலத்தை இந்தத் துய்ப்பின் வழியாக குறிகிய ஒன்றாக மாற்றும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  பெருக்கம் நிறைவை அளிப்பதற்கு பதிலாக அனைத்தையும் அன்லிமிடெடாக வழங்கி நிறைவை எடுத்துக் கொள்கிறது. அனைத்துப் பொருட்களின் மீதும் எவ்வித மதிப்புமின்றியே துய்க்கிறோம். அதன் மதிப்பும் தனித்துவத்தை அலங்கரிப்பதற்காகவே வழங்கிக் கொள்கிறோம்.

பொருட்களின் வழியாக மதிப்புமிக்கதகாக உருவாக்கப்பட்ட நவீன வாழ்க்கை அப்பொருட்களின் வழியாகவே மதிப்பற்றதாக மாறிவிட்டது.  இந்தியா போன்ற சமூகங்களில் நவீன பொருட்கள் சார் வாழ்க்கையின் மீதான ஏக்கமும் நகரங்களில் பொருட்களின் மீதான நிறைவின்மையையும் ஒருங்கே நிலவுகின்றன.  இந்நிலையில் ஒரு கேள்வி மட்டுமே முன்னிற்கிறது.  நாம் யாராக இருக்கிறோம்? என்பது போய் நாம் எங்கே இருக்கிறோம்? என்பதே அது.

ஒரு பெருநகரத்தில் வாழும் மனிதனும் கிராமத்தில் வாழும் மனிதனும், மனிதன் என்னும் அளவில் கூட இப்போது சமமாக எண்ணப்படுவானா என்பது சந்தேகம்.  செழிப்பும், செழிப்பு மிக்க இடங்களில் வாழ்தலுமே மதிப்பை உருவாக்கி மனிதன் என்பதற்கான அர்த்தத்தை அளிக்கின்றன.

நவீனத்துவம் உருவாக்கிய தனிச்சிறப்புமிக்க (unique) அடையாளம் காலாவதியாகி கூட்டுத்தனிச்சிறப்பு (collective uniqueness) உதா, அபார்ட்மெண்ட் வாசம், Gated Community living, தொழில்சார்ந்து  (profession) உருவாகும் தோழமையுணர்வு போன்றவற்றால் தனிமனித புற அடையாளங்கள் வழியாக அன்றி கூட்டு அடையாளங்களை தனிமனிதன் எய்துவதால் அவனது தனிச்சிறப்பு கட்டமைக்கப்படுகிறது.

Thursday, February 14, 2013

அமெரிக்க கனவு


Jean Baudrillard அவருடைய “பூகோளத்தின் வன்முறை” என்கிற கட்டுரையில் WTC கட்டிடங்கள் தகர்க்கப்பட்டது ஒரு குறியீட்டு வீழ்ச்சி (Symbolic Defeat) என்கிறார். அதற்கு அமெரிக்கா எதிர்வினையாக ஆஃப்கானிஸ்தானில் நிகழ்த்திய இராணுவ ஆக்கிரமிப்பு வெற்றியடைந்ததாக சொல்லப்பட்டாலும் அது WTC கட்டிடங்கள் மீதான தாக்குதல் அளவிற்கு அவமானகரமான குறியீட்டு வீழ்ச்சி  இல்லை.

இரண்டாயிரங்களின் முதல் 10 ஆண்டுகளில் அமெரிக்கா சந்தித்த 3 வீழ்ச்சிகள்:

1. உலக வர்த்தக மைய கட்டிட தகர்ப்பு
2. Wikileaksல் வெளியான அமெரிக்க தகவல் இரகசியங்கள்
3. அமெரிக்காவில் துவங்கிய பொருளாதார மந்த நிலை

இதன் மூலம் சோவியத் ரஷ்யாவிற்குப்  பின் உலகை ஒற்றைக் குடைக்குக் கீழ் கொண்டுவரும் அமெரிக்க கனவு பெரும் பின்னடைவை சந்தித்தது.  ஆனாலும் இன்றும் அமெரிக்காவும் அதன் நகரங்களின் பெயர்களும் அந்நாட்டிற்கான விசாவும் இந்தியா போன்ற நாடுகளில் ஈர்ப்பு மிக்கதாக இருக்கக் காரணம் இந்நாடுகள் அமெரிக்காவை நகல் செய்து அதற்கொரு அசல்தன்மையை(Originality) உருவாக்குகின்றன.  அமெரிக்க வழிதான் செழிப்பிற்கான பாதை என்கிற தோற்றத்தை இந்த நகலாக்கம் ஒரு நம்பிக்கையாக மாற்றிவிட்டது.

ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகளின் சமூக ஜனநாயக கொள்கைகளின் மாதிரிகளைக் கூட பின்பற்ற முயலாத வண்ணம் ஐரோப்பிய அரசுகளே அவற்றைக் கைவிட்டுக் கொண்டிருக்கின்றன.

முதலாளித்துவம் 3.0 இந்தியா மற்றும் சீனாவில் நம்பிக்கையையும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிர்வையும் உருவாக்கி இன்று வரையிலும் மீட்பின்றி சந்தையெனும் கர்த்தாவின் இன்னொரு அதிசயத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

முதலாளித்துவம் 3.0 முக்கிய குணாம்சங்களில் ஒன்றான நிச்சயமற்ற நிலைமை  தனிமனித வாழ்வு மட்டுமின்றி, பொருட்களின் வாழ்வு மற்றும் நிறுவனங்களின் வாழ்வையுமே அன்றாட சவாலாக மாற்றியது.  இம்மூன்றின் பெருக்க வடிவமான நாடுகளின் அரசுகள் கூட இந்நிலைமைக்கு எதிர்வினையாக குடிமக்களின், சுற்றுச் சூழலின் அடிப்படை கட்டமைப்புகளைக் குலைத்து வெளிப்படுத்துகின்றன.  மத்திய தர வர்க்கத்தின் பொருளீட்டு சக்தியை அதன் சொத்து மதிப்புகளை உயர்த்துவதற்கான விதிகளைத் தவிர  எதன் பொருட்டும் சிந்திக்கத் தயராகாத மூளையாக, நலத்திட்டங்களை ஒரு சுமையாகவும் அத்திட்டங்களால் பயன் பெறும் குடிமக்கள் தொகுதியினை முன்னேற்றத்திற்கு தடையாகவும் கட்டமைக்கின்றன.

இந்தியா எப்போதுமே நெருக்கடியில் வாழ்ந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் பல தேசங்கள், வர்க்கங்கள் உண்டு. ஆகையால் அமெரிக்காவை நகல் செய்யும் இந்தியாவின் நெருக்கடிக்கு ஏனைய இந்தியா கொடுக்கும் விலை மிக அதிகம்.

பூர்வ குடிகளை ஒழித்து ஐரோப்பிய உபரிகள் ஒரு அமெரிக்காவை உருவாக்கினர் என்றால் இந்தியா அதன் பூர்வ குடிகளையே (பழங்குடிகள், வறிய தொழிலாளர்கள், விவசாயிகள்) ஒழித்து உருவாக்கும் அமெரிக்க நகல் அதன் குறியீட்டு வீழ்ச்சிக்கு எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும்.