Tuesday, December 24, 2013


                                                                ”பைத்திய ருசி”  - சிறுகதைகள் குறித்து
                                                                                                                                               
கணேசகுமாரனின் “பைத்திய ருசி” சிறுகதை தொகுப்பில் 9ம் பக்கத்தில் இருந்து 94ம் பக்கம் வரையிலும் உலவும் மனிதர்கள் இந்த உலகால் ரோகத்தின் காரணமாக நிராகரிக்கப்பட்டவர்கள்.  அழகின் மினுமினுப்பை இவ்வுலகு அசிங்கத்தால் குறைக்கிறது. நிராகரிக்கப்படும் அசிங்கம் அதன் இருண்மையை பரப்பி ஒளியின் மீது கருமையைப் பூசுகிறது. இந்தத் தொகுப்பின் கதைகளின் வழியாக சொல்லபட்டவை(வர்கள்) அந்த இருண்மையின் குரல்கள்.  மீட்சியின்றி அதனுள் சிக்குண்டுவிட்ட மனிதர்களின் விசும்பல்களும், சமூகத்திற்கு மிக வலிமையானதொரு அறிவிப்பாகவே நிகழும் தற்கொலைகளும் நிரம்பியது.

உடல் மற்றும் மனதின் ரோகங்களால் நேரும் சிக்கல்களை, ஏமாற்றங்களை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் உடலின் ரோகத்திற்கு தீர்வாக தற்கொலையையும், மனதின் ரோகத்திற்கு பைத்தியத்தையும் அடைகின்றனர். மனதின் ரோகத்தை உடல் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு உடலின் வலிகளை, அழகின்மையை மனம் தாங்கிக் கொள்வதில்லை. “காமத்தின் நிறம் வெள்ளையில்” லுயூகோடெர்மா பரவும் தயாளனை பவானி விலக்க இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் அவனுக்கு இணையாக தன் கணவனது ஓரினச் சேர்க்கையின் காரணமாக (அதனால்தான் என அறியாமலேயே) விலக்கப்படும் பானுமதியும் இந்த “விலக்கப்படுவதால்” என்பதால் மாத்திரமே மரணித்திடம் ஆறுதல் தேடி புகுந்தவர்கள்.  இருவருக்கும் வாழ்வில் இதைத்தவிர ஏதொரு சிக்கலும் இருப்பதாக கதையில் தெரிவதில்லை. அவர்களால் தங்களுக்கே உரிமையான ஓர் உடல் அவர்களின் உடலுக்குச் செய்யும் அநீதியை தாங்க முடியாமல் மரணிக்கின்றனர்.
  
“ஏவல்”, “சிக்னல்”, “பைத்திய ருசி” ஆகிய கதைகள் மூன்றும் மனதின் ரோகத்தை பேசுபவை. “நான் பேசுவதை யாராவது கேட்டிருந்தா இந்த நிலைமை வந்திருக்காது” என “ஏவல்” கதையில் வரும் ஒரு வாக்கியத்திற்கு பதிலாக “சிறிதும் ஓய்வின்றி ஒரு துரோகத்தினை உலகுக்கு அறிவித்துக் கொண்டிருக்கும் உதடுகளை சந்திக்கும் போதெல்லாம் உங்கள் செவி கேட்காமல் போகிறது” எனும் “பைத்திய ருசி”யின் வாக்கியம் அமைகிறது (இதன் context வேறாக இருப்பினும் பொருத்திப் பார்க்கலாம்).

எப்போதுமே நாம் கேட்க விரும்புகின்றவை அல்லாமல் வேறெவற்றையும் கேட்க மறுக்கிறோம். அதைப் போலவே காதுள்ளவர்கள் எல்லோருமே கேட்கக் கூடியவர்களும் அல்ல.

ஓரினச் சேர்க்கை, லுயூகோடெர்மா, வலிப்பு, “டிரின்னிடஸ்”, “பிரீஃப் சைக்கோசிஸ், ஏவல், புற்றுநோய் என கதைகளில் விரியும் நோய்மைக்கு பலியாகும் உடல்களோடு, அணு உலைகள், வேதி ஆலைகள், போர்களால் சிதைக்கப்படும் உடல்கள் இணைகின்றன. 

பீத்தோவனின் ”இசை” அவனது செவிப்புலன் திறன் இழந்த பிறகும் பொங்கிப் பெருகிய அவனது வெள்ளம். இதை ஒரு சிறுகதை என்பதை விட சிறப்பாக சொல்லப்பட்டதொரு குறு வாழ்க்கை வரலாறு என சொல்லலாம். பீத்தோவனது கட்டுப்பாடு மிக்க தந்தையின் -, மொசார்ட் எனும் மேதையைக் கடந்து செல்லும் பெருவிருப்போடு - பிரம்படிகள் காலில் விழ பியானோக்களில் விரல்கள் மிதந்த சிறுவனோடு எதை துணை நின்றதோ அதுவே அவனது கேட்கும் திறன் அவனை விட்டு நீங்கிய பிறகும் துணையாக இருந்தது. தயாளனுக்கும், பானுமதிக்கும், ”அழுகிய புத்தனிடம் சொன்ன” கதைகளில் வரும் பெண்களுக்கும் ஒரு வயலின் துணை இல்லாமல் போனதே தற்கொலைக்குக் காரணம்.
ஒரு பிரிவினால்  உச்சமுடிவுகளுக்குப் போகாத ரகுநந்தனும், புவனாவும் தற்கொலை செய்யாமல், மனம் குழம்பாமல் போன அளவிற்கு மற்றவர்கள் வண்ணத்துப்பூச்சியை அறுக்கப் பழகியவர்கள் அல்ல.

“அக்காக்களின் கதையும்”, ”மார்ச் 3”, ”தேவதைக்கு வாழ்க்கைப்பட்டவன்”, ”தந்தூரி கசானா 400 ரூபாய்” ஆகிய கதைகள் அவற்றின் வடிவத்தினாலோ, உள்ளடக்கத்தினாலோ வழமையானவை என்பதால் கவனத்தை ஈர்க்கவில்லை.

இக்கதைகள் சிறுகதைகள் எனும் வடிவத்தின் இலக்கணங்களை கடந்தவை. பெரும்பாலான கதைகள் Biographical தன்மையோடு இருக்கின்றன.  ஒரு பெரிய கேன்வாஸில் சம்பவங்களின் துணையோடு சொல்ல வேண்டியவற்றை சில பக்கங்களில் சொல்ல முனைந்தவை இக்கதைகள். அதனாலேயே சிறுகதை வடிவத்தினுள் நில்லாமல் வெளியே நிற்கின்றன. இக்கதைகளின் இலக்கியத் தகுதி குறித்து இப்போது பேச முடியாது.

இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த கதையாக இருப்பது “சிக்னல்”. சமிக்ஞையைக் கடக்கும் கோழிதான் மனம். தவறான ஒரு முன்னகர்வில் விபத்திற்குள்ளாகி இயல்பு நிலையைக் கடந்து பைத்தியத்திற்குள் நுழைந்து திரும்ப வராது.

ஒரு தந்தை அவனது குழந்தையை கையில் வாங்கிய மறுகணம் அக்குழந்தையின் முதுகுப்பக்கம் முளைத்திருந்த பெரிய கட்டியைத் தொட்டதுமே “ஊறிய தந்தைமையின் அமுதம் சட்டென உள் சுருங்கி அருவருப்படைந்து” (பக். 39) பின்னகர்வதே இவ்வுலகின் இயல்பென நாம் அறிந்தவர்கள்.

”சாமிகளே” இல்லாத உலகின் (ஏவல்) சிக்கல்களுக்கு தீர்வாக நவீன மருத்துவத்தின் மாத்திரைகளும், தற்கொலைகளும் அமைகின்றன. நிறுவனங்கள், அறிவியல், தொழில்நுட்பம், போர் இயந்திரங்கள் அனைத்தும் இவ்வுலகை ஒரு பைத்திய விடுதியாக மாற்றுவதை எழுதிய கணேசகுமாரன் வடிவத்தின் மீதும் கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பான கதைகள் எழுதிவிட முடியும். 

எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கிய வாசகன் காண விரும்புவது அசிங்கமானவற்றிடம் இருந்து கூட பிறக்கும் அழகே.


No comments: