Friday, August 27, 2010

அளவில்லாத பேரலைகள்

இசை பற்றின இக்கட்டுரையை இரண்டு மேற்கோள்களோடு துவங்குவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

”ஒரு வாழும்காலத்திற்கு இசை போதுமானது.   ஆனால் ஒரு வாழும் காலம்
இசைக்குப் போதுமானதில்லை”  - செர்கெய் ராச்மெனினோவ்

“ வார்த்தைகளால் சொல்ல முடியாததும் அமைதியாய் இருக்க விடமுடியாததுமானதை இசை வெளிப்படுத்துகிறது” - விக்டர் ஹியூகோ

ஓவியம், எழுத்து, இசை,  நாடகம், சினிமா, நிகழ்த்து கலை ஆகியவற்றில் இசை மட்டுமே அனேகமாக எல்லோரும் (குழந்தைகள் தவிர்த்து) ஏறக்குறைய வாழ்நாளின் பெரும்பாலான நாட்கள் அனுபவம் கொள்கிற கலைவடிவம். இதர கலைவடிவங்களை விடவும் இசை சமூகத்தின் அடுக்குகளை ஊடுருவும் தன்மையுடையது.  கலையின் முதன்மை நோக்கம் கேளிக்கை.  இசைதான் அவ்வுணர்வை பிரதானமாக எழுப்பக் கூடியது.  நமக்கு பரிச்சயமான இசை வகைகளை பட்டியலிட முயன்றால் அது இவ்வாறு வரும்.  இந்தப் பட்டியல் பிரதானமான இசை வடிவங்களை மட்டுமே அடக்கியது. விளிம்பு நிலை மக்களின் இசை வடிவங்களும் கீழ்க்கண்ட வகைகளில அடங்கும் என நம்பலாம் (உதா: நாட்டார் இசை, ரய், ப்ளூஸ், ராப்)

சர்வதேச வரிசை:

1. செவ்வியல் இசை (ஐரோப்பா)
2. நாட்டார் இசை (உலகமெங்கும்)
3. ராக் (அமெரிக்கா, ஐரோப்பா)
4. பாப் (உலமெங்கும்)
5. ரெக்கே (இலத்தீன் அமெரிக்கா)
6. ரய் (அல்ஜீரியா)
7. கவ்வாலி (சுஃபி)
8. ப்ளூஸ் (அமெரிக்க ஆப்ரிக்கர்)
9. ராப் (அமெரிக்க ஆப்ரிக்கர்)

இந்திய வரிசை :

1. கார்னாடக சங்கீதம்
2. இந்துஸ்தானி
3. கஸல்
4. நாட்டார் இசை

சினிமா இசை என்பது தனித்த வடிவம் இல்லை.  மேற்கண்ட வடிவங்களை கலந்து பயன்படுத்துவது என்பதால் அதை தனித்த ஒன்றாக கருத வேண்டியதில்லை.


இசைக்கும் சங்கீதத்திற்கும் உள்ள வேறுபாடு குரல் மற்றும் கருவிகள் எழுப்பும் ஒலிகளுக்கிடையே ஆன வேறுபாடே.  மேற்கத்திய செவ்வியல் இசையில் கருவிகளே பிரதானமானவை.  கர்னாடக சங்கீதத்தில் குரலே
முதன்மையானது.  மேற்கத்திய ஓபரா, ஆரட்டோரியா ஆகியவற்றிலும் குரலே பிரதானமானது.  ஆக குரலின் மூலம் வெளிப்படுகிற வடிவத்தை சங்கீதம் எனவும் கருவிகளின் மூலம் வெளிப்படுகிற வடிவத்தை இசை எனவும் அர்த்தப் படுத்திக் கொள்ளலாம். குரலும் இசையும் இணைவதை நாம் பாடல் என்கிறோம்.

மேற்கத்திய செவ்வியல், கர்னாடக இந்துஸ்தானி சங்கீதங்கள் நுட்பமானவை. சமூகத்தின் மேல்வகுப்புகள் பாவிப்பவை.  இதன் காரணமாகவே உன்னதமானவை என அழைக்கப் படுவது.

ஒரு இசை வடிவம் உன்னதமானது என அழைக்கப்பட அது
1. நுட்பமனதாய்
2. மேல்வகுப்புகளில்
புழங்குவதாய் இருக்க வேண்டும்.  இசை இரசனையில் தேர்ச்சி கொள்வது என்பது எக்காலத்திலும் உன்னதமான மேட்டுக் குடி இசையை நோக்கி நகர்கிற ஒன்றாகவே சமூகம் கருதி வந்திருக்கிறது. தனி நபர் இசை இரசனை அளவு கோலும் இதுவே. சினிமா, பாப், ராக் இதர இசையிலிருந்து நுட்பம் தேடி நகர்கிற
இசை இரசிகன் செவ்வியல் இசையைத் தேடித்தான் போகிறான்.

நுட்பமானதை பாவிப்பதன் மூலம் மேல்வகுப்புகள் மட்டுமல்ல தனிநபர்களும் தங்களை உன்னதமானவர்களாக நினைத்துக் கொள்கின்றனர்.  இங்கே நுட்பம் என்பது இசை சம்பந்தமுடையது.  உன்னதம் என்பது அதிகாரத்தின் பாற்பட்டது.
உன்னத எதிர்ப்பு, புனித மறுப்பு என்பது இசையின் நுட்பத்திற்கு எதிரானது இல்லை.   மாறாக நுட்பத்தின் மூலம் உருவாகிற அதிகாரத்திற்கு எதிரானது.  பின்நவீனத்துவ காலகட்டத்தில் மேற்கத்திய செவ்வியல் இசையோடு பேருந்தின் சப்தம் கூட இசைக்கப் படுகிறது.  அதிகார எதிர்ப்பு மட்டுமே இந்த hybrid வடிவத்தின் நோக்கம் என்றாலும் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் நுகர்வுக் கலாச்சாரத்தையும் காண முடியும் என நம்பவும் இடமிருக்கிறது.  ஆக பின் நவீனத்துவ இசைக்கு

1. அதிகார எதிர்ப்பு
2. நுகர்வுக் கலாச்சாரம் ஆகிய இரண்டு குணங்கள் உண்டு.

Wednesday, August 25, 2010

இரத்தத்தின் அளவு

வாசித்துக் கொண்டிருக்கும் ”Wonders of Numbers"ல் பின்வரும் கேள்வி ஒன்றும் அதற்கான விடையும் அளிக்கப்பட்டிருந்தது.

கேள்வி :
பூமியில் வாழும் மொத்த மனிதர்களின் உடலில் உள்ள இரத்தத்தையும் கொள்ள என்ன அளவுள்ள கண்டெய்னர் தேவைப்படும்?

இதே மாதிரி எண்ணற்ற கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்ப முடியும்.  பத்து கேள்விகள் நான் யோசித்தவை:

1. பூமியில் வாழும் மொத்த உயிரினங்களின் எடை எவ்வளவு?
2. தாவர ராசிகள் தளைக்க தினமும் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்ன?
3. நேற்று சென்னையில் 20 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்று லாவோஸ்   நகரை அடையும் போது என்ன வேகத்தில் வீசும்?
4. ஒரு நாளில் எத்தனை முறை சூரியன் உதிப்பதும் மறைவதும் நிகழ்கிறது?
5. மொத்த உயிரினங்களின் கால்களின் எண்ணிக்கை எவ்வளவு?
6.  100 கிலோமீட்டர் பயணத்தின் துவக்கத்தில் நம் தலைக்கு மேலே இருக்கும் நட்சத்திரத்திற்கும் பயண முடிவில் உள்ள நடசத்திரத்திற்கும் உள்ள தொலைவு என்ன?
7. அமேசான், நைல், பிரம்மபுத்திரா நதிகளில் இதுவரை வழிந்த தண்ணீரின் அளவு என்ன?
8. மனிதர்கள் ஒரு நாளில் பேசும் சப்தத்தின் அளவு என்ன?
9. அளவிடமுடியாதவற்றின் அலகு எது?
10. தொடர்ந்து மழையும், நதிக்கலப்பும் இல்லாத போது உலகின் கடல் நீர் இன்றிலிருந்து குறையத் துவங்கினால் முழுதும் வற்ற எவ்வளவு வருடங்களாகும்?

    மேற்கண்ட 10 கேள்விகளையும் யோசிக்க எனக்கு 16 நிமிடங்கள் தேவைப்பட்டன.  பதில் அறிந்து கொள்ள எவ்வளவு நாட்களாகும் என்பதை உறுதியாக சொல்ல முடியாததைப் போலவே இந்தக் கேள்விகளுக்கு பதில்களை அடைய முடியுமா என்பதும் உறுதியாகச் சொல்ல முடியாது. Google  உதவினால் உண்டு.  மற்றபடி நமக்கு கணிதமும், அறிவியலும் போதிக்கும் ஆசிரிய, பேராசிரிய, டாக்டரேட்களிடம் கேட்கலாம் என்றால் நாம் அவர்களுக்கு நிஜமாகவே மூளை இருப்பதை ஒத்துக் கொண்ட பிறகுதான் கேட்கவேண்டும். நான் ஒத்துக் கொள்ள தயாரில்லை.

புத்தகத்தில் கேட்கப்பட்டு கொடுக்கப்பட்ட கேள்விக்கான விடை:

ஒரு சராசரி வயது வந்த ஆணின் உடலில் உள்ள இரத்ததின் அளவு 5 - 6 லிட்டர் ( 1 காலன் = 3.79 லிட்டர் (US)  = 4.54 லிட்டர் (UK) )  (காலன் =  Gallon)

இந்தப் புத்தகம் Oxford University Press பதிப்பித்ததாலும், வருகிற விடையை வைத்தும் இப்புத்த ஆசிரியர் UK அளவையே எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

6 பில்லியன் (600 கோடி) மனிதர்கள் இப்பூமியில் இருப்பதாக கணக்கிட்டால்
மொத்தம் ஏறக்குறைய 6 பில்லியன் காலன்.  (600,00,00,000 காலன்)

ஒரு கன அடி = 7.48 காலன் .  ஆக

80 கோடி கன அடி மனித இரத்தம்.(1 கன அடி = 33.96 லிட்டர்)

80,00,00,000 * 33.96  = 2716,80,00,000 லிட்டர் மனித இரத்த அளவு

1000 அடி நீளமும் 1400 அடி உயரமும் உள்ள கண்டெய்னரில் மொத்த இரத்தத்தையும் நிரப்பி விட முடியும் என புத்தகம் சொல்கிறது. எப்படி என்பதை கணக்கிட்டுக் கொள்ளவும்.

Thursday, June 10, 2010

இஸ்ரேல் : பொறுக்கி அரசின் இன்னொரு சாகசம்

செய்தி 1.    இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிலிருக்கும் காஸா நகர மக்களுக்கு 10000 டன் உதவிப் பொருட்களை இங்கிலாந்து, துருக்கி, அய்ர்லாந்து, அல்ஜீரியா, குவைத், கிரீஸ்,  ஆகிய நாடுகளிலிருந்து ஏற்றிக் கொண்டு சென்ற கப்பல் அணி (flotilla) சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் வழிமறிக்கப்பட்டு மவி மர்மரா எனும் கப்பலில் வந்த பாலஸ்தீனிய ஆதரவு போராட்டக்காரர்கள் 9 பேர் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

     காஸா நகரம் கடந்த ஒரு வருடமாக இஸ்ரேலின் கடுமையான பொருளாதார தடைக்கு உட்பட்டு அந்நகரத்தின் 15 இலட்சம் மக்கள் வாழ்வாதாரங்களுக்கான பஞ்சத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.  70 சதவீத நகர மக்கள் 1 டாலருக்கும் குறைவான பணத்தைக் கொண்டே ஒரு நாளைக் கடத்துகின்றனர். 60 சதவீத மக்கள் குடிக்கவும் தண்ணீரின்றி பிழைத்துக் கொண்டிருக்கின்றனர்.  அவர்களுக்கான நல்வாழ்வு போகட்டும் சாதாரண வாழ்வே கேள்வி குறியாக்கப்பட்டுள்ளது.

      கர்த்தர் இந்நிலத்தை இஸ்ரவேலருக்கு வாக்களிக்காம்லே இருந்திருக்கலாம். ஹிட்லரின் மூளையில் ஆரிய மேன்மை குடி கொள்ளாமல் இருந்திருக்கலாம்.
    
     வழக்கம் போலவே உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  ஈரான் தன் பங்குக்கு ஒரு உதவிக் கப்பல் அணியை அனுப்பப் போவதாக அதுவும் தன் அதி உயர் ராணுவப் பிரிவின் பாதுகாப்போடு சொல்லியுள்ளது.  அப்படி அனுப்பச் செய்தல் மீண்டுமொரு கடற் சண்டையை எதிர்பார்க்கலாம்.  இஸ்ரேலை எதிர்க்க அப்பிரதேசத்தில் யாருக்கும் தெம்பில்லை.

    இஸ்ரேல் சமகால அரசுகளுக்கு ஒர் உதாரண அரசாக விளங்குகின்றது.  அதன் பாணியைத்தான் இலங்கை பின்பற்றியது.  நம் கால அரசுகள் சந்தையின்  நலனைத் தவிரவும் வேறொன்றிலும் நாட்டமில்லாதவை. ஒரு நாள் கடை அடைப்பு செய்யும் சாதாரண எதிர் நடவடிக்கையை ஒடுக்கவும் பீரங்கிப் படையை அனுப்புகிற அரசுகள்தான் உலகெங்கும் உள்ளன.

     பிராந்திய வல்லரசுகள் இராணுவ மேலாண்மையை அந்தந்த பிரதேசங்களில் வெளிப்படையாகவே நிறுவத் துடிக்கிற காலகட்டம். உதாரணம் சீனா.  இராணுவம் அதி உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த காசைக் கொட்டும் அரசுகள் வேறெந்த மக்கள் நலத் திட்டங்களிலும் செலவீனங்களை அதிகப் படுத்துவதில்லை.  கல்வி, மருத்துவம், உணவுப் பாதுகாப்பு எதிலும் அரசுகளின் முதலீடு இராணுவச் செலவுக்கு வெகு தொலைவிலேயே உள்ளன.

    ஜனநாயக சமூகத்திலேயே அரசு எதிர்ப்பு என்பது கடுமையாக ஒடுக்கப்பட்டு வருகிற காலத்தில் இராணுவ மய அரசுகள் மக்கள் திரளை திறந்த வெளி சிறையில் அடைத்து வைத்திருக்கின்றன.  இந்நிலையில் இஸ்ரேலின் இராணுவ வல்லமையும் அதற்கிருக்கும் அமெரிக்க ஆதரவும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் கூட அதன் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான அநீதிகளைக் நிறுத்த முடியாது.  வேண்டுமானால் குறைக்க முயற்சி செய்யலாம்.

Saturday, May 29, 2010

ஆர்மீனிய வைரங்கள்

பேரனுபவம் என்பது மிக மிக எதேச்சையானது.   இசையைப் பொறுத்தவரை இது அற்புதங்கள் கேட்கக் கிடைக்கும் காலம். உங்களுக்குத் தேவை இணையம். கேட்கக்       காதுகள்.  சில சமயம் பார்க்கக் கண்கள்.   

வழக்கம்போல youtubeல் இசை சம்பந்தமான ஒளிப்பதிவுகளைத் தேடிக் கொண்டிருந்த போது இங்கா மற்றும் அனுஷ் என்கிற வித்தியாசமான பெயர்களால் ஈர்க்கப்பட்டு இந்த இரு சகோதரிகளின் பாடல்களைக் கேட்கவும் பார்க்கவும் செய்தேன்.  அற்புதமான நவீன இசையோடு ஆர்மீனிய நாட்டுப்புற இசை மரபையும் கலந்து அந்த நிமிடத்தின் நோய்மையை குணப்படுத்திய பாடல்கள். ஆர்மீனியா பழைய தேசம். ஆக அதன் இசை மரபில் நாட்டுப்புறத் தொடர்ச்சி இருப்பது தவிர்க்க முடியாதது. 

ஆர்மீனியா முதல் அதிகாரப்பூர்வ கிறித்துவ தேசம்.  ஆனாலும் எனக்கென்னவோ அதன் நாட்டுப்புற இசையில் ஒருவித பெர்சிய சாயலைக் கேட்க முடிகிறது. 

Inga & anush  ஆகிய இருவரின் பாடல்களைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் அணியும் ஆடைகள், ஆபரணங்கள்  மத்திய கால நாட்டுப்புறத்தின் சூனிய அல்லது தேவதைக் கதைகளிலிருந்து எழுந்து வந்தவர்களைப் போன்ற தோற்றத்தோடு துல்லியமான குரல்களோடு பாடும் பாடல்களைக் கேட்பது மிக மிக எதேச்சையான பேரனுபவம்.


Thursday, May 13, 2010

மீண்டும்

சிலரே பார்த்த பதிவுகள் எழுதி அவைகளை நீக்கி மீண்டும் புதிதாக எழுத நினைத்து இந்நாளில் துவங்குகிறேன்.   இறப்பில்லாத இணையத்தின் மரத்தில் நானும் ஒரு இலையாய் துளிர்க்கிறேன்.  தொடர்ந்து பதிவுகள் எழுதப்படும் என நம்பிக்கையூட்டிக் கொண்டு மூன்று புள்ளிகளிட்டு முடிக்கிறேன்