Thursday, April 24, 2014

ஆர்.எஸ்.எஸ் Vs மகா அலெக்சாண்டர்


பத்தாவது படிக்கும்போது ஆர்.எஸ்.எஸ் நடத்தும் “சாகா”விற்கு போனதுண்டு நண்பர்கள் சிலரோடு.  அந்தப் பருவம் ஓர் எடுப்பார் கைப்பிள்ளை பருவம்தானே. விவேகானந்தர் வாசிக்க ஆரம்பித்தது பெரியாரிடமிருந்து என்னை அங்கே கொண்டு போய் சேர்த்தது. வீட்டில்  பெரியார் படம் அருகே விவேகானந்தர் படம். என்னுடைய நண்பன் சிவக்குமாரோடு பள்ளி முடிந்து மைதானத்திற்குப் போவேன். அங்கே 3க்கு வால் முளைத்த ”ஓம்” குறியீட்டை சல்யூட் செய்தபின் தற்காப்புப் பயிற்சி.  ஆனால் நாத்திகனான நான் அதனை சல்யூட் செய்ய மாட்டேன். என்னுடைய தியரி என்னவென்றால் இந்து மதத்தில் நாத்திகத்திற்கும் இடம் உண்டு என விவேகானந்தர் சொன்னதே. இதனை அப்படியே முகம்மது அலி ஜின்னாவை ஒரு செகுயுலர் என சொன்ன அத்வானியோடு ஒப்பிடலாம்.  தற்காப்பு பயிற்சி முடிந்ததும் ஒரு விளையாட்டு. கைகளை பின்னுக்கு கட்டிக்கொண்டு ஒருவரை இடித்து வட்டத்திற்கு வெளியே தள்ளுவதோ அல்லது கபடியோ இருக்கும்.

தற்காப்பு பயிற்சியின் போது முழங்காலை மடித்து நிற்க பின்னாலிருந்து ஓடிவரும் பயிற்சியளிப்பவர் தொடையில் கால் வைத்து ஏறி துள்ளிக் குதிப்பார். அப்போதும் அசையாமல் நிற்க வேண்டும். அப்போது அளித்த பயிற்சியில் இன்றும் எனக்கும் மறக்காமல் இருப்பது காலால் ஒருவர் எட்டி விரைகளை உதைக்க வரும்போது கைகள் இரண்டை X போல வைத்து அவற்றைக் காப்பது எப்படி என்பதுதான்.

அந்தப் பயிற்சியாளருக்கு இருபத்தைந்து வயதுதான் இருக்கும். திருச்சியை சொந்த ஊராகக் கொண்டவர். ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுநேர ஊழியர். நல்ல சட்டை கூட அவர் அணிந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஒரு காவி வேட்டி எப்போதும்.  அவர் எங்கே தங்கியிருந்தார் என நினைவு இல்லை. மாலைதான் வருவார்,  “சாகா” முடிந்ததும் போய்விடுவார். விவேகானந்தரின் இயற்பெயர் “நரேந்திரன்” என அங்கே இருந்த ஆறு பேரில் சரியாகச் சொன்னதற்காக என்னைப் பாராட்டினார்.

விளையாட்டு முடிந்து கலாச்சார, வரலாற்று வகுப்பு.  அங்கேதான் இந்தியாவின் பல மறைக்கப்பட்ட வரலாறுகள் வெளியே வரும். அப்படி ”மறைக்கப்பட்ட”  வரலாறுதான் மகா அலெக்சாண்டர் இந்தியாவை வெற்றி கண்ட கதை.  அவர் எங்களுக்கு போதித்த அலெக்சாண்டர் வரலாற்றின் ஆர்.எஸ்.எஸ் வெர்ஷன்.

அலெக்சாண்டர், போரஸ் என்னும் புருஷோத்தமனை வென்று இந்தியாவில் கங்கை வரை நுழைந்தார்.  அவர் எப்படி போரஸை வென்றார் என்றால்.....அலெக்சாண்டர் போரஸின் ஊருக்கு வெளியே முகாமிட்டிருந்தார். அப்போது ஊரே “ரக்‌ஷா பந்தன்” கொண்டாடிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் போருக்கு தன்  படைகளை ஆயத்தம் செய்து கொண்டிருந்த அலெக்சாண்டரிடம்  போரஸின் மனைவி வந்தாள்.  அவள் அலெக்சாண்டருக்கு “ராக்கி” அணிவித்து அரண்மனை திரும்பினாள்.

போரில் ஒரு கட்டத்தில் போரஸ் அலெக்சாண்டரைக் கொல்ல வேண்டிய சூழல்  வந்தது.  அப்போது போரஸ் அலெக்சாண்டரின் கையிலிருந்த “ராக்கியை”ப் பார்க்கிறார். இது யார் கட்டியது எனக் கேட்க, அவர் போரஸின் மனைவிதான் கட்டியது என்கிறார்.   மனைவி “ராக்கி” கட்டியதால் அலெக்சாண்டர் அவளுக்கு சகோதரர் ஆகிவிடுகிறார். மனைவியின் சகோதரரைக் கொல்வது இந்து மரபில்லை என்பதால் போரஸ் தன் முன்னே நிராயுதபாணியாக நின்ற அலெக்சாண்டரைக் கொல்லாமல் விடுகிறார். இதனால் உயிர்தப்பிய அலெக்சாண்டர் பின்பு  போரில் போரஸை தோற்கடித்து இந்தியாவிற்குள் நுழைகிறார்.  இப்படி இந்தியப் பண்பாட்டைக் காக்கப் போய்த்தான் அலெக்சாண்டரால் இந்தியாவிற்குள் நுழைய முடிந்ததே ஒழிய வேறு எப்படியும் அல்ல என்று அவர் சொல்லி முடித்தார்.

கலாச்சாரப் பெருமிதம் வியர்வையோடு சேர்ந்து வழிய நாங்கள் அதனை கேட்டுக் கொண்டிருந்தோம்.

இப்படித்தான் ஆர். எஸ்.எஸ் அங்கே “சாகா”விற்கு போன எங்களுக்கு வரலாறு போதித்தது.  இனிமே இந்த “வரலாறு” பாடப்புத்தகங்களிலும் இடம் பெறலாம். 

2 comments:

Anonymous said...

y there are no new posts from you? have u stopped ur literature works?

bglr said...

y there are no new posts from you? hav u stopped working on literature?