Thursday, June 10, 2010

இஸ்ரேல் : பொறுக்கி அரசின் இன்னொரு சாகசம்

செய்தி 1.    இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிலிருக்கும் காஸா நகர மக்களுக்கு 10000 டன் உதவிப் பொருட்களை இங்கிலாந்து, துருக்கி, அய்ர்லாந்து, அல்ஜீரியா, குவைத், கிரீஸ்,  ஆகிய நாடுகளிலிருந்து ஏற்றிக் கொண்டு சென்ற கப்பல் அணி (flotilla) சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் வழிமறிக்கப்பட்டு மவி மர்மரா எனும் கப்பலில் வந்த பாலஸ்தீனிய ஆதரவு போராட்டக்காரர்கள் 9 பேர் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

     காஸா நகரம் கடந்த ஒரு வருடமாக இஸ்ரேலின் கடுமையான பொருளாதார தடைக்கு உட்பட்டு அந்நகரத்தின் 15 இலட்சம் மக்கள் வாழ்வாதாரங்களுக்கான பஞ்சத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.  70 சதவீத நகர மக்கள் 1 டாலருக்கும் குறைவான பணத்தைக் கொண்டே ஒரு நாளைக் கடத்துகின்றனர். 60 சதவீத மக்கள் குடிக்கவும் தண்ணீரின்றி பிழைத்துக் கொண்டிருக்கின்றனர்.  அவர்களுக்கான நல்வாழ்வு போகட்டும் சாதாரண வாழ்வே கேள்வி குறியாக்கப்பட்டுள்ளது.

      கர்த்தர் இந்நிலத்தை இஸ்ரவேலருக்கு வாக்களிக்காம்லே இருந்திருக்கலாம். ஹிட்லரின் மூளையில் ஆரிய மேன்மை குடி கொள்ளாமல் இருந்திருக்கலாம்.
    
     வழக்கம் போலவே உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  ஈரான் தன் பங்குக்கு ஒரு உதவிக் கப்பல் அணியை அனுப்பப் போவதாக அதுவும் தன் அதி உயர் ராணுவப் பிரிவின் பாதுகாப்போடு சொல்லியுள்ளது.  அப்படி அனுப்பச் செய்தல் மீண்டுமொரு கடற் சண்டையை எதிர்பார்க்கலாம்.  இஸ்ரேலை எதிர்க்க அப்பிரதேசத்தில் யாருக்கும் தெம்பில்லை.

    இஸ்ரேல் சமகால அரசுகளுக்கு ஒர் உதாரண அரசாக விளங்குகின்றது.  அதன் பாணியைத்தான் இலங்கை பின்பற்றியது.  நம் கால அரசுகள் சந்தையின்  நலனைத் தவிரவும் வேறொன்றிலும் நாட்டமில்லாதவை. ஒரு நாள் கடை அடைப்பு செய்யும் சாதாரண எதிர் நடவடிக்கையை ஒடுக்கவும் பீரங்கிப் படையை அனுப்புகிற அரசுகள்தான் உலகெங்கும் உள்ளன.

     பிராந்திய வல்லரசுகள் இராணுவ மேலாண்மையை அந்தந்த பிரதேசங்களில் வெளிப்படையாகவே நிறுவத் துடிக்கிற காலகட்டம். உதாரணம் சீனா.  இராணுவம் அதி உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த காசைக் கொட்டும் அரசுகள் வேறெந்த மக்கள் நலத் திட்டங்களிலும் செலவீனங்களை அதிகப் படுத்துவதில்லை.  கல்வி, மருத்துவம், உணவுப் பாதுகாப்பு எதிலும் அரசுகளின் முதலீடு இராணுவச் செலவுக்கு வெகு தொலைவிலேயே உள்ளன.

    ஜனநாயக சமூகத்திலேயே அரசு எதிர்ப்பு என்பது கடுமையாக ஒடுக்கப்பட்டு வருகிற காலத்தில் இராணுவ மய அரசுகள் மக்கள் திரளை திறந்த வெளி சிறையில் அடைத்து வைத்திருக்கின்றன.  இந்நிலையில் இஸ்ரேலின் இராணுவ வல்லமையும் அதற்கிருக்கும் அமெரிக்க ஆதரவும் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் கூட அதன் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான அநீதிகளைக் நிறுத்த முடியாது.  வேண்டுமானால் குறைக்க முயற்சி செய்யலாம்.

1 comment:

மின்னுது மின்னல் said...

இவனுங்க திருந்த மாட்டானுங்க