Sunday, August 5, 2012

சிற்றேடு இதழில் வெளிவந்த கூடங்குளம் பற்றிய கட்டுரை


                கூடங்குளம் – சிட்டுக் குருவிகளும் CFL பல்புகளும்

                     18.03.12

     வங்காள விரிகுடா அதே பழைய அலைகளால் ஊர்க்கரையை தழுவிக் கொண்டிருக்கிறது.  இடிந்தகரையில் தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட ஒரு சில அடி நீள, அகலத்திற்கு பந்தல். கடல் மேல் எரிந்த சூரியன் பந்தல் துளைகளின் வழி நிலத்தில் நூறு கண்களைப் பதிக்கிறது. சில பெண்கள் பீடி சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், சில இளைஞர்களும், குழந்தைகளும் தேவாலய முன்புற வாசலை மேடையாக்கி அமர்ந்திருக்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமை, இளைஞர் மாநாடு அந்தப்  பந்தலில் நடக்கிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கிராமம் ஒன்றிற்கு ஒரு இளைஞர் வீதம் உரை நிகழ்த்துகிறார்கள்.  ஞாயிற்றுக் கிழமை தனியார் அலைவரிசைகளில் அரட்டை அரங்குகளில் பேசுபவர்களைக் காட்டிலும், பண்டிகை தினங்களில் கயலான் கடை தலைப்புகளில் பட்டிமன்றங்களில் உளறிக் கொட்டுவதைவிடவும், அரசியல் மேடைகளில் முழங்கப்படும் சுற்றுச் சூழலை சீரழிக்கும் ஒலிமாசுகளை விடவும் அர்த்தம் மிகுந்த உரைகள் அவர்கள் நிகழ்த்தியது. யாரும் மேடைக்கு அஞ்சவில்லை, கட்டுப்பாட்டுடன் உணர்ச்சியும், நகைச்சுவையும் கலந்த உரைகள்.

                அரசியல் கட்சிகளில் இருந்து விலகிய இளைஞர்கள் கட்சிகளின், அரசியலின் தோல்வியை தங்கள் உரையில் அறிவிக்கிறார்கள்.  அரசியல் கட்சிகளின் தலைமைகள் நகைச்சுவை நாயகர்களாகவும், கோமாளிகளாகவும் ஆக்கப்படுகின்றனர்அங்கே கூடியிருந்த மக்கள் இதற்கு முன்பு பல கட்சிகளிலும் இயங்கியவர்கள்பாரதிய ஜனதாவில் இருந்து விலகி வந்த இளைஞர், அவருடைய இரத்தத்திலேயே கட்சி கலந்திருந்த போதும் கூடங்குளம் அணு உலைத் திறப்பிற்கு தலைமை ஆதரவு தெரிவித்திருப்பதால் முன்னூறு பேருடன் அதிலிருந்து விலகி போராட்டத்திற்கு ஆதரவாக இயங்குவதாகவும் பேசியது உலையைத் திறக்கச் சொல்லி அசிங்கமான அரசியல் நடத்தும் இந்து அடிப்படைவாத அமைப்புகளுக்கு சரியான பதிலாக இருந்தது. இன்னொரு இந்து இளைஞர் வேறொரு கிராமத்தைச் சேர்ந்தவர், இயேசுவை முதல் விடுதலைப் போராளி என்றார். அங்கே கூடியிருந்தவர்களுக்கு இப்போது அரசியல் கிடையாது, தலைமையின் பாதங்களைக் கழுவித் திரியவேண்டியதில்லை, எந்த சித்தாந்தங்களின் சுமையும் கிடையாது. அவர்கள் போராடுவது ஒரே ஒரு கோரிக்கைக்காக மட்டுமே, அது வாழவதற்கான வேண்டுகோள்.   மிகப் பழையதும், தொடர்ந்து கோரப்படுவதும் ஒடுக்கப்படுவதுமான கோரிக்கை.  சில நூறு பேர்கள் கூடியிருந்து உற்சாகமாக, உரிமைக்கான கோரிக்கை எழுப்பப்படும் போது கைதட்டி ஆரவாரிக்கிறார்கள். பந்தலுக்குள் நுழைந்துவிட்ட சிட்டுக் குருவிகளும் ஆதரவாக கீச்சொலிக்கின்றன. மிடாஸின் விரலைப் போலத் தொங்கிக் கொண்டிருந்த  CFL பல்புகள் சிட்டுக் குருவிகள் உறங்கப் போய்விடும் இரவு நேரத்தில் பந்தலில் தொடர் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஒளியூட்டும். கேருபீன்களும், புனிதர்களும் சுற்றிப் பறக்கும் கூரைக்கு கீழே மர வேலைப்பாடுகளுக்கு உள்ளே மாதாவும்  அவளுக்கு கொஞ்சம் முன்பக்கம் திரும்பவும் ஒரு முறை நிகழ்பவற்றின் மெளன சாட்சியாக நிற்கிற சுதனும் தேவாலயத்திற்குள் அவரவர் இடத்தில் இருக்கிறார்கள்.

     அங்கே நிகழ்கிற போராட்டம் எளிமையான கோரிக்கைக்காக என்றாலும், அந்த எளிமை எதிர்ப்பது மாபெரும் சக்தியை. அந்தச் சக்திக்குப் பெயர் ”அரசு”. அதன் இருப்பை சில கிலோமீட்டர்களுக்கு முன்பாக நீள் பாதையொன்றின் முன்னால் திறந்து வைக்கப்பட்டிருக்கும் கேட்டின் முன்பு குவிந்திருந்த காவல் துறையினரின் சீருடையிலும் தங்க நிறத்தில் நின்றிருக்கும் காமராஜர் சிலையிலும் உணர முடிகிறது (என்ன ஒரு சாதி அரசியல் இந்த ”அரசு” செய்வது). அந்தப் பாதை நீண்டு மசூதி முகட்டுகளைப் போன்ற அமைப்பில் கட்டப்பட்ட நிற்கும் கட்டிடம் நோக்கிப் போகிறது. அரசு காக்க நினைக்கும் பாதை அதுதான். அதைக் கடந்து முட்செடிகளும், அங்கங்கே தென்னைகளும் வாழைகளும் பனைகளும் நின்றிருக்கும். அவற்றின் ஊடாக பந்தலுக்குப் போகிறது தார்ச்சாலை. இந்தப் பாதைதான் போராட்டக்கரார்களின் பாதை.

     இடிந்தகரைக்குப் போகிற வழியில் கூடங்களும் தாண்டிப் போகும் போது அங்கங்கே விட்டு விட்டுத் தெரிகிறது அணு உலை.  வாழ்விற்கான கோரிக்கைக்கும் அரசு இயந்திரத்தின் ஆற்றல் தேவைகளுக்கும் இடையில் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு தன் கர்ப்பத்தில் உலகின் அதி அழிவுப் பொருளை தரித்திருக்கும் உலை. பதினாலாயிரம் கோடிகள் செலவில் கட்டப்பட்ட பிரமாண்டமான மரணக் கூடம்.

     பந்தலில் போராடிக் கொண்டிப்பவர்களின் குரலை கேட்கவிரும்பாமலும், தொடர் உண்ணாவிரத்தின் பசித்த வயிறுகளைக் குறித்த அக்கறையின்றியும் ஒரு சமூகம் இருக்கிறது. அந்த சமூகத்தில் அரசு அலுவலகங்கள், சட்டமன்ற நாடாளுமன்ற கட்டிடங்கள், காவல் நிலையங்கள் இவற்றால் பேணப்படும் மக்களும் உள்ளனர். அந்த நாளை அவரவர் விருப்பத்தில் கழித்து வருகின்றனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. வரலாற்றில் எது ஒன்றும் இருமுறை மட்டுமின்றி பலமுறையும் நிகழும் போல. சில வருடங்களுக்கு முன்பு அங்கே இவ்விரு நாடுகளுக்கு இடையே போர் நடந்தது. கிரிக்கெட்டிற்கும் போருக்கும் இந்த இரு நாடுகளுக்கிடையே பெரிய வித்தியாசம் இல்லை. அப்படி வளர்க்கப்பட்ட சமூகம் மின் தடை நேரத்தில் பந்தலுக்கு கீழ இருப்பவர்களையும் சலித்துக் கொள்கிறது. இச்சமூகம் அணு உலை திறந்தால் அதன் பிரச்சனை சரியாகிவிடும் என திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது. எந்தப் பற்றாக்குறையையும் இதுவரை தீர்த்திராத ”அரசு” மின்பற்றாக்குறையை தீர்த்துவிடாது எனத் தெரிந்தாலும் நம்புவது போல நடிக்கிறது.

     அறிவியல், வாழ்வாதாரம், சமூகத்தின் ஆற்றல் தேவை, ஆயுத உற்பத்தி போன்ற சொல்லாடல்களை ஊடகங்கள் அவற்றின் அரசியல்களுக்கு ஏற்ப திரித்தும், மறைத்தும், ஓங்கிஒலித்தும் ஒளிபரப்புகின்றன, அச்சடிக்கின்றன.

     மாநாட்டின் நிறைவாக இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து தங்களை வழிநடத்த ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் தலைவர் உரையாற்றுகிறார். உரை முழுக்கவும் அவர் வலியிறுத்துவது வன்முறையின்றி போராடுவது எப்படியென்று. காவல்துறையினர் தடியடி நடத்தினால் பின்கழுத்தில் விரல்களைக் கோர்த்து குப்புறப்படுத்துக் கொள்வதின் மூலம் கொல்லப்படுவதிலிருந்தும், முக்கிய உறுப்புகளை காப்பாற்றவும் முடியுமென்றும் வகுப்பெடுக்கிறார்.  மேலும் காவல்துறையினரும் மனிதர்கள்தானே, இரண்டு அடி அடிப்பார்கள் பிறகு அடிப்பதை நிறுத்தி விடுவார்கள் என்கிறார். ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் காந்தி படத்தில் வரிசை வரிசையாகச் சென்று அடிவாங்கும் காட்சி நினைவுக்கு வருகிறது.  ஒலிபெருக்கியில் ஒலிக்கும் இந்தக் குரலைக் கேட்க அது சென்றடையும் தூரம் வரையிலும் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை.

     இதற்கு முந்தையநாள்தான் அணு உலை திறக்க ஆதரவாகவும், ஒரு காலத்திலும் நிகழவே சாத்தியமற்ற மின்பற்றாக்குறை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டியதை வலியுறித்தியும் எடுக்கப்பட்ட குறும்படமொன்றை வெளியிட்டு இந்த திருநாட்டின் கப்பல் போக்குவரத்து மந்திரி சொல்கிறார், போராட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று. இந்த இரும்புக்கரம் என்பதற்கு அரசியல் அகராதியில் கொலை என்று கூட அர்த்தமிருக்கிறது. இப்படி ஒரு மந்திரி உலகின் பெரிய ஜனநாயகத்தின் மத்திய அமைச்சர். ஜனநாயகம் பற்றி குறைந்த பட்சம் சுருக்க, அறிமுகப் புத்தகம் கூட படித்திருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.  இப்படிப்பட்டவர்கள்தான் இந்த மிகப்பெரிய ஜனநாயக நாட்டையும், எந்தக் கேள்வியும் கேட்க விரும்பாத மக்கள் கூட்டத்தையும் ஆள்பவர்கள்.

     போராட்டக்காரர்களை வழிநடத்துபவர் பந்தலுக்கு அருகிலிருக்கும் பாதிரியார் பங்களாவில் (பிரித்தானிய(கால) வடிவக் கட்டிடம்) ஊடகமொன்றிற்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். வெளியே காத்திருக்கச் சொன்னார். மூன்றாம் கட்டப் போராட்டத்தின் 153வது நாளில், வலிமைமிக்க அரசுகளை எதிர்த்து போராட்டத்தை வழிநடத்துபவரை எவ்வித பாதுகாப்புச் சங்கடங்களும் இன்றி சந்திக்க முடிவது வெகு ஆச்சரியமாக இருந்தது.  நீலவண்ண சட்டையும், வெள்ளை வேட்டியும் அவருடைய உடை. கடலையும், சமாதானத்தையும் சுட்டுவதாக இருந்தது.

     வெளியே “இடிந்தகரை பொதுநிதி வவுச்சர்”களையும், ரசீதுகளையும் வைத்துக்கொண்டு இருவர் கணக்குவழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு புதன்கிழமையும் இடிந்தகரை மக்கள் தாங்கள் சம்பாதிப்பதில் 10% ஊர்ப்பொது நிதிக்கு வழங்கவேண்டும். கணக்குப்பார்த்துக் கொண்டிருந்தவர் சொன்னது, “ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு இருக்கு. ரசீது இல்லாம எந்தச் செலவும் செய்யறதில்லை”. ஆர்வமாக உரையாட வந்த இன்னொருவர் கிட்டத்தட்ட பொறுமையைச் சோதிக்கும் வண்ணம் பேசினாலும் அந்த உரையாடலில் இருந்து சொல்வதற்கும் இருக்கவே செய்கிறது.  “இந்த மாதாகோயிலு 120 வருசத்துக்கு முன்னாடி கெட்னது. என்னவெச்சு கட்டியிருப்பாங்கன்னு சொல்லு” என்றார்.  “காங்க்ரீட்தானே?”, “காங்க்ரீட்டா? கல்லுப்பா, பதினி, பனவெல்லம்  போட்டுக் கெட்டினது. இதோட உறுதி அந்தக் கட்டடத்துக்கு இருக்கமா? என்ன வெளங்குதா?”

பந்தலில் இருந்து கிழக்கே இருபது முப்பது அடிகள் நடந்தால் விரிகுடா. சுனாமிக்குப் பிறகு கடற்கரையில் போடப்பட்டிருக்கும் கல்வரிசையின் முடிவில் அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் . அவருடன் சேர்ந்து சுனாமி அரித்த கடற்கரையோரம் நடந்து அணு உலையை தெளிவாகப் பார்க்க முடிந்தது. ”எங்க ஊர்லேர்ந்து ஐயாயிரம் பேர் வளைகுடா நாடுகள்ல கப்பல்கள்ல வேல செய்யிதம். அவங்க சம்பளத்துலேர்ந்தும் 10% ஊர்ப்பொது நிதிக்கு கொடுக்கணும். அது ஒண்ணுதான் எங்களுக்கு வெளிநாட்லர்ந்து வாற நிதி”.  இதுதான் வெளிநாட்டிலிருந்து நிதி வருதுன்னு சொல்றாங்க எனக் கேட்டதற்கு பதில்.  நூலானை நீந்த வைத்து களித்திருந்தனர் மூவர். கற்களோரம் உரசிக்கொண்டிருக்கும் நீரில் நீந்திவந்தது நூலான். இன்னொருவர் வலையைத் தைத்துக்கொண்டே, இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களின் மீதிழைக்கும் கொடுமைகளை வசைவார்த்தைகளோடு சொன்னார்.  வசைவார்த்தைகளை நீக்கிவிட்டால் இலக்கணப் பிழையோடுதான் அவர் சொன்னதை எழுதமுடியும். சுனாமி காலனி தூரத்திலிருந்தது. ஊருக்குள்ளும் சில கட்டிடங்கள் சுனாமி நிதியில் கட்டப்பட்டிருந்தன. ”அதிலயும் ரொம்ப ஊழல்சார். பாதியத் தின்னு செமிச்சிட்டாங்க” என்றார் அந்த இளைஞர்.

ஆலயத்துக்குள் நுழைந்தால் மூவர் சூழ்ந்துகொண்டு கேட்டது, “ஜெயலலிதா ஒரு முடிவெடுத்தா அத மாத்திக்க மாட்டாங்கன்னு சொல்றாங்க.  சங்கரன்கோவில்ல தேர்தல்ல ஜெயிச்சா போராட்டத்த ஒடுக்கீடுவாங்களோ?”.  அந்தக்கேள்விக்கு விடை 19ம் தேதி அவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே கிடைத்தது.  “அரசியல்வாதிகள் நல்லது செய்யறேன்னு சொன்னாக்கூட அது அவங்களுக்கு நல்லதுதானே ஒழிய மக்களுக்கு இல்ல” என்றதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தக் கிராமத்தில் பெரும்பான்மையினர் அதிமுகவினர். செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொடுக்கச் சொன்னபோது, “நல்லா ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போட்டுக்குங்க” என்றார் மூவரில் ஒருவர்.

மூன்று மணிக்குமேல் இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்படப்போகும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனக் கோரி இடிந்தகரையிலிருந்து வைராவிகிணறு வரை ஊர்வலம் துவங்கியது. பெண்கள் முன்னே நடக்க, ஐந்தைந்து பேர்களாக நடக்கத்துவங்கினர். சில குழந்தைகள் ஊர்வலத்தலையாக நகரும் டெம்போவில் ஏறிக்கொண்டி கோரிக்கைகளை முழங்கிக்கொண்டிருந்தனர். ஊர்வல முடிவில் போராட்டத்தை வழிநடத்துபவர் ஊடகங்களுக்கு பேட்டிகொடுத்தார். “அணு உலையை எதிர்த்து போராட்டம் நடத்துகிற நீங்கள் ஏன் இலங்கைப்பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டும்? எனக் கேட்டதற்கு “எங்கள் மீதும் ஒரு நந்திக்கடல் நிகழக்கூடும் எனக் கருதுவதாலும் எங்களை ஆதரித்தும் மக்கள் வரவேண்டும் என்பதற்காகம் அங்கே கொல்லப்பட்டது தமிழ்ச்சொந்தங்கள் என்பதாலும் இந்தியா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனக் கோருகிறோம்” என்றார்  ஊடகங்களில் எப்படி வந்ததென்று தெரியவில்லை.

மேலும் அடுத்த நடவடிக்கையாக ஊருக்கு பத்துபேர் கொண்ட குழுவமைத்து போராட்டத் தலைமை கைது செய்யப்பட்டாலும் தொடர்ந்து போராட்டத்தை நடத்துவதற்கான உத்திகளை வகுக்கிற கூட்டத்திற்கு வரச்சொல்லிவிட்டு வழிநடத்துபவர் விலகிச் சென்றார்.  அவர் கைது செய்யப்படுவதை ஊகித்தவராகவே அன்று முழுக்கப் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் சிறை சென்றாலும் அடுத்து வருகிற தலைமையை சோதித்துப்பார்த்து ஏற்கவேண்டும் என்றார். மகிழ்ச்சி என்பது போராட்டம் என்றார் மார்க்ஸ். அதை அங்கே பார்க்கமுடிந்தது. “போராட்டம் எந்தப் பிரச்சனையும் இல்லாம பிரமாதமா போயிட்டிருக்கு, டைம் கிடைக்கும்போது வாங்க” என்றார் கைகுலுக்கி விடைபெறும்போது.

                     19.03.12
அரசு பொய்கள் சொன்னது.  தமிழக அரசு நியமித்த குழு கூடங்குளம் பகுதியில் சுனாமியோ, நிலநடுக்கமோ வரவாய்ப்பில்லாததால் அணு உலையை திறக்க ஆதரவளிப்போம், மேலும் ரூ.500 கோடி அப்பகுதி வளர்ச்சிக்கு வழங்கப்படும் என்றார்.  இடிந்தகரையில் குடி தண்ணீர் கேட்டு அதில் பாதியைக் குடித்துவிட்டு முகம் கழுவப் போனபோது அது விலைக்கு வாங்கின தண்ணீர் என்றார் நீர் கொடுத்தவர். இந்த 500 கோடியில் ஒரு குடம் குடிதண்ணீர் கூட வழங்கப்படப் போவதில்லை என்பதை நம்பமறுப்பவர்கள்கூட நம்பமாட்டார்கள். 3000 போலிஸ்காரர்கள், துணைஇராணுவப்படையினர், வஜ்ரா வாகனம், கடலோரக் காவல்படை ஹெலிகாப்டர்கள் (மீனவர்கள் கொல்லப்படும் போது ஒருவேளை காவல்படையின் ஹெலிகாப்டர்கள் பழுதாகியிருக்குமோ என்னவோ?) துணையுடன் கூடங்குளத்தில் குவிக்கப்பட்டனர். இதுதான் அரசும் ஆள்பவர்களும் தங்கள் சதுரங்கப் பலகைகளில் நகர்த்தும் படையணிகளின் மினியேச்சர்.

அரசின் பொய்களை எதிர்த்து எந்த நீதிமான் கட்சியினரும் குரலெழுப்பவில்லை. பொய்கள் அரசுகள் பயன்படுத்தும் வாக்கியங்களின் ஆயுதம். ஆயுதங்கள் அரசுகள் இயக்கிப்பார்க்கும் பொய்கள். வாக்கியங்களும் துப்பாக்கிகளும் ஒன்றே அரசின் நாவிலும், கைகளிலும். எதிர்காலத்தில் சுனாமி காலனியைக் கூட அரசு இடித்துவிடலாம். ஆனால் சுனாமி அரித்த கடற்கரையை எந்த அரசின் வல்லமையாலும் மாற்றிவிட முடியாது.

இடிந்தகரைப் பந்தலில் சிட்டுக்குருவிகள் இவர்களை எதிர்த்து தொடர்ந்து கீச்சிடக்கூடும். துப்பாக்கிகளுக்கு காதுகள் கிடையாது, அரசுகளுக்கும் என்பது அவைகளுக்கு தெரிந்தே இருக்கும்.
அணு உலையில் பணிபுரியும் அலுவலர்களுக்காக கட்டப்பட்டிருக்கும் “அணுவிஜய்” நகர நுழைவாயிலில் தொங்கும் அட்டையில்.
“Drive Safely, because Life has no Spare” என்று எழுதப்பட்டிருந்தது.
இடிந்தகரை மக்கள் சொல்வதும் இதுதானே?  

1 comment:

ஜீவ கரிகாலன் said...

இப்பொழுது இந்தக் கட்டுரயை மறுபடியும் வாசித்திட.... வலியின் கடுமை?