இசை
- தத்துவமும் அழகியலும், அதிகாரமும்
பண்பாட்டுத்தளத்தில் பழங்குடியின சமூகங்கள்
முதலாக அனைத்து சமூகக் குழுக்களிலும் நிலவுகிற பொதுமைகளில் இசையும் ஒன்று. இசை உருவாக்கமும்
அனுபவித்தலும் மிகப் பழமையான காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து நிகழ்ந்து வருகிற
கலை வடிவங்களில் முதன்மையானதாகவும், கலை என்கிற வகைமையில் எவ்வித கல்வியும் அறிவும்
தேவைப்படாத அதனாலேயே சமூகத்தின் ஒர் அடுக்கிற்கு மாத்திரம் உடைமையானதாக இல்லாத சுதந்திரமும்
கொண்டதாக உள்ளது. நவீன ஓவியத்தின் ஒரு கோட்டைக் கூட புரிந்து கொள்ள முடியாத, கவிதைகளில்
ஒரு வரியைக் கூட புரிந்துணராமல் போகக் கூடிய சாத்தியங்கள் நிலவும் போது முழுக்கவும்
இசை, கருவிகள், அதன் நுட்பங்கள் குறித்து எவ்வித கவனமும் இன்றி இசையின் அழகியலை புரிந்துணர
முடிவது கலை வடிவங்களில் சில அறிவோடும் சில ஆன்மாவோடும் உரையாடலை நிகழ்த்துபவை என்கிற
முடிவிற்கு வர வாய்ப்பளிக்கிறது. இசை எவ்வாறு மானுட சமூகத்தின் வரலாற்றில் ஒர் அம்சமோ
அதே போல இசைக் கருவிகளுல் பலவும் நூற்றாண்டுகள் வரலாறு உடையவை. பல சமூகங்களின் இசை
பரிவர்த்தனைகளில் வடிவங்களைவிடவும் இசைக் கருவிகள் அதிகம் கொடுக்கல் வாங்கலுக்கு உள்ளாகியுள்ளன.
இசை என்பது வடிவத்திற்கு உட்பட்டதாக இருக்கும்
போது இசைக் கருவிகள் பல்வேறு ஒற்றுமைகள் இல்லாத வடிவங்களுக்கும் பங்களிக்கிற தன்மையைக்
கொண்டுள்ளதானது, கருவிகள்தான் இசை வடிவங்களை உற்பத்தி செய்திருக்க முடியும் என்கிற
முடிவிற்கு நம்மை நகர்த்துகிறது. கருவி ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டால் புதிய
வடிவங்களை உருவாக்க முடியுமா என்பதும் எளிமையாக பதில் அளிக்கிற வகையில் இல்லை. எனினும்
மின் கிதாரை உருவாக்கியது ராக் இசை வடிவத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவியது. இன்று மின் கிதாரின் பங்களிப்பில்லாமல் போகும் போது
ஒரு பாடலை நாம் ராக் பாடல் என வகைப்படுத்த முடியாது. இசை வடிவங்களை வகைமைப் படுத்துவதில்
கருவிகளும் கவனத்திற்குரியதாக உள்ளது. வடிவங்களை சார்ந்திராதவை இசைக் கருவிகள் ஆயினும்
வடிவங்கள் கருவிகளை சார்ந்துள்ளன (Instruments are form independent but music
forms are instrument dependent).
இசைக்கருவிகள் தேவையற்ற பாடல் வடிவங்களும்
உண்டு என்றாலும் பாடல்களின் வெறுமையை - ஒருவகையில் பேசுவற்கான மொழியின் வார்த்தைகளை
பாடுவதற்காக உபயோகிக்கும் போது நேர்கிற கடினத் தன்மையை இலகுவாக்குவதும், மொழியின் வெற்றிடத்தை
நிரப்புவதாகவும் இசை உள்ளது.
மொழி அதன் பேச்சுக்கான தன்மையிலிருந்து விடுபட்டு
பாடுவதற்கானதாக மாறும் போது மாத்திரை மாற்றங்கள்
நிகழ்கின்றன. ஒரு வேளை இந்த மாத்திரை மாற்றங்கள்தான் இசை வடிவங்களின் மூலமோ என்னவோ?
ஒரு சொல் அதன் மாத்திரை அளவை குலைப்பதின் மூலம் பாடுவதற்குரிய வடிவத்தை அடைவது போலத்தான்
ஒரு ஒலி அதன் கால அளவை குலைப்பதின் மூலம் இசையாக வாத்தியங்களில் ஒலிக்கிறது. ஒலியிலிருந்துதான்
மொழியும், இசையும் பிறக்கின்றன என்றாலும் மொழி பாவிக்கப்பட்டு எழுகிற உணர்வுகளும் இசை
உண்டாக்குகிற உணர்வுகளும் வேறாகவும் தோன்றுகின்றன. இசையனுபவம் என்பது சமயங்களில் கருத்துக்களால்
சுட்டிவிட முடியாத வெளியை ஏற்படுத்தி விடுகிறது. வாக்கியங்கள் பேசப்பட்டோ, எழுதப்பட்டு
வாசித்து முடித்த உடனோ எதிர்வினைகளை எண்ணங்களில் உருவாக்கி விடுகிறது. ஒரு வேளை அதற்கான
எதிர்வினையை வெளிப்படுத்த முடியாமல் போவதில் தொடர்புச் சிக்கல் இருக்கலாம். ஆனால் இசையனுபவம்
நேரடியாக மனதில் உணர்வு நிலைகளை உருவாக்கி விடுகிறது. இவ்வித உணர்வு நிலைகளுக்கான எதிர்வினையை மொழியின்
துணையின்றிக் கூட நிகழ்த்த முடியும். பெரும்பாலும் இது மெளனத்தால் கூட சாத்தியமாகிறது.
இசைக்கான எதிர்வினையாக மெளனம் இருந்தாலும் இசையின் நோக்கமே மெளன வெளியை உற்பத்தி செய்வதாகவும்
கருதலாம். இசைக்கு எந்தவித நோக்கங்களும் இல்லை, வெளிப்பாடு, அனுபவித்தல் போன்ற கட்டுப்பாடுகளும்
அற்றது. மேலும் இசை அனுபவம் என்பது இசையைக் கட்டுப்படுத்த முடியாததும் கூட. வடிவம்
ஒன்றைத் தவிர அதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது. அதன் கருத்துரு எதுவாக வேண்டுமானாலும்
இருக்கலாம். இசையும் அதிகாரமும் குறித்து பின்னர் விவாதிக்கலாம். சில சமயம் இசை எவ்வித
அர்த்தங்களும் இல்லாததாகவும் இருக்கலாம். மொழிக்கு
அப்பாற்பட்ட உணர்வுநிலைகளும் இருக்கிற சாத்தியங்கள் உண்டு என்பதை இசை மட்டுமே நிரூபிக்கிறது.
சமயங்களில் இசை, உணர்வு நிலையை உணர்ந்து கொள்வதற்கும், அந்த நிலைகளை புரிந்து கொண்டு மொழியின் மூலம் வெளிப்படுத்துவதற்குமான
கால இடைவெளியில் மையம் கொள்கிறது அல்லது அந்த கால இடைவெளியில் உணர்வு நிலையை மொழி வரைக்கும்
கடத்துவதற்காகவும் உதவுகிறது.
அர்த்தமற்ற வெளியை காலத்தின் பொருள்மைய
((((meaning centric) தருணங்களில் உருவாக்குகிறது இசை. ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் கேட்கப்படும்
இசை அதன் அர்த்தத்தை அடையாளப் படுத்துவதாக இருந்தாலும் அந்தத் தருணத்தில் இசை உருவாக்குகிற
வெளி அனுபவ நிலைகளை காலத்திலிருந்து பிரித்துவிடுகிறது. சிலசமயம் வரலாற்றுக் காலகட்டத்தின் அடையாளமாகவும்
இசை இருக்கிறது.
வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது, அறிவியல்,
தத்துவத்தின் இடத்தை எடுத்துக் கொண்டுவிட்டது, இனி தத்துவத்திற்கு இருப்பதெல்லாம் மொழிச்சிக்கல்
மட்டுமே என விவாதிக்கப்படுகிற காலத்திலும் கூட இசை இன்னுமே அதன் வசீகரம் குன்றாததாக
உள்ளது. சிலசமயம் இலக்கியம் கூட சலிப்பை உண்டாக்கிவிடுகிறது.
இசையின் அழகியல் அது உருவாக்கும் மனநிலைகளையும்
சித்திரங்களையும் கடந்து அதன் நுடபங்களால் பயிலப்படுகிறதாகவும் இருக்கிறது. இசைத் துண்டை
கேட்பது, அது எழுப்பும் உணர்வு நிலைகளை தியானிப்பது என்பது இசையின் அழகியலை தோற்றப்படுத்தினாலும்
அதன் வடிவ நுட்பங்களை அறிந்து கொள்வதன் மூலம் - முறையான (முறையற்ற) பயிற்சி உதவியுடன்
– அதன் அழகியல் வேறொரு அல்லது பல்வேறு தோற்றங்களை உருவாக்கிவிடுகிறது. நுட்பங்களை அறிந்து
கொள்வது இசை கேட்பதற்கு கட்டாயமான முன்பயிற்சி இல்லை எனினும் நுட்பமறிந்து கேடகப்படும்
இசை அதன் வெளிப்புற மற்றும் அகவயப்பட்ட அழகியல் கூறுகளையும் அறிய உதவும். அனுபவிப்பதோடு முடிந்துவிடாமல் அறிந்து கொள்வதற்குமான
வாய்ப்பை இசை வடிவங்கள் அளிக்கின்றன. இந்நிலை இசையை அறிவு என்பதாகவும் மாற்றுகிறது. இதுவே இசையிலும் இரண்டு பிரிவுகளை ஏனைய கலைகளைப்
போலவே உருவாக்கிவிடுகிறது. கலையின் முதன்மை
நோக்கமான அதனை அனுபவிப்பது, கலை அறிவாகும் மாறும் இடத்தை நோக்கி நகர்வது இரண்டுமே இசையிலும்
சாத்தியாமாகின்றன.
இசையை அறிவாக அணுகுதல் கோட்பாடுகளையும்,
விமர்சனங்களையும் உருவாக்குகிறது. இது மற்ற கலைகளுக்கும் இசைக்கும் இருக்கும் பொதுவான
கலையின் நோக்கம் மற்றும் எல்லையைத் தாண்டின இன்னொரு பரிமாணம்.
அறிவும் கலையும் மனித இருப்பின், இயங்கியலின்
இரு வெளிப்பாட்டு வடிவங்கள். இதில் கலை மட்டுமே தீவிர சிந்தனையிலிருந்து முளைக்க வேண்டிய
நிலைமை இராதது. ஒரு வகையில் கலை அறிவுக்கு
எதிரானது. கலை உருவாக்கும் அனுபவம் அறிவு உருவாக்கும் வெளிப்படையான, முடிவான பதில்களுக்கும்
அப்பாற்பட்டு உண்மைத்தன்மை, அதன் நிரூபணம் போன்ற தேவைகள் இல்லாதது. அறிவென்பது உண்மைத்தன்மையால் கட்டுப்படுத்தப்படுவதாக
இருக்கும் போது கலை கற்பனை வழங்கும் சுதந்திரத்தை - அதுவே மனித மனத்தின் ஆதாரங்களில்
ஒன்றாகவும், எண்ணங்களால் எளிதாக உருவாக்கக் கூடியதாகவும் உள்ளது – மிக சுலபமாக உபயோகிக்கிறது. அறிவுசார் துறைகளில் நிகழும் பரிசோதனைகளுக்கு இணையாக
கலைகளிலும் பரிசோதனைகள் நிகழ்கின்றன. இந்தப்
பரிசோதனைகள்தான் கலையின் இயங்கியலாகவும், புதுப்புது அழகியல் விதிகளையும் உருவாக்குவதாகவும்
உள்ளது. கலை மனித மனத்தின் அடிப்படைகளுக்கு நெருக்கமானது. இசை கலைவடிவங்களில் இன்னும்
மனத்திற்கு நெருக்கமானது.
அழகியல் இசையைப் பொருத்தவரையிலும் அதன் நுட்பங்களின்
சிக்கலான அமைப்பால் (complexities) உருவாகிறது.
எவ்வளவுக்கு எவ்வளவு சிக்கலானதாக அதன் நுட்பங்கள் அமைகின்றனவோ இசையின் பரிமாணங்களும்
விரிவடைகின்றன. ஒரு படிமத்தை உருவாக்க இசை அதன் அமைப்பில் சிக்கல்தன்மையை கொண்டிருக்க
வேண்டியிருக்கிறது. இசையின் நுட்பங்கள் கூடக்கூட
அந்த வடிவங்களின் அழகியலும் விரிவடைகிறது.
இசை அடையாள உருவாக்கத்திலும் பங்கு வகிக்கிறது. சமூகத்தில் நிலவுகிற வகுப்புகளின் பண்பாட்டு அடையாள
உருவாக்கத்தில் இசையும் ஒரு கூறாகும். இங்கிருந்துதான் இசையும் அதிகாரமும் குறித்திப்
பேச வேண்டியுள்ளது. இசை அதன் வடிவ சாத்தியங்களாலும்
நுட்பங்களாலும் வகுப்புகளின் அடுக்கில் மேல்
கீழ் பாவிப்பிற்கு உள்ளாகிறது. செவ்வியல் மற்றும் நுட்பங்கள் நிறைந்த இசை மேல் வகுப்பினரால்
பாவிக்கப்படுவதோடு ஒவ்வொரு வகுப்பும் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
தனிநபர்களின் இசை ரசனையிலும் நுட்பங்கள்
நிறைந்த மற்றும் செவ்வியல் இசை நோக்கிய நகர்வே ரசனைத் தேர்ச்சியாகவும் இசையில் மேல்நோக்கிய
வளர்ச்சியாகவும் பார்க்கிற பார்வை நிலவுகிறது.
ஒரு இசை வடிவத்தை பாவிப்பது சுதந்திரத்தின்
அடையாளமாக மற்றும் அதிகாரத்திற்கு எதிராகவும் இருந்திருக்கிறது. இசை வடிவங்கள் அதிகார
எதிர்ப்பு, அதிகார உருவாக்கம் இரண்டிற்கும் பங்களிப்பதாக இருந்தாலும் இசையை அதிகாரத்திலிருந்து
பிரித்தும் பார்க்கமுடியும். இசை உருவாக்கம்,
விநியோகம், பரவலாக்கத்தில் நிலவும் அதிகாரம் இசையையும் பண்டமாக மாற்றிவிடுகிறது. இசை
உருவாக்கம் கூட அதிகாரத்திலிருந்து வெளியே இருக்கலாம் ஆனால் அதன் விநியோகமும், பரவலாக்கமும்
முழுக்க அதிகாரம் சம்பந்தப்பட்டது. அதிகாரத்தால்
கட்டுப்படுத்தப்படுவது, இசை பண்டமாக மாறுவது, பழங்குடியினர் அல்லாத சமூகங்களிலேயே நிகழ்கிறது.
நாகரிக சமூகங்களில் இசையும் அதிகாரத்தால் கட்டுப்படுத்த முடிகிறவற்றில் ஒன்றாக உள்ளது.
அதுவும் நிலவுகிற நுகர்வுமய உலகில் இசை கலைவடிவம் என்பதைக் கடந்து பண்டம் என்கிற அளவில்
உருவாக்கத்திற்கு பதிலாக உற்பத்தி செய்யப்படுவதாக மாறிவிட்டது. இங்கே பழங்குடி மற்றும்
கிராமிய வாழ்க்கை முறை மற்றும் நாகரிக, நகர்ப்புற வாழ்க்கை முறை என்கிற எதிர்மைகளுக்கு
இசையும் உள்ளாகிறது. நம்காலத்தின் அதிகாரம்
கிராமப்புற வாழ்க்கை முறையைக் கூட நாகரிகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டது தனித்து பேசப்பட
வேண்டிய விசயம். ஆனாலும் கிராமப்புறங்களில் நிலவுகிற இசைவடிவங்களும், இசை உருவாக்கங்களும்
பாவிக்கப்படுவது, அதிகாரம் பரவலாக்குகிற இசைவடிவங்களால் சிதைவுக்குள்ளாவது கிராமிய
வாழ்க்கை முறையின் சிதைவுக்கும் அடையாளக் குழப்பங்களுக்கும் உதாரணமாக எடுத்துக்கொள்ள
முடியும். இன்று நகரங்களில் அடையாளங்களை உருவாக்குவதில் இசை எவ்வித பங்கு வகிக்கிறதோ
அதே அளவிற்கு கிராமங்களிலும் வகிக்கிறது.
2 comments:
இசைக்கான எதிர்வினையாக மெளனம் இருந்தாலும் இசையின் நோக்கமே மெளன வெளியை உற்பத்தி செய்வதாகவும் கருதலாம். இசைக்கு எந்தவித நோக்கங்களும் இல்லை, வெளிப்பாடு, அனுபவித்தல் போன்ற கட்டுப்பாடுகளும் அற்றது. மேலும் இசை அனுபவம் என்பது இசையைக் கட்டுப்படுத்த முடியாததும் கூட. வடிவம் ஒன்றைத் தவிர அதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது. அதன் கருத்துரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். - pinitinga boss...
இசைக்கான எதிர்வினையாக மெளனம் இருந்தாலும் இசையின் நோக்கமே மெளன வெளியை உற்பத்தி செய்வதாகவும் கருதலாம். இசைக்கு எந்தவித நோக்கங்களும் இல்லை, வெளிப்பாடு, அனுபவித்தல் போன்ற கட்டுப்பாடுகளும் அற்றது. மேலும் இசை அனுபவம் என்பது இசையைக் கட்டுப்படுத்த முடியாததும் கூட. வடிவம் ஒன்றைத் தவிர அதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது. அதன் கருத்துரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். -- realy superb..
Post a Comment