பொய் சொல்வதில் இருந்துதான் கதை சொல்வதும் வந்திருக்க வேண்டும். கதைகளும் பொய் சொல்வதே போன்று உண்மையைச் சொல்வதாய்
அமைவதால் புனைவென்கிறோம். உண்மையைப் புனைதல்.
உண்மை என்பதே கூட இல்லாமலும், சார்புடையதாகவும், பல உண்மைகளாகவும் இருக்கும் பட்சத்தில்
புனைவுகளும் பலவாறாக உள்ளன.
நேர்ச் சந்திப்புகளில் சுந்தர ராமசாமி எழுத்தாளனாக வேண்டுமென்பது ஒரு
Passion எனவும், நாஞ்சில் நாடன் “என்னிடமும் சொல்வதற்கு கதைகள் உண்டு என நம்பவேண்டும்”
என்றனர். கதைகள்தான் அவர்களிடம் சில கேள்விகளைக்
கேட்கத் தூண்டியவை. மேலும் சிலர். பலவாறான விளக்கங்கள் சொல்லப்பட்டாலும் புனைவும் உரைநடையும்
மொழியின் வழி சில சாத்தியங்களை செய்துபார்ப்பதே. அது கவிதை போல் மொழியின் சாத்தியமாக
இன்றி மொழியை ஒரு கருவியாகக் கொண்டு வேறொன்றைச் சாத்தியமாக்குவது. புனைவு மொழியிடமிருந்து கடன் பெறுகிறது. இப்படிக்
கொண்டால் புனைவிற்கு மொழி இரண்டாம் பட்சம்தான். கவிதையும் மொழியும் இணைவதைப் போல புனைவில்
ஒரு இணைவு உண்டாக வேண்டியதில்லை. வெறும் மொழியால்
கதைகளை உருவாக்க முடிவதில்லை. அதன் உதவிகொண்டு சிலதைப் புனைய வேண்டியுள்ளது.
இலக்கியம் என்ற ஒன்று தோன்றி, ஒப்புக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து அதன்
வடிவம் சார்ந்து நிகழ்ந்த மாற்றங்களே நம்மிடம் சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் நிலைத்திருக்கின்றன.
நாவல்கள் எழுதப்பட்ட பின்புதான் சிறுகதைகள் தோன்றின. விரிவான ஒரு வடிவத்தை முயன்ற பிறகு பரப்பில் சிறியதான
கதைகள் வழி ஒரு சிமிழுக்குள் வெய்யிலை அடைப்பது போன்ற முயற்சியாக சிறுகதைகள் நம்மிடம்
உலவுகின்றன.
கதைகள் சொல்லப்பட
ஆரம்பித்த போதிலிருந்தே யதார்த்தமாக இல்லை.
யதார்த்தம் என்பதுதான் கதை சொல்லலில் கடைசியில் வந்தது. யதார்த்தத்திலிருந்து
விடுபடவே பல்வேறு எழுத்து முறைகள் குறிப்பிடத்தக்க வகைமைகளில் வடிவங்களில் எழுதப்பட்டன.
அவை பழைய கதை சொல்லல் முறையை மீளுருவாக்கம் செய்து “ஆயிரத்தோரு இரவுகள்” சொன்னவர்களோடு,
அமரந்தாவை விண்ணேகவிட்டவர்களுக்கு தொடர்ச்சியை நிறுவ முடிந்தது. ரேசன் கடையில் வரிசையில்
மனிதர்கள் நின்றால் யதார்த்தவாதக் கதை. அதே
வரிசையில் பாட்டரிகள் நிரப்ப ரோபோக்கள் நின்றால் அறிவியல் புனைவு. மீதி அந்த ரோபோட்டுகள் செய்வதும், மனிதர்கள் செய்வதும்
ஃபான்டஸி மட்டுமே பிள்ளைகள் பெற்றுக் கொள்வது உட்பட.
இத்தொகுப்பில்
உள்ள கதைகள் தேவைக்கும் அதிகமான காலம் வெளிவராமல் இருந்தவை. ”கனவு மிருகம்” எனும் கதை
மிகச் சிறியது என்றாலும் இரண்டு வருடங்களாக மாற்றங்களுக்கு உட்பட்டு ஒருவழியாக கோணங்கியின்
”கல்குதிரை”யில் பிரசுரம் கண்டது. பிரசுரமான
முதல் கதை “ஆப்பிள்” விகடனில் வெளிவந்த ஆண்டு 2007. இந்த ஐந்து வருடங்களில் மொத்தம் 7 கதைகள் மாத்திரமே
அச்சைப் பார்த்தன. ”கழிப்பறைக் குறிப்புகள்”
எனும் பிரசுரமான சிறுகதையை இத்தொகுப்பில் சேர்க்கவில்லை. மற்ற கதைகளோடு ஒப்பிடும் போது அது விளையாட்டுத்தனமாக
எழுதப்பட்ட கதையாகப் படுவதாலும், அந்தக் கதை ஒருவேளை மற்ற கதைகளின் போக்கோடு ஒட்டாமல்
தீவிரம் குறைந்து காணப்படும் என்பதாலும் அதைக் கைவிடவே விரும்புகிறேன்.
சோம்பல்தான் எழுதாமல்
இருப்பதற்கு முதலும் அடிப்படையான காரணமாக இருந்தாலும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட கதைகளைத்
தாண்டி புதிதாகச் சொல்வதற்கு எழத முனைபவை அனைத்துமே தகுதியானவை ஆகிவிடுமா என்கிற சந்தேகமும்
கூட. முடிக்காமல் விடப்பட்ட கதைகளும், முழுக்க
எழுதி “மறுசுழற்சி”க் கூடையிலிருந்தும் காணாமல் போய்விட்ட கதைகளும் உண்டு. அவை கருக்கலைய சரியாக வராதது குறித்த சந்தேகமே பெரிதும்
காரணம்.
இத்தருணத்தில்
”புதுவிசை” ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா, கோணங்கி, பா. வெங்கடேசன், ஆசிரியர் ஜெகந்நாதன்,
நண்பர் குணா ஆகியோருக்கு கதைகளின் பொருட்டும்,
யதேச்சையான சந்திப்பின் மூலம் எவ்வித வற்புறுத்தல்களும், சிபாரிசுகளும் இல்லாமல்
மிக உவப்பான முறையில் இக்கதைகள் தொகுப்பாக வெளிவரக் காரணமான நண்பர் சரவணனுக்கும் நன்றி.