தெருநாய்களைக் கொல்லவே விரும்புகிறேன்
அப்படியே அந்தப் பிச்சைக்காரர்களையும்
சென்ட்ரல் இரயில் நிலையத்தில் அரசு ஆஸ்பத்திரி
வாசலில்
குறிதெரிய படுத்திருக்கும் நோயாளிகளையும்
இயேசு விபாச்சாரியைத் தொட்டான் மாண்டவனை
உயிர்ப்பித்தான்
தொழுநோயாளியை குணப்படுத்தினான்
இந்நகரம் ஒரு முழுநேர இயேசுவை எதிர்பார்த்து
நிற்கிறது
குப்பைகளும் தூசியும் இல்லாத வீதிகளில்
குறிப்பாக முதல்வர் வசிக்கும் தெருவைப் போலவோ
ராஜ்பவன் முன்பிருக்கும் சாலையைப் போலவோ
சுத்தமான தெருவில் வசிக்கவே விரும்புவேன்
அங்கே நான் மட்டுமே குப்பையிடுவேன்
நான் மட்டுமே சிறுநீர் கழிப்பேன்
ஊனமுற்றவர்கள் இல்லாத உலகை
அடையாறு ஆற்றில் தோழிகளோடு படகோட்டும் நிலைமையை
நீங்களும் என்னைப்போல விரும்பவே செய்வீர்கள்
ஆனாலும் குப்பைகள் மிதக்கும் நகரத்தில்
மழைத்துளிகள்
பிளாஸ்டிக் உறைகளால் மூடப்பட்ட
காசநோயாளிகளின் நெஞ்சுச்சளியின் மீது விழுகின்றின
அடையாறு புற்றுநோயாளிகள் மருத்துவமனையில்
வாசலில் உணவருந்தும் பார்வையாளர்களின் வடைகளில்
ஆனந்த பவன்களின் ருசி
கூவம் ஆற்றிற்கு வடக்கேதான் தலைமைச் செயலகம்
அது சாக்கடையைத் தாண்டித்தான் மீதிநிலத்தை
ஆளவும் செய்கிறது
இந்தச் சூரியன் அழுக்கைக் காணவே எழுகிறது
அதன் பிரியம் அரசு ஆஸ்பத்திரியின் துர்நாற்றம்
மிகுந்த குப்பையில்
வீசப்படும் கலைக்கப்பட்ட கருவாக இருக்கும்
ராபர்ட் கிளைவ் இங்கேதான் திரிந்தான்
பாரதியார் இங்கேதான் பார்த்தசாரதி கோயிலில்
உண்டகட்டி வாங்கினான்
புதுமைப்பித்தன் திருநெல்வேலியில் ”இல்லாத”
விலைமாதர்களை மகாமசானத்தில் கண்ட நகரம் இதுதான்
எலெக்ட்ரிக் இரயில்கள் ஓடுகின்றன
இரண்டாம் விமான நிலையத்திற்கு அரசு திட்டமிடுகின்றது
குடிசை மாற்று வாரிய அபார்ட்மெண்டுகளில்
மோட்டர் வைத்து ஏற்றும் நீரில் அமிலம் கலந்திருக்கும்
மான்குட்டிகள் பன்றிகளோடு குப்பைகளை மேயும்
பக்கிம்ஹாம் கால்வாயில் மிதக்கும் மூட்டையின்
மீது தூங்கும் ஆமை
மேலே ஓடும் பறக்கும் இரயில்
ஆகக் கேவலமான குடிசையில் வாழ்பவர்க்கும்
ஆக மகா வசீகரமான போட்கிளப் மாளிகைகளில் வாழ்பவர்க்கும்
சமமாக ஓடுகிறது கருணைமிக்க சாக்கடைப் பேராறு
உங்களைப் போலவே
விநாயகர் சதுர்த்தி அன்று அதே சாக்கடையில்
சிலைகளைத் தூக்கிப் போடவும்
மீதி நாட்களில் மாதவிலக்குப் பெண்களின் நாப்கின்களைப்
போடவும்
பாலங்களில் நின்று சிறுநீர் கழிக்கவும் விரும்புவேன்
மெரினாவில் பெசன்ட்நகரில் கொட்டிவாக்கத்தில்
பின்னரவுகளில் உடல்களைத் தேடியலையும் குடிசைவாசியும்
குளிர்க்கண்ணாடிகள் பதிக்கப்பட்ட கார்களில்
அலைபவனும் புகைக்கும் கஞ்சாப் புகையில் இந்நகரம் தள்ளாடுகிறது
வடபழனி ஸ்டூடியோவில் அந்த நடிகை மேக்கப்
போடுகிறாள்
அந்த நடிகன் கடமையின் பொருட்டு அவளைத் தழுவத்
தயாராகிறான்
வெளிச்சம் வெளிச்சமாய் இரவின் மீது கொட்டுகின்றன
விளக்குகள்
No comments:
Post a Comment