Thursday, September 11, 2014

ஜோர்ஜ் லூயி போர்ஹே’வின் “ஒரு வேண்டுதல்”

ஒரு வேண்டுதல்



என்னில் ஒரு பகுதியாகிப்போன இரு மொழிகளிலும், ஆயிரமாயிரம் தடவைகள், எனது உதடுகள் உச்சரித்த, உச்சரித்தபடியே இருக்கப் போகும், பிரபுவின் வேண்டுதலை இதுவரையிலும் நான் பகுதி மட்டுமே புரிந்து வைத்திருக்கிறேன். இந்தக் காலை – ஜூலை 1, 1969 - மரபார்ந்ததாக இல்லாத என்னுடைய தனிப்பட்ட வேண்டுதல் ஒன்றை முயற்சித்துப் பார்க்க விரும்புகிறேன். அப்படியொரு செய்கை மனிதத்திற்கும் மேலானதொரு அர்ப்பணிப்பை கோருவதென எனக்குத் தெரியும்.  எல்லாவற்றிற்கும் முதலில், வெளிப்படையாகவே நான் எதையும் கேட்பதற்கு தடை செய்யப்பட்டவன். எனது கண்களில் இரவு நிரப்பப்படாமல் இருக்க வேண்டுமென கேட்பது பைத்தியக்காரத்தனமானதாக இருக்கும்; ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்கக் கூடியவர்களாக இருந்தும் நியாயமற்றவர்களாக, அறிவற்றவர்களாக குறிப்பாக மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பதை நான் அறிந்தேயிருக்கிறேன். காலத்தின் அணிவகுப்பு காரண காரியங்களாலான ஒரு வலை, எவ்வளவு சிறியதாக இருப்பினும் கருணையின் அன்பளிப்பைக் கேட்பது அந்த இரும்பாலான வலையின் ஒரு கண்ணி உடைபடவேண்டுமென கேட்பதே, கேட்பின் அது ஏற்கனவே உடைந்ததாயிருக்கும். யாரொருவரும் அப்படியொரு அற்புதத்திற்கு பொருத்தமானவரில்லை. அல்லது என்னுடைய அத்துமீறல்கள் மன்னிக்கப்பட வேண்ட முடியுமா; மன்னித்தல் இன்னொருவரின் செயல், நான் மட்டுமே என்னைக் காக்க முடியும். மன்னித்தல் பாதிக்கப்பட்டவரையே தூய்மைப்படுத்தும் மேம்போக்காகக் கூட அதனால் தீண்டப்படாமல் போகும் பாதிப்பை உண்டாக்கியவரை அல்ல. எனது ”சுதந்திர விருப்புறுதி”யின் சுதந்திரத்தன்மை ஒருவேளை மாயத்தோற்றமாக இருக்கலாம் என்றாலும் என்னால் கொடுத்துக்கொள்ள முடியும் அல்லது கொடுப்பதாக கனவு காண முடியும். என் வசமில்லாத தைரியத்தை என்னால் வழங்க முடியும்; என்னுள் பொதிந்திராத நம்பிக்கையை என்னால் வழங்க முடியும்; கணநேரத்தோற்ற அளவிலாவது அல்லது நான் அறிந்தேயிராத கற்பதற்கான ஒரு விருப்பத்தை கற்றுக் கொடுக்க முடியும்.  நண்பனாக நினைவு கூறப்படுவதற்கும் குறைவாகவே ஒரு கவிஞனாக நினைவு கூறப்பட விரும்புகிறேன்; எவரோ ஒருவர் டன்பார் அல்லது ஃபிராஸ்டிலிருந்து ஒரு துடிப்பொலியை ஒப்பிப்பதை அல்லது நள்ளிரவில் குருதிகசியும் அந்த மரத்தை, சிலுவையை நோக்கும் அந்த மனிதன், என்னுடைய உதட்டிலிருந்து முதன்முறையாக அவன் கேட்கும் சொற்களை பிரதிபலிப்பதை விரும்புகிறேன். வெறெதுவும் பொருட்டில்லாத எனக்கு, மறதி தாமதத்தை நீட்டிக்காது என நம்புகிறேன்.  அண்டத்தின் வடிவமைப்பு நாம் அறியாதது எனினும் உள்ளத்தெளிவோடு சிந்திப்பது மற்றும் நேர்மையுடன் செயலாற்றுவது அந்த வடிவமைப்புகளுக்கு (இனி ஒருபோதும் நமக்கு வெளிப்படுத்தப்படாதவை) உதவி புரிவதற்கே என்பதை அறிவோம்.

நான் முழுமையாக மரணிக்க விரும்புகிறேன்; என்னுடைய துணையான இந்த உடலுடனே நான் மரணிக்க விரும்புகிறேன்

No comments: