Friday, August 27, 2010

அளவில்லாத பேரலைகள்

இசை பற்றின இக்கட்டுரையை இரண்டு மேற்கோள்களோடு துவங்குவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

”ஒரு வாழும்காலத்திற்கு இசை போதுமானது.   ஆனால் ஒரு வாழும் காலம்
இசைக்குப் போதுமானதில்லை”  - செர்கெய் ராச்மெனினோவ்

“ வார்த்தைகளால் சொல்ல முடியாததும் அமைதியாய் இருக்க விடமுடியாததுமானதை இசை வெளிப்படுத்துகிறது” - விக்டர் ஹியூகோ

ஓவியம், எழுத்து, இசை,  நாடகம், சினிமா, நிகழ்த்து கலை ஆகியவற்றில் இசை மட்டுமே அனேகமாக எல்லோரும் (குழந்தைகள் தவிர்த்து) ஏறக்குறைய வாழ்நாளின் பெரும்பாலான நாட்கள் அனுபவம் கொள்கிற கலைவடிவம். இதர கலைவடிவங்களை விடவும் இசை சமூகத்தின் அடுக்குகளை ஊடுருவும் தன்மையுடையது.  கலையின் முதன்மை நோக்கம் கேளிக்கை.  இசைதான் அவ்வுணர்வை பிரதானமாக எழுப்பக் கூடியது.  நமக்கு பரிச்சயமான இசை வகைகளை பட்டியலிட முயன்றால் அது இவ்வாறு வரும்.  இந்தப் பட்டியல் பிரதானமான இசை வடிவங்களை மட்டுமே அடக்கியது. விளிம்பு நிலை மக்களின் இசை வடிவங்களும் கீழ்க்கண்ட வகைகளில அடங்கும் என நம்பலாம் (உதா: நாட்டார் இசை, ரய், ப்ளூஸ், ராப்)

சர்வதேச வரிசை:

1. செவ்வியல் இசை (ஐரோப்பா)
2. நாட்டார் இசை (உலகமெங்கும்)
3. ராக் (அமெரிக்கா, ஐரோப்பா)
4. பாப் (உலமெங்கும்)
5. ரெக்கே (இலத்தீன் அமெரிக்கா)
6. ரய் (அல்ஜீரியா)
7. கவ்வாலி (சுஃபி)
8. ப்ளூஸ் (அமெரிக்க ஆப்ரிக்கர்)
9. ராப் (அமெரிக்க ஆப்ரிக்கர்)

இந்திய வரிசை :

1. கார்னாடக சங்கீதம்
2. இந்துஸ்தானி
3. கஸல்
4. நாட்டார் இசை

சினிமா இசை என்பது தனித்த வடிவம் இல்லை.  மேற்கண்ட வடிவங்களை கலந்து பயன்படுத்துவது என்பதால் அதை தனித்த ஒன்றாக கருத வேண்டியதில்லை.


இசைக்கும் சங்கீதத்திற்கும் உள்ள வேறுபாடு குரல் மற்றும் கருவிகள் எழுப்பும் ஒலிகளுக்கிடையே ஆன வேறுபாடே.  மேற்கத்திய செவ்வியல் இசையில் கருவிகளே பிரதானமானவை.  கர்னாடக சங்கீதத்தில் குரலே
முதன்மையானது.  மேற்கத்திய ஓபரா, ஆரட்டோரியா ஆகியவற்றிலும் குரலே பிரதானமானது.  ஆக குரலின் மூலம் வெளிப்படுகிற வடிவத்தை சங்கீதம் எனவும் கருவிகளின் மூலம் வெளிப்படுகிற வடிவத்தை இசை எனவும் அர்த்தப் படுத்திக் கொள்ளலாம். குரலும் இசையும் இணைவதை நாம் பாடல் என்கிறோம்.

மேற்கத்திய செவ்வியல், கர்னாடக இந்துஸ்தானி சங்கீதங்கள் நுட்பமானவை. சமூகத்தின் மேல்வகுப்புகள் பாவிப்பவை.  இதன் காரணமாகவே உன்னதமானவை என அழைக்கப் படுவது.

ஒரு இசை வடிவம் உன்னதமானது என அழைக்கப்பட அது
1. நுட்பமனதாய்
2. மேல்வகுப்புகளில்
புழங்குவதாய் இருக்க வேண்டும்.  இசை இரசனையில் தேர்ச்சி கொள்வது என்பது எக்காலத்திலும் உன்னதமான மேட்டுக் குடி இசையை நோக்கி நகர்கிற ஒன்றாகவே சமூகம் கருதி வந்திருக்கிறது. தனி நபர் இசை இரசனை அளவு கோலும் இதுவே. சினிமா, பாப், ராக் இதர இசையிலிருந்து நுட்பம் தேடி நகர்கிற
இசை இரசிகன் செவ்வியல் இசையைத் தேடித்தான் போகிறான்.

நுட்பமானதை பாவிப்பதன் மூலம் மேல்வகுப்புகள் மட்டுமல்ல தனிநபர்களும் தங்களை உன்னதமானவர்களாக நினைத்துக் கொள்கின்றனர்.  இங்கே நுட்பம் என்பது இசை சம்பந்தமுடையது.  உன்னதம் என்பது அதிகாரத்தின் பாற்பட்டது.
உன்னத எதிர்ப்பு, புனித மறுப்பு என்பது இசையின் நுட்பத்திற்கு எதிரானது இல்லை.   மாறாக நுட்பத்தின் மூலம் உருவாகிற அதிகாரத்திற்கு எதிரானது.  பின்நவீனத்துவ காலகட்டத்தில் மேற்கத்திய செவ்வியல் இசையோடு பேருந்தின் சப்தம் கூட இசைக்கப் படுகிறது.  அதிகார எதிர்ப்பு மட்டுமே இந்த hybrid வடிவத்தின் நோக்கம் என்றாலும் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் நுகர்வுக் கலாச்சாரத்தையும் காண முடியும் என நம்பவும் இடமிருக்கிறது.  ஆக பின் நவீனத்துவ இசைக்கு

1. அதிகார எதிர்ப்பு
2. நுகர்வுக் கலாச்சாரம் ஆகிய இரண்டு குணங்கள் உண்டு.

1 comment:

இளங்கோ கிருஷ்ணன் said...

பாலா,

உங்கள் கட்டுரை நன்று. தொடர்ந்து எழுதுங்கள். எல்லா கலைகளும் இசையின் தன்மையை அடைய முயல்கின்றன என்கிற ஜார்ஜ் தாம்ஸனின் சொற்களும் நினைவுக்கு வருகின்றன.