Thursday, July 7, 2011

எளிய நிறைவு

            Free Software Movement of Karnataka வில் நான் ஒரு உறுப்பினன்.  சில கூட்டங்களுக்கு சென்று வந்ததைத் தவிரவும் சிறியதும் பெரியதுமாக எதுவும் செய்து விடவில்லை.  ஒரே ஒரு முறை நானும் ரகுவும் Mount Carmel கல்லூரிக்கு Ubuntu சொல்லித் தருவதற்காக சென்றோம்.   அந்தக் கல்லூரியின் மரங்களை விடவும் அழகான பெண்கள் அங்கே படிப்பதாக நம்பப் படுகிறது.   ஆனால் நான்(ங்கள்) எதிர்ப்பார்த்து சென்ற எதுவும் அன்றும் அதன் பிறகும் நடக்கவில்லை.

            இரு நாட்களுக்கு முன்பு பாலாஜியிடமிருந்து எதிர்பாராத அழைப்பு.
“பாலா எப்படி இருக்கீங்க?” “நல்லாயிருக்கேன், சொல்லுங்க பாலாஜி” “நம்ம ஆஃபீஸ்ல மூணு நாள் கிளாஸ் எடுக்கணும்.  நீங்க ஒரு நாள் எடுக்கறீங்களா?” “எடுக்கறேன்” என்று சொல்லிய பிறகுதான் “என்ன எடுக்கணும்” என்றேன். "Computer Basics எடுக்கணும்” “சரி எடுக்கறேன். சிலபஸ் அனுப்புங்க” “சரி. மெயில் ID குடுங்க”.  கொடுத்தேன். ஆனால் இரண்டு நாட்கள் அதைப் பார்க்கக் கூட இல்லை.

           இன்றைக்கு நாம் நாற்காலியை நிரப்பும் அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வெளியேறி FSMK அலுவலகத்தை திறந்து கொஞ்ச நேரம் போராடி அங்கே தொகுத்து வைக்கப்பட்டிருக்கும் கணிப்பொறிகளின் மின்பின்னல்களைப் புரிந்து கொண்டு துவக்கினால் இணையத்தில் இணைவதில் பிரச்சனை இருந்தது.  எனக்குத் தெரிந்த ping, ifconfig, eth0 up, system network restart போன்ற கட்டளைகளை முயற்சித்துப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். கடைசியில்   wireless network connectivityயை wired network connectivityக்கு மாற்ற இணையத்தில் குதிக்க முடிந்தது.  எளிய தீர்வுகள் எப்போதும் சாத்தியமில்லை என்றாலும் அவை எப்போதாவது சரியான தீர்வுகளாகவும் இருக்கின்றன.

           DYFIன் மாவட்ட செயலாளர் நாகராஜ் வந்தார்.  “ நீவு ஓதோதுக்கே பந்திதிரா?” “பரவாயில்லை தமிழ்லயே பேசுங்க” என்றார். ”நான் வகுப்புக்கு வரல வகுப்பு எப்படி நடக்குதுன்னு பாக்க வந்திருக்கேன்”.  பிறகு ரகு வந்தான். தொடர்ந்து BCA படிக்கிற மாணவன், ரியல் எஸ்டேட் தொழில் நடத்திக் கொண்டிருக்கும் ஒருவர்,  ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் ஆகியோர் வந்தனர்.  நான் அப்போதுதான் சிலபஸ் பார்த்துக் கொண்டிருந்தேன்.   அதைப் பார்த்தவுடன் எனக்கு நம்பிக்கை வந்து விட்டது.  அடிப்படைகள் குறித்து மட்டுமே கற்றுக் கொடுத்தால் போதும்.

            மூன்று பேரை மட்டுமே வைத்து வகுப்பை துவக்கினேன்.  கணிதத்தின் தேவை,  எண்களின் சிறு வரலாறு,  Abacus முதல் நவீன கணிப்பொறியின் தந்தை வரை சிறு அறிமுகம் முடிகிற தருணத்தில் மூன்று பெண்களும் இரண்டு பையன்களும் வந்தனர்.  பெண் 1. 9ம் வகுப்பு மாணவி 2. PUC இரண்டாம் ஆண்டு மாணவி 3. 10ம் வகுப்பு மாணவி.  பையன்கள் 1. பழக்கடை ஊழியர் 2. கார் ஓட்டுநர்.  அவர்களுக்காக முதலில் இருந்து துவங்கி இடையில் இந்த அமைப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது , கடந்த ஆண்டு கர்நாட்க PUC தேர்வு முடிவுகள் குறித்த ஆதங்கம் (45% மட்டுமே தேர்ச்சி 6 இலட்சம் பேரில் அதுவும் 40 கல்லூரிகளில் 0% சதவீதமே தேர்ச்சி அவற்றில் இரண்டு தகவல் தொழில்நுட்ப நகரத்தில் இருப்பவை),  அரசு, மெட்ரிக்குலேசன், மத்திய அரசுப் பள்ளிகளுக்கு இடையிலான வேற்றுமை ஆகியவற்றோடு சேர்த்து கணிப்பொறி Hardware பற்றி அரைகுறை கன்னடத்தில் வகுப்பை முடித்து CPU பெட்டியை திறந்து காட்டி அதனுள் புதைந்திருக்கும் பூதங்கள் உசுப்பப் பட்டால் எப்படி வேலை செய்யும், சேமிப்பு எங்கே நிகழும் என்று ஒவ்வொரு அங்கமாக கழற்றிக் காண்பித்தேன்.

             மிகச் சாதாரண சந்தேகங்கள் கேட்கப்பட்டன. “RAM மற்றும் ROM வித்தியாசம்” “Hard Disk இருக்கும் போது எதற்கு RAM" அதற்கு நான் சொன்ன Super market சென்று பூச்செண்டு வாங்குவதற்கும் பூச்செண்டு கடைக்குச் சென்று அதனை வாங்குவதற்குமான வேறுபாடு உதாரணம்.  "Monitor இல்லாமலும் வேலை செய்ய இயலுமா?” “கம்யூட்டர் துவக்கப் படுவதிலிருந்து என்ன நிகழ்கிறது”  ஏன் அதனை Boot Process என அழைக்கிறோம் போன்ற மிகச் சாதாரண பதில்கள்.  ஒருவேளை அவர்களுக்கு இதன் முக்கியத்துவம் எப்படி இருக்குமோ?

              மவுண்ட கார்மெல் கல்லூரியில் வகுப்பு முடிந்ததும் அங்கே வந்திருந்த 40 மாணவிகளில் ஒரு பெண் கூட சந்தேகம் கேட்கவோ, நன்றி அறிவிக்கவோ, மெயில் ID வாங்கவோ இல்லை.  கட்டாயப்படுத்தி வந்த வகுப்பில் கற்றுக் கொள்ள இருக்கிற ஆர்வத்தின் அளவு துல்லியமாகத் தெரிந்தது.  மேலும் அவர்கள் கற்றுக் கொள்கிற ஆர்வமுள்ளதாக Ubuntu இல்லை போலிருக்கிறது.  ஓர் அளவிற்கு நன்றாகத்தான் வகுப்பெடுத்தோம்.

             “இந்த வகுப்பு எப்படி இருந்தது” என நான் கேட்டதற்கு அந்த 9ம் வகுப்பு மாணவி சொன்னாள் ‘நாலு வாரம் கிளாஸ் முடியும் போது நானும் மெட்ரிகுலேசன்ல படிக்கிறவங்க மாதிரி கம்ப்யூட்டர உபயோகிக்க முடியும்னு நம்பிக்கை வந்தது” என்றாள்.

              எங்கேயோ இருக்கும் என்னுடைய சிறு குறை சரி செய்யப்பட்டதைப் போன்று இருந்தது.  எளிய நிறைவு தரும் இந்தக் கெளவரவமே கற்பிப்பதின் மனநிறைவு என்பதும் புரிந்தது.  எப்போதாவது நிகழ்கிற இம்மாதிரியான நிறைவுகளே எப்போதும் நினைவு கொள்ளத் தக்கவையாகவும் இருக்கின்றன.

2 comments:

sk said...

Great job. Nice writing.

Thiru said...

good experience... expecting more... seems that you posted after a long time... try to write often....