Thursday, July 7, 2011

எளிய நிறைவு

            Free Software Movement of Karnataka வில் நான் ஒரு உறுப்பினன்.  சில கூட்டங்களுக்கு சென்று வந்ததைத் தவிரவும் சிறியதும் பெரியதுமாக எதுவும் செய்து விடவில்லை.  ஒரே ஒரு முறை நானும் ரகுவும் Mount Carmel கல்லூரிக்கு Ubuntu சொல்லித் தருவதற்காக சென்றோம்.   அந்தக் கல்லூரியின் மரங்களை விடவும் அழகான பெண்கள் அங்கே படிப்பதாக நம்பப் படுகிறது.   ஆனால் நான்(ங்கள்) எதிர்ப்பார்த்து சென்ற எதுவும் அன்றும் அதன் பிறகும் நடக்கவில்லை.

            இரு நாட்களுக்கு முன்பு பாலாஜியிடமிருந்து எதிர்பாராத அழைப்பு.
“பாலா எப்படி இருக்கீங்க?” “நல்லாயிருக்கேன், சொல்லுங்க பாலாஜி” “நம்ம ஆஃபீஸ்ல மூணு நாள் கிளாஸ் எடுக்கணும்.  நீங்க ஒரு நாள் எடுக்கறீங்களா?” “எடுக்கறேன்” என்று சொல்லிய பிறகுதான் “என்ன எடுக்கணும்” என்றேன். "Computer Basics எடுக்கணும்” “சரி எடுக்கறேன். சிலபஸ் அனுப்புங்க” “சரி. மெயில் ID குடுங்க”.  கொடுத்தேன். ஆனால் இரண்டு நாட்கள் அதைப் பார்க்கக் கூட இல்லை.

           இன்றைக்கு நாம் நாற்காலியை நிரப்பும் அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வெளியேறி FSMK அலுவலகத்தை திறந்து கொஞ்ச நேரம் போராடி அங்கே தொகுத்து வைக்கப்பட்டிருக்கும் கணிப்பொறிகளின் மின்பின்னல்களைப் புரிந்து கொண்டு துவக்கினால் இணையத்தில் இணைவதில் பிரச்சனை இருந்தது.  எனக்குத் தெரிந்த ping, ifconfig, eth0 up, system network restart போன்ற கட்டளைகளை முயற்சித்துப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். கடைசியில்   wireless network connectivityயை wired network connectivityக்கு மாற்ற இணையத்தில் குதிக்க முடிந்தது.  எளிய தீர்வுகள் எப்போதும் சாத்தியமில்லை என்றாலும் அவை எப்போதாவது சரியான தீர்வுகளாகவும் இருக்கின்றன.

           DYFIன் மாவட்ட செயலாளர் நாகராஜ் வந்தார்.  “ நீவு ஓதோதுக்கே பந்திதிரா?” “பரவாயில்லை தமிழ்லயே பேசுங்க” என்றார். ”நான் வகுப்புக்கு வரல வகுப்பு எப்படி நடக்குதுன்னு பாக்க வந்திருக்கேன்”.  பிறகு ரகு வந்தான். தொடர்ந்து BCA படிக்கிற மாணவன், ரியல் எஸ்டேட் தொழில் நடத்திக் கொண்டிருக்கும் ஒருவர்,  ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் ஆகியோர் வந்தனர்.  நான் அப்போதுதான் சிலபஸ் பார்த்துக் கொண்டிருந்தேன்.   அதைப் பார்த்தவுடன் எனக்கு நம்பிக்கை வந்து விட்டது.  அடிப்படைகள் குறித்து மட்டுமே கற்றுக் கொடுத்தால் போதும்.

            மூன்று பேரை மட்டுமே வைத்து வகுப்பை துவக்கினேன்.  கணிதத்தின் தேவை,  எண்களின் சிறு வரலாறு,  Abacus முதல் நவீன கணிப்பொறியின் தந்தை வரை சிறு அறிமுகம் முடிகிற தருணத்தில் மூன்று பெண்களும் இரண்டு பையன்களும் வந்தனர்.  பெண் 1. 9ம் வகுப்பு மாணவி 2. PUC இரண்டாம் ஆண்டு மாணவி 3. 10ம் வகுப்பு மாணவி.  பையன்கள் 1. பழக்கடை ஊழியர் 2. கார் ஓட்டுநர்.  அவர்களுக்காக முதலில் இருந்து துவங்கி இடையில் இந்த அமைப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது , கடந்த ஆண்டு கர்நாட்க PUC தேர்வு முடிவுகள் குறித்த ஆதங்கம் (45% மட்டுமே தேர்ச்சி 6 இலட்சம் பேரில் அதுவும் 40 கல்லூரிகளில் 0% சதவீதமே தேர்ச்சி அவற்றில் இரண்டு தகவல் தொழில்நுட்ப நகரத்தில் இருப்பவை),  அரசு, மெட்ரிக்குலேசன், மத்திய அரசுப் பள்ளிகளுக்கு இடையிலான வேற்றுமை ஆகியவற்றோடு சேர்த்து கணிப்பொறி Hardware பற்றி அரைகுறை கன்னடத்தில் வகுப்பை முடித்து CPU பெட்டியை திறந்து காட்டி அதனுள் புதைந்திருக்கும் பூதங்கள் உசுப்பப் பட்டால் எப்படி வேலை செய்யும், சேமிப்பு எங்கே நிகழும் என்று ஒவ்வொரு அங்கமாக கழற்றிக் காண்பித்தேன்.

             மிகச் சாதாரண சந்தேகங்கள் கேட்கப்பட்டன. “RAM மற்றும் ROM வித்தியாசம்” “Hard Disk இருக்கும் போது எதற்கு RAM" அதற்கு நான் சொன்ன Super market சென்று பூச்செண்டு வாங்குவதற்கும் பூச்செண்டு கடைக்குச் சென்று அதனை வாங்குவதற்குமான வேறுபாடு உதாரணம்.  "Monitor இல்லாமலும் வேலை செய்ய இயலுமா?” “கம்யூட்டர் துவக்கப் படுவதிலிருந்து என்ன நிகழ்கிறது”  ஏன் அதனை Boot Process என அழைக்கிறோம் போன்ற மிகச் சாதாரண பதில்கள்.  ஒருவேளை அவர்களுக்கு இதன் முக்கியத்துவம் எப்படி இருக்குமோ?

              மவுண்ட கார்மெல் கல்லூரியில் வகுப்பு முடிந்ததும் அங்கே வந்திருந்த 40 மாணவிகளில் ஒரு பெண் கூட சந்தேகம் கேட்கவோ, நன்றி அறிவிக்கவோ, மெயில் ID வாங்கவோ இல்லை.  கட்டாயப்படுத்தி வந்த வகுப்பில் கற்றுக் கொள்ள இருக்கிற ஆர்வத்தின் அளவு துல்லியமாகத் தெரிந்தது.  மேலும் அவர்கள் கற்றுக் கொள்கிற ஆர்வமுள்ளதாக Ubuntu இல்லை போலிருக்கிறது.  ஓர் அளவிற்கு நன்றாகத்தான் வகுப்பெடுத்தோம்.

             “இந்த வகுப்பு எப்படி இருந்தது” என நான் கேட்டதற்கு அந்த 9ம் வகுப்பு மாணவி சொன்னாள் ‘நாலு வாரம் கிளாஸ் முடியும் போது நானும் மெட்ரிகுலேசன்ல படிக்கிறவங்க மாதிரி கம்ப்யூட்டர உபயோகிக்க முடியும்னு நம்பிக்கை வந்தது” என்றாள்.

              எங்கேயோ இருக்கும் என்னுடைய சிறு குறை சரி செய்யப்பட்டதைப் போன்று இருந்தது.  எளிய நிறைவு தரும் இந்தக் கெளவரவமே கற்பிப்பதின் மனநிறைவு என்பதும் புரிந்தது.  எப்போதாவது நிகழ்கிற இம்மாதிரியான நிறைவுகளே எப்போதும் நினைவு கொள்ளத் தக்கவையாகவும் இருக்கின்றன.

Monday, June 6, 2011

பெண்களும் உடைகளும்

           இந்தக் கட்டுரையை எழுத என்னைத் தூண்டிய சமீபத்திய காரணம்

1. மதுரை சென்றிருந்த போது போதீஸ் கடையில் ”லெக்கின்ஸ்” ஒன்றை தொட்டுப் பார்த்துவிட்டு அதை எடுத்து அணிந்து கொள்ள பிடிக்காமலோ அல்லது சமூகம் குறித்த பயத்தினாலோ எனது சகோதரி அதை வாங்காமல் வந்தது.

           ஒரு பழைய காரணம் :

2. எனது நண்பர் அவர் மனைவியோடு சுடிதார் எடுக்க வந்த கடைக்குள் என்னைப் பார்த்துவிட்டார். அவரோடு பேசிக் கொண்டே அவர் மனைவியின் ஆடைத் தேர்வில் பட்டும் படாமல் உதவி செய்து கொண்டிருந்தேன்.    ஒளி ஊடுருவ வாய்ப்பளிக்கும் transparent சுடிதார் டாப் ஒன்றை அதன் வண்ணம் விரும்பி தேர்ந்தெடுத்தார்.  என் நண்பர் அதன் வண்ணம் குறித்தோ, வடிவமைப்பைக் குறித்தோ எதுவுமே சொல்லாமல் கையை சுடிதாருக்குள் நுழைத்து தன் கை எவ்வளவு நன்றாகத் தெரிகிறது எனப் பார்த்தார்.  அவர் மனைவி புரிந்து கொண்டு “நான் வேணும்னா ஒரு slip எடுத்துப் போட்டுக்கறேன்” என்றார்.  எதையும் கேட்க விரும்பாத என் நண்பர் வேறு சுடிதார் பார்க்கச் சொல்லிவிட்டார்.   அதன் பின்பு என்னிடம் “slip"னா என்ன மாதிரி இருக்கும்” எனக் கேட்டார்.  நான் அங்கே தொங்கிக் கொண்டிருந்த ஒன்றை சுட்டிக் காட்டி இது உங்களுக்குத் தெரியாதா? என்றேன்.  “இல்ல இதப் பார்த்திருக்கிறேன்.  ஆனால் இதுவரைக்கும் இது பேர் என்னான்னு கேட்டதில்லை” என்றார்.  தன் சகமனுசி அணிகிற உடைகளில் ஒன்றின் பெயரே தெரிந்து கொள்கிற சிரத்தை இல்லாத நண்பர்.  ஆனால் அவரைப் போலவே பல ஆண்களும் இருப்பார்கள் என்பதை என்னால் அவதானிக்க முடிகிறது.  ஏனெனில் பெண்களை எல்லோரும் வெறும் கண்களால் பார்த்தால் அவர் x-ray கண்களால் பார்ப்பவர் (மனைவி இல்லாத போது).

Friday, August 27, 2010

அளவில்லாத பேரலைகள்

இசை பற்றின இக்கட்டுரையை இரண்டு மேற்கோள்களோடு துவங்குவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

”ஒரு வாழும்காலத்திற்கு இசை போதுமானது.   ஆனால் ஒரு வாழும் காலம்
இசைக்குப் போதுமானதில்லை”  - செர்கெய் ராச்மெனினோவ்

“ வார்த்தைகளால் சொல்ல முடியாததும் அமைதியாய் இருக்க விடமுடியாததுமானதை இசை வெளிப்படுத்துகிறது” - விக்டர் ஹியூகோ

ஓவியம், எழுத்து, இசை,  நாடகம், சினிமா, நிகழ்த்து கலை ஆகியவற்றில் இசை மட்டுமே அனேகமாக எல்லோரும் (குழந்தைகள் தவிர்த்து) ஏறக்குறைய வாழ்நாளின் பெரும்பாலான நாட்கள் அனுபவம் கொள்கிற கலைவடிவம். இதர கலைவடிவங்களை விடவும் இசை சமூகத்தின் அடுக்குகளை ஊடுருவும் தன்மையுடையது.  கலையின் முதன்மை நோக்கம் கேளிக்கை.  இசைதான் அவ்வுணர்வை பிரதானமாக எழுப்பக் கூடியது.  நமக்கு பரிச்சயமான இசை வகைகளை பட்டியலிட முயன்றால் அது இவ்வாறு வரும்.  இந்தப் பட்டியல் பிரதானமான இசை வடிவங்களை மட்டுமே அடக்கியது. விளிம்பு நிலை மக்களின் இசை வடிவங்களும் கீழ்க்கண்ட வகைகளில அடங்கும் என நம்பலாம் (உதா: நாட்டார் இசை, ரய், ப்ளூஸ், ராப்)

சர்வதேச வரிசை:

1. செவ்வியல் இசை (ஐரோப்பா)
2. நாட்டார் இசை (உலகமெங்கும்)
3. ராக் (அமெரிக்கா, ஐரோப்பா)
4. பாப் (உலமெங்கும்)
5. ரெக்கே (இலத்தீன் அமெரிக்கா)
6. ரய் (அல்ஜீரியா)
7. கவ்வாலி (சுஃபி)
8. ப்ளூஸ் (அமெரிக்க ஆப்ரிக்கர்)
9. ராப் (அமெரிக்க ஆப்ரிக்கர்)

இந்திய வரிசை :

1. கார்னாடக சங்கீதம்
2. இந்துஸ்தானி
3. கஸல்
4. நாட்டார் இசை

சினிமா இசை என்பது தனித்த வடிவம் இல்லை.  மேற்கண்ட வடிவங்களை கலந்து பயன்படுத்துவது என்பதால் அதை தனித்த ஒன்றாக கருத வேண்டியதில்லை.


இசைக்கும் சங்கீதத்திற்கும் உள்ள வேறுபாடு குரல் மற்றும் கருவிகள் எழுப்பும் ஒலிகளுக்கிடையே ஆன வேறுபாடே.  மேற்கத்திய செவ்வியல் இசையில் கருவிகளே பிரதானமானவை.  கர்னாடக சங்கீதத்தில் குரலே
முதன்மையானது.  மேற்கத்திய ஓபரா, ஆரட்டோரியா ஆகியவற்றிலும் குரலே பிரதானமானது.  ஆக குரலின் மூலம் வெளிப்படுகிற வடிவத்தை சங்கீதம் எனவும் கருவிகளின் மூலம் வெளிப்படுகிற வடிவத்தை இசை எனவும் அர்த்தப் படுத்திக் கொள்ளலாம். குரலும் இசையும் இணைவதை நாம் பாடல் என்கிறோம்.

மேற்கத்திய செவ்வியல், கர்னாடக இந்துஸ்தானி சங்கீதங்கள் நுட்பமானவை. சமூகத்தின் மேல்வகுப்புகள் பாவிப்பவை.  இதன் காரணமாகவே உன்னதமானவை என அழைக்கப் படுவது.

ஒரு இசை வடிவம் உன்னதமானது என அழைக்கப்பட அது
1. நுட்பமனதாய்
2. மேல்வகுப்புகளில்
புழங்குவதாய் இருக்க வேண்டும்.  இசை இரசனையில் தேர்ச்சி கொள்வது என்பது எக்காலத்திலும் உன்னதமான மேட்டுக் குடி இசையை நோக்கி நகர்கிற ஒன்றாகவே சமூகம் கருதி வந்திருக்கிறது. தனி நபர் இசை இரசனை அளவு கோலும் இதுவே. சினிமா, பாப், ராக் இதர இசையிலிருந்து நுட்பம் தேடி நகர்கிற
இசை இரசிகன் செவ்வியல் இசையைத் தேடித்தான் போகிறான்.

நுட்பமானதை பாவிப்பதன் மூலம் மேல்வகுப்புகள் மட்டுமல்ல தனிநபர்களும் தங்களை உன்னதமானவர்களாக நினைத்துக் கொள்கின்றனர்.  இங்கே நுட்பம் என்பது இசை சம்பந்தமுடையது.  உன்னதம் என்பது அதிகாரத்தின் பாற்பட்டது.
உன்னத எதிர்ப்பு, புனித மறுப்பு என்பது இசையின் நுட்பத்திற்கு எதிரானது இல்லை.   மாறாக நுட்பத்தின் மூலம் உருவாகிற அதிகாரத்திற்கு எதிரானது.  பின்நவீனத்துவ காலகட்டத்தில் மேற்கத்திய செவ்வியல் இசையோடு பேருந்தின் சப்தம் கூட இசைக்கப் படுகிறது.  அதிகார எதிர்ப்பு மட்டுமே இந்த hybrid வடிவத்தின் நோக்கம் என்றாலும் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் நுகர்வுக் கலாச்சாரத்தையும் காண முடியும் என நம்பவும் இடமிருக்கிறது.  ஆக பின் நவீனத்துவ இசைக்கு

1. அதிகார எதிர்ப்பு
2. நுகர்வுக் கலாச்சாரம் ஆகிய இரண்டு குணங்கள் உண்டு.

Wednesday, August 25, 2010

இரத்தத்தின் அளவு

வாசித்துக் கொண்டிருக்கும் ”Wonders of Numbers"ல் பின்வரும் கேள்வி ஒன்றும் அதற்கான விடையும் அளிக்கப்பட்டிருந்தது.

கேள்வி :
பூமியில் வாழும் மொத்த மனிதர்களின் உடலில் உள்ள இரத்தத்தையும் கொள்ள என்ன அளவுள்ள கண்டெய்னர் தேவைப்படும்?

இதே மாதிரி எண்ணற்ற கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்ப முடியும்.  பத்து கேள்விகள் நான் யோசித்தவை:

1. பூமியில் வாழும் மொத்த உயிரினங்களின் எடை எவ்வளவு?
2. தாவர ராசிகள் தளைக்க தினமும் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்ன?
3. நேற்று சென்னையில் 20 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்று லாவோஸ்   நகரை அடையும் போது என்ன வேகத்தில் வீசும்?
4. ஒரு நாளில் எத்தனை முறை சூரியன் உதிப்பதும் மறைவதும் நிகழ்கிறது?
5. மொத்த உயிரினங்களின் கால்களின் எண்ணிக்கை எவ்வளவு?
6.  100 கிலோமீட்டர் பயணத்தின் துவக்கத்தில் நம் தலைக்கு மேலே இருக்கும் நட்சத்திரத்திற்கும் பயண முடிவில் உள்ள நடசத்திரத்திற்கும் உள்ள தொலைவு என்ன?
7. அமேசான், நைல், பிரம்மபுத்திரா நதிகளில் இதுவரை வழிந்த தண்ணீரின் அளவு என்ன?
8. மனிதர்கள் ஒரு நாளில் பேசும் சப்தத்தின் அளவு என்ன?
9. அளவிடமுடியாதவற்றின் அலகு எது?
10. தொடர்ந்து மழையும், நதிக்கலப்பும் இல்லாத போது உலகின் கடல் நீர் இன்றிலிருந்து குறையத் துவங்கினால் முழுதும் வற்ற எவ்வளவு வருடங்களாகும்?

    மேற்கண்ட 10 கேள்விகளையும் யோசிக்க எனக்கு 16 நிமிடங்கள் தேவைப்பட்டன.  பதில் அறிந்து கொள்ள எவ்வளவு நாட்களாகும் என்பதை உறுதியாக சொல்ல முடியாததைப் போலவே இந்தக் கேள்விகளுக்கு பதில்களை அடைய முடியுமா என்பதும் உறுதியாகச் சொல்ல முடியாது. Google  உதவினால் உண்டு.  மற்றபடி நமக்கு கணிதமும், அறிவியலும் போதிக்கும் ஆசிரிய, பேராசிரிய, டாக்டரேட்களிடம் கேட்கலாம் என்றால் நாம் அவர்களுக்கு நிஜமாகவே மூளை இருப்பதை ஒத்துக் கொண்ட பிறகுதான் கேட்கவேண்டும். நான் ஒத்துக் கொள்ள தயாரில்லை.

புத்தகத்தில் கேட்கப்பட்டு கொடுக்கப்பட்ட கேள்விக்கான விடை:

ஒரு சராசரி வயது வந்த ஆணின் உடலில் உள்ள இரத்ததின் அளவு 5 - 6 லிட்டர் ( 1 காலன் = 3.79 லிட்டர் (US)  = 4.54 லிட்டர் (UK) )  (காலன் =  Gallon)

இந்தப் புத்தகம் Oxford University Press பதிப்பித்ததாலும், வருகிற விடையை வைத்தும் இப்புத்த ஆசிரியர் UK அளவையே எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

6 பில்லியன் (600 கோடி) மனிதர்கள் இப்பூமியில் இருப்பதாக கணக்கிட்டால்
மொத்தம் ஏறக்குறைய 6 பில்லியன் காலன்.  (600,00,00,000 காலன்)

ஒரு கன அடி = 7.48 காலன் .  ஆக

80 கோடி கன அடி மனித இரத்தம்.(1 கன அடி = 33.96 லிட்டர்)

80,00,00,000 * 33.96  = 2716,80,00,000 லிட்டர் மனித இரத்த அளவு

1000 அடி நீளமும் 1400 அடி உயரமும் உள்ள கண்டெய்னரில் மொத்த இரத்தத்தையும் நிரப்பி விட முடியும் என புத்தகம் சொல்கிறது. எப்படி என்பதை கணக்கிட்டுக் கொள்ளவும்.