ஆப்பிள்
இப்பொழுது பெய்கிற மழையை எதிர்பார்க்கவில்லை. வெயில் உச்சத்தை தொட்டு சரிந்த வேளையில் திறந்த, வானின் மதகுகள் இன்னும் மூடாமல் பெய்கிறது. ஊழிக்காலத்தளவு உக்கிரம் இல்லை என்றாலும் நகரங்களில் பெய்கிற எந்தப் பெருமழையும் ஊழியை ஞாபகப் படுத்திவிடும். நகரத்தில் மழையை எதிர்பார்த்திருப்பவர் யார். இருந்தாலும் பெய்து தொலைக்கிறது. உடைபோட்டுக் கொண்டு தெருவில் நடமாட வாய்த்த ஜீவன்கள் அனைத்தும் நனைந்து மழையின் துளிகளை சிறிதாவது உடையில் சேமித்து சென்றன. நனைந்ததனால் கேசம் கற்றையாய் ஆகின நாய்கள் கிடைத்த இடங்களில் ஒதுங்கின. உடலை உதறியதால் நீர் தெறித்து அருவருப்புற்ற பக்கத்து மனிதனால் உதைபட்ட கறுநிற நாய் மீண்டும் மழையில் ஒதுங்கியது. காக்கையொன்று மறக்காமல், திரிந்து கொண்டிருந்த இளைஞன் மீது எச்சமிட்டுச் சென்றது. மழையில் எச்சம் அவன் தேகத்தின் மீது வழிய அருவருப்போடு அதை துடைத்துக்கொண்டு யாரும் பார்க்கிறார்களா எனப் பார்த்துவிட்டு அவசரமாய் ஓட்ட மெடுத்தான். மழை அதன் சங்கீதத்தை நிறுத்துகிற அறிகுறிகள் ஏதுமில்லை.
பாய்லரின் மீதிருந்தெழும் வெண்புகையை வேடிக்கை பார்த்தபடி எதிரில் மருந்துக் கடை வாசலில் நின்று கொண்டிருந்தான் அசோக். டீ குடிக்க குளுமையும் பசியும் உந்திய போதும் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஐந்து நாட்களாக அல்சரால் அவதிப் படுவதால் அவ்வாசையை ஒழித்து பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். எதிர்சாரிக் கடைகளில் தொங்கிக் கொண்டிருந்த பலூனிலிருந்து வழியும் நீரை அம்மாவிற்குத் தெரியாமல் குடித்துக் கொண்டிருந்தது சீருடை அணிந்த பெண் குழந்தை ஒன்று.
அசோக்குக்கு ஆர்த்தியின் ஞாபகம் வந்தது. இந்நேரம் பள்ளி முடித்து வந்திருப்பாள். நனைந்து விடாமல் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். அக்கா ஒரு மணிக்கு போன் செய்து,
"அசோ, வேலை விசயமா ஒருத்தர பார்க்கப் போகணும்ணு மாமா வரச் சொன்னார். நீ வந்து மூணு மணிக்கு குழந்தையை பார்த்துக்கோ" என்றாள்.
தர்மசங்கடமாக இருந்தது அவனுக்கு. இன்று அவனுடைய மேலாளர் சாய்ராமுடன் வேலை. மதியம் நெஞ்சக நோய் நிபுணர் ஒருவருடன் அப்பாயிண்ட்மெண்ட். முக்கியமான விசயத்தை முடிக்கத்தான்
சாய்ராம் வந்திருந்தார். எப்போழுது வந்தாலும் லேசில் விட மாட்டார் மனுசன். காலை பத்து மணிக்கு ஆரம்பித்தால் மதிய நேர ஓய்வு நேரத்திலும் அவரோடே இருந்து, இரவு அவரும் இவனும் குடித்து அவருக்கு போதை ஏறி தூக்கம் வரும் வரை நாளைக் கழிக்க வேண்டும். இன்று காலை வந்ததும்
கேட்டார்
"டாக்டர் நவீன் குமாரை பிக்ஸ் பண்றதுதான் முக்கியமான டார்கெட். முன்னாடியே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியாச்சா?" என.
"வாங்கிட்டேன் சாய். மத்தியானம் இரண்டு மணிக்கு, அதுக்கு முன்னாடி மத்த கால்ஸ் முடிச்சரலாம்"
அவனுடைய நிறுவனம் நவீன் குமாரை அவர் மனைவியோடு பட்டாயா மற்றும் பாங்காங் அனுப்பும். அதற்கு ஈடாக மாதம் தவறாமல் முப்பதாயிரம் ரூபாய்க்கு அவர்களுடைய நிறுவன மருந்துகளை இரண்டு வருடங்களுக்கு நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும். இதே போல் மூன்று நிபுணர்களை அவனுடைய நகரத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும். குறையாத நோயாளிகளுடைய மற்ற இருவரை ஏற்கனவே வேறு ஒரு போட்டி நிறுவனம் வளைத்துப் போட்டிருந்தது. அவர்கள் நாள் இல்லை எனச் சொல்லி விட்டார்கள்.
மீதமிருப்பவரையாவது நழுவ விடாமல் முடித்து விட வேண்டிய கட்டாயத்தையும், அப்படி முடித்தால் விற்பனை எவ்வளவு உயரும் என சாய் சொல்லிக் கொண்டிருக்கும் போதுதான் அக்கா அழைத்திருந்தாள்.
" அக்கா எனக்கு ரெண்டு மணிக்கு முக்கியமான வேலை இருக்கு, அது எப்ப முடியும்னு தெரியாது. வேற எதாவது ஏற்பாடு பண்ணிக்கோ" என பதிலுரைத்தான்.
"இல்லடா எனக்கு வேற யாரயும் தெரியாது. பக்கத்து வீட்ல கூட யாரும் பழக்கமாகல. இந்த ஒரு வாட்டி ஹெல்ப் பண்ணுடா".
யோசித்து, "கொஞ்சம் லேட்டானாலும் பரவாயில்லை தானே" என்றான்.
"மூன்றரைக்கு வந்துருவா. வெளியே உக்காந்திருப்பா. நாலு மணிக்கு முன்ன போயிர்றா"
"சரி போறேன்" என்றுவிட்டு சொல்லக்கூட செய்யாமல் தொடர்பை துண்டித்தான்.
நீரில் கவிழ்ந்து மிதந்து செல்கிறது ஒரு காகிதக் கப்பல். தாரணி என எழுதியிருந்தது அதில். ஒரு குழந்தை மழைநீரில் விளையாடியதை சொல்லிச் சென்றது அது. குறுமலையின் சிகரச் சாயலில் இருந்த கல்லொன்றால் நிறுத்தப் பட்ட கப்பலிலிருந்து எழுத்துகள் மெல்ல அழிந்து உருவமற்றுப் போகத் துவங்கின. எடுத்துவிட தோன்றின எண்ணத்தை அடக்கிக் கொண்டு ஆர்த்தியை மீண்டும் நினைத்துக் கொண்டான். ஒதுங்கி நிற்கிற இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர்கள் சென்றால்தான் வீடு சேர முடியும். கடிகாரத்தைப் பார்த்தான். புகைமூட்டம் மறைத்துக் கொண்டு மணி தெரியவில்லை. திரும்பி மருந்துக்கடை சுவற்றில் கடிகாரம் தேடி மணி பார்க்க அது மூன்றரை என காட்டியது. இனியும் காத்திருப்பது சரியில்லை என நினைத்து அங்கிருந்து கிளம்பினான். நீரோடிச் செல்லும் சாலையில் தயங்கித் தயங்கித்தான் பைக்கை ஓட்டினான். பசியின் வெம்மையில் தகிக்கத் துவங்கியது வயிறு ஆடை நனைந்த குளிரையும் மீறி. மகிழ்ச்சியுறும் போதும் துக்கமடையும் போதும் பசி கூடுகிறது. தான் மகிழ்ச்சியிலா அல்லது துக்கத்தில் இருக்கிறோமா என யோசிக்க காத்திருப்பில் மழையை கவனித்த பின்னான மூளை மந்த புத்தியில் தடுமாறியது. அனிச்சையாய் ஓடிக் கொண்டிருந்தது வண்டி.
இரண்டு மணிக்கு சற்று முன்பாகவே நவீன்குமாரின் கிளினிக்கிற்கு அசோக்கும் சாயிம் போய்ச்சேர்ந்தனர். மூன்று நோயாளிகள் காத்திருந்தனர். ஒருவருக்கு இருபது நிமிடம் என மூவருக்கு ஒரு மணிநேரம் ஓடி விடும். மூன்று மணிக்கு அவருடன் பேசத்துவங்கினால் எப்போது முடியும் எனத் தெரியாது.
அதன்பிறகு சாயை விடுதி அறையில் இறக்கி விட்டு ஏதாவது காரணம் சொல்லி உடனே கிளம்பினாலும் ஐந்தாகிவிடக்கூடும். பயந்தான். ஆர்த்தி சொந்த அக்காள் மகள். நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அக்கா உதவி கேட்கும் பட்சத்தில் மறுக்க முடியாத போதும் எரிச்சல் அடைவதை தவிர்க்க முடிவதில்லை. அவளும் என்ன செய்வாள், நகருக்கு அவர்கள் வந்து இரண்டு மாதங்கள்தான் ஓடியிருந்தது. வேலை விசயமாக அலையத்துவங்கி விட்டாள். மாமா, அவர் அப்பா அம்மா தங்கை அக்கா ஆர்த்தி அனைவருக்கும் சேர்த்து சம்பாதிக்கும் இயந்திரம். அக்காவும் வேலைக்குப் போனால்தான் இவர்களுக்கு என்று ஏதாவது சேர்த்துக் கொள்ளமுடியும். யாவரும் வாழ்வது வாடகை வீடுகளில். அசோக் மாத வாடகை விடுதியில்.
"உள்ள கூப்பிடறாங்க" என்ற குரல் அசோக்கின் பிரக்ஞயை எழுப்பியது. அனிச்சையாய் நேரம் பார்க்க மணி இரண்டே கால். நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் அழைத்ததற்கு மகிழ்ந்து நவீனின் அறைக்குள் சென்றனர் இருவரும்.
" உக்காருங்க. அதிக நேரம் இல்லை, சீக்கிரம் முடிச்சிக்கலாம். ஏற்கனவே அசோக் எல்லா விவரங்களையும் சொல்லிட்டார்" என்றார் சாயைப் பார்த்து நவீன்.
" அசோக் சொன்னார் டாக்டர், நீங்க இந்த டிரிப்ல கலந்துக்க உங்க விருப்பத்த தெரிவிச்சதா"
" பெரிய விருப்பம் கிடையாது. பாங்காங் ஏற்கனவே போய் வந்த இடம்தான். ஒரு மூணு நாள் ஓய்வு கிடைக்குமே என்றுதான் ஒத்துக் கொண்டேன்"
" எனக்கு உங்க பாஸ்போர்ட் எண், உங்க மனைவியோடது. இருவரோட வண்ண புகைப்படம் தேவையாக இருக்கு டாக்டர் விசா வாங்க"
மேசையின் முதல் அறையைத் திறந்து அவருடைய பாஸ்போர்ட், புகைப்படத்தையும் எடுத்துப் போட்டார்.
"உங்க மனைவி சார்"
"மனைவி எதுக்குங்க". கண்ணடித்தவாறு, "இந்த முறை அவங்க வரல. உடனே உங்க புராடக்ட் லிஸ்ட்ட குடுங்க பிரிஸ்கிரிப்ஸன தொடங்கிடலாம்." என்றார். இரண்டையும் பொருக்கி எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். விசயம் சுலபமாக முடிந்த மகிழ்ச்சியில் அசோக் கேட்டான்,
"ஏன் சாய் பாங்காங்?"
"தாய்லாந்தோட தேசியத் தொழில் என்னன்னு உனக்கு தெரியுமில்ல. அதுதான் இந்தாளு மனைவிய கூட்டிகிட்டு போகல. எப்படியோ விசயம் சுலபத்துல முடிஞ்சிடிச்சு. என்ன கொண்டு போயி ரூம்ல விடு. நான் கொஞ்சம் தூங்கணும். நீ சாயங்காலம் கால்ஸ ப்ளான் செய்துவிட்டு வா" என்றார்.
பொய்யோ உண்மையோ சொல்ல அவசியம் இல்லாமல் ஆயிற்று. ரூமில் இறக்கிவிட்டு நகரத்துவங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் மழை துவங்கிவிட்டது. வேகமாக வீடடைய விரும்பி நனைந்தாலும் சரியென நிறுத்தாமல் ஓட்டினான். துளிகள் கனக்கத் துவங்கின. ஹெல்மட்டின் கண்ணாடியில் நீர்த்தாரை வழிய வழிய துடைத்துக் கொண்டு ஓட்டினான். ஒரு கட்டத்தில் தொடர்ந்து வண்டி ஓட்டுவதின் அசட்டுத்தனம் உணர்ந்து தெரிந்த மருந்துக் கடை வாசலில் ஒதுங்கினான்.
வீடிருக்கும் வீதியில் நுழைந்தததுமே ஆர்த்தி கேட்டில் ஏறி தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. நனைந்தாளா எனத் தெரியவில்லை. மழை அன்றைய கணக்கை முடித்துக் கொள்ளும் தருணத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அசோக்கை கண்டதுமே அவள் கேட்டை விட்டிறங்கி ஓடி வந்து காலை கட்டிக் கொண்டாள்.
"போப்பா நனையாதே"
"நீயும் வா" என்றாள் காலோடு ஒட்டிக் கொண்டு. அவள் நனைந்திருக்கவில்லை.
அவனிடமும் இந்த வீட்டிற்கு சாவியுண்டு. திறந்த கதவை இடித்துக்கொண்டு ஆர்த்தி உள்ளே ஓடினாள். புத்தகப் பையை தூக்கிப் போட்டு விட்டு கேட்டாள்,
"மாமா விளையாடலாமா?"
"ஆனா அதுக்கு முன்னாடி சாப்பிடணுமே"
"நாந்தான் மத்தியானமே சாப்பிட்டாச்சு"
"சரி நானும் முடிச்சிட்டு வந்து விளையாடலாம்."
சுத்தமான சமையலறை ஒழுங்கில் அடிக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களோடு இருந்தது.
மார்பிள் பலகையின் மீது ஒன்றுமேயில்லை எரிவாயு அடுப்பைத்தவிர. அதுவும் சுத்தமாக இருந்தது. அக்கா அவனுக்கு சமைத்திருக்கவில்லை. மேலடுக்கில் இருந்த மூடியிருந்த பாத்திரத்தை திறந்தான். ஒட்டிக் கொண்டிருந்த எறும்பொன்றைத்தவிர யாதொன்றுமில்லை. பசி இன்னும் கூடியது. உடன் கோபமும். அவ்வெறும்பு உயிரோடிக்கிறதா இல்லையா என்பதைப்பற்றி அக்கறை ஏதுமில்லமால் பாத்திரத்தை இருந்த இடத்தில் வைக்கப் போக பிளாஸ்டிக் உறை சுற்றியிருந்த ஆப்பிள் ஒன்று தெரிந்தது.
"மாமா என்ன பண்ற"
சமையலறை வாசலில் நின்று கொண்டு ஆர்த்தி கேட்டாள். அவசரமாய் பாத்திரத்தைக் கொண்டு ஆப்பிளை மறைத்தான். ஒரே ஆப்பிள்தான் இருக்கிறது. அவள் முன் எடுத்தால் முழுதையும் அவளே கேட்பாள். அவளுக்குத் தெரியாமல் சாப்பிட்டால் தான் கொஞ்சமாவது பசியாற முடியும்.
"ஆர்த்தி உனக்கு கலர் பென்சில் தர்றேன். நீ வரஞ்சுகிட்டு இரு" என்றான்
"எனக்கு அஞ்சு கலர் வேணும்" என்றாள்.
இருக்கிற அத்தனை வண்ணங்களையும் எடுத்துக் கொடுத்துவிட்டு சத்தமில்லாமல் கவரைப் பிரித்தான். அமெரிக்கன் ஆப்பிள். அளவில் பெரிது. ஒன்றைத் தின்றுவிட்டு தண்ணீரைக் குடித்தால் போதும் என நினைத்து ஆப்பிளை கடிக்க முனைந்தான்,
"மாமா எனக்குத் தெரியாம ஆப்பிள் சாப்பிடறாயா" என்றாள் ஆர்த்தி இடது கையை பின்னால் கட்டிக் கொண்டு வலது கையின் சுட்டு விரலையும் தலையையும் ஆட்டிக் கொண்டு.
சட்டென இச்சையின் கீழ்தளத்திற்கு சென்றது போல் உணர்ந்தான். கருயடைந்த முகத்தோடு ஆப்பிளை ஆர்த்தியிடம் நீட்டினான். அவள் வாங்கி முகர்ந்து பார்த்தாள். ஓரத்தில் கடித்தபின் வாயைக் கோணிக் கொண்டு சொன்னாள்,
"இந்த ஆப்பிள் எனக்கு புடிக்கவேயில்லை." துண்டை தரையில் துப்பினாள். "நீயே சாப்டுக்கோ" என்றுவிட்டு அவனுக்குத் திருப்பித் தந்தாள். அசோக் வாங்கிக் கொண்டு ஆப்பிளைப் பார்த்தான். கடித்த பகுதியில் முகர்ந்து பார்த்தான். சிறுமையின் நெடியேறின ஆப்பிள்.
"எனக்கும் வேண்டாம்" என சொல்லிவிட்டு மேலடுக்கில் வைத்தான். நீரை முழுச் சொம்பளவு குடித்து விட்டு கட்டிலில் படுத்தான். சிறிது நேரத்தில் எங்கிருந்தோ வந்த எறும்புகள் ஆப்பிளின் கடிபட்ட பாகத்தில் மொய்க்கத்துவங்கின.
No comments:
Post a Comment