Sunday, April 29, 2012

கல்குதிரை இதழில் வந்த பிரியமான சிறுகதை
கனவு மிருகம்

எளிய அறிவால் தீர்க்கமுடியாத கணிதப் புதிரைப் போல அந்தக் கனவு அவனைப் பீடித்திருந்தது. விழித்துக் கொண்டபின்நீளமான இரவொன்றில் ஒற்றைக் கொம்புள்ள காண்டாமிருகத்தை அவன் கனவில் கண்டான். தொடர்ச்சியற்றும் வெளிர்சாம்பல் நிறமாகவும் கனவு இருந்தது. மிகுவெளிர் சாம்பல்நிறப் பனிப்பொழிவு கனவு முழுதும் பெய்ததாக இருக்கலாம் என்பதால் கனவின் நிறம் அவ்வாறு இருந்ததாக அவன் தர்க்கம் செய்துகொண்டான்.   பசுமை நிறை வனமும் ஆளுயரப் புல்வெளியும் அவ்வண்ணத்திலேயே இருந்தது. ஒருபோதும் உறக்கத்தில் முற்றுப் பெறாத கனவு அவனுடைய தர்க்கத்தின் திறப்புகளற்ற கதவுகளுக்கு வெளியே நின்றிருந்தது. விலங்குகள் திரிந்த அவன் முன்கண்ட கனவுகளில் காண்டாமிருகம் வந்ததில்லை. கனவைக் குறித்து அவனுக்கு மிச்சமிருந்ததெல்லாம் ஞாபகத்தில் கனவு பதிக்கும் காலடித்தடமும் கனவில் நடமாடிய காண்டாமிருகமும்தான். கனவின் எஞ்சிய சம்பவங்கள் இரவைப் போலவே கரைந்து போய்விட்டதாக எண்ணினான்.

கனவிலிருந்து தப்பிய காண்டாமிருகம் அவனுடைய மனதின் எட்டுத்திசைகளிலும் திரியத் துவங்கியது. அவன் வனமாகவும்
அம்மிருகமொன்றுதான் வனத்தின் ஒரே விலங்காகவும் எண்ணத்துவங்கினான். சில சமயம் உடல் கனம் கூடிவிட்டதாக உணர்ந்தான். முடிவற்று நீள்கிற கனவாக தான் மாறிவிட்டதாக அவன் தன்னை உணர்கிற பொழுதில் யதார்த்தம் காலத்தின் இறந்த அடுக்குகளில் ஒளிந்து கொள்கிற முயற்சியில் அதிகம் சலனமாகிற ஒன்றாகவும் கனவு மிருகமே காலத்தில் முன்னின்று நகர்வதாகவும் மங்கிய அறிவு துலக்கம் பெற்றபோது உணர்ந்து கொண்டான். தன்னுடைய உடலுக்குள்ளாக காண்டாமிருகம் சிறைப் பட்டிருப்பதைப் போலவும் அதனை விடுவிக்கச் செய்து வெளியில் நடமாட வைக்கிற முயற்சியில் ஈடுபடுவதைப் போல அவன் முகம் இறுக்கமானது. கனவு மிருகம் வேறொரு வெளி  கிடைத்த மகிழ்வில், இறந்து கொண்டிருக்கிற காலத்தின் வனங்களில் சிரஞ்சீவியாக உலவத் துவங்கியது.

இன்னும் சில நாட்களில் அம்மிருகத்தை அவன் தெருக்களில் திரிய விட்டான். அது மனிதர்களுக்கும் வாகனங்களுக்கும் நடுவே சாம்பல் நிற உடலைத் தூக்கிக் கொண்டு இவனறிய மட்டுமே நடந்தது.   யாரும் பிரக்ஞையுறாத அம்மிருகம் உணவு மேஜையில்,வீட்டின் கூடத்தில், மூலைகளில், அலுவலகத்திலும் அருகில் இருந்தது. என்றோ மறைந்துபோன புவிவாழ்வின் அறிய முடியாத இரகசியத்தை தன் தடிமனான மடிப்புகளில் போர்த்தி வைத்திருக்கிறது காண்டாமிருகம்.  இரகசியத்தின் எடை தாங்க முடியாத அதன் குள்ளமான  கால்கள் எதிர்காலத்தின் ஏதொவொரு தருணத்தில் உடலுள் புதைந்து காண்டாமிருகம் நகர முடியாத இறுகிய பாறை போல ஆகிவிடும். அதன் மந்தமான பார்வைத் திறனுள்ள கண்கள் பாறையின் கண்களைப் போல திசைகளை வெறித்தபடி இருக்கும். அபாரமான மோப்பத்தின் மூலம் காற்றின் மாறும் வாடையிலிருந்து எட்டுத் திசைகளின் வாசனைகளையும் கூர்ந்த செவிகளின் மூலம் காலத்தின் ஓசைகளையும் அது அறிந்து கொள்ளும்.

மத்திய அஸ்ஸாமிலும் நேபாளத்திலும் வாழும் காண்டாமிருகங்களில் எதுவுமே தான் கனவில் கண்ட ஒன்றாக இருக்கவே முடியாது என நினைத்தான். தனது மொழியின் புனைகதைகளில் கவிதைகளில் தனது நாட்டின் இதிகாசங்களில் காண்டாமிருகத்தின் இருப்பைத் தேடிப்பார்த்ததில் ஏமாற்றமடைந்தான். குறி சொல்கிற கிழவனாக அஸ்ஸாமின் நாட்டுப்புறக் கதை ஒன்றில் காண்டாமிருகம் இடம் பெற்றிருந்ததை அவன் அவ்விலங்கினத்தின் எண்ணற்ற வருடங்களாக தொடரும் வாழ்வில் சேகரித்து வெளிப்படுத்தப்படாத அறிவின் குறியீடாகப் புரிந்து கொண்டான்.  விவிலியத்தில் இருமுறை உதாரணமாகச் சொல்லப்படுவது குறித்து ஆச்சர்யமாகவிருந்தது. ஹஸ்ஷம்
பின் அல்குவாமா கைபரி மெக்காவின் வழியிலே மறிக்கப்பட்டு அமீர் ஹம்ஸாவின் ஈட்டியால் கொல்லப்பட்டபோது அவன் ஏறிவந்த காண்டாமிருகமும் வயிறு கிழிந்து செத்ததாக சொல்லில் செல்லும் உருது மொழி சாகசக் கதை ஜலாலுதின் அக்பரின் அவையிலிருந்து பாரசீகம் போனது. விலங்குகளை வாகனங்களாகக் கொண்ட கடவுளர்கள் யாருக்கும் காண்டாமிருகம் வாகனமாக இல்லாதிருப்பதால் தன்னுள்
நடமாடும் காண்டாமிருகத்திற்காக ஒரு ஆண் கடவுளையும் பின்பு ஒரு பெண் கடவுளையும் அம்மிருகத்தின் முன்புறம் நிற்பதைப்போன்று வரைந்து பார்த்தான். கடவுள்களைக் காட்டிலும் காண்டாமிருகம் கம்பீரமாய் இருந்தது. கடவுளை விடவும் மிருகங்கள் வலிமையானவை.
மிருகங்களைக் காட்டிலும் கனவு வலிமையானது. கனவைக் காட்டிலும் கனவில் வருகிற மிருகங்கள் வலியவை எனவும் அறிந்து
கொள்ளமுடியாத குணங்கள் உடையது கனவில் வரும் மிருகம் எனவும் தனக்குச் சொல்லிக் கொண்டான்.

பைத்தியங்கள் காலத்தை பிரக்ஞையுறுவதில்லை. அதனாலேயே அவை வாழ்வையும் மரணத்தையும் உணர்வதில்லை.ஆனால் தன்னால் காலத்தையும் வாழ்வையும் உணர முடிகிறது. ஆகவே கனவால் தான் பைத்தியமாகிவிடவில்லை என உணர்ந்தான். ஆனாலும் இன்னும் தன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளாத கனவைக் குறித்த விளக்கத்தை யாரிடம் கேட்பதென யோசித்தான்.மனவியல் மருத்துவர்கள் கனவை எதிர்பார்த்து காத்திருப்பதில்லை. அவர்கள் கனவுகளையும் நோயாக மாற்றிவிடுகிறவர்கள் என்பதால் அவர்களிடம் போகிற முடிவை அவன் எட்டவில்லை.

மழைபெய்யும் நாளில் கனவுகளுக்குப் பலன் சொல்லும் கிழவி ஒருத்தியிடம் கேட்டான். கிழவி கண்களை மூடிக்கொண்டு
இவன் முற்பிறப்பில் காண்டாமிருகமாக இருந்ததால்தான் அக்கனவின் தாக்கம் இன்னும் இருக்கிறது என்று சொன்னாள். உன் கனவில்
சிங்கத்தைப் கண்டிருக்கிறாயா என்று கேட்டதற்கு இவன் ஆமாம் என்று பதில் சொன்னான். மேலும் அவள் இவன் ஒரு பிறப்பிலும் சிங்கமாக இல்லாததால் அக்கனவு தாக்கமற்றுப் போய்விட்டதாகச் சொன்னாள். அவளிடம் அப்படியானால் இப்பிறப்பில் நான் ஏன் மனிதனாக இருக்கிறேன் என்றும் ஏன் காண்டாமிருகமாகவே தொடரவில்லை என்றும் கேட்டான். இவன் காண்டாமிருகமாக இருந்தபோது மனிதனைக் கனவில் கண்டதால் இப்பிறப்பில் மனிதனாக பிறக்க முடிந்தது என்றும் திரும்பவும் காண்டாமிருகத்தைக் கனவில் கண்டதால் அடுத்த பிறப்பில் அம்மிருகமாகவே பிறந்து வாழ்ந்து இறந்து பிறப்பைக் கடப்பான் எனவும் சொன்னாள். ஆனால் அவன் இப்பிறப்பிலேயே காண்டாமிருகமாக ஆசைப் படுவதாகச் சொன்னான். அவள் இதற்கு முன்பாக என்னவாக ஆசைப்பட்டாய் என்று கேட்டாள்.  தான் கடவுளாக ஆசைப்பட்டதுண்டு எனச் சொன்னான். மனிதன் மட்டுமே தான் தானாகவே இருக்க ஆசைப்படாதவன் எனப் பதிலுக்குச் சொல்லி இவனை அனுப்பினாள்.

தனக்குப் பழக்கமான கணிதப் பேராசிரியரிடம் விளக்கம் கேட்கலாம் என முடிவு செய்தான். அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்று தனிமையில் வெளிச்சம் குறைவாகப் படுகிற, அறைகளெங்கும் கணிதக் கோட்பாட்டுப் புத்தகங்கள், கணிதப்புதிர் புத்தகங்கள் இறைந்து கிடக்கிற வீட்டில் தொலைந்த எண்ணைத் தேடுபவராக காட்சி தந்தார். இன்மையைக் குறிக்கிற பூஜ்யத்திலிருந்து ஒருமையைக் குறிக்கிற ஒன்றிலிருந்து பன்மையைக் குறிக்கும் ஒன்பதுவரையில் எண்கள் முடிந்து போய்விட்டதில் அறிய முடியாத பிரபஞ்சக் கட்டுமானம் இருப்பதாகவும் அவர் இவனிடம் சொன்னார். உளறிக் கொண்டிருப்பவர்களின் சாயை சிலசமயம் மேதைமையாக அர்த்தம் கொள்ளப்படும் என்றாலும் மேதைகள் பெரும்பாலும் பிறருக்கு தோன்றா அர்த்தத்தில் உளறிக் கொண்டிருப்பவர்களே என்பதால் இவன் அவரை பெரியதொரு மேதையாக எண்ணி இருந்தான். இவனைப் பார்த்தவுடன் கணிதத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தவர், கணிதமென்பது மாய இலக்கிய வடிவம், அதன் படிநிலைகள், முடிவின்று நீளும் சாத்தியப்பாடுகள், வெவ்வேறு அமைப்புகள், எண்ணற்ற சூத்திரங்கள், கோட்பாடுகள், குறியீடுகள் அவைகளின் மதிப்புகள் எனக் கிடக்கும் கணிதம்தான் காலத்தால் முடிக்கப் பெறாத ஒரு நாவல் அல்லது இசைச் சேர்க்கை எனச் சொன்னார்.  முடிவின்மையாக மாறுகிற ஆற்றல் பிரபஞ்சத்திற்கும் கணிதத்திற்கும் காலத்திற்கும் மட்டுமே உண்டு. எக்காலத்தின் கணிதத்தையும் ஒற்றை புத்தகமாகத் தொகுத்தால் அது நம்மை இன்னொரு பிரபஞ்சத்தில் கொண்டுசேர்த்துவிடும் என்று சொன்னார். புவியில் நிலவும் புனைவுகளிலேயே கணிதம்தான் உயர்வானது என்றார்.  இவன் கனவைப் பற்றிச் சொன்னான். வடிவங்களாகவும், அளவுகளாகவும் எண்களாகவுமே தான் உலகைப் புரிந்து கொள்வதாகவும் வடிவங்களில் வட்டமும் முக்கோணமும் சதுரத்தையும் செவ்வகத்தையும் விட உயர்வானவை என்றும் தன் போக்கில் தொடர்ந்தார். அவன் தன்னுடைய கனவைப் பற்றி மீண்டும் ஒருமுறை சொன்னான். இயற்பியலையும் காலத்தையும் கணிதத்தின் மூலம் புரிந்துகொள்ள முயற்சிப்பதைப் போல கனவுகளின் புதிர்களையும் எண்களால், சூத்திரங்களால் தீர்க்க முடிந்தால் கணிதம் அதீதப் புனைவாக மாறிவிடும் என்று சொன்னார். இவன் சலித்துப் போய் வெளியேறினான்.

சொற்களை உண்டு வாழ்வதாகவும், தான் சொற்களாகவே உலகைப் பார்ப்பதாகவும் இவனிடம் சொல்லியிருக்கிற கதை சொல்லியிடம்  கனவைச் சொன்னபோது அவர் இந்திய மனதிற்கு காண்டாமிருகம் பொருந்தாத ஒன்று, மனிதன் பிறந்திராத  காலத்தில் நிலத்தில் வாழ்ந்த ராட்சத விலங்குகளின் சுருங்கிய வடிவாக இருக்கிற அம்மிருகம் அந்தக் காலத்தின் இழப்பை தன்னுள் தேக்கிவைத்திருக்கிறது என்றார். சிங்கமும் புலியும் யானையும் இந்திய மனங்களுக்கு உரிய வலிமையான விலங்குகள் என்றும் காண்டாமிருகமல்ல என்றும் விலங்குகளை வாழ்வியலோடு தொடர்புபடுத்திக்கொள்கிற பண்பாட்டுச் செயல்பாட்டின் மூலம் சமூக மனதைப் புரிந்து கொள்ள தான் முயற்சிப்பதாகவும் சொன்னார். மாயையும் கனவும் எந்த உலகத்திற்கோ யதார்த்தாமானதாயிருந்தால் அந்த உலகைக்
குறித்த சொற்களுக்கு பேபல் கோபுரம் கட்டிமுடிக்கப்பட வேண்டியிருக்கும் என்றார். மனதிற்கு உகந்ததாயிராத விலங்கைக் கனவில் கண்டதால் அதன் தாக்கம் அதிகமிருந்திருக்கும் என்று சொன்னார். அவன் காண்டாமிருகம் என்ற சொல்லை முதலில் கேட்டிருக்க வேண்டுமென்றும் அதன்பின்பு அதன் உருவத்தைக் கனவில் கண்டிருக்க வேண்டுமென்றும் சொன்னார். தன் நிலப்பரப்பில் இல்லாத  விலங்கைக் குறிக்கிற சொல் மொழியில் இருந்ததென்றால் அது அறிவின் பயணத்தையும், பயணத்தின் அறிவையும் காட்டுகிறது என்றும் கயலுன்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன் என்பது மாதிரி இன்னும் அம்மிருகம் உயிரோடு இருப்பதை உன் கனவில் வந்து காட்டியிருக்கிறது, போய்வா என்றார்.

    தான் கண்ட கனவின் நீடித்த தாக்கத்தைக் குறித்து மூவரும் அளித்த விளக்கங்களை யோசித்தவாறு அவன் தன்னுடைய படுக்கை அறை நாற்காலியில் அமர்ந்திருந்தான். அப்போது இவன் பார்வையில் கூடத்திலிருந்து அவருடைய அறைக்கு அவனுடைய  வயதான தந்தை செல்வது பட்டது. அக்கணம் அவன் தன்னுடைய தந்தை ஒரு காண்டாமிருகமாக மாறிவிட்டிருந்ததை பார்த்தான்.
நன்கு மழிக்கப்பட்ட அவருடைய முகம் எடை கூடிப் பிறந்த குழந்தையின் முகமாக இருந்தது. காண்டாமிருகத்தின் முகத்தில் நிலவும் குழந்தைமை அவருடைய முகத்திலும் நிலவுவதாக அவன் கண்டான். தான் புரிந்துகொள்ளப்படாத காலத்தில் வாழ்கிற தந்தைமார்கள்
காண்டாமிருகங்களைப் போன்றவர்கள் எனச் சொல்லிக்கொண்டான். அன்றிரவு உறக்கத்தில் கனவிலிருந்து தப்பிய காண்டாமிருகம் மீண்டும் கனவுக்குச் சென்று அங்கிருந்து இன்மையின் கருந்துளையில் மறைந்தது. மிச்சமிருக்கும் காண்டாமிருகங்கள் இருந்து தொலைந்த இன்னொன்றை அறியாமல் அடிகள் சுவடுகளாக நிலத்தின் மீது இந்நாள் வரைக்கும் உலவுகின்றன.

No comments: