Saturday, April 28, 2012

மாயாவதியை முன்வைத்து தலித் அரசியலைக் குறித்து எழுதின கட்டுரை

எழுதி மூன்றாண்டுகள் ஆகியும் பிரசுரிக்க முடியாத கட்டுரை

                                                  விவரங்களும், விளக்கங்களும்.

              இக்கட்டுரையை எழுதத் தூண்டியது பிப்ரவரி 5, 2009 டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழின் பெங்களூர் பதிப்பில் வந்த கீழ்கண்ட செய்திக்கட்டுரையாகும்.
                அம்பானி சகோதரர்கள்,பிர்லாக்கள்,பச்சன்கள்,ரத்தன் டாடா, இன்ஃபோசிஸ் நந்தன் நில்கேனி இவர்களை விடவும்  அதிகமான பணம் வருமான வரியாக செலுத்தியவர் ஒரு பெண், முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியை. மிக முக்கியமான சிறப்பு இவர் ஒரு தலித்தனிநபர் வருமான வரி செலுத்தியவர் பட்டியலில் கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி இவர் 19ஆம் இடத்தில் இருக்கிறார்.மேற்சொன்ன அனைவரும் இவருக்கு அடுத்த இடங்களில் இருக்கிறவர்கள். இந்திய கிரிக்கெட்டின் உச்ச    நட்சத்திரமான டெண்டுல்கர் பட்டியலில் 85வது இடத்தில் இருக்கிறார். அமீர்கான் 123ம் இடத்தில் இருக்கிறார்.
                                2007-08 நிதியாண்டில் தன்னுடைய வருவாய் ரூ.60 கோடிகள் இருக்கும் என உத்தேசித்து அல்லது உறுதி செய்துகொண்டு டிசம்பர் மாத முடிவுவரைக்குமான காலகட்டத்தில் இவர் முன்வரியாகச் செலுத்திய பணம் ரூ.15 கோடி. இந்தியாவில் 80 கோடிப் பேர் தங்கள் ஜீவிதத்திற்காக தினசரி செலவழிக்கும் தொகை வெறும் ரூ.20 மட்டுமே என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. இப்படியான ஒரு நாட்டில் ஒரு தலித் பெண் இவ்வளவு பணத்தை தன்னுடைய வருமான வரியாகச் செலுத்தியிருப்பதற்கு
                எவ்வளவு உழைத்திருக்க வேண்டும், எத்தனை கோடி ரூபாய்கள் மதிப்புள்ள நிறுவனத்தின் முதலாளியாக இருந்திருக்க வேண்டும், எத்தனை ஆயிரம் பேர் இவர் கீழே பணி புரிந்திருக்க வேண்டும். ஆனால் இப்படி ஏதும் இல்லாமல் தான் ஈட்டிய வருமானம்   அனைத்தும் தனக்கு வருகிற அன்பளிப்புகளின் மூலம் வருபவை எனச் சொன்னவர் இவர்.
                   இவர் வேறு யாருமில்லை, 1990களுக்கு பின்பு, உத்திரப் பிரதேச மாநிலத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன், இந்திய அரசியல் வரலாற்றின் திருப்புமுனை எனக் கொண்டாடப்பட்ட வெற்றிக்குப் பின்பு ஆட்சிக்கு வந்த மாயாவதி அவர்கள்தான். தான்  சமூகத்தின் எந்தப் பிரிவு மக்களின் அரசியல் பிரதிநிதியாக தன்னை முன்வைக்கிறாரோ அந்த சமூகப் பிரிவின் எவ்வளவு கோடிப் பேர் மேற்சொன்ன 20 ரூபாய் பட்டியலில் இடம் பெறுகிறார்கள் என்பதை இதனோடு பொருத்திப் பார்க்க வேண்டும். தான் பெறுகிற அன்பளிப்பு பணம் அனைத்தும் தன் மீதான அன்பிலும், பின்தங்கியிருக்கிற, தலித் மக்களின் நலன்களுக்காக தன்னுடைய ஆதரவாளர்கள் தங்களுடைய சொத்தை  அடமானம் வைத்தும் கொடுக்கிறார்கள் என்று மாயாவதி, தன்னை வருமானத்திற்கு   பொருந்தாத சொத்து சேர்த்த வழக்கில் விசாரித்து வரும் சிபிஐக்கு முன்பும், வருமான வரித்துறையினர் முன்பும் சொன்னவர்.
                Income Tax Appellate Tribunal (ITAT)-வருமான வரி விசாரணை  உயர்மன்றம். மாயாவதியைப் போன்ற வெகுஜனத் தலைவர்கள்  இப்படி அன்பளிப்புகள் பெறுவதில் தவறொன்றுமில்லை எனச் சொல்லியுள்ளது.  சில வருடங்களுக்கு முன்பு சிபிஐ அதன் விசாரணையில் 70க்கும் மேலான சொத்துக்களும், ரூ.13 கோடிகள் மதிப்புள்ள அன்பளிப்புகளும் மாயாவதி மற்றும் அவர் குடும்பத்தினர் பெயர்களில் இருந்ததை கண்டு பிடித்தது. தொடர்ந்து இவர்களுக்கு சொந்தமான 50க்கும் மேலான வங்கி கணக்குகளில் உறைந்து கிடந்த ரொக்கப் பணம் ரூ.7 கோடியையும் கண்டுபிடித்தது.
                2004லில் உறவினர் அல்லாத ஒருவரிடமிருந்து அன்பளிப்புகள் பெறுவது குறித்த சட்டம், ரூ.50000 மேலான அன்பளிப்புகள் உறவினர் அல்லாதவர்களிடமிருந்து ஒரு வருட காலத்தில் பெற்றுக் கொள்வது பெற்றுக் கொள்பவரின் வருமானமாக கணக்கிடப்படும் என்ற திருத்தத்திற்கு உட்பட்ட பின்பு மாயாவதி தான் பெற்றுக் கொண்ட அன்பளிப்புகளை தன்னுடைய வருமானம் என்றும் அவைகள்  மேல் வரி செலுத்துவதாகவும், வருமானவரி விவரங்களை தாக்கல் செய்தார்.
               
                ITATவின் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை எதிர்த்து அரசு டில்லி உயர்நீதி மன்றத்தில், இத்தீர்ப்பை திரும்பப் பெறும்படியும் இல்லையெனில் இது ஒரு முன்மாதிரியை உண்டாக்கிவிடும் என்றும் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகச் சொல்லியுள்ளது.  உயர்நீதி மன்றத்திலிருந்து அடுத்து உச்ச நீதி மன்றத்தின் கொட்டக் கொட்ட நிரம்பாத வழக்குகளின் அறைகளுக்குப் போய்ச் சேரும். அதற்குள் வரப் போகிற வருடத்திற்கான தன்னுடைய வருமானம் இவ்வளவு என உத்தேசித்து எத்தனை கோடி ரூபாய்களை முன் வரியாக மாயாவதி செலுத்துவார் என்பதை ஊகித்து வைத்துக் கொண்டு அடுத்த நிதியாண்டிற்கு பின்பு சரி பார்த்துக் கொள்ளவும்.

                சுவாரசியமான புள்ளிவிவரங்கள், சலிப்பூட்டும் சட்ட விவகாரங்களுக்கு உள்ளாக பல ஆதாரமான அடிப்படை விசயங்கள் நெளிந்து கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகள் வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்ப்பது புதிதில்லை.
                ஆனால் தலித் சமூகத்திலிருந்து வந்து, அதன் அரசியலில் உட்படுத்திக் கொண்டு தனக்குப் பின்பலமாய்த் திரண்ட தலித் மக்கள் மற்றும் இன்னபிற சாதாரண மக்களின் வாக்குகளின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய மாயாவதி தலித்திய அரசியலின் பொது வாழ்வின் தூய்மையை தனது இந்நடவடிக்கைகளின் மூலம் சந்தேகத்திற்குள்ளாக்குறார்.
                தலித் அரசியல் சமூகத் தளத்தில் தலித்துகளுக்கான விடுதலையை முன்வைக்கிற ஒன்றாகவும், அச்சமூகத்திற்கு உரிமைகள் பெற போரடக்கூடியதாகவும் பார்க்கப்படுவது தலித் அரசியல் நடவடிக்கையின் அடையாளமாகப் புரிந்து கொள்ளலாம். சமூக நீதியை வேண்டுகிற ஒரு அரசியல், ஜனநாயக அமைப்பில் வாக்குகளின் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டு - அதன் அடிப்படைகளுக்காகவும், அதன் சாமர்த்தியமான அரசியல் கூட்டுக்காகவும் - ஆட்சிக்கு வந்தபின் அது அனைத்து பிரிவு மக்களுக்குமான அரசாக மாறி விடுகிறது. ஒரே அரசியல் குரலாக ஒன்று சேர்ந்திருக்கும் தலித் மக்களுக்கு மட்டுமின்றி, சமூகத்தில் முன்னேறிய, நடுத்தர, பின்தங்கிய அனைத்துப் பிரிவினருக்காகவும் அந்த அரசு செயலாற்ற வேண்டியிருக்கிறது
                தலித் அரசியல் கட்சி நடத்துவது வேறாகவும், அக்கட்சி ஆட்சிக்கு வந்தபின் வேறாகவும் இவ்விடத்திலே வேறு தோற்றம் பெருகிறது. ஆட்சியில் தலித் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தலாம் என்றாலும் சமூகத்தின் அந்தப் பிரிவினரை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்க முடியாது. தலித்துகளோடு அனைத்துப் பிரிவினரையும் சேர்ந்த தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள்     சிறு தொழில், பெருந் தொழிலுக்குச் சொந்தக்காரர்கள், பெரும் நிறுவனங்கள்(Corporates), பன்னாட்டு நிறுவனங்கள் இவர்களின் நலன்களுக்கான திட்டங்களையும் தீட்ட வேண்டியிருக்கும். தலித் அரசியல் முன்வைக்கும் அடையாள அரசியல் இங்கே வர்க்க அரசியலாக மாற்றம் பெறுகிறது. பிற வகைகளில் நலிந்த பிரிவுகள் எனச் சாதியத்திற்கு அப்பாற்பட்ட பிரிவுகளும்  சமூகத்திற்குள் உண்டுஇவர்களும் அரசிடம் எதிர்பார்க்கிறவர்களாக இருக்கிறார்கள். கட்சியாக இருக்கிறபோது பிரத்யேகமாக(exclusive) முன்வைக்கப் படுகிற தலித் பிரிவு ஆட்சியாக மாறுகிற போது மற்ற பிரிவுகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது.    எனவே தலித் அரசியல் மூலம் ஆட்சிக்கு வருகிறவர் அனைத்துப் பிரிவினருக்கானவராக மாறிவிடுகிறார். ஆக ஒரு தலித் அரசியல்வாதி ஒட்டு மொத்த சமூகத்தில் அடையாளம் நீக்கப்பட்டு அரசு அமைப்பை நடத்திச் செல்பவராக மட்டுமே பார்க்கப்படுகிறார்.  அனைத்துப் பிரிவினருக்கான அரசாக இருக்கிறபோது ஆட்சியில் இருப்பவர்களின் தூய்மை முக்கியத்துவம் பெற்று விடுகிறது. ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான அரசியலில் ஈடுபடுகிறவர்களின் அரசியல் தூய்மையின்மை அப்பிரிவினரின் அரசியல் கோரிக்கைகளின்               நியாயத்தின் மீதும் சந்தேகத்தை தோற்றுவிக்கிற ஒன்றாக ஆகிற ஆபத்து நேரிடுகிறது. இந்தியாவில் மாயாவதிக்கு  நிகரான தலித் அரசியல்வாதிகள் யாரும் கிடையாது.பி. மாநிலம் போல தலித் அரசியல் மூலம் ஆட்சிக்கு வருகிற வாய்ப்பும்  இவர்களுக்கு கிடையாது. அவர் கன்சீராமையும் மிஞ்சியவராக ஆகிவிட்டார். ஆனால் அவர் தன் கரங்களில் ஊழல் கறை படிய                 விடுவதின் மூலம் மற்ற ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளைப் போலவே மாறிவிட்டார்மாயாவதிக்கும் மற்ற ஊழல் அரசியல்வாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் காண முடியாத போது சமூகத்தின் தலித் அல்லாத பிரிவு மக்கள் வேறு நோக்கங்களுக்காக அரசியலில் ஈடுபடுகிற கட்சியினரிடம் மாற்றம் தேடிப் போவதைத் தவிர்க்க முடியாமல் போகும் போது தலித் அரசியல் நியாயங்களும் பின்னடைவுக்குள்ளாகும்தலித் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல இட ஒதுக்கீட்டின் மூலமும், தகுதியின் மூலமும் அரசுப் பதவிகளில் இருக்கும் தலித் அதிகாரிகளுக்கும் இது பொருந்தும்.
                                உரிமைகள் பெற்றுக் கொள்வதின் மூலம் சமூகத்தில் மற்ற பிரிவினருக்கு நிகரான இடங்களுக்கு வருகிறவர்கள், மற்ற பிரிவினரைக் காட்டிலும் பொது வாழ்வில் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் எதனால் உண்டாகிறதென்றால் தங்கள் பிரிவுக்குள்ளாகவே  இன்னும் சமூக நீதி பெறாதவர்களின் வளர்ச்சியை பாதித்து விடக்கூடும் என்பதால். மாயாவதிஊழல் அற்றவராக தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக ஆகிற வாய்ப்பைத் தவற விட்டு தனக்கு முன்பிருந்த       ஊழல் நிறைந்த தலைவர்களைப் பின்பற்றுபவராக ஆகியது தலித் அரசியலின் வளர்ச்சியை எதிர்காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கும். மேலும் ஏற்கனவே ஊழல் நிறைந்த அமைப்பில் தங்களைப் பொருத்திக் கொண்டு அதன் மற்றொரு அங்கமாகவே தலித் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுகிறவர்களும் மாறிவிட்டால் அவர்கள் வேறு வகையில் ஒட்டு மொத்த சமூகத்தையே ஒடுக்குகிறவர்களில் ஒருவராகவே பார்க்கப்படுவார்கள்.
அரசியல்வாதிகளின் ஊழல் எந்தளவிற்கு கேடு நிறைந்ததோ அதனைவிடவும் நூறு மடங்கு ஆபத்தானது அதிகார வர்க்கத்தின் ஊழல். வாய்ப்பு கொடுக்கப்பட்டால் மட்டுமே அதிகாரத்திற்கு வர முடிகிற பெரும்பாலான அரசியல் வாதிகளின் பதவிக்காலம்  குறைந்த கால அளவே நீடித்திருக்கிறது. இக்குறுகிய காலகட்டத்தில் அவர்கள் நேரடியாகப் பொதுமக்களிடமிருந்து பெருகிற லஞ்சப் பணம் கான்ட்ராக்டர்கள், தொழில் அதிபர்கள் போன்றவர்களிடமிருந்து பெருவதைக் காட்டிலும் குறைவானது. பெரும் சொத்து சேர்க்கிற வாய்ப்புகள் அவர்களுக்கு இருக்கிற போதும் பதவிக்காலம் முடிந்த பின் சொத்துக்களை இழக்கும் அபாயமும் உண்டு. ஆனால் அதிகார வர்க்கம் ஏறக்குறைய முப்பதாண்டுகள் நிரத்தரப் பணி உடையது. இந்நெடிய ஆண்டுகளில் அவர்கள் மக்களிடமிருந்து பெருகிற லஞ்சப் பணம் பெரும்பாலும் பாதுகாப்பானதும், பணிக்காலத்திற்குப் பின்பு அதனை இழக்கும் அபாயங்கள் குறைவாகவும் உள்ள ஒன்று. மற்ற அதிகாரிகளைக் காட்டிலும் தலித் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது அதிகம் கவனத்திற்குரியதாக மற்ற வகுப்பினரால் மாற்றப்படுகிறது. ஏனெனில் அரசு நிறுவனங்களில் அவர்களுக்கு இருக்கிற சலுகைகள் வேறு எந்தப் பிரிவினருக்கும் கிட்டாத போது சலுகைகளின் மூலம் பணி வாய்ப்புகள் பெருகிறவர்களின் ஊழல் அவ்வாறு சலுகைகள் கொடுக்கிற ஏற்பாட்டை வெறுக்க வைக்கிறது. தான் பெருகிற லஞ்சப் பணத்தின் மூலம் தலித் பிரிவினரின் இதர மக்கள் மத்தியில் அவர்கள் தனிச்சலுகை பெற்ற வகுப்பாக மாறிவிடுகிறார்கள். தலித் அதிகார வர்க்கம் தலித் மக்களிடமிருந்து லஞ்சமோ, அவர்கள் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஊழலோ புரியாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. மேலும் சிறப்பு வகுப்பாக மாறிவிட்ட தலித் அரசு அதிகாரிகள் எந்தளவிற்கு சலுகைகள் இன்னும் போய்ச்சேராத தலித் மக்களின் அரசியல் நடவடிக்கைகளை ஆதரிப்பார்கள் என்பதும் ஆராயப் பட வேண்டிய விசயம்.                 ஊழலை ஒரு குற்றமாகப் பாவிக்காத சமூகம் நம்முடையது. பதவிகளில் இருக்கும் பெரும் தலைவர்களின் ஊழல் கீழ்மட்டங்களில் நடக்கும் ஊழலுக்கு ஒரு நியாயப்படுத்தலாக மாறிவிடுகிறதனால் தலைவர்களின் பதவிக்கால தூய்மையின்மை  அவர்களது அரசியல் வாழ்வைத் தீர்மானிக்கிற ஒன்றாகப் பார்க்கப்படுவதில்லை. சமூக மனமே குற்றமற்றதாக ஊழலை எண்ணும் போது அச்சமூகத்திலிருந்தே அரசியல் தலைவர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் ஆகிறவர்கள் எப்படி ஊழல் மனப்பான்மை அற்று                இருக்க முடியும்?. அப்படி இருக்க முடிகிற வாய்ப்பை அவர்கள் பின்பற்றும் அரசியல் சித்தாந்தங்கள் வழங்க முடியும். கம்யூனிஸ்ட்  கட்சியனர் மட்டுமே, இருக்கிற கட்சிகளிலே அரசியல் தூய்மையைக் காக்கிறவர்களாக பெரும்பாலும் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு இருப்பதற்கு காரணம் கட்சியின் கட்டுப்பாடுகள். மேலும் அவர்களை ஈர்த்துவந்த சித்தாந்தத்தின் அடிப்படையும் காரணமாக இருக்கக்கூடும்இவ்விரண்டு அரசியல்களும் எளிய மக்களுக்கானவை என்று சொல்லிக் கொள்வதால் இந்தப் பண்பை தலித் அரசியலுக்கும் பொருத்திப் பார்க்க முடியுமா?               
             தலித் அரசியல் சமூக உரிமைப் பற்றிப் பேசுகிற அளவிற்கு அரசியல் பண்பாட்டைப் பற்றிப் பேசுகிறதா? கட்சியனர் எந்த விதமான கட்டுப்பாடுகள் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று பார்த்தால் அப்படிப்பட்ட திட்டங்கள் எதுவுமே இல்லை என்றுதான்   காண முடிகிறது. அம்பேத்காரைத் தவிரவும் அரசியல் பண்பாட்டைப் பற்றிப் பேசின வேறு தலித் தலைவரைகள் யாருமில்லை.
                                1951ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதியில் அம்பேத்கரின் இல்லத்தில் தேர்தல் அறிக்கை குறித்து தீர்மானிக்க அகில இந்திய ஷெட்யூல்ட் வகுப்பினர் சம்மேளனத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. முன்கூட்டியே அறிக்கையின் நகல்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டன. மூன்று நாட்களுக்கு முன்பாக அக்டோபர் 3ம் தேதியில் இவ்வறிக்கை குறித்து  டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் தன்னுடைய கருத்தை எதிரொலித்த கட்டுரையில் இவ்வாறு இடம் பெற்றிருக்கிறது:

         "கறுப்புச் சந்தை மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக எல்லாத் துறைகளிலும் முக்கியமாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க சம்மேளனம் வலியுறுத்தும்".

           தலித் அரசியலின் மெசையாவான அம்பேத்காருக்குப் பின்வந்த தலித் அரசியல் தலைவர்கள், தலித் அதிகார வர்க்கம் அவரின்         இந்த அரசியல் தூய்மையை வலியுறுத்தும் பண்பை முழுமையாகக் கைவிட்டுவிட்டனர். தங்கள் செயல் திட்டத்தில் ஒரு அங்கமாகவும் இப்பண்பை கைக்கொள்ளாமல் செய்துவிட்டனர். இவர்களின் ஒட்டு மொத்த தேவை அதிகாரத்தில் உரிமையும் அதன் இலாபத்தில் பங்குமாக மாறிவிட்டது. இவர்களிடமிருந்து மீண்டு தலித் அரசியல் பண்பாடு அரசியலின் பொதுப் பண்பாக ஆகிவிட்ட ஊழல் குணத்திலிருந்து மாற்றமடையுமா என்பதற்கு மிகச் சமீப எதிர்காலத்தில் எந்தப் பதிலுமில்லை.
               


                                                                                                                                                                                                                                               

                               
               
               


                               

                               


                               
               
               
                 
               
                

No comments: