Monday, May 7, 2012

அரசியல் பொருளாதார கட்டுரை - 1


உலகப் பெருநிதி நிறுவனங்கள் : தோற்றம், வளர்ச்சி, வேலைப் பங்கீடுகள்

                தேசங்களின் பொருளாதாரச் செயல்திட்டங்களை, செயல்பாடுகளை அந்தந்த நாட்டின் பொருளாதார விற்பன்னர்கள் தீர்மானிக்கிறார்கள் என நாம் நினைத்தால் அது இன்னும் எண்பதுகளுக்கு முன்பான மனநிலையிலிருந்து வெளியேறாததின் அடையாளமாகும்.  கடந்த இருபது வருடங்களில் முன்னாள் கம்யூனிச நாடுகள் சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறுவதாகட்டும், பொருளாதார நெருக்கடி நிலையாகட்டும் துறை சார்ந்த எவற்றின் மையமாக இருப்பது உலக வங்கியும்(WORLD BANK), சர்வதேச நிதியமும் (INTERNATIONAL MONETARY FUND) ஆகும்.  இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ப்ரெட்டன் வூட்ஸ், நியூ ஹாம்சையரில் ஜூலை 1944ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் நிதி மற்றும் பொருளாதார மாநாடு, போரால் உருக்குலைந்த ஐரோப்பிய நாடுகளின் மறுகட்டமைப்பு மற்றும் உலகை எதிர்கால பொருளாதார சரிவிலிருந்து காக்கவும் கூடியதின் விளைவுதான் உலக வங்கியும், சர்வதேச நிதியமும். உலக வங்கியின் துல்லியமான பெயரான மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேசவங்கி (INTERNATIONAL BANK FOR RECONSTRUCTION AND DEVELOPMENT) அது உருவாக்கப்பட்டதின் நோக்கத்தைக் குறிக்கிறது. வளர்ச்சி என்பது அதன் பெயரில் பிற்பாடு யோசித்து ஏற்றப்பட்டதாகும்.

                1930களில் நிலவிய உலகளாவிய பொருளாதார மந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு அதன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் கடினமான பணி சர்வதேச நிதியத்திற்கு வழங்கப்பட்டது. பெரும் மந்தம் (Great Depression) உலகின் பல நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவு  வேலைவாய்ப்பின்மையை உருவாக்கியது.  அமெரிக்காவின் கால்பங்கு உழைக்கும் வர்க்கம் வேலையில்லாமலிருந்தது.  ஜான் மேனார்டு கெய்ன்ஸ் என்கிற பிரிட்டானிய பொருளாதார நிபுணர் அச்சமயத்தில் ஒரு எளிமையான விளக்கத்தை முன்வைத்தார்

போதுமான ஒட்டுமொத்தத்தேவை(DEMAND) இல்லாததுதான் மந்தநிலைக்குக் காரணம் எனவும் அரசின் திட்டங்கள் தேவையை ஊக்கிவிப்பதாக இருக்க வேண்டும் எனவும் கருத்துக்களை முன்வைத்தார். எங்கே நிதிக் கொள்கைகள்(MONETARY POLICY) செயல்படவில்லையோ அங்கே அரசுகள் வரிவிதிப்பு, பொது வருமானம் மற்றும் அரசுக் கடன் போன்றவற்றை உள்ளடக்கிய கொள்கையை(FISCAL POLICY) நம்ப வேண்டியிருக்கிறது, உதாரணத்திற்கு செலவுகளை அதிகரிப்பது, வரிகளைக் குறைப்பது போன்று. கெய்ன்ஸின் இது போன்ற ஆராய்வுகளை அடிப்படையாகக் கொண்ட மாதிரிகள் தொடர்ந்து விமர்சனத்திற்கும், சுத்திகரிப்பிற்கும் உள்ளானபோதும், ஏன் சந்தை அதிவேகமாக வேலைவாய்ப்புகளை நிரப்ப ஒத்துழைப்பதில்லை போன்ற அடிப்படை பாடங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளத்தக்காதாக இருக்கின்றன. சர்வதேச நிதியம் இன்னொரு பெரும் மந்தத்தை தடுக்கும் பொருட்டு சக்தியூட்டப்பட்டது. அது எந்தெந்த நாடுகள் உலகளாவிய ஒட்டுமொத்த தேவைக்கு சரியான பங்களிப்பை வழங்கவில்லையோ அந்நாடுகளின் மீது சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்தி  அந்நாடுகளின் பொருளாதாரத்தை சரிவுக்குள்ளாக்குவதின் மூலம் மந்தத்தைத் தடுக்கும்.  தேவை ஏற்படுமாயின் சர்வதேச நிதியம் அந்நாடுகளுக்கு ஒட்டுமொத்தத் தேவையை ஊக்குவிக்க கடன் வழங்கவும் செய்யும். 

                 ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மையை காக்க ஒரு கூட்டுமுயற்சி தேவை என்கிற நம்பிக்கையில் உருவாக்கப்பட்டதைப் போலத்தான் சர்வதேச நிதியம் பொருளாதார் ஸ்திரத்தன்மையைக் காக்க கூட்டுமுயற்சி தேவை என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இவ்விரண்டின் சமகால நிலைமையை யோசித்துப் பார்க்கவும். சர்வதேச நிதியம் ஒரு பொது நிறுவனம். அது உலக நாடுகளின் வரிசெலுத்துவோரின் பணத்திலிருந்து உருவாக்கப்பட்டது என்கிற போதும் அது எவரின் பணத்திலிருந்து உருவானதோ அவர்களுக்கு தகவலளிப்பதில்லை. மாறாக அது தேசங்களின் மத்திய வங்கிகளுக்கும் நிதியமைச்சர்களுக்கும் தகவலளிக்கும். பெரும்பாலும் வளர்ந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் அது இருக்கிறது எனினும் வீட்டோ அதிகாரம் அமெரிக்காவிற்கு மாத்திரமே உண்டு.

                சர்வதேச நிதியம் துவங்கப்பட்டதிலிருந்து பல்வேறு குறிப்பிடத்தகுந்த மாற்றங்களுக்கு உள்ளானது. சமகாலத்தில் சந்தையின் அரசாட்சிக்கு தத்துவார்த்த வீச்சுடன் வாதிடும் சர்வதேச நிதியம் சந்தை அடிக்கடி மோசமான விளைவுகளடையும் என்கிற கருத்தின் அடிப்படையில் துவங்கப்பட்டது. செலவுகளை அதிகரிப்பது, வரிகளை குறைப்பது, வட்டிவிகிதங்களைக் குறைப்பது போன்ற நம்பிக்ககைகளின் அடிப்படையில் துவங்கப்பட்ட அது எந்த நாடுகள் பற்றாக்குறையைக்(DEFICIT) குறைக்கிறதோ, வரிகளை உயர்த்துகிறதோ, வட்டி விகிதங்களை உயர்த்துகிறதோ அந்நாடுகளுக்கு மாத்திரம் கடன் வழங்குகின்ற ஒன்றாக மாறி இருக்கிறது.

                1980களில் ரொனால்ட் ரீகனும், மார்கரெட் தாட்சரும் உலகம் முழுக்கவும் கட்டுப்பாடற்ற சந்தை பற்றி பிரசங்கித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் இவ்விரண்டு நிறுவனங்களும் தலைகீழான மாற்றங்களுக்கு உள்ளாயின. 1968ல் உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்ட மெக்நமாரா மூன்றாம் உலக நாடுகளின் வறுமையினால் தீண்டப்பட்டு உலக வங்கியின் முயற்சிகளை வறுமையை ஒழிப்பதை நோக்கித் திருப்பினார். அவரைச் சுற்றிலும் முதல் தரமான பொருளாதார நிபுணர்களை வைத்துக் கொண்டு செயலாற்றினார்.  அவர்களில் ஹோலிஸ் செனேரி போன்ற அமெரிக்காவின் புகழ்வாய்ந்த பொருளாதார நிபுணரும் ஒருவர். 1981ல் புதிய தலைவராக வில்லியம் குளூசென்னும், சர்வதேச வர்த்தக நிபுணரான ஆன் க்ரூகெர் அதன் முதன்மை பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டதிலிருந்து அதன் திட்டங்களில் மாற்றங்கள் தோன்றின. செனேரியும் அவரது குழுவும்  வளரும் நாடுகளில் சந்தை எவ்வாறு தோல்வியடைந்தது, அரசு அதன் மேம்பாட்டிற்கு என்ன செய்யவேண்டும், வறுமையை ஒழிப்பது போன்ற விசயங்களில் கவனம் செலுத்திய வேளையில் க்ரூகெர் அரசு ஒரு பிரச்சனை எனப் பார்த்தார். கட்டுப்பாடற்ற சந்தைதான் வளரும் நாடுகளின் பிரச்சனைக்கான தீர்வு என அவர் முன்வைத்தார்.  இந்த புதிய தத்துவ வீச்சில் செனேரி சேர்த்திருந்த முதல் தரமான பொருளாதார நிபுணர்கள் வெளியேறினர்.

                எண்பதுகளில் உலக வங்கி நாடுகளுக்கு அணை கட்டுவது சாலைகள் அமைப்பது போன்றவற்றிகு கடன் வழங்குவதைத் தாண்டியும் செயல்படத் துவங்கியது. அது சர்வதேச நிதியத்தின் ஒப்புதல் இருந்தால்தான் கடன் வழங்கப்படும் என்கிற நிலைமையை உருவாக்கியது.சர்வதேச நிதியம் ஒப்புதலோடு நிபந்தனைகளையும் முன்வைக்கத் துவங்கியது.  சர்வதேச நிதியம் பொருளாதார நெருக்கடிகளில் கவனம் செலுத்த உருவாக்கப்பட்டதாக இருந்த போதும், வளரும் நாடுகள் எப்போதும் உதவி கேட்கிற நிலைமையில் இருப்பதானால் அது இந்நாடுகளின் வாழ்வில் ஒர் அங்கமாக மாறிவிட்டது.

                பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டதின் பிறகு சர்வதேச நிதியத்திற்கு புதிய அரங்கு கிடைத்தது. அது முன்னாள் கம்யூனிச நாடுகள் சந்தைப் பொருளாதாரத்திற்குத் திரும்புவதை நிர்வகிக்கிற ஒன்றானது. சமீப காலத்தில் பிரச்சனைகள் தீவிரமானபோது அதன் ஆழமான கரூவூலம் போதாத போது உலக வங்கியின் கோடிக்கணக்கான பணத்தை கொட்டச் செய்தது. உலக வங்கியிடமிருந்து நிதி ஆதரவு பெற்ற போதும் சர்வதேச நிதியத்தின் ஜூனியராகத்தான் அது செயல்படுகிறது. இரண்டிற்கும் இடையில் வேலைப் பங்கீடு உள்ளது.

சர்வதேச நிதியம் ஒரு நாட்டின் பெரும்பொருளாதார(MACRO ECONOMICS) விசயங்கள் உதாரணத்திற்கு அதன் பட்ஜெட் பற்றாக்குறை,அதன் பணக்கொள்கை, பணவீக்கம், வர்த்தகப் பற்றாக்குறை, வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் கடன் போன்றவற்றில் கவனம் செலுத்தும்.  உலக வங்கி அந்நாடுகளின் அமைப்பியல் விசயங்களில் உதாரணத்திற்கு எதில் அரசுப் பணம் செலவிடப்படுகிறது, பொருளாதார நிறுவனங்கள், உழைப்புச் சந்தை(LABOUR MARKET), அவைகளின் வர்த்தகக் கொள்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தும்.

கவனம் என்பது மென்மையான் வார்த்தை. அதை ஆதிக்கம் என மாற்றிப் படிக்கவும். ஆனால் சர்வதேச நிதியம் அதன் ஏகாதிபத்திய பாணியில் அரசுகளின் பட்ஜெட்டுகள், வர்த்தகப் பற்றாக்குறை மேலும் உலக வங்கியின் வேலைப் பங்கீடு என்னவோ அவைகளும் அதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகப் பார்க்கத் துவங்கியது.  உலக வங்கியிடம் அது பல சமயங்களில் பொறுமையின்றி நடந்து கொள்ளும்.

                இந்நிறுவனங்கள் வளரும் நாடுகளின் வளர்ச்சி சார்ந்த சவால்களுக்கு மாற்றுப் பார்வைகளை முன்வைக்க முடிவதின் மூலம் ஜனநாயக அடிப்படையில் செயல்பட முடியும். ஆனால் இவ்விரண்டும் பணக்கார நாடுகளால்(G-7), ரஷ்யாவுடன் சேர்த்தால்(G-8) நடத்திச் செல்லப்படுபவையாக உள்ளன. 

                ஐம்பது வருடங்களுக்குப் பின்பு சர்வதேச நிதியம் அதன் குறிக்கோளில் தோல்வியடைந்து விட்டது தெளிவாகத் தெரிகிறது. ஒரு ஆய்வின்படி ஏறக்குறைய நூறு நாடுகள் நெருக்கடிகளை இவ்வாண்டுகளில் சந்தித்தன. வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, சரிவைச் சந்திக்கும் நாடுகளுக்கு நிதி உதவி-கடன்களின் வழியாக-வழங்குவது போன்ற அதன் ஆரம்பகால நோக்கங்களிலிருந்து அது வேறாக செயல்படுகிறது.  சர்வதேச நிதியத்தின் முதிர்ச்சியடையாத மூலதனச் சந்தைச் சுதந்திரக் கொள்கை உலகின் பொருளாதார தடுமாற்றங்களுக்கு வழிகோலியது.  ஒரு நாடு நெருக்கடியிலிருக்கிற போது சர்வதேச நிதியத்தின் உதவிகள் அதன் ஸ்திரத்தன்மைக்குப் பயன்படுவதற்குப் பதிலாக ஏழை நாடுகளின் நிலைமை மேலும் மோசமடையவே செய்தது.  அது முன்னாள் கம்யூனிச நாடுகளின் சந்தைப் பொருளாதார மாற்று முயற்சியிலும் தோல்வியே கண்டிருக்கிறது.

                சர்வதேச நிதியம், உலக வங்கி இவற்றின் பாதையில் உலகம் இப்போது உலக வர்த்தக நிறுவனத்தையும் கண்டிருக்கிறது. கட்டுப்பாடற்ற வர்த்தகம், தளர்க்கப்பட்ட மூலதனச் சந்தை இவைகள் தேசங்களின் எல்லைகளை உடைத்து இல்லாமலாக்கும் போதும் பணக்கார நாடுகளின்(G-8) சுவர்கள் இன்னும் பல காலத்திற்கு உடைக்க முடியாததாகவே இருக்கும். அச்சுவற்றின் அடித்தளமாக இவ்விரண்டு நிறுவனங்களும் உலக வர்த்தக நிறுவனமும் இருக்கும். அடுத்த முறை .சிதம்பரம் பட்ஜெட் வாசிக்கும் போது அவர் ஒரு குரலாக மட்டுமே இருக்கிறார் என்பதை நினைவில் கொள்வோம். அவர் மட்டுமல்ல என்பதையும் சேர்த்து.               
  


               
               

No comments: