கருணாநியும் ஜெயலலிதாவும் : இரு வேறு முகங்களின் சமகாலம்
கருணாநிதி தன்னை ஒரு சூத்திரன் என்று பலமுறை அறிவித்துக் கொண்டவர். ஜெயலலிதா தான் ஆட்டவோ அசைக்கவோ முடியாத பாப்பாத்தி என சட்டமன்றத்தில் உரத்துச் சொன்னவர். கருணாநியும் ஜெயலலிதாவும் தாங்கள் எப்படி, எவ்வளவு வேறுபட்ட இருவர் என்பதற்கு அவர்களே கூறிக்கொண்ட தங்கள் அடையாளங்கள்தான் சாட்சி.
இவர்கள் இருவரும் தமிழக அரசியலின் இரண்டு பிரதான முகங்களாக தொண்ணூறுகளின் ஆரம்பம் துவங்கி இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். கருணாநிதி அதற்குமுன்பாக வேறு முகத்தோடு பொருதிக் கொண்டிருந்தவர். ஜெயலலிதா முக்கிய அரசியல் முகமாக முன்னணிக்கு வரதாவர்.
இந்த இருபது ஆண்டுகளில் தமிழக அரசியல் பல்வேறு குண மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அறுபதுகளில் எழுச்சியுற்ற திராவிட இயக்க அரசியலின் தேய்ந்த இறுதிக் காலத்தில் அவ்வரசியல் மரபின் தொடர்ச்சியாக ஒரு முகமும், அவ்வியக்கம் தளர்ச்சியுற்ற காலத்தில் தன் அரசியல் வாழ்வைத் துவக்கிய இன்னொரு முகமும் தங்களின் பாவனைகளை கணம் தோறும் காட்டிக் கொண்டிருக்கும் இருபது ஆண்டுகளில் அரசியல், தனிவாழ்வு, செயல்படுமுறைகள் அனைத்திலும் வேறுபாடுகள் உடைய இரு வேவ்வேறு விதிகள் ஆடுகிற சதுரங்கத்தினூடக தமிழகம் ஒரு நூற்றாண்டை தாண்டியும் புதியவொன்றில் நுழைந்தும் இருக்கிறது.
1
முதிர்ச்சியற்ற தேசியவாதமாக இருந்த நாடு தழுவிய ஒற்றை நோக்க அரசியலுக்கு எதிரான அதன் தேவைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நீதிக்கட்சி கம்யூனிஸ்டுகளுக்கு முன்பாகவே துணைக்கண்ட அரசியலில் காங்கிரஸுக்கு மாற்றாக தென்பகுதியில் அறியப்பட்ட ஒன்று. நீதிக்கட்சி காங்கிரஸிலிருந்து வேறுபட்ட முக்கியப் புள்ளி பிராமணர் அல்லாதாருக்கான பிரதான அரசியல் களம் தமிழகத்தில் அமையத் துவக்கமாக இருந்ததாகும்.
காந்தி, காங்கிரஸை அதன் அரசியல் நடவடிக்கையான சுதந்திரப் போராட்டம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாக மாற்றியதற்கு எதிர்வினையாக அரசியல் களத்தில் அல்லாமல் சீர்திருத்தக் களத்தில் அதன் சித்தாந்தந்தங்களுக்கு மாற்றாக ஈ.வெ.ரா திராவிடர் கழகத்தை முன்வைத்துக் கொண்டிருந்த ஆண்டுகளில் பிறந்தவர் கருணாநிதி. அரசியல் பிரக்ஞையும் செயல்படக்கூடிய பலமும் பெற்றவராக அவர் மாறிய பதின்பருவத்தில் திராவிட இயக்கச் சிந்தனைகள் தமிழகத்தில் வசீகரிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. பெருமளவு பிரமாணர்களே காங்கிரஸ் அமைப்பெங்கும் தலைமையிடங்களில் பரவிக் கிடந்த காலத்தில் ஈ.வெ.ரா தாழ்த்தப் பட்டவர்கள், பிராமணமல்லாதார் சமூக, அரசியல்
முக்கியத்துவத்துவம் பெற வேண்டி முனைந்ததை நோக்கி அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்கள்
ஈர்க்கப்பட்டது ஆற்றலுடைய, வேறு மாற்றைத் தேடிய அரசியல் பிரக்ஞையுற்ற அப்போதைய இவ்விரு பிரிவின் இளைய தலைமுறையினருக்கு இயற்கையான தேர்வாக இருந்தது.
இத்தலைமுறையின் ஆற்றல் மிக்க உழைப்பு திராவிடர் கழகத்தை தன் வேர்களை ஆழமெங்கும் ஊடுருவி நின்ற உறுதியான மரமாக மாற்றியது.
நாடு சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் சமூக அளவில் பிராமணர்களுக்குப் போட்டியாக, தொடர்ந்து அவர்களின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குகின்றவர்களாக பிராமணல்லாதார் ஆகிவிட்டிருந்தனர்.
தமிழகத்தில் சமூக சீர்திருத்தக் களத்தில் திராவிடர் கழகம் காங்கிரஸை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டிருந்தது. சுதந்திரத்திற்குப் பின்பு காங்கிரஸ் அரசியல் கட்சியாக மாறி ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது. கட்சியாக மாறிய பிறகு சமூக சீர்திருத்தம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஈ.வெ.ராவின் பிரதான விழுதுகள் காங்கிரஸின் இந்த மாற்றத்தை தாங்களும் மேற்கொள்ள விரும்பினர். அவர்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறுவதில் விருப்பம் கொண்டவர்களாக மாறினர். ஈ.வெ.ரா இதற்கெதிரான சிந்தனைமுறையிலிருந்தார். திராவிடர் கழக அமைப்புகளில் தாங்கள் பெற்ற பலம், அதன் தொண்டர்களிடையே இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெற்ற செல்வாக்கு இவைகளின் துணையோடு அண்ணாதுரையும் இன்ன பிறரும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவக்கினர். ஆரம்pக்கப்பட்ட போது சீர்திருந்த இயக்கமாக அறிவிக்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் அதனை அரசியல் கட்சியாக மாற்றினர். அதற்குப் பின்பு தேர்தலில் போட்டிட்டு வெற்றி பெருவது அதன் பொருட்டு அமைப்பைக் கட்டுவது போன்றவற்றில் அவர்களின் பெருமளவு கவனமும் உழைப்பும் குவிந்தது. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியமான இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவராக மாறி தன்னுடைய குறைசொல்ல முடியாத உழைப்பைக் கொட்டிக் கொண்டிருந்தார். அவர் முப்பது வயதைத் தொடும் முன்பாகவே ஒரு இயக்கத்தில் சேர்ந்து, வளர்ந்து அதனின்று பிரிந்து அரசியல் கட்சி அமைத்து அதன் நிறுவனர்களில் ஒருவராக மாறிவிட்டிருந்தார். ஜெயலலிதா அப்போதுதான் பிறக்கிறார்.
ஜெயலலிதா யாரின் அரசியல் வாரிசாக தன்னை அறிவித்துக் கொண்டாரோ அவரே கூட கருணாநிதி தமிழக அரசியல் களத்தில் ஒளிரத் துவங்கிய காலகட்டத்தில் அறியப் படாத ஒருவர். அன்றைக்குப் பலம் வாய்ந்த ஊடகமான சினிமாவில் நிரந்தர இடத்திற்கான வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சினிமாவில் கொண்டிருந்த ஆர்வம் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த அவரை தங்களின் ஊடக முகமாக மாற்றக் காரணமானது.
அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் ஊடகத்தின் பின்னணியில் செயல்பட்டனர். எம்.ஜீ.ராமசந்திரனின் வளர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியோடு பிரிக்கமுடியாத ஒன்று. எம்.ஜீ.ராமசந்திரன் தி.மு.க விற்கு பங்களித்ததை விடவும் அதனின்று பெற்றுக் கொண்டது ஒலிப்பெருக்கி ஒன்றைக் கொடுத்துவிட்டு வைரத்தைப் பெற்றுக் கொண்டதற்கு ஒப்பானதாகும். அது அவர் தன் இளமைப் பருவத்தில் நினைத்தும் பார்த்திருக்க முடிந்திராத ஒன்று. இதன் பொருள் தி.மு.க இல்லாமிலிருந்திருந்தால் எம்.ஜீ.ராமசந்திரன் என்ற ஒருவர் அதிகபட்சம் சினிமாவில் நட்சத்திரமாக மாற தன் வாழ்நாள் உழைப்பைக் கொட்ட வேண்டியிருந்திருக்கும். ஆனால் தி.மு.க அவர் இல்லாமிருந்திருந்தாலும் வளர்ச்சி பெற்றிருக்கும், ஆட்சியைக் கைப்பற்றும் பலமுடையதாக மாறியிமிருக்கும்.
ஏனெனில் காங்கிரஸுக்கு மாற்றான அரசியல் கட்சி ஒன்று எம்.ஜீ.ராமசந்திரனை விடவும் தமிழக அரசியலுக்கு முக்கியத் தேவையாக இருந்ததொன்று. தி.மு.க அதிகாரத்தைக் கைப்பற்றிய அது தோன்றி இருபது ஆண்டுகளில் கருணாநிதி கட்சித் தொண்டர்களிடமும், எம்.ஜி.ராமச்சந்திரன் கட்சியின் தொண்டர்களே உறுப்பினர்களாக இருந்த ரசிகர் மன்ற அமைப்பிலும் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அண்ணாத்துரை இன்னும் பத்தாண்டுகள் மரணமடையாமல் தமிழக அரசியலில் தி.மு.க வின் தலைமையிடத்திலும், வாய்ப்புப் பெற்றிருந்தால் ஆட்சியிலும் தொடர்ந்திருந்தால் தி.மு.க விலிருந்து இரு பிளவுகள் தோன்றியிருக்கும். ஒன்று கருணாநிதியின் தலைமையிலும் மற்றொன்று எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையிலுமாக இருந்திருக்கும்.
அண்ணாதுரை மரணமடைந்த போதுகூட அடுத்த கட்ட தலைவர்கள் வரிசையில் எம்.ஜீ.ராமசந்திரன் கருணாநிதியின் எண்ணிக்கைக்குப் பின்புதான் இருந்தார். கருணாநிதி நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன் போன்ற வரிசையில் தனக்கு முன்பிருந்தவர்களை ஓரம் கட்டி முன்னுக்கு வந்தது எம்.ஜீ.ராமசந்திரனும் வரிசையில் முன்னேறுகிற வாய்ப்பைத் திறந்துவிட்டது.
கட்சியில் தொண்டர்களாக இருந்தவர்களுக்கு கருணாநிதியும், தொண்டர்களாகவும் ரசிகர்களாகவும் இருந்தவர்களுக்கு எம்.ஜி.ராமசந்திரனும் தலைவர்களாக ஆனார்கள். இப்போது தலைமைக்குப் போட்டியிடுகிற இடத்தில் இரண்டே பேர் மட்டுமே இருந்தனர். அரசியல் கட்சியொன்றின் தொண்டர்களே உறுப்பினர்களாக இருந்த ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களின் பின்பலத்தோடு எம்.ஜி.ராமசந்திரன் கட்சியில் பிளவுண்டாக்கினார். சமூக சீர்திருத்த இயக்கமாக அறிவித்துக் கொண்ட ஒன்றிலிருந்து அரசியல் கட்சியாக மாற்றம் பெற்ற பிரிவிலிருந்து இன்னொரு பிளவுண்டாக்க கொள்கை முரண்பாடுகளோ புதிய அரசியல் தேர்வுகளோ எம்.ஜி.ராமச்சந்திரனுக்குத் தேவையிருந்திருக்கவில்லை. அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டுமே அவருக்கும் அவரின் ரசிகர்களான தொண்டர்களுக்கும் போதுமானதாக இருந்தது.
இந்த மரபிலிருந்து அதாவது அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கம் மட்டுமே கொண்ட பண்பிலிருந்து எம்.ஜி.ராமசந்திரனால் கட்சியில் வளர்க்கப்பட்டவர் ஜெயலலிதா. ஜெயலலிதா தன் இளமைக் காலத்தின் துவக்கத்தில் அரசியல் பிரக்ஞையுற்ற ஒருவராக இருக்கத் தேவையில்லாதவராக இருந்தார். பிறப்பின் காரணமாக அவர் எவ்வித தாழ்ச்சியும் பெற்றிருக்கவில்லை. அவர் மேலும் ஒரு திரைப்பட நடிகையாக மட்டரகமான சினிமா ரசனை கொண்ட ஒரு சமூகத்தில் ஜொலிக்கிற நட்சத்திரமாக இருந்தார். ஜெயலலிதாவின் சினிமா வளர்ச்சிக்கு அவர் எம்.ஜி.ராமச்சந்திரனோடு சேர்ந்து நடித்த இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் காரணமாக இருந்திருக்கலாம்.
தங்கள் அபிமானத்திற்கு உரிய தலைவரோடு அதிகப் படங்களில் பங்கு கொண்டதின் மூலமாக அவரோடு சேர்த்தே பார்க்கப்பட்ட ஒருவரை தங்களின் தலைவியாக ஏற்றுக் கொள்வதில் அவரின் ரசிகத் தொண்டர்களுக்கு சிக்கலேதும் இருக்கவில்லை. அவர்களின் இவ்வினோத மனநிலையே எம்.ஜி.ராமசந்திரனின் மனைவியான ஜானகியைக் காட்டிலும் ஜெயலலிதாவையே தங்கள் தலைவரின் அரசியல் வாரிசாக ஏற்றுக் கொண்டதற்கு காரணமானது. ஜெயலலிதா தன்னை எம்.ஜி.ராமச்சந்திரனின் அரசியல் வாரிசாக முழுமையாக நிறுவிக் கொள்வதற்கு ஜானகியோடு குறுகிய காலப் போரட்டமொன்றை நிகழ்த்த வேண்டியிருந்தது.
ஜெயலலிதாவும் கருணாநிதியும் அவர்களின் நாற்பது வயதுகளில் இரு அரசியல் கட்சிகளின் தலைமைப் பீடத்தில் அமர்ந்தனர். கருணாநிதிக்கு அதற்காக இருபத்தைந்து ஆண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது. ஜெயலலிதாவிற்கு இருபத்தைந்து திரைப்படங்களே போதுமானதாக இருந்தது.
2
சமூக நிலையால் உந்தப்பட்டு அரசியல் பிரக்ஞை பெற்ற பண்பும், கொள்கைத் தேர்வுகள் ஏதுமற்ற போதும் அரசியலில் ஈடுபட்ட மற்றொரு பண்புமாக தொண்ணூற்றி ஒன்றாம் ஆண்டு அரசியல் களத்தில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் எதிரெதிராக நின்றார்கள். அப்போதுதான் கருணாநிதி தேசப் பாதுகாப்பைக் காரணம் காட்டி ஆட்சியை இழந்திருந்தார். அதன் மூலகாரணங்களான பலவற்றில் கருணாநிதி யாரின் சமூக ஆதிக்கத்திற்கு எதிராக தன்னுடைய அரசியல் வாழ்வைத் துவக்கினாரோ அவர்களில் அதிகாரத்திலிருந்தவர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்தது. ராஜீவின் பரிதாபகரமான மரணம் காங்கிரஸுக்கு சாதகமானதைக் காட்டிலும் ஜெயலலிதாவிற்கே பெருமளவு சாதகமானது. ராஜீவ் தன் துண்டாக்கப்பட்ட தசைகளிலிருந்து தனது கட்சியான காங்கிரஸுக்கு மண்குடம் செய்து கொடுத்தார். ஜெயலலிதாவிற்கோ பொன்குடம் செய்து கொடுத்தார். அவரின் துர்மரணத்திற்குப் பிறகும் காங்கிரஸால் சிறுபான்மை அரசையே மத்தியில் அமைக்க முடிந்தது. ஜெயலலிதாவோ தமிழகத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தார். எம்.ஜீ.ராமசந்திரன் மரணத்திற்குப் பிறகு கட்சித் தலைமைக்கு வந்தவர் ராஜீவின் மரணத்தால் ஆட்சியைக் கைப்பற்றினார்.
No comments:
Post a Comment