Wednesday, May 9, 2012

கீழைச் சிந்தனையாளர்கள் - புத்தக மதிப்புரை


                                கீழைச் சிந்தனையாளர்கள் – ஓர் அறிமுகம் : மதிப்புரை


                மீண்டும் மத்தியக் கிழக்கு உலக அரசியல் நிகழ்வுகளில் முக்கியத்துவம் பெற்றுவிட்ட காலம்.  துனீசியா, எகிப்து, சிரியா, லிபியா போன்ற `இஸ்லாமிய’ நாடுகளில் நிகழ்ந்த மக்கள் எழுச்சி, உற்பத்தி செய்யப்பட்ட `இஸ்லாமிய பயங்காரவாத` ஒற்றை அடையாளத்தைத் தாண்டி ஜனநாயகம், சமூக பொருளாதார மேம்பாடு ஆகிய அரசியல் கோரிக்கைகளுக்காக பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலே துவங்கிவிட்ட எதிர்ப்பு மரபை அரபு நிலங்களில் மீண்டும் துவங்கியது. மத்தியக் கிழக்கு இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் மக்கள் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு துவக்கத்தை அளித்து அரசு என்பது எதிர்க்க முடியாத ஒன்று, இஸ்லாம் நவீன கால அரசியலுக்குள் நுழைய முடியாதது, வரலாறு முடிந்துவிட்டது, இலட்சியவாதத்தை நுகர்வு அழித்துவிட்டது போன்ற கருதுகோள்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு சோர்ந்து போயிருந்த மக்களுக்கு எதிர்ப்பு அரசியலைக் கற்றுக் கொடுத்துள்ளது. நம்ப முடியாத அதிசயமாக அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் முதன்முறையாக மத்தியக் கிழக்கு எழுச்சிகள் தந்த உத்வேகத்தால் தங்கள் அரசுகளை எதிர்க்கத் துவங்கியுள்ளது வரலாற்றின் இயக்கக் கண்ணிகள் வேறு பிராந்தியங்களிலிருந்து இயங்கத் துவங்கிவிட்டதை உணர்த்துகிறது.

     யூரோப்பாவை கிரேக்கக் கடவுளான ஜீயஸ் கவர்ந்து சென்றதிலிருந்து துவங்குகிறது மேற்கிற்கும் கிழக்கிற்குமான கருத்தியல், பொருளியல் முரண்பாடுகள் மற்றும் போர்கள், கிழக்கின் பேரரசான பாரசீகத்தின் அரசர்களான தாரியஸ், ஸெரக்ஸஸ் காலத்திலிருந்து அலெக்ஸாண்டரின் வெற்றிகளைத் தொடர்ந்து பன்னெடுங்காலத்திற்குப் பின்பு துருக்கிய உஸ்மானியப் பேரரசு இருபதாம் நூற்றாண்டின் துவக்க வருடங்களில் வீழ்ச்சியடைந்ததையும் கடந்து இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் முதல் பத்துவருடங்களில் நிகழ்ந்த ஈராக், ஆஃப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு போர்கள் வரையிலும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

     நிலப்பகுதிகளின் ஆக்கிரமிப்பு கலாச்சர ஆக்கிரமிப்பிற்கு வழிகோலியது. மேற்கு தன்னை மனித நாகரிகத்தின் தலைமையிடத்தில் வரலாற்றுக் காலத்திலிருந்தே வைத்துக் கொண்டு ஏனைய உலகை கண்காணிப்பது மட்டுமல்லாமல் அதன் கலாச்சார மற்றும் அறிவுசார் புலங்களையும் கட்டுப்படுத்த முனைவதோடு கிழக்கைக் குறித்த, மேற்கின் அதிகாரத்தை ஒருவகையில் நியாயப்படுத்த உதவுகிற கதையாடல்களையும் பரவவிட்டுள்ளது.  இருண்ட கண்டம் என எந்தப் புவிப் பகுதியைக் குறிப்பிடுகிறோம் என்பதற்கு ஆஃப்ரிக்கா என பதிலளிக்க நாம் பள்ளியிலிருந்தே கற்பிக்கப் பட்டுள்ளோம். வரலாறு, அறிவியல், சமூக மற்றும் பொருளாதார துறைகளில் மட்டுமல்லாமல் நாகரிகத்தில் கூட கிழக்கு முன்னேற்றமடையவில்லை என மேற்கால் நம்ப வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இஸ்ரேலின் உருவாக்கமும் அதன் பாலஸ்தீனிய ஆக்கிரமிப்பும் வெகுகால உலகப் பதட்டங்களில் ஒன்று.  ஆக மத்தியக் கிழக்கை புரிந்து கொள்வது ஏறக்குறைய வரலாற்றின் நரம்புகளில் முக்கியமான ஒன்றை அறிந்து கொள்ள உதவுகிறது.

     மொழியியல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவிட்ட காலகட்டத்தில் அதன் நுண் அரசியல்களைப் புரிந்து கொள்ளவும், மொழி உருவாக்கித் தருகிற சித்திரங்கள் எவ்வாறு ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவுகின்றன என விவாதிப்பது அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாகவும் மாறிவிட்ட காலகட்டத்தில் மேற்கு வகைப்படுத்தி வைத்திருக்கும் ஓரியண்டல் (கீழைத்தேய) பிரதேசத்திலிருந்து உருவான பின்-காலனீய, மார்க்ஸீய மற்றும் பின்நவீனத்துவ கோட்பாடுகளுக்கு பங்களித்த சிந்தனையாளர்களைக் குறித்த அறிமுக நூலை தமிழில் “கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” என்று தலைப்பிட்டு எச். பீர்முகம்மது எழுதியுள்ளார். அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் அவர் ஏற்கனவே இதழ்களிலும், இணையத்திலும் எழுதியுள்ளவற்றின் தொகுப்பாகவும் உள்ளது.

     பத்து சிந்தனையாளர்களைக் குறித்த அறிமுகம் என்றாலும் இந்நூல் கீழைத்தேயத்தின் பன்முகப்பட்ட தன்மைகள் குறித்த வாசிப்பையும் சாத்தியப் படுத்தியுள்ளது. இதுகாறும் தமிழ்ப்புலத்தில் நிலைபெற்றுவிட்ட ஐரோப்பிய சிந்தனை அறிமுகங்களுக்கும், சிலசமயம் தடாலடிகளுக்கும் மாற்றாகவும் ஐரோப்பா கடந்தும் சிந்தனை உலகிற்கு வேறு முகவரிகள் உள்ளன என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

     ஓரியண்டிலிசத்தின் மூலச் சிந்தனையாளரான எட்வர்ட் செய்த், ஓரியண்டலிசம் குறித்த கருத்தியல் விளக்கத்தை, “ஓரியண்டலிசம் என்பது கிழக்கு, மேற்கு ஆகியவற்றின் இயற்கைத் தத்துவம் மற்றும் அறிவுத்தேற்றவியல் அடிப்படையிலான சிந்தனை வகைமையே” (பக்.18) மேலும் அதன் மையப்புள்ளி குறித்து “கீழைத்தேயக் கோட்பாடு அதன் எதார்த்த புறநிலையைவிட அதிகமும் கலாச்சார நடைமுறைகள் மீதே கவனம் செலுத்துகிறது” (பக்.19) என்கிற விளக்கத்தை அளிக்கிறார்.
மத்தியக் கிழக்கின் தீர்க்க முடியாத சிக்கலான இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை குறித்து எட்வர்ட் செய்த் லியோதார்த்துடன் (பின்நவீனத்துவ மூலத்தந்தை) நிகழ்த்தும் உரையாடல் ஐரோப்பிய சிந்தனையாளர்களான சார்த்தர், ஃபூக்கோ, ஹாப்ஸ்வாம் மற்றும் லியோதார்த்தினது, இந்த சிக்கலைக் குறித்த நிலைப்பாடுகளின் பக்கச் சாய்வை வெளிப்படுத்தியுள்ளது, இந்த நூல் நமக்களிக்கும் வேறொரு வாசிப்பு.
பெருங்கதையாடல்களை நிராகரிக்கும் பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் ஏன் தொன்மங்களை மற்றும் ஒப்புக் கொள்கிறார்கள்? என எட்வர்ட் செய்த் எழுப்பும் கேள்வி பின்நவீனத்துவ மறுவாசிப்பிற்கு உதவக்கூடியது.
லென்னி பிரன்னர், இஸ்ரேல் உருவாக்கத்தில் ஜெர்மானிய நாஜிக்களின் பங்கும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய யூதர்களைக் குறித்தும் வழங்கும் சித்திரம் அதிர்ச்சியளிக்கக் கூடியது (பக் 181-6).

மத்தியக்கிழக்கின் தந்தைவழிச் சமூகக் கட்டமைப்பின் இறுகிய தன்மைகளைக் குறித்துப் பேசும் ஹிசாம் சரபி அரபுச் சமூகத்தின் நவீனத்துவ மற்றும் தந்தைவழிச் சமூக ஊடாட்டத்தை விளக்குகிறார் (பக் 123). நவீனத்துவம் மதச்சார்பின்மையை உள்வாங்கிய ஒன்று.  அரபுச் சமூகத்தில் மதச்சார்பின்மை வெற்றியடைவதற்கான தடைகளை அந்தச் சமூகத்தின் தந்தைவழிச் சமூக விதிகளில் காண்கிறார். நவீனத்துவம் அரபுச் சமூகத்தில் எகிப்தின் வழியாக நுழைந்ததையும் அதன்வழி அரபுச் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றாங்களையும் குறித்து சிந்தித்த சமீர் அமினையும், தாஹா உசேனையும் இந்நூல் விரிவாக அறிமுகப்படுத்துகிறது.

சமீர் அமினின் விரிவான அறிமுகம் சந்தைப் பொருளாதாரத்தைக் குறித்த முக்கியமான அவரது பார்வையை வெளிப்படுத்தியுள்ளது.(பக் 149-50). அரபுச் சமூகத்தை மார்க்சிய அடிப்படைகளின் படி நின்று ஆராயும் சமீர் நம்கால மார்க்ஸீய சிந்தனையாளர்களில் முக்கியமானவராகவும், ஆஃப்ரிக்க கண்டத்தின் வளர்ச்சிக்கான திட்டமிடல்களிலும் பங்குபெறும் ஒருவர்.  அரபுச்சமூகத்தின் இரு வர்க்கங்களான வர்த்தக மற்றும் விவசாய வர்க்கங்கள் நவீனத்துவத்தை உள்வாங்கிக் கொண்டதைக் குறித்தும் பேசுகிறார் (பக்-156) தாரிக் அலி, மத்தியக் கிழக்கு அரபுச் சமூக உருவாக்கத்தின் அடிப்படைகளை இஸ்லாமிய ஆரம்பகட்டங்களில் வைத்து விவாதிக்கிறார். இஸ்லாமிய வெகுஆரம்ப வருடங்களில் பெண் தெய்வ வழிபாட்டின் மீது நிகழ்த்திய தாக்குதலில் இருந்து அவர் அளிக்கும் விளக்கம் இஸ்லாமிய உருவாக்கம் பற்றிய உள்வாசிப்பை இன்னொரு கோட்டில் வாசிக்கும் சாத்தியத்தை அளிக்கிறார்.  விவாசாய சமூகங்கள் இஸ்லாமில் நிகழ்த்திய மாற்றங்கள், “இஸ்லாத்தின் கறாரான நியதிகளில் ஏற்பட்ட விலகல்களில் பலவும் இஸ்லாமியக் கிராமப்புறங்களிலே தோன்றி வலுப்பெற்றன” என்கிறார். (பக்-80).  இஸ்லாமிய சமூகம் இன்றும் பல இடங்களில் வர்த்தக வியாபார வர்க்கமாக விளங்குவதற்கு “நம்பிக்கையுள்ளவர்களின் வீட்டில் கலப்பை நுழைந்தால், தவறாமல் தரித்தரமும் சேர்ந்து நுழையாமல் இருந்ததில்லை” என நபி ஹதீஸ் வழி சொன்னதை தாரிக் அலி நம் முன்னே வைக்கும் விவாததின் வழி புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியாவில் பிறந்து அல்ஜீரியாவில் ஃபிரான்ஸ் ஃபனானுடன் அதன் விடுதலைக்கு உழைத்து பின் அமெரிக்காவில் சிறையும் பிடிக்கப்பட்ட இக்பால் அஹ்மத்தைக் குறித்தும், அவரது ஏகாதிபத்தியம் குறித்த சித்திரங்களையும் இந்நூல் அறிமுகப்படுத்துகிறது.
பின்நவீனத்துவ சிந்தனைக்கு அதன் தத்துவார்த்த, மொழியியல் அடிப்படைகளை உருவாக்கிக் கொடுத்த இஹாப் ஹசனை அறிமுகப்படுத்தும் இந்நூல் பின்நவீனத்துவ சிந்தனையில் கீழைக் கூறுகள் உள்ளடங்கியிருப்பதற்கு இஹாப் ஹசனே காரணமாக இருக்கலாம் என்கிறது. எதார்த்தவாதம், நவீனத்துவம் பின்நவீனத்துவம் குறித்து விளக்கும் இஹாப் (பக் 135-36) பின்நவீனத்துவத்திற்கு அப்பாலும் செல்ல வேண்டியுள்ளதைக் குறித்தும் பேசுகிறார்
.
    ஹிட்லரால் நிர்மூலமாக்கப்பட்ட யூதக் குடும்பங்களில் ஒன்றை சேர்ந்த மாக்சிம் ரோடின்சன் ஏனைய ஐரோப்பிய சிந்தனையாளர்கள் போலல்லாமல் பாலஸ்தீன நிலைப்பாட்டை ஆதரிப்பது ஹிட்லரின் யூத இன அழித்தொழிப்பு ஐரோப்பிய சிந்தனையாளர்களின் நினைவிலி மனத்தில் நிறைந்து அவர்களது இஸ்ரேலிய சார்பாக மாறுவதற்கு எதிராக
நிற்கிறது. மாக்சிம் ரோடின்சன் இஸ்லாம் சமூகம் முதலாளித்துவ சமூகமாக அடைந்த மாற்றத்தைக் குறித்து உரையாடுகிறார்.
சோவியத் தகர்விற்குப் பிறகு 1991ல் ஈரானில் உழைப்பாளர் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்குமளவிற்கு மார்க்ஸீயத்தின் மீது பற்றும், தைரியமும் கொண்டிருந்த மன்சூர் ஹிக்மத்தையும் இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. சோவியத் கம்யூனசத்தைக் குறித்த விமர்சனத்தையும், மார்க்சீயத்தின் தேவையையும், பயங்காரவாததிற்கு எதிரான போரைக் குறித்த விமர்சனத்தையும் மன்சூர், ஹைகேட்டில் மார்க்ஸின் கல்லறைக்கு அருகே புதைக்கப்படும் வரையிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்.
இந்நூலின் தனிச்சிறப்பாக சொல்ல வேண்டியது எச். பீர் முஹம்மது சமீர் அமின், லென்னி பிரன்னர் ஆகியோருடன் நேரிலும், தாரிக் அலியுடன் மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு எடுத்த நேர்காணல்கள்.  சமகால உலகச் சிந்தனையாளர்களை நேரில் கண்டு உரையாடல் நிகழ்த்துவது தமிழ்ப்புலத்தில் இதுவரை நிகழ்ந்திராத ஒன்று. இந்த வாய்ப்புகளை விரிவாக இல்லாவிட்டாலும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் பீர் முஹம்மது.

மத்தியக் கிழக்கு, அதன் இஸ்லாமிய, அரபுச் சமூகப் பின்புலம், அதன் அரசியல் பொருளியல் வரலாறுகள், இஸ்லாமிய பயங்காரவாதம் மற்றும் மத்தியக் கிழக்கின் தலையாய, வன்முறை நிறைந்ததுமான இஸ்ரேல் பாலஸ்தீன சிக்கல் குறித்து கருத்தியல் மற்றும் வரலாற்றியல் அடிப்படைகளின் மீது நின்று இந்தச் சிந்தனையாளர்கள் அளிக்கும் பல்வேறு சித்திரங்களை சுருக்கமான வெளியில் முடிந்தவரை விரிவாக அறிமுகப்படுத்துவதுடன் இந்நூல் மேற்சொன்ன சிந்தனையாளர்களை தொடர்ந்து கவனித்து வாசித்து புரிந்துகொள்வதற்கும் உதவி செய்வதாகவும் இருக்கும்.

                அரபுச் சமூகத்தின்அடையாளம் சார்ந்த, வரலாற்றுப் பூர்வ, மேற்குலகம் சார்ந்த பிரச்சனைகளை” (பக் 121) எச். பீர் முஹம்மது இந்நூலில் சிந்தனையாளர்கள் வழி அறிமுகப்படுத்துவது பாராட்டுக்களுக்கும், மேலும் அவரிடமிருந்து எதிர்பார்த்தல்களுக்கும் இடமளிக்கிறது

     




No comments: