1
சதுரங்கத்தின் நகர முடியா நிலையைப் போல நவீன சமூகம் இக்கட்டான கட்டத்தை அடைந்திருக்கிறது.
ஆனால் வரலாற்றின் அல்லது காலத்தின் இச்சதுரங்கக் கட்டங்களில் நகர முடியா நிலை எல்லாத் தரப்பினருக்கும் நேர்ந்திருக்கிறது.
வர்க்கப் போராட்டத்தில் முதலாளிகள் தொழிலாளிகள் இருவருக்குமான நெருக்கடி கட்டுப்பாடற்ற போட்டியாகவும், குறையும் வாய்ப்புகளாகவும் எப்போதும் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியமாகவும் இருக்கிறது. "சுதந்திரம் பங்குபடாத" நிலை அதன் அர்த்தத்தை அழுத்தமாக உணர்த்தும் இடத்தை அடைந்திருக்கிறது. ஆனால் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம் தன் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் வலிமை நவீன உலக முதலாளித்துவத்திற்கு ஏறக்குறைய எட்டியிருக்கிறது.
2
இருவர்க்கங்களின் பண்புக் கூறுகள் வெவ்வாறனவை. முதலாளித்துவம் கூட்டாகச் செயல்படுவதைக் காட்டிலும் தனித்து ஏகபோகமாக செயல்படுவதில் நாட்டமுடையது. ஒட்டுமொத்த உற்பத்தி சாதனங்களின் கட்டுப்பாடும் தன் வசம் இருக்க வேண்டுமென்கிற இச்சை இல்லாத முதலாளி இருக்கமாட்டார். இதற்கு மாறாக தொழிளாளர் வர்க்கம் கூட்டாகச் செயல்படுவதென்கிற பண்புக் கூறுடையது. இந்தப் பண்பே அதன் பாதுகாப்பாக இருந்த நிலை மாறிப்போய் தொழிளாலர்கள் கூட்டாக ஆக முடியாத நெருக்கடியை முதலாளித்துவம் ஏற்படுத்திவிட்டது. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டின் எண்பதுகள் வரையிலும் தொழிளாலர்களை வலிமையுடன் வைத்திருந்த இந்தப் பண்பு இந்நூற்றாண்டின் துவக்கத்திலேயே காணாமல் போக்கப்பட்டது.
கழுத்தறுப்பு போட்டியின் மூலம் முதலாளித்துவம் தன்னை தக்கவைக்கிற போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்வதைப் போலவே தொழிளாளி வர்க்கமும் தனித்தனியாகப் பிரிந்து தனிநபராக பேரம் பேசிக் கொள்கிற நிலைக்குப் போய்விட்டது. தனிநபராக பேரம் பேசிக் கொள்கிற நிலை வருகிறபோதே தொழிளாளிக்கான கூலியும் குறையத் துவங்குகிறது.
தொழிளாளி வர்க்கம் தான் நிகழ்த்திய நெடிய போராட்டங்களின் மூலம் உருவாக்கிக் கொண்ட கேடயம் உலக முதலாளித்துவம் வீசிய வாள் வீச்சில் உடைபட்டுப் போனது. பணிந்து போவதைத் தவிரவும் மக்கள் திரளில் பெரும்பான்மையாக இருக்கிற தொழிலாளிகளுக்கு வேறு தேர்வு இல்லாத நிலை ஏற்படுத்தபட்டது. தொழிலாளி என்கிற கூட்டு அடையாளம் மறைந்து போய் தனிநபராக அவன் எஞ்சிப் போகிறான். தனிநபர் என்கிற நிலை எப்போதும் பலவீனத்தோடு சம்பந்தப்பட்டது. தப்பிப் பிழைத்தல் என்கிற அச்சத்தினாலே பலம் ஒடுங்கிப் போய் பாதுகாப்பின்மையாக உணர வேண்டியிருக்கிறது. அதனால் பதட்டம் அதிகமாகிவிடுகிறது. பதட்டம் அவசரத்தை பொறுமையின்மையையும் உருவாக்குகிறது. நவீன வாழ்வின் அவசரத்தன்மை இதிலிருந்தே உருவாகிறது. இதே அவசரத்தன்மைதான்நுகர்வியத்திற்கும் தேவைக்கதிகமான துய்ப்பிற்கும் அடிப்படையாக இருக்கிறது.
தான் சந்திக்கிற போட்டியைச் சமாளிக்க உற்பத்திச் சாதனங்களுக்கு கொடுக்கிற விலையை முதலாளித்துவம் குறைத்துக் கொள்ள முனையும். நிலத்திற்கோ மூலதனத்திற்கோ நிறுவனத்தைக் கட்டமைப்பதற்கோ கொடுக்கிற விலையை குறைத்துக் கொள்ள முடியாதபோது மிச்சமிருக்கிற உற்பத்தி சாதனமான உழைப்பிற்க்குக் கொடுக்கும் விலையில் கைவைப்பதைத் தவிர வேறு முடிவை எடுக்க முடியாது. இதனை நேரடியாகச் செய்ய முடியாத போது தொழிளாளிக்குக் கிடைக்கும் நிரந்தர வேலை என்பதை மாற்றி தொழிளாளிகளுக்கிடையே உழைப்பை விற்பதின் மூலம் கிடைக்கும் தக்க வைத்துக் கொள்கிற வாய்ப்பைப் பெற போட்டியை ஏற்படுத்துவதன் மூலம் உழைப்பின் விலையைக் குறைத்துக் கொள்கிறது. ஆனால் இன்னுமொரு சிக்கல் இங்கே நேரிடுகிறது. தொழிளாளிகளின் விலை குறைகிற அதே சமயத்தில் அந்த வர்க்கத்திலிருந்து உருவாகிற அதிகாரிகள் வர்க்கத்தின் விலை அதிகமாகிறது. உடல் உழைப்போடு தொடர்பற்ற இயந்திரங்களைக் கொண்டு இயங்கும் தொழில்துறைகளில் இது நேரிடுகிறது. "இயந்திரங்களால் வெளியேற்றப்படுகிறவர்களின் சம்பளத்தைக் காட்டிலும் இயந்திரங்களால் வேலைவாய்ப்பினைப் பெறுகிறவர்களின் சம்பளம் கூடுதலாக இருக்குமென்கிற" கூற்றை இந்த இடத்திற்குப் பொருத்திப் பார்க்க முடியுமெனத் தோன்றுகிறது.
3
முதலாளித்துவத்தின் வரலாற்றை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். நிலவுடைமை மற்றும் பட்டறை கால உற்பத்தி முறைகளுக்குப் பின்பு உருவான ஆரம்ப கட்ட முதலாளித்துவம். தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சிக்குப் பின் பெருமளவு வளர்ந்த முதலாளித்துவம் தேச எல்லைகளின் பாதுகாப்பில் இருந்தது. இதனை தேசிய முதலாளித்துவம் எனலாம். தேசிய முதலாளித்துவம்
தனக்கான போட்டியை தனது சொந்த தேசியத்திற்கு வெளியிலிருந்து பெறவில்லை. அதற்கு மாறாக அது உள்நாட்டுப் போட்டியைச் சமாளிக்க வேண்டியிருந்தது.
உழைப்பு அதற்கு மலிவாகக் கிடைத்த போதும் மூலப் பொருட்கள் பற்றாக்குறை மற்றும் குறைந்த விலை மூலப் பொருட்களைப் பெற நிலவுடைமை சமூகங்களை காலனி நாடுகளாக மாற்றக் காரணமானது இந்த இரண்டாம் கட்ட முதலாளித்துவத்தின் முக்கியமான குணம் எனலாம். இந்தக்கட்ட முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்திற்கு வலிகோலியது. ஏகாதிபத்திய நாடுகளே புதிய தேசியங்கள் தோன்றக் காரணமாயின. சுய உணர்வு பெற்ற தேசியங்கள் தங்கள் ஆதிக்க நாடுகளின் பிடியிலிருந்து விடுபட்டதன் மூலம் தங்களுக்கென தேசிய முதலாளி வர்க்கத்தை உருவாக்கும் முயற்சியில் பெரு முதலாளிவர்க்கம் உருவானது. புதிய தேசியங்களின் முதலாளி வர்க்கம் மூடுண்ட சந்தையின் பாதுகாப்பில் அதன் நிரத்தர லாபத்திற்கு உத்தரவாதத்தோடு இருந்தது. புதிய அரசுகள் இவ்வர்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதை தங்கள் தேசியங்களைப் பாதுகாக்கிற முறைகளில் ஒன்றாகப் பார்த்தன. இதே காலகட்டத்தில் எழுச்சி பெற்ற தொழிலாளி வர்க்கத்தின் நலனைப் பாதுகாக்கவும் நிரந்தர வேலை, பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குதல் போன்ற முயற்சிகளையும் அவை செய்தன. அதாவது முதலாளி வர்க்கத்தின் நலனைப் பாதுகாக்க மூடுண்ட சந்தையும் தொழிளாளி வர்க்கத்தின் நலனைப் பாதுகாக்க நிரந்தர வேலை, குறைக்கப்பட்ட வேலை நேரம், ஓய்வூதிய மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற வழிகளையும் அரசுகள் உருவாக்கின. ஆரம்ப கட்ட முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழிளாளிகள், மேற்சொன்ன சலுகைகளைப் பெற பல்வேறு போராட்டங்களை நெடுங்காலம் நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்புதிய தேசியங்களின் தொழிளாளி வர்க்கம் மிகக் குறைந்த கால கட்டத்திலேயே இவை போன்ற உரிமைகளை பெற்றதற்கு அக்காலகட்டத்தில் உலகெங்கிலும் நிகழ்ந்த தொழிலாளி வர்க்க எழுச்சியே காரணமாகும். புதிய தேசியங்களின் அரசுகளும் பெரும்பான்மையான தொழிளாளிகள் பக்கமிருப்பதாகக் காட்டிக் கொண்டன. அரசு முதலாளித்துவத்திற்கு மேலே இருந்தது. ஏனெனில் முதலாளித்துவத்திற்குப் போட்டியாக பொதுத் துறை நிறுவனங்களையும் முதலாளித்துவத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கிற இடத்திலும் இருந்தது. முதலாளித்துவத்தை விடவும் அரசு மேலே இருப்பது முதலாளித்துவத்திற்கு உவப்பானதில்லை. இரண்டாம் காலகட்ட முதலாளித்துவத்தை ஒரு வகையில் எல்லைக்குட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட முதலாளித்துவம் எனலாம்.
ஆனால் சமகாலம் சந்திக்கிற முதலாளித்துவம் இரண்டாம் கட்டத்திலிருந்து மாறுபட்ட ஒன்று. மூலப் பொருட்களின் பற்றாக்குறை, மலிவு விலை மூலப் பொருட்கள் புதிய சந்தைகள் உருவாக்குதல் போன்ற நெருக்கடிகளால் காலனி ஆதிக்கம் உருவாகக் காரணமாக இருந்த இரண்டாம் கட்ட முதலாளித்துவம் போலன்றி அளவு கடந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான சந்தைகளை விரிவுபடுத்தவும், லாபத்தை பன்மடங்குப் பெருக்கிக் கொள்ளவும் கட்டுப்பாடற்ற வரம்புக்குட்படாத வர்த்தகத்திற்காகவுமான முயற்சியில் மூன்றாம் கட்ட முதலாளித்துவம் முயல்கிறது. வேறு வகையில் சொன்னால் இரண்டாம் கட்ட முதலாளித்துவம் தேசிய முதலாளி வர்க்கத்தை உருவாக்கியதென்றால் இது சர்வதேச முதலாளி வர்க்கத்தை உருவாக்கியிருக்கிறது. ஆனால் வேறுபாடு எதுவென்றால் இராண்டாம் கட்ட முதலாளித்துவம் நிலவுடமை சமூகத்திடம் போனதற்கு பதிலாக சமகால முதலாளித்துவம் தேசிய மற்றும் பெரு முதலாளித்துவங்களைக் கொண்ட சமூகங்களிடம் போட்டியிடுகிறது. புதிய சந்தைகள் உருவாக்குவது குறைந்து போய் வளருகிற சந்தைகளை நோக்கி அது நகர்வதாக இருக்கிறது. தேசிய மற்றும் பெரு முதலாளிகளுக்கென இருந்த மூடுண்ட சந்தை என்னும் உத்தரவாத்தை இது தகர்த்து கட்டுப்பாடற்ற சந்தையை உருவாக்கியது. இதன் பலன் காலனி ஆதிக்கத்திற்குப் பின்பு உருவான புதிய அரசுகளின் பெருமுதலாளித்துவ வர்க்கம் சட்டென தன்னை சர்வதேச முதலாளி வர்க்கமாக மாற்றிக் கொண்டது.
4
தேசங்கள் என்பவை சந்தைகளாகிவிட்டன. அரசு என்பது முதலாளித்துவத்திற்கு கீழிருப்பதாக மாறிப்போனது. சமகால அரசுகள் முதலாளிவர்க்கத்திற்கு ஆதரவாக மாறிப்போயின. முன்பு தொழிலாளி வர்க்கத்தின் சார்பாக செயல்படுவது அரசின் கடமை என்பதுபோய் முதலாளிவர்க்கத்தின் சார்பாக செயல்படுவது அரசின் கடமையாகிப் போனது. முதலாளித்துவம் அரசை வென்றெடுத்து தன் கட்டுப்பாட்டின் கீழ் அதிகாரத்தை கொண்டுபோய்விட்டது. மார்க்ஸ் எதிர்பார்த்ததைப் போல அரசு உதிரத் துவங்கியுள்ளது என இந்நிலையைச் சொல்ல முடியாது. மூலதனத்திற்கான சந்தை(capital market) திறந்துவிடப்பட்டது போல உழைப்பிற்கான சந்தை(labour market)யும் ஓரளவு திறந்து விடப்பட்டிருக்கிறது. ஆனாலும் அரசு இன்னும் வலுவாக இருக்கக் காரணம் தொழிலாளி வர்க்க சர்வதேசியம் அமைவதற்குப் பதிலாக முதலாளித்துவ சர்வதேசியம் அமைந்து போனது. மூன்றாம் கட்ட முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்தை வென்றெடுத்துவிட்டது. அது இழந்ததை மீண்டும் பெற்றுக் கொண்டது.
தனக்கு உண்டான நெருக்கடியைச் சமாளிக்க தனக்கென வைத்திருந்த கூட்டாக இணைதல், கூட்டுப் பேர(collective bargaining)திறன் போன்றவற்றை இழந்து நிற்கிற தொழிலாளி வர்க்கம் அது வரலாற்றின் முன்னெப்போதும் சந்தித்திராத நகர முடியா நிலையை அடைந்திருக்கிறது.
5
இந்நெருக்கடி முதலாளி மற்றும் உழைப்பாளி என்கிற வர்க்கப் பிரிவுகளை சற்றே மாற்றி உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் என அமைத்திருக்கிறது. உழைப்பாளி எப்போதும் நுகர்வோராக இருக்கிற போதும் சமகாலத்தில் உழைப்பு என்கிற பாத்திரம்(charecter) பின்னுக்குத் தள்ளப்பட்டு நுகர்வோர் என்கிற பாத்திரம் முன்வைக்கப்படுகிறது. நவீன சர்வதேச முதலாளித்துவம் தனக்குள்ளாக நடக்கிற போட்டியின் காரணமாக நுகர்வோரைத் தேடிச் செல்கிறது. விலை குறைப்பு புதிய இரகங்கள் என அது போட்டியைச் சமாளிக்க ஏற்கனவே உழைப்பிற்கு(labour) அது கொடுக்கும் விலையைக் குறைத்து மேலும் தொழிலாளி பெற்றுக் கொண்ட விலையையும் அளவுக்கதிகமாக நுகரச்செய்வதின் மூலம் அதுவே த்¢ரும்பவும் பெற்றுக் கொள்கிறது. நுகர்வோரின் வாங்கும் சக்தியை அளவு கடந்து அதிகரிக்க
முதலாளி வர்க்கம் கடன்களுக்கும் ஏற்பாடு செய்கிறது. இந்த வாங்கும் சக்தி உண்மையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட போதும் இவ்வகையிலும் தொழிலாளி வர்க்கமாகிய பெரும்பான்மை வர்க்கம் சுரண்டலுக்கு உள்ளாகிறது. நிரந்தரக் கடனில் அந்த வர்க்கத்தை வைத்திருப்பதின் மூலம் மீள முடியாத உழைப்பிற்கு அவனை உள்ளாக்குகிறது. நுகர்வு முடிந்த பிறகு அந்நுகர்விற்கான விலையைக் கொடுக்க நுகர்வோர் மீண்டும் தொழிலாளிகளாக மாற்றப்படுகின்றனர். உழைப்பு முடிந்ததும் நுகர்வு, நுகர்வு முடிந்ததும் உழைப்பு எனும் விடுவித்துக்கொள்ள முடியாத சங்கிலியில் மாட்டிக் கொள்கின்றனர். எப்போது வாய்ப்பு பறி போய்விடுமோ என்கிற நிலையை உருவாக்குவதன் மூலம் தொழிலாளியின் வாழ்வில் பதட்டத்தை அதிகரித்து அவனை துய்ப்பாளனாக மாற்றி வரம்பு மீறி உற்பத்தி செய்து குவிக்கப்பட்டவைகளை நுகரச் செய்கிறது நவீன முதலாளித்துவம். நுகர்வுப் பொருளின் விலையின் மூலமும், நுகரச் செய்ய வழங்கப்படுகிற கடனுக்கான வட்டியின் மூலமும் இலாபம் சம்பாதிக்கிற முதலாளித்துவ வர்க்கம் நிரந்தர உழைப்பில் தொழிலாளியை வைத்து அதற்குக் கொடுக்கிற மலிவான கூலியின் மூலம் இலாபத்தை பன்மடங்கு பெருக்கிக் கொள்கிறது.
தன்னிடமிருந்த போராட்டக் கருவிகளையும் தனக்கு தற்காப்பான அரசையும் பறித்துக் கொண்டதின் மூலம் தன்னை நெருக்கடிக்குள்ளாக்கும் முதலாளித்துவ வர்க்கத்தை தொழிலாளி வர்க்கமாக இருந்து வென்றெடுக்க முடியாத இக்காலகட்டத்தில் நுகர்வோராக இருந்து வீழ்த்தச் செய்ய முடிகிற வழி மட்டுமே அவ்வர்க்கத்திற்கு மிச்சமிருக்கிறது. விரிவான அர்த்தத்தில் இதன் பொருள்நுகர்வை அதிகரிப்பதற்குப் பதிலாக நுகர்வை குறைத்துக் கொள்வதின் மூலம் மூலதனத்தை நெருக்கடிக்குள்ளாக்க முடியும். தனக்கு அவசியமில்லாததையும் தேவை என மாற்றிவிடுகிற முதலாளித்துவத்தின் தந்திரத்தை அது முறியடிக்க வேண்டும். தன் வரம்புக்குட்பட்ட
நுகர்வு, திணிக்கப்படுகிற கடன்களை பெற்றுக் கொள்ள மறுத்தல் போன்றவற்றின் மூலம் தனக்குக் கிடைக்கிற குறைந்தபட்ச கூலியையும் பதட்டமில்லாமல் அனுபவிக்கமுடியும். சந்தை தோல்வியடையத் துவங்கியிருக்கிற நிலையில் நுகர்வைக் குறைத்துக் கொள்வதன் மூலம் அதை முற்றாக வீழச் செய்து அப்போது துவங்கும் நெருக்கடியில் புதிய முறைமைகளை சமூகம் அமைத்துக் கொள்ள நேரிடும். அது மீண்டும் பாதுகாக்கப்பட்ட சந்தையாக நிரந்தர வேலை மற்றும் இன்னபிற சலுகைகளாக புதுக்காலனியாதிக்கம் முடிவுக்கு வருவதாக இருக்கலாம்.
தொழிலாளர் அமைப்புகள் தனிநபராக மாறிவிட்ட தொழிலாளியின் பலவீனங்கள் காரணமாக தேய்ந்து போய்க்கொண்டிருக்கிற இக்கால கட்டத்தில் தாங்கள் செயல்படுகிற தளத்தை கலாச்சாரத் தளத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனேனில் நவீன முதலாளித்துவம் கலாச்சாரத்தை மாற்றுவதன் மூலம் இலாபத்தைப் பெருக்கிக் கொள்கிற ஒன்று. நுகர்வென்பது முழுக்கவும் கலாச்சாரத் தொடர்புடையது.
6
சம காலம் எதிர்கொள்கிற கேள்விகளுக்கு கடந்த காலத்திலிருந்து பதில் பெற முடியாமல் போகிறபோது புதிய சிந்தனைகளையும் அறிவையும் தவிர பதில் தேடிக் கொள்ள வேறு உபகரணங்கள் ஏதுமில்லை. தான் அடைந்து கொண்டிருக்கிற வீழ்ச்சியின் வாயிலாக பெற்றுக் கொண்ட படிப்பினைகளால் தொழிலாளி வர்க்கம் புதிய கேடயங்களைத் தரித்துக் கொண்டு புதிய ஆயுதங்களைக் கையிலெடுக்க வேண்டிய காலமிது. அவற்றில் ஒன்றாக அதீத நுகர்வைத் துறத்தலை முன்வைக்க முடியுமெனத் நம்பத் தோன்றுகிறது.