Thursday, November 15, 2012

நள்ளிரவுக் கோரிக்கை 14



அது ஒரு கோப்பை
நிரம்பவே நிரம்பாத கோப்பை
உடல்தான் அதனுள் ஊற்றவேண்டிய திரவம்
மீதியெல்லாம் வெறும் சடங்கு
அனுதினமும் வெறுமையில் தொய்யும் சடங்கு
பிரார்த்தனைகளுக்கு பலம் இருப்பின்
அது பதிலாகவிருக்கும் உலகிற்கு நரபலி கோரும் வழக்கமுண்டு
நிச்சயமற்ற இரவில் தனிமையில் துடிக்கும் நிலவு
பனித்துளி அகல் விளக்கில் சுடரும் வைரச் சூரியன்
அழகை பதிலாக்கும் வானுக்கு நட்சத்திர பலிகோரும் வழக்கமுண்டு
காணவே முடியாத உலகங்களுக்கு அப்பால்
தன் பின்புறத்தைக் காணச் சுற்றும் கோளம்
சாசுவதம் என்பதே முதுகைக் காண முயன்று ஓயாது சுற்றுதல்
அது ஒரு சர்க்கரை ஜல்லி
எறும்பு தன் உடலில் சுமக்கும் இன்னொரு உடல்
காற்றில் கரைந்து தித்திப்பென மலர்களில் தங்கும்
காற்றின் மடியில் பயணம் செய்யும் மகரந்த துகள்களின் பாதைகள்
உடலற்றதின் ரேகைகள்
அனைத்துலகை ஆள்பவர்களும் நடக்கும் உடலின் பாதை
எலும்புக் குகைகளின் சாந்தை நீக்க வெற்றிடம் வழி
வெளியேறும் காற்றில் கலக்கும் மாமிசவாடையில்
பூக்கள் வண்டுகளை சூழ்கொள்ளும்
வைரக்கற்கள் புதையுண்ட மடிகளைக் குடையும்
இன்னொரு உடலின் இயந்திர விரல்கள்
கிதாரின் தந்திகளை மீட்டு மின்னொளியை மகிழ்ந்தெழச்செய்யும்
இசையும் ஓர் உடல்
நீதி செய்வதே இன்னொரு உடலுக்கு மற்றொரு உடலின் சடங்கு
பொங்கவே செய்யும் நீரற்ற ஊற்றுகளும்
கேட்டறிய முடியா நாசித்துவாரங்களின் மூச்சொலியென
கோடை ஓர் உடல்
அதன் மீது பொழியும் மழைத்துளிகள்
உடல்களெனவே உடைந்து விழும் வேறொர் உடல்
கிரிமினல் ரெக்கார்டுகளின் மொழியில்
சிறைச்சாலைக் குழிகளை நிரப்பும் உடல்கள்
அவை பதிலாக இருக்கும்
நீண்ட மதில் சுவர்களுக்கு வெளியே உடல்கள் கொலையுறுவதுமுண்டு
தடைபட்ட கவிதை குறைப்பிரசவ சவமென அடங்கும்
வெள்ளைப் பிராந்தியங்களின் மீதியிடங்களில் ஒளிந்திருக்கும்
கவிதையும் ஓர் உடல்
ஹிட்லர் வெறுத்த யூத உடல்கள் வெறுத்த அரபு உடல்கள்
கிரிகோர் மெண்டலின் பட்டாணி உடல்கள்
பீகிள் பயணத்தில் கிடைத்த குரங்கு உடல்கள்
ஆஸ்விச் கூடங்களில் நந்திக் கடல்களில்
பிணமென அடுக்கப்பட்ட உடல்களை பதிலாக்கும் விரல்களில்
துப்பாக்கி உடல்கள்
ஆனாலும் ஒற்றை ஓடு போர்த்திய
ஆமை உடல்கள்
நிரம்பவே நிரம்பாத அது ஒரு வெற்றுக் கோப்பை














No comments: