Wednesday, November 21, 2012



பருவம் தப்பி இடம்பெயர்ந்த பறவை
நீரற்ற நிலைகளில் புழுக்களுமில்லாத வெடிப்புகளைக்
கண்டு மலைத்து
விண் அகல் ஒவ்வொன்றிடமும் வேண்டிநின்றது
முதல் மழையின் துளிகள் மீன்களென விழவேண்டி
பருவத்தை எப்போதுமே தவறவிடும்
அவனும் தூண்டிலோடு நிலைகளில் திரிந்தான்
ஒரு நிலையில் பறவையைச் சந்தித்தபோது
திரும்பிப் போகும் தூரத்தின் அயற்சியை தவமென ஆக்கிய முடிவை
எப்போதும் போல அலகு வழி சொன்னது
அவனக்குத்தான் பதில் சொல்ல வழியின்றி வந்தவழி நடந்தான்
பின்னால் வந்த பறவைக்கு புரிந்திருக்க வேண்டும்
ஒன்றும் சொல்லாமல் கொஞ்ச தூரத்தில் திரும்பப் போய்விட்டது

அதன்பிறகும் பெய்த மழைக்குப் பிறகும்
குளங்களில் முளைத்த மீன்களைத்
தவறவிட்ட தூண்டிலோடு திரியும்
அவனது தவப்போதில்
திரும்பப் போவதற்கென தூரங்களை உண்டாக்க
பருவங்களைத் தவறவிடும் முடிவை எடுத்த காலத்தில்
மீன்கள் ஆவியாகி நிலம் பிரிந்தபடியிருந்தன

1 comment: