Friday, November 23, 2012

அஜ்மல் கஸாப்பும் உருவாக்கப்பட்ட தேசபக்த நீதியுணர்வும்



     அஜ்மல்  கஸாப்  தூக்கிலிடப்பட்டுஎரவாடா  சிறையில்  புதைக்கப்பட்டது  ஒரு குறியீட்டு  நிகழ்வு.    இந்திய  நீதி  அமைப்பு  மற்றும்  தண்டனைச்  சட்டங்கள் தொடர்புடையதாக  இன்றி  இந்திய  அரசியலோடும்,   பொதுமக்கள் மனப்போக்கு, அரசியல் ஆதாயம் ஆகிவற்றைக் கணக்கில்  கொண்டு  எடுக்கப்பட்ட  ஓர்  அரசியல்  நடவடிக்கையே  இந்தத்  தூக்கு. 

பொதுவாக  நீதி  என்பது  குற்றத்தில்  தொடர்புடைய  இரு  தரப்புகளுக்கு இடையில்  சமநிலையை  உருவாக்குவது.    இந்த  சமநிலையின்  மூலம் ர்  இழப்பை, நட்டத்தை  மற்றோர்  இழப்பின்  மூலமும்,   நட்டப்படுத்தவதின்  மூலமும்  ஈடு செய்யப்பட்ட  தோற்றம்  உருவாக்கப்படுகிறது.    இந்த  சமநிலை  நீதியை பாதிக்கப்பட்டோருக்கும்,  தண்டனையை  பாதிப்பை  உருவாக்கிய  தரப்புக்கும் பகிர்ந்தளிக்கிறது. தண்டனைதான் நீதி என்பதற்கு பொருளை உருவாக்குகிறது. தண்டனைதான் நீதியின் நீண்ட பரிபாலன முறைகளுக்கு முடிவாக இருக்கிறது (Punishment is the end of the processes of Justice).  நீதி நிலைநாட்டப்படுவதற்கு விசாரணையின் வழி தண்டனைக்கான நியாயத்தை உருவாக்குதல் தேவை.  நவீன நீதிப் பரிபாலன முறை குற்ற உடல்களைக் கையாளுதல், விசாரித்தல், தண்டனை வழங்குதல் ஆகியவற்றிற்கு தனித்தனி துறைகளை உருவாக்கியது.  குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப தண்டனைகளை வழங்கும் நீதித்துறை தன்னை மிகவும் நடுநிலைமையோடும்(Neutral), நாகரிகமிக்கதாகவும்(Civilised), தனது விசாரணை ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு பின்பற்றப்படும் ஒழுங்காகவும் வெளிப்படுத்திக் கொள்கிறது.  இந்தத் தண்டித்தல் என்பதற்கான பொறுப்பை சிறைத்துறையினருக்கு வழங்கி நீதி முறைமையின் தாழ்ந்த இடத்தில் அத்துறையை வைத்துள்ளது.  அது நாகரிகமற்றதாகவும்(Uncivilsed) இருக்கிறது.  ஏனெனில் அது உடலோடு தொடர்புடையது.  ஆனால் அஜ்மல்  கஸாப்பின் விசயத்தை பொருத்தவரை நீதிமன்றங்களுக்கு வெளியே தண்டிப்பதற்கான விருப்பமும், நியாயமும் உருவாக்கப்பட்டு நீதிமன்றங்கள் சட்ட மொழியில் அவைகளை நிறைவேற்றும் வழிகளை வழங்க மட்டுமே உதவின.  குரலுள்ள சமூகம் எவ்வித விசாரணைக்கும் இடமோ, நேரமோ அளிக்க விரும்பாமல் ஒரு உடனடி தண்டனை நிறைவேற்றலை நீதிமன்றத்தினிடம் வலியுறுத்தியது.

மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் உடனடி எதிர் நடவடிக்கையில் கொல்லப்பட்ட போதும் கைப்பற்றப்பட்ட ஒரே குற்றவாளியான கஸாப் 4 வருடங்கள் பொதுமக்களின் முன் காட்சிக்கு வைக்கப்பட்டு நீதி, காவல் மற்றும் மருத்துவத் துறையினர் உதவியுடன் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.  தோட்டாக்கள் தாமதப்படுத்திய நீதியை கயிறு நிறைவேற்றியதற்கு சமூகம் மகிழ்ந்தது.  இதற்கிடையில் கஸாப்பை “தேசிய விருந்தினர்” என்றும் அவருக்கு வழங்கப்பட்ட கோழிக்கறி உணவை “விருந்துபசரிப்பிற்கு” இணையாகவும் இதே சமூகம் வெறுப்பை வெளிக்காட்டியது.  நான்கு வருடங்களாக அவரது இருப்பு ஒரு உறுத்தலாகவே இச்சமூகத்திற்கு இருந்திருக்கிறது.

இந்த நான்கு வருடங்களில் கஸாப் செய்தியில் அடிபடும் போதெல்லாம் அவர் இன்னும் கொல்லப்படாமல் இருப்பதைக் குறித்த தங்கள் பொறுமையின்மையை ஊடகங்கள் வழி இந்த குரலுள்ள சமூகம் வெளிப்படுத்தியது.

தூக்கு உடலுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும் தண்டனை முறை.  சிறையிலடைத்தல், சொத்துக்களை பறிமுதல் செய்தல், நாடுகடத்தல் போன்ற தண்டனைகள் உடலுடன் தொடர்பில்லாமல் சுதந்திர நடமாட்டம் மற்றும் நலத்தைப் பேணுதலைக் கட்டுப்படுத்துவதின் மூலம் மனதோடு தொடர்புடையதாகவும் ஒரு வகையில் தண்டனை என்பதற்கு பதிலாக சிகிச்சையாகவும் இருக்கிறது.  மெய் இருப்பை (Physical existence) இல்லாமல் ஆக்கும் தண்டனையே உச்சபச்ச வெறுப்பைக் காண்பிக்கப் பயன்படுவதாக இருக்கிறது.  இந்தச் சமூகம் அஜ்மல்  கஸாப்பின் மெய் இருப்பை ரத்து செய்யவே விரும்பியது.  அதன் மூலம் மும்பையில் கொல்லப்பட்டவர்களின் மரணத்திற்கு நீதி செய்யப்பட்டதாகவே எண்ணுகிறது.  அஜ்மல்  கஸாப் ஓர் அந்நியர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர், மக்களின் மீது வரைமுறையற்ற தாக்குதலையும் கொலைகளையும் செய்தவர், இவர் ”ஒடுக்கி வைக்கப்பட்ட” வாழ்க்கை வாழ்வதற்குக் கூட எவ்வித தகுதியும் அற்றவராய் சமூகம் நினைத்தது.  நீதிமன்றங்களின் சட்டங்களும் சமூகத்தின் போக்குகளை பிரதிபலிப்பவையே.

26/11 ஒட்டிய அனைத்து சட்ட, சமூக ரீதியான நடவடிக்கைகளுக்கும் இந்தத் தூக்கு ஒரு முற்றுப் புள்ளி.  இனி சமூகம் 26/11ன்றோடு தொடர்புடைய “தியாகிகளையும்”, உயிரிழந்தவர்களையும் மறந்துவிடும்.  நீதி முழுமை பெற்றபின் அதுவாகவே ஒரு மறதியை சமூகத்தில் உருவாக்கும்.  இனி 26/11 ஒரு துக்க நிகழ்வாக மட்டுமேயின்றி தேசபக்தியை வெளிப்படுத்தும் ஒரு கொண்டாட்ட நிகழ்வாகவும் மாறக்கூடும்.  உயிர் இழந்தவர்களின் குடும்பங்கள் ஓம்பும் துக்கம் வேறு. அதையை சமூகம் தியாகமாக, தேசபக்தியாக அந்தத் துக்கத்தை மாற்றிவிடும். சீருடையில், நடவடிக்கையின் போது நிகழும் மரணங்கள் அவர்களது வேலை என்பதையும் தாண்டி தேசபக்தியின் வெளிப்பாடாகவும் தோற்றம் பெரும்.

அப்துல் கஸாப்பின் தூக்கு இந்த சமூகத்திற்கு இரு வித நடவடிக்கைப் புள்ளிகளைத் தந்துள்ளது (Action Points).  ஒன்று மும்பைத் தாக்குதலின் போதே கொல்லப்பட்ட ”தீவிரவாதிகள்”.  அவர்கள் யார் என்பதைக் கூட இச்சமூகம் மறந்துவிட்டது. அவர்களுக்கு பதிலாக தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களும், காவல்துறையினரும் இதர படையினரும் நினைவு கூறப்பட்டனர்.  அவர்களது மரணத்திற்கு பழிதீர்க்கக் கூடிய ஒரு வாய்ப்பை அஜ்மல்  கஸாப்பின் நான்கு வருடக் காத்திருத்தல் வழங்கியது.   இனி மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஞாபகத்தை அஜ்மல்  கஸாப்பின் மரணம் பின் தள்ளிவிடும். இந்தத் தாமதம் “சுதந்திரப் பொன்விழா” கொண்டாட்டங்கள் போல தேசபக்த அளவையும் அதிகரிக்க உதவியது.

                இந்திய அரசு இதன் மூலம் தனது உறுதியை வெளிப்படுத்தவும், மக்களது தேசபக்த உணர்வை மதிப்பதையும், நேர்மையான நீதி முறைமைகள் பின்பற்றப்பட்டதாக அறியப்படவும் இந்தத் தூக்கு வாய்ப்பளித்துள்ளது. தாமதிக்கப்பட்ட இந்தச் சட்டபூர்வ கொலை அனைத்து வகைகளிலும் அதிகாரவர்க்கத்தினருக்கும், தேசபக்தர்களுக்கும் உடனடி எதிர்நடவடிக்கையில் கொல்லப்படுவதை விடவும் திருப்தியளிக்கக் கூடியது.  மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்ட ஒரே நபர் அஜ்மல்  கஸாப்.

     இந்தத் தூக்கு இன்னொரு வகையில் மிக முக்கியமான குறியீட்டு நிகழ்வாகவும் மாறுகிறது.  இந்திய வரலாறு உருவாக்கிய கூட்டு மனத்தில் இதுவரையிலும் எரவாடா சிறை காந்தியோடு தொடர்புடையதாக இருந்தது. இந்த ஞாபகம் இப்பொழுது வேறொன்றால் பதிலீடு செய்யப்பட்டுவிட்டது. இனி எரவாடா சிறை அஜ்மல்  கஸாப்பின் தூக்கோடு நினைவு கூறப்படும். காந்தியோடு தொடர்புடைய ஞாபகம் அவருக்கு எவ்வகையிலும் ஒப்புதல் இருந்திருக்காத மரணத்தின் மூலம் பதிலீடு செய்யப்பட்ட நகைமுரண் இந்த சமூகம் காந்தியிடம் விலகிவிட்டதற்கு மேலுமொரு உதாரணம்.

     ஒருவேளை எரவாடா சிறையில் காந்தியின் ஆவி உலவக்கூடும்.  இனி ஒருபோதும் அஜ்மல்  கஸாப் புதைக்கப்பட்ட சிறைச்சாலைக்குள் அது நுழையவே போவதில்லை.  அஜ்மல்  கஸாப்ப்பின் தூக்கு காந்தியின் ஆவியை இன்னுமொரு இடத்திலிருந்தும் வெளியேற்றிவிட்டது.



No comments: