Monday, April 9, 2012

ஃபேஸ்க்கில் எழுதி யாரும் வாசிக்காமல் விட்ட கவிதை


           துதி

உள்ளம் சுடராக
அகத்தில் பற்றும் அறிவின் நெருப்பு

           பனுவல்

ஊண் போதை
ஏறிவிட்ட தருணமிது
இராப்பாடிகள் தங்கிச் செல்லும் சத்திரங்களில்
நெடியடிக்கும் திரவமணப் போதை
ஒலித்துடிப்படங்கும் அணைந்த இரவின்
சாமம் போதை
எழுத்து போதை கவிதை போதையின் வாதை
வலி போதை கவிதை வலி மேவும் பாதை
மொழி போதை சப்தம் போதை அர்த்தம் போதை
அனர்த்தம் போதைக்கெல்லாம் போதை
அகம் போதை புறம் போதை
அகமும் புறமுமற்ற இருப்பும் போதை
இன்மை போதை
அந்தோ
கூடடைந்து தூங்குகின்றன பறவைகள்
உண்மை போதை பொய்யும் போதை
வானோர் இறங்கும் பாதையில்
புவியோர் ஏறுதல் போதை
மெளன ரஸ்தாக்களில் சாய்ந்தாடும் மரங்கள் போதை
வேறுஞ்சும் நிலப்பால் போதை
நீர் போதை நீர்தழுவும் காற்றும் போதை
எழுந்துவிட்டன இரவை மென்றுதின்னும் பேய்கள்
பேய்முலை போதை குழலிசையில் ராகம்
தரித்துக் கிடக்கும் சதைஉதிரம் போதை
கழுகுகள் தூக்கித்திரியும் சதைத்துண்டின் போதை
நிலவு போதை நீலவானம் போதை
நீ அப்போதுதான் விலகிச் சென்றாய்
கல்லறைக்கு அருகில் சின்னமிட்டு
இடம் போதை ஏவல் போதை
பணி போதை பணிதல் போதை
கொடுங்காவல் இரவில்
நகருலவும் அரவப் போதை
அந்தகம் போதை வெளிச்சம் போதை
கவிஞன் கருமிக்கும் கேவலமாய்
சொற்களை செலவழிக்கிறான்
அவன் போதை உலகப் போதை
அட நண்பா
உனக்கிது தெரியவில்லையா
வெளவால் தியான போதையில் உலகம் நேராகிவிடுமென்பது

2 comments:

ஜீவ கரிகாலன் said...

சமீபத்தில் நான் ரசித்த கவிதைகளில் இது முக்கியமானது, கவிஞனின் கருமித் தனத்தை போதையாக்கும் இடத்தில் என் புருவங்கள் உயர்ந்து உங்களைப் பாராட்டச் சொல்லிற்று

ஜீவ கரிகாலன் said...

சமீபத்தில் நான் ரசித்த கவிதைகளில் இது முக்கியமானது, கவிஞனின் கருமித் தனத்தை போதையாக்கும் இடத்தில் என் புருவங்கள் உயர்ந்து உங்களைப் பாராட்டச் சொல்லிற்று