தடுமாறத் துவங்கிவிட்ட ஒழுங்கு
ஆண்டிகுவிட்டி ரேரின் அற்புத மஞ்சள் கலந்த
பழுப்பு
வீதியெங்கம் பரவ
நினைவின் அடுக்கைக் குடைந்து
ஒரு பெண்ணை எடுக்கிறேன்
சற்று முன் உண்ட
தந்தூரிச் சிக்கனைப் போன்ற
மிதமான பக்குவத்தில் அவள் தேகம்
அவளுக்குப் பெயர் வைக்கிறேன்
அவளுக்கு முன்பே பெயர் இருந்தபோதும்
அவளை இங்கே உலவவிடுகிறேன்
அவள் பாதங்கள் வேறெங்கோ காலடி பதிக்கும்போதும்
அவளை முத்தமிடவும் தழுவவும் முனைகிறேன்
இரவின் மீதல்லவா சோடியம் வேப்பர் ஓவியம்
வரைகிறது
இரவின் போதல்லவா வார்த்தைகளுக்கு இறக்கைகள்
முளைக்கின்றன
எமினெம்மை ஒலிக்கவிட்டுச் செல்லும் ஸ்கோடா
காரின்
நீல நிற வண்ணமும் ஒளியில் கரைகிறது
அந்த வீதி நெடுகச் செல்லும் வீதி
அவன் விதி சுருங்கச் சொன்னால் இன்னுமொரு
விதி
காதுகளில் ஒலிக்கட்டுமே முத்தமிடும் உதடுகளின்
சொற்கள்
கண்களில் படரட்டுமே கொடியேன நடமாடும் உடல்
ஊதாநிற டீசர்ட் அணிந்த அவள் அறைக்குக் கூட்டிப்
போகிறாள்
வார்த்தைகளின்றி தடுமாறத் துவங்கிவிட்டன
காற்றில் இறகென மைதீட்டும் இலைகள்
துவந்தம் அசைவுறத் துவங்கிய கணத்தில்
ஓசைகள் கேட்கின்றன மரங்களின் கிளைகளில்
சற்றே சற்று முன்புதான் எஃஎம் ஒலித்து நின்றது
அறையில் உலவும் ஊதாநிற டீசர்ட் பெண்ணும்
ஜன்னல் வழிப்பரவும் குளிரில் கரைகிறாள்
ஆண்டிகுவிட்டி ரேருக்கு மீண்டுமொரு பெயர்
சூட்டுகிறேன்
அதற்கு முன்பே ஒரு பெயர் இருந்தபோதும்
அதன் பழுப்பு நிறத்தை பருகத் தாவுகிறேன்
உறக்கம் உடலை இழுத்துச் செல்லும் ஆழத்தில்
ஊதாநிற டீசர்ட் அணிந்த பெண்
அவளைத் திரவமென மாற்றுகிறாள்
கோப்பையெனத் ததும்பத் தயாராகிவிட்டது இதயம்